திரைப்பட உருவாக்கம் பற்றிய திரைப்படம் - “ ஒன் கட் ஆஃப் தி டெட்”


-கவின் ஜெ.ப்ளெய்ர்

ஒரு சுவாரஸ்யமான திரைப்படத்தைப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் உருவாவதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கும். ஒரு திரைப்படம் பல இன்னல்களுக்கு மத்தியிலும், பிரச்சினைகளுக்கு இடையிலும் உருவாகிறது. நாம் என்னதான் தகுந்த முன் திட்டமிடலுடன் சென்றாலும், அந்நேரத்தில் ஏதேனும் ஒரு எதிர்பாராத பிரச்சினைகள் வந்து இயக்குனருக்குத் தலைவலியைக் கொடுக்கும். அப்பிரச்சினையை நிவர்த்திசெய்து, தன் குழுவையும் திறம்பட வழிநடத்தி, கதையையும் சரியாகப் படம்படித்து முடிப்பதுதான் இயக்குனரின் அன்றாட வேலையாக இருக்கிறது. அப்படிப் பார்க்கையில், ஒரு திரைப்படத்தைவிட, அத்திரைப்படம் உருவான விதமானது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

இதைத்தான் ‘ஒன் கட் ஆஃப் தி டெட்” என்ற ஜப்பானிய திரைப்படம் மையக்கருவாகக் கைப்பற்றியிருக்கிறது. எப்போதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான திரைப்பட உருவாக்கம் நிகழும்? என்று யோசித்துப் பாருங்கள். முதலில் கதையில் சுவாரஸ்யம் அடுத்து, கதை உருவாக்கத்திலும், படப்பிடிப்பிலும் சுவாரஸ்யம். கதையை சுவாரஸ்யமாக்குவது திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு, அதேபோல படப்பிடிப்பை சுவாரஸ்யமாக்குவது நாம் அவ்வப்போது செய்துபார்க்கிற பரிசோதனை முயற்சிகளாகவே இருக்கின்றன. அரை மணி நேரம் ஓடக்கூடிய முழு படத்தையும், ஒரே ஷாட்டில் எடுத்துமுடிக்க வேண்டும். சாத்தியமா? இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கிறது. அது தானாகவே படப்பிடிப்பைச் சுவாரஸ்யப்படுத்துகிறது. 

Image result for one cut of the dead
அப்படி ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படத்தை நாம் பார்க்கிறோம். ஆனால், அதற்குப் பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மீண்டும் தொகுத்து அதையும் ஒரு சினிமாவாகக் கொடுத்திருக்கிறார் முப்பத்தைந்து வயதேயான ஷினிச்சிரோ யுடா எனும் ஜப்பானிய இயக்குனர்.  

முதலில் அரைமணி நேரத் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பதற்கு ஏற்ப, வீடியோவின் தரம் மட்டுப்பட்டே தெரிகிறது. அடுத்து, ஒளிப்பதிவாளர்கள் கைகளிலேயே கேமராவைத் தாங்கபடி செல்வதால், அதிர்வுகள் தன் இஷ்டத்திற்குப் பதிவாகின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டியும் ஒரு சுவாரஸ்யமான டெலி ஃபிலிமாக அது முடிவடைகிறது. கடந்த ஆண்டு, ஜப்பானிய ஜாம்பி – நகைச்சுவைத் திரைப்படமான ‘ஒன் கட் ஆஃப் தி டெட்” சர்வதேச திரைப்பட விழாக்களில் கணிசமான பாராட்டையும், விருதுகளையும் பெற்று வருவதோடு, சொந்த நாட்டில், முதலீடு செய்ததைக் காட்டிலும் பல மடங்கு லாபம் பெற்று வர்த்தக ரீதியிலும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 

திரைப்படம் தனிநபர் உந்துதலினால் தாக்கம் பெற்று, கதை, திரைக்கதை முதற்கொண்டு உருவானாலும் அந்தக் கற்பனைக்கு உயிர்கொடுக்க குழு ஒத்துழைப்பு நிச்சயம் தேவை என்பதை இப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ள முடியும். நாம் நிதர்சனத்தில் பார்க்கிற திரைப்படத்திற்கு, அதன் பின்னணியில், பட உருவாக்கத்தில் இன்னொரு அர்த்தம் உருவாகினால் எப்படியிருக்கும்? இதைத் தகுந்த நகைச்சுவைக்காக இப்படம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. 

ஒரு படக் குழு திரைப்படம் எடுப்பதற்காக ஒரு பாழடைந்த தொழிற்சாலையில் கூடுகின்றது. ஜாம்பி படமாக உருவாக்கிற அப்படத்தில் நடிகர்கள் சரியாக நடிக்கவில்லை என்ற காரணத்தினால், அதன் இயக்குனர் உண்மையான ஜாம்பிகளை வரவழைத்து, அதிலிருந்து உண்மையான ஒரு திரைப்படத்தை இயக்குகிற திட்டத்தில் இயக்குனர் இருக்கிறார்.
உண்மையான ஜாம்பிகளிடம் படக்குழு என்னவிதமான எதிர்வினை செய்கிறது, என்பதைத்தான் ஒரே ஷாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். இத்தோடு படம் முடிந்துவிடுகிறது என்று திரையரங்கை விட்டு எழுந்திருக்கிற தருணத்தில், படத்தின் இரண்டாம் பாதி துவங்குகிறது. அதுதான், ‘ஒரே ஷாட்டில் இந்த ஜாம்பி படம் எப்படி உருவானது?’ என்பதை விளக்குகிற திரைப்படம். இது நல்ல தரத்துடன், கேமரா ஆங்கிள்களுடன், படத்தொகுப்பில் கட் செய்யப்பட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் முதலில் ஒரே ஷாட்டில் எடுத்த திரைப்படத்தைப் பார்த்து, சிலாகித்த காட்சிகளுக்குப் பின்னால் திரை மறைவில் என்னென்ன செயல்களெல்லாம் நடந்திருக்கின்றன, என்பதை மிகுந்த நகைச்சுவையோடு சொல்வதில்தான் படத்தின் உயிரோட்டம் அமைந்திருக்கிறது. 

Related image

மைக்ரோ பட்ஜெட் திரைப்படத்தின் பன்முகத்தன்மை கொண்ட வெற்றி, திரைப்படத்தின் பார்வையாளர்களை அதன் திருப்பங்களை கடைசி வரை ஒரு ரகசியமாக வைத்திருப்பதில் அவ்வளவு சிறப்பாகப் பங்காற்றாவிட்டால், பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பைப் பெறாது. குறைந்த செலவில் எடுக்கப்படுகிற இதுபோன்ற திரைப்படங்களின் வணிக வெற்றியானது, அடுத்தடுத்து இந்த முயற்சியில் ஈடுபட பல படைப்பாளிகளையும் தன் பக்கம் ஈர்க்கிறது. அதைத் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிற இப்படம் அமெரிக்காவில் வெளியிடுவதற்கான உரிமையையும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. 

ஷினிச்சிரோ யுடா உள்நாட்டில் இப்படம் குறித்த வார்த்தைகள் எவ்வாறு பரவி வருகிறது என்பதைப் பற்றியும் இதே படம் வெளிநாடுகளில் எத்தகைய வெற்றிகளைப் பெற்று வருகிறது என்பதைப் பற்றியும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார். 

சுயாதீன சினிமா இயக்குனர்கள் பொதுவாக கனவு காணக்கூடிய பெரு வெற்றியை அனுபவித்து வருகிறது இந்த “ஒன் கட் ஆஃப் தி டெட்” மைக்ரோபட்ஜெட் ஜாம்பி நகைச்சுவைத் திரைப்படம். பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்ட ஆர்வமுள்ள நடிகர்களைக் கொண்டு, எட்டு நாட்களில் 27,000 டாலர்களில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு செய்ததைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு லாபத்தை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்திருக்கிறது இந்தச் சுயாதீன திரைப்படம். ஆனால், ஆரம்பத்தில் ஜுன் மாதத்தில் டோக்கியோவில் மூன்று திரையரங்குகளில் மட்டுமே இப்படம் வெளியானது. 

ஆனால், இப்படம் இப்போது 2 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றுள்ளது, முன்பே சொன்னதுபோல பாக்ஸ் ஆபீஸில் ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டியதோடு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான விருதுகளையும் வென்றுவருகிறது. 

ஒன் கட் ஆஃப் தி டெட், 37 நிமிட ஒரே ஷாட் டெலி ஃபிலிம் பற்பல அடுக்குகளோடு படமாக்கப்பட்டிருக்கிறது, ஜாம்பி வகைத் திரைப்படங்களில் பல்வகை குரூரங்கள், திருப்பங்கள் மற்றும் ஏராளமான சூழ்ச்சிகளும் நடந்தேறுகின்றன. அதன் ஆஃப் பீட் நகைச்சுவைக் காட்சிகளுடன் சுயாதீன உணர்வைப் பற்றி பரப்பிய பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறது. 

இந்தப் படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலோவீனில் திரையிடப்படுகிறது. ’ஒரு நட்சத்திரம் பிறக்கிறார்’ என்ற விழாவின் தொடக்கத் திரையிடலில் சிவப்புக் கம்பள வரவேற்பு நடப்பதற்கு சற்று முன்பு தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருடன் பேசிய இயக்குனர் யுடா, முன்பின் அறியப்படாத புதுமுக நடிகர்களுடன் பணிபுரிவது, இந்தப் படத்தின் அடுத்தடுத்த பகுதிகளுக்கான வாய்ப்பு மற்றும் அவரது அடுத்த படம் என்ன? அதற்கான திட்டம்? போன்ற விஷயங்கள் குறித்துப் பேசுகிறார். 

Image result for one cut of the dead

இந்தப் படம் பெரு வெற்றி பெறும் என்று எப்போது நினைத்தீர்கள்?

நீங்கள் இங்கு ‘ஹிட் – வெற்றி’ என்று சொல்கிறீர்கள். சரி, என்னைப் பொறுத்தவரை ‘ஹிட்’ என்பதற்கு பல்வேறு நிலைகள் உள்ளன, ஆனால், இரண்டு அல்லது மூன்று வாரங்கள் டோக்கியோ நகரத்தின் சிறிய திரையரங்கில் படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தபொழுது ’இங்கு ஏதோ நடக்கிறது’ என்பதை முதலில் உணர ஆரம்பித்தேன். முதல் வாரத்தில் பெரும்பாலும் முதியவர்களே திரையரங்கில் இருந்தனர், அவர்கள் வழக்கமான சுயாதீனத் திரைப்படங்களின் ரசிகர்கள் ஆவர். ஆனால், அதே திரையரங்கில் இரண்டாவது வாரத்தில் அதிகமாக இளைஞர்களும், பெண்களும் திரையரங்கில் திரண்டிருந்தனர். பிற்பாடு, தெருக்களில் ‘ஒன் கட் ஆஃப் தி டெட்’ திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டிய டி -ஷர்ட்களை அணிந்து செல்கிற மனிதரக்ளைப் பார்க்க ஆரம்பித்தேன், அடுத்து, இந்தப் படம் குறித்து மக்கள் அதிகமாகப் பேசுவதைக் கேட்கத் துவங்கினேன். நான் தொடர்ந்து சுயாதீனத் திரைப்படங்களைத்தான் எடுத்து வருகிறேன், ஆனால் முன்னெப்போதும் இதுபோன்ற மயிர்க்கூச்செறியும் அனுபவம் எதையும் நான் அனுபவித்ததில்லை. 


இது ஒரு பெரிய வெற்றிப் படமாக மாறியதை எந்தப் புள்ளியில் உணர்ந்தீர்கள்?

இது எங்கள் எதிர்பார்ப்புகள் யாவற்றையும் மீறிக்கொண்டே இருந்தது. இந்தப் படத்தை ஐந்தாயிரம் பேர்கள் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் என் முதல் இலக்காக இருந்தது. ஆனால், இதனை முதல் சில வாரங்களிலேயே இந்த இலக்கினை மிக எளிதாக அடைந்துவிட்டோம். அடுத்து, 10,000 பேர் வரை பார்த்துவிட்டால் நன்றாகயிருக்கும் என்று நினைத்திருந்தோம். அதையும் அடைந்தோம். எண்ணிக்கைகள் கூடிக்கொண்டேயிருந்தன. ஒரு கட்டத்தில் 1,00,000 பார்வையாளர்கள் வரை பார்த்துவிட்டால் சிறப்பானதாக இருக்கும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இன்று இப்போது நாங்கள் இரண்டு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிட்டோம். ’வெற்றி’யின் நிலை இப்போது உயர்ந்துகொண்டேயிருக்கிறது. 

Image result for one cut of the dead

இத்தாலியில் நடந்த உடின் திரைப்பட விழாவில் இப்படத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு வரவேற்பும், எதிர்வினையும் கிடைத்தது என்று கேள்விப்பட்டேன். வெளிநாட்டு பார்வையாளர்கள் படத்திற்கு எதிர்வினையாற்றியதில் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

இது உண்மையில் ஜப்பானில் சரியான திரையரங்கை வெளியீட்டைப் பெறுவதற்கு முன்பே நடந்தது. படம் முடிந்ததும் உடினில் ஐந்து நிமிடத்திற்குப் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இது படத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த எதிர்வினையாக அமைந்தது. முதல் 37 நிமிட படம் முடிவடைந்தபொழுதே, இத்தாலியில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கத் துவங்கினர். ஆனால், ஜப்பானில் அந்தப் பிரிவின்பொழுது பார்வையாளர்கள் முற்றிலும் அமைதியாகவே இருந்தனர். ஆனால், படத்தின் இரண்டாம்பாதியான பட உருவாக்கம் தொடர்பாகக் கற்பனையாகப் புனையப்பட்ட காட்சிகளில் இத்தாலியில் இருந்த பார்வையாளர்கள் மிகவும் அமைதியாகவே இருந்தனர்; இது முற்றிலும் வேறுபட்ட பார்வையாளர் மனநிலையை எனக்குக் காட்டியது. 

இந்தப் படம் இப்போது எத்தனை நாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது?

என் கையில் தற்போது அதற்கான பட்டியல் இல்லை, ஆனால், தென் கொரியா, பிரான்ஸ், ஹாங் காங், தைவான் மற்றும் பல நாடுகளுக்கு இப்படம் செல்கிறது. தைவானில், இது ஆண்டில் மிகப்பெரிய ஜப்பானியத் திரைப்படம் மற்றும் கடந்த பத்து ஆண்டுகளில் இது மிகப்பெரிய திரைப்படம் எனும் நிலைக்கு நெருங்கி வந்துள்ளது. மேலும், இது அறுபது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு இதுவரை, 18 விருதுகளை வென்றிருக்கிறது. விரைவில் ஹாங்-காங்கில் வெளியிடப்படப் போகிறது, அதற்கான அறிவிப்புகளையும், விளம்பரங்களையும் பேருந்துகளில் காணமுடிகிறது. 

Related image

பாக்ஸ் ஆபீஸில் உற்பத்தி வரவு செலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட 1000 மடங்கு வசூல் செய்திருக்கிறது. இது யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி. இதன் காரணமாக நீங்கள் ஏதேனும் அழுத்தத்தை உணரப்போகிறீர்களா? அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று கவலைப்படுகிறீர்களா?

ஆம், நீங்கள் சொல்வது சரிதான்; இந்தப் படத்திற்கான பட்ஜெட் என்பது சுமார் 3 மில்லியன் யென் (27,000 டாலர்கள்) இப்படம் இப்போதுவரை 3 பில்லியன் யென்னிற்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் வசூல் வேகமும் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. இதனால் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று சொன்னால், நான் பொய் சொல்கிறேன் என்றெ அர்த்தம், ஆனால் அதே நேரத்தில் நான் அதை உணர்வதற்கு மிகவும் வேலையாகவும் இருக்கிறேன். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், அதைப் பற்றி சிந்திக்க எனக்கு நேரமில்லை. எனக்கு அழுத்தங்கள் இருந்தபோதிலும் அந்த அழுத்தத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கவே விரும்புகிறேன், அந்த அளவு சராசரி விகிதத்தில், சரியான அளவில் இருந்தால் நல்லது. 

படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள், இதற்கு முன் அதிகமாக நடித்திராதவர்கள். அவர்களை நடிப்புப் பட்டறைகளின் மூலமாகக் கண்டறிந்து நடிக்கவைத்திருக்கிறீர்கள் அல்லவா? உங்களின் அடுத்தடுத்த படங்களில் அவர்களுடன் மீண்டும் பணியாற்ற ஏதேனும் திட்டம் இருக்கிறதா?

இதுவரை எதுவும் திட்டமிடப்படவில்லை, ஆனால் அது எதிர்காலத்தில் நடக்கக்கூடும். படம் முடிந்தபிறகும், நாங்கள் இப்போதும் நெருக்கமான தொடர்பிலேயேதான் இருக்கிறோம். எடுத்துக்காட்டாக, எங்களில் ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்பொழுது, அனைவரும் ஒன்று கூடுவோம், அல்லது இந்தப் படத்தின் தொடர்ச்சி ஒன்றை உருவக்கினால், அதில் எல்லோரும் சேர்ந்து நடிப்பார்கள். 

அப்படியெனில், இந்தப் படத்தின் தொடர்ச்சியாக, அதன் அடுத்த பாகம் குறித்து திட்டமிட்டிருக்கிறீர்களா?

இதுகுறித்து என்னிடம் எந்த உறுதியானத் திட்டமும் இல்லை, ஆனால் சற்று பெரிய பட்ஜெட்டில் அதே நேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் அல்லாமல் அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று என இப்படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க முடிந்தால் நல்லது. பட்ஜெட் பெரியதாகி, பட உருவாக்கமும் பெரியதாக இருந்தால், பட உருவாக்கத்தில் அதிகமான மக்கள் ஈடுபட்டிருந்தால், நாம் சில சுதந்திரத்தை இழக்க நேரிடும். 

உங்கள் அடுத்த படத்திற்கான திட்டம் குறித்துப் பேசமுடியுமா?

நான் ஷோச்சிகு பிராட்காஸ்டிங் (ஸ்டுடியோவின் துணை நிறுவனம் மற்றும் வினியோகஸ்தர் ஷோச்சிகு) ஒரு படத்தில் வேலை செய்கிறேன். இது எனது அசல் திரைக்கதையாக இருக்கும், இதை நான் இன்னும் முடிக்கவில்லை, எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன், அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் படப்பிடிப்பு துவங்கும் நோக்கத்துடன் இந்த ஆண்டு குளிர்காலத்தில் நடிகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆடிஷன்களை நடத்துகிறேன். அதற்கப்பால், நான் எதையும் அறிவிக்க விரும்பவில்லை. 

நன்றி: hollywoodreporter