காதல் கலை – The art of loving

பாலியல் தொடர்பான வக்கிரங்கள் நம்மைச் சுற்றி அரங்கேறியபடியேதான் உள்ளன. ஆனால் வீட்டில் குடும்பத்தில் அதைப் பற்றிப் பேசத்தயங்குகிறோம். ‘நான் அதுமாதிரியான விஷயங்களையெல்லாம்’ பேசாத ஒழுக்கமான மனிதன் என்றே சமூகத்திடம் நம்மைக் காட்டிக்கொள்ள முயல்கிறோம். இந்தக் கலாச்சார சமூகம் தருகிற அக்மார்க் முத்திரை நமக்கு அவசியமானதாகப் படுகிறது. இந்த அப்பட்டமான போலி இரட்டை வேஷம் ஒரு மனிதனாக உங்கள் இருப்பை ஒருபோதும் நியாயப்படுத்தாது. எது அடிப்படையோ, எது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறதோ, அதைப் பற்றிப் பேசத் தயங்கவேண்டாம், என்பதைச் சொல்கிறது மரியா சடோவ்ஸ்காவின் ’தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ திரைப்படம். ஒரு பெண் பாலியல் பிரச்சினைகள் பற்றி பேசுவது, இச்சமூகத்திற்கு எள்ளல் சார்ந்த விஷயமாகவே கருதப்படுகிறது. அத்தகைய தவறான கற்பிதங்களை உடைத்தெறிவதுபோல, இப்படத்தை எடுத்திருக்கிறார் மரியா சடோவ்ஸ்கா எனும் பெண் இயக்குனர்.

மைக்கேலினா விஸ்லோகா, எனும் பெண் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பாலியல் கலை சார்ந்து ஒரு புத்தகம் எழுதி, அதைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள், அடைந்த அனுபவங்கள், இந்த இயக்குனருக்கு ஏதோவொரு விதத்தில் அந்தக் கதைமீது ஈடுபாடு கொள்ளச்செய்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் ’காதல் செய்வதில் உள்ள கலை’. இதுவும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமே! 

Image result for art of loving movie

மைக்கேலினா விஸ்லோகாவின் வாழ்க்கை வரலாற்றின் தழுவலான ‘ தி ஆர்ட் ஆஃப் லவ்விங் (The Art of Loving)’ திரைப்படம், எவரும் எளிதில் பேசத் தயங்கும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பேசுகிற திரைப்படம். அத்தோடு மைக்கேலினா விஸ்லோகாவின் வாழ்க்கை அனுபவங்களையும், பாலியல் சம்பந்தப்பட்ட புத்தகத்தை அவர் வெளியிடுவதற்குக் கடந்த தடைகளையும், எதிர்கொண்ட பிரச்சினைகளையும் கதையாகச் சொல்லிச்செல்கிறது. சிறந்த நடிப்பையும், கதையின் போக்கில் ஆங்காங்கே நகைச்சுவையாகவும் பயணிக்கிற இத்திரைப்படத்தைப் பார்ப்பது உங்கள் நேரத்தை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இத்திரைப்படத்தின் மையக்கதாபாத்திரமாக விளங்குபவர் மைக்கேலினா விஸ்லோகா. அத்தோடு இவர் எழுதிய ‘ஆர்ட் ஆஃப் லவ்விங்’ எனும் புத்தகம் பதிக்கப்படுவதற்காக என்னென்ன இடர்களையெல்லாம் எதிர்கொள்கிறது என்பதையும் காண்கிறோம். இந்தப் புத்தகத்தைப் பதிப்பிப்பதால் பதிப்பகத்திற்குத் தான் அவப்பெயர், இதுபோன்ற புத்தகத்தை யார் வாங்கிப் படிப்பார்கள், இதனால் நமக்குத்தான் நஷ்டம் போன்ற எண்ணற்ற கேள்விகள்/ சந்தேகங்கள் பதிப்பாளர்களுக்கு வந்தாலும், புத்தகம் வெளியானதிலிருந்து சில தினங்களுக்குள் மொத்த புத்தகங்களும் விற்றுத் தீர்வதும், இப்போதுவரை, ‘ஆர்ட் ஆஃப் லவ்விங்’ புத்தகம் புதிய புதிய பதிப்புகள் காண்பதும், இன்றுவரை அப்புத்தகத்திற்கான தேவை இருப்பதும், மக்களிடையே அப்புத்தகத்திற்கு இருந்த வரவேற்பு என்பது எப்படிப்பட்டது? என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. 

Image result for art of loving movie michalina wislocka


மைக்கேலினா விஸ்லோகாவின் சுயசரிதை பதிப்பை எடுத்துக்கொண்டு, மரியா சடோவ்ஸ்கா எவ்வித மிகைப்படுத்துதலும் இல்லாமல், கூச்ச சுபாவமோ ஆத்திரமூட்டம் நோக்கம் என எதுவுமில்லாமல் முறையாகப் பாலியல் பற்றிப் பேசத் தேர்வு செய்திருக்கிறார். ஒரு கதையைத் திரைப்படமாக எடுத்துக்கொண்டவுடன், நமக்கிருக்கும் கோபங்களை அந்தக் கதையின் மீது ஏற்றி, அத்திரைப்படத்தைத் தன்னுடைய ஒற்றைநிலையை வெளிப்படுத்தும் காரணியாக மாற்றிவிடுகிற அபாயத்தை இயக்குனர் மரியா சடோவ்ஸ்கா செய்யவில்லை. மைக்கேலினா விஸ்லோகா எனும் பெண்மணி தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளை, அதே நேர்மையோடு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார். 

இயக்குனர் தன் கதாபாத்திரங்கள் குறித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை, அல்லது சில நேரங்களில் கேள்விக்குரிய தீர்வுகள் குறித்த ஒழுக்கத்தையும் அவர் தீர்மானிக்கவில்லை. செக்ஸ் நல்லதா? கெட்டதா? என்பதைக் காட்டிலும், அது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இணைந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’. 

Related image

போலந்தில் பிரபலமான மகளிர் மருத்துவ நிபுணர் (பெண்களுக்கு வரும் உடல்குறைபாடுகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்) மற்றும் பாலியல் ஆய்வாளர் மைக்கேலினா விஸ்லோகாவின் கதை. அவரது வாழ்க்கை முறை வழிகாட்டி புத்தகம் ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ 1970ஆம் ஆண்டு வாக்கில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுத்தீர்ந்தது. இத்திரைப்படம், ஒரு நபரின் உடலும் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்று, பிரிக்கமுடியாத முற்று முழுதாய் இணைக்கப்பட்ட ஒரு நபரைப் பற்றிய நேரடியான கதை. தான் ஒரு பாலியல் ஆய்வாளர் ஆனதிற்கும், தன் எதிர்காலம் இவ்விதம் அமைந்ததிற்கும், நிச்சயம் ஒருவரது கடந்தகாலம் முக்கியக் காரணியாக இருக்கும். அப்படியாக மைக்கேலினா விஸ்லோகாவிற்கு இருந்த கடந்த காலத்தைப் பற்றியும், காதலன் தனக்கிழைத்த துரோகம், தன் தங்கையையே தன் கணவனிடம் விட்டுக்கொடுக்க நேர்ந்த துயரம், திருமணமான இன்னொரு ஆணுடன் இருந்த நெருக்கமான உணர்வு, அந்தப் பிரிவு என அதையும் சுட்டிக்காட்டுகிறது. 

சடோவ்ஸ்காவின் இத்திரைப்படம், போலந்து இயக்குனர் யுகாஸ் பால்கோவ்ஸ்கியின் ’காட்ஸ் (Łukasz Palkowski’s Gods) அடிச்சுவடுகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் திறமையான திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகத் திகழ்கிறார். இவ்விரு படங்களையும் எழுதி மற்றும் தயாரித்தவர் க்ரிஸிஸ்டோஃப் ராக் (Krzysztof Rak), கடந்த சில ஆண்டுகளில் போலந்து சினிமாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒருவர். 

Image result for art of loving movie michalina wislocka

காட்ஸ் திரைப்படம் 2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது, அதே நேரத்தில் தி ஆர்ட் ஆஃப் லவ்விங் 2017ஆம் ஆண்டில் வார இறுதியில் மிகப்பெரிய துவக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது, 2,50,000க்கும் அதிகமான மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்தனர். 

கேள்விகள் எழுகின்றன – க்ரிஸிஸ்டோஃப் ராக்கின் திரைப்படங்களில் மிகவும் ஈர்க்கக்கூடிய விஷயங்கள் என்னென்ன? சரி, முதல் விஷயம், அவருக்கிருக்கும் அசாத்திய திறமை, ஆனால் அது மட்டுமே முழுக் காரணமும் இல்லை. ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை உருவாக்க, நீங்கள் சில விதிகளுக்கு இணங்கி அதற்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும் என்பதையும் அவர் அறிவார். கதைக்குள் உங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான கதைநாயகன், திரைக்கதையில் சரியான நேரத்தில் வருகிற ப்ளாட் பாய்ண்ட்கள், சதித் திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள், மற்றும் திரைக்கதையினூடே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்ட பதற்றம் தேவை. இதற்கடுத்து மிக முக்கியமான விஷயம், அந்தக் கதை ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடக் கூடாது, தொடர்ந்து நகர வேண்டும். அந்தளவில் ஒரு ஈர்க்கக்கூடிய கதையை, தொடர்ந்து நகரக்கூடிய கதையை உருவாக்குவது மிக மிக அவசியம். இந்த விதிகளை ராக் நன்றாகவே அறிவார், மேலும் அவர் சொல்ல விரும்புகிற கதைகளை அவற்றின் எல்லைகளுக்குள் பொருத்திக்கொள்ள தன்னால் முடிந்ததைச் செய்கிறார். முடிந்தளவு அந்தக் கதையைத் திறம்பட உருவாக்கப் பாடுபடுகிறார். உழைக்கிறார். 

இந்தப் பயிற்சிக்கும் உழைப்பிற்கும் கிடைத்த மற்றொரு பரிசுதான் ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ திரைப்படம். இம்முறை அவர் ‘காட்ஸ்’ திரைப்படத்தைக் காட்டிலும் மிகவும் கடினமான, கிளைக்கதைகளின் கட்டமைப்பு கொண்ட ஒரு திரைக்கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதில் அவர் நேரடியான கதைசொல்லல் முறையில் கவனம் செலுத்துகிறார். விஸ்லோக்காவின் வாழ்நாளை தொலைதூர தருணங்கள் முதற்கொண்டு பல காட்சிகளில் படம் முழுவதும் காணலாம்: விஸ்லோக்காவின் குழந்தைப்பருவம், யுத்த காலம், மருத்துவ ஆய்வுகள் மற்றும் இறுதியில் 1960 கள் மற்றும் 1970களில் போலந்து பாலியல் துறையில் புரட்சியை ஏற்படுத்த முயன்ற தருணங்கள். அவர்கள் கதாநாயகியின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் படித்து அறிந்திருப்பதன் மூலம், அவரை ஒரு வகையான மதச்சார்பற்ற (லெளகீக) அருட்தொண்டு செய்பவராகச் சித்தரிக்கவே முயற்சிக்கிறார்கள் – அதுவே நியாயமும் கூட. அவரை எந்தவித கட்டுப்பாடுகளுக்குள்ளும் அடைக்காமல், மக்கள் பேசத் தயங்குகிற விஷயங்களைப் பேசத் துணிந்து அவர்களுக்கு மருத்துவம் செய்கிற பெண்மணியைத் தொண்டு(சேவை)செய்பவர் போலப் பாவிப்பது ஏற்புடையதே! ஒருவகையில் இம்மக்களுக்கு அவர் சேவை செய்கிறார் என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தைரியமான, கவர்ச்சிகரமான பெண், போலந்து மக்கள் குடியரசின் ஆணாதிக்க எதார்த்தத்தை நன்மைக்காக எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவரது நோயாளிகள், தனது பாழடைந்த அந்தரங்க வாழ்க்கையுடன் குமைந்துகொண்டிருப்பவர்களுக்கு இப்பெண்மணி நல்வாழ்க்கையைக் காட்டினார்.

Image result for art of loving movie michalina wislocka 

மேற்கூரிய அனைத்து விதிகளும் ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ திரைப்படத்தில் திருப்தியடைவதுபோல முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. படத்தின் ஒரு புதிரான மையக்கதாபாத்திரம், சுவாரஸ்யமான இரண்டாம் நிலைக் கதாபாத்திரங்கள் உள்ளன, திரைக்கதையில் அதை அடைவதற்கு குறிக்கோளும், எதிர்ப்படும் சிரமங்களும் இருக்கவே செய்கின்றன. இருப்பினும் காலப்போக்கில் நாம் கதையிலிருந்து விலக்கப்படுகிறோம். ஏனென்றால், கதையின் ஆரம்பத்திலிருந்தே எப்படி முடியப்போகிறது என்பது நன்றாகவே தெரியும், ஏனெனில் படத்தின் மிக முக்கியமான போராட்டம், விஸ்லோக்கா தனது பாலியல் புத்தகத்தை வெளியிட முடியுமா? முடியாதா? என்பதுதான். 

நிச்சயமாக ‘காட்ஸ்’ திரைப்படத்தின் முடிவு, அதன் ஆரம்பத்திலிருந்தே அறியப்பட்ட ஒன்று. ஆனால், படத்தில் பார்வையாளர்கள் ரெலைகாவின் கதையில் ஈடுபடுவதைத் தடுக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக விஸ்லோக்காவின் கதையில் அவ்வாறு இல்லை. க்ரிஸ்டோஃப் ராக் மற்றும் மரியா சடோவ்ஸ்கா ஆகியோர் கிளைக் கதைகளை போதுமான கவனத்துடன் அணுகவில்லை, என்பதே இதற்கு மிக முக்கியமான காரணம். விஸ்லோக்கா அவரது கணவர் மற்றும் அவரது நண்பருக்கு இடையேயான முக்கோணக் காதல் கதையைப் படத்தில் சொல்கிறார்கள், மேலும் அவர்களது குழந்தைகளும் படத்தில் பெரிதும் இடம்பெறுகிறார்கள். எவ்வாறாயினும் இந்தச் சம்பவங்கள் திடீரென முடிவடைகின்றன, மேற்கொண்டு அவை குறிப்பிடப்படவில்லை, இதற்கடுத்து சமூக விதிமுறைகள் மற்றும் சமுதாயத்தால் அவர் மீது சுமத்தப்பட்ட சுமைகளுக்கு இணங்காத ஒரு பெண்ணைப் பற்றிய பிரதானக் கதையோட்டத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. 

படத்தில் உள்ள பல கிளைக்கதைகளில் மிகவும் குறிப்பிடவேண்டிய ஒன்று, திருமணமான ஒரு ஆணுடன் விஸ்லோகா காதால் கொண்டிருப்பது, உறவுகொள்வது, பின்னர் அந்த உறவு எதிர்பாராத தருணத்தில் முடிந்துபோகிறது. இந்தக் காட்சியில் நாம் அதிகம் ஒன்றிவிடுவதற்கு எரிக் லுபோஸின் கண்ணீர்மல்க வைக்கும் செயல்திறன் மிக்க நடிப்பும் ஒரு காரணம். இவர் வலுவான, உறுதியான ஆண்களாக நடிக்கத் தோன்றும் சிறப்பியல்பு கொண்ட நடிகர், இந்த முறை தன் கடமைக்கும் ஆசைக்கும் இடையில் நொறுங்கிப்போகிற மனிதனாக நடித்திருக்கிறார், படத்தில் இவருக்கு மிகவும் சோகமான பாத்திரம். தி ஆர்ட் ஆஃப் லவ்விங்கில், தனது வாழ்க்கையின் பாத்திரத்தை வகிக்கும் மாக்தலேனா போசார்ஸ்கா உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு ஒத்த பாத்திரம். 

Image result for art of loving movie michalina wislocka book

போலந்தில் திறமையான, புத்திசாலித்தனமான நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு சான்றாக விளங்குகிறது. இவையெல்லாம் சேர்ந்து தான், ‘தி ஆர்ட் ஆஃப் லவ்விங்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை உண்டாக்கித் தருகின்றன. அற்புதமான நடிப்பு மற்றும் நகைச்சுவையான உரையாடல் என படத்தின் இரண்டு மணி நேரமும், சினிமாவை ஒரு அறிவார்ந்த பொழுதுபோக்காக உணரச்செய்கிறது. 

நன்றி: culture.pl