சர்ச்சைகளும் அரசியலும் பிரச்னைப்பாடுகளும்


(Polemics, Politics and Problematizations என்ற பேட்டி, 1984-ஆம் ஆண்டு மே
மாதம் மிஷேல் ஃபூக்கோவின் இறப்புக்கு சற்றுமுன்பு எடுக்கப்பட்டது.
பேட்டிகண்டவர் பேராசிரியர் பால் ராபினோ. ஆங்கில மொழியாக்கம்: Lydia
Daris. தமிழில் நாகார்ஜுனன். From the Foucault Reader (ed) Paul Rabinow (Pantheon,
New York, 1984) இட அளவு கருதி சில பகுதிகள் மட்டுமே தரப்பட்டுள்ளன.)

விவாதங்களில் கலந்து கொள்ளும் நீங்கள் சர்ச்சையில், தாக்குதலில் (polemics) ஈடுபடுவதோ தாக்குதலுக்குப் பதில் சொல்வதோ இல்லையே, இது ஏன்?

விவாதங்களை விரும்புகிறேன். கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். சர்ச்சைகளில், தாக்குதல்களில் மாட்டிக்கொள்ள நான் விரும்புவதில்லை என்பதும் உண்மை... புத்தகமொன்றைத் திறந்து வாசிக்கும் போது அதை எழுதிய நபர் எதிராளி ஒருவரை "இடதுசாரி சாகசவாதியே!" என்று குற்றம்சாட்டுபவராக இருப்பாரேயானால், அந்தப் புத்தகத்தை அப்படியே மூடிவைத்து விடுகிறேன். இத்தகைய குற்றச்சாட்டுகளை வீசுவதும் அவற்றை முக்கியமாக எடுத்துக்கொண்டு வாசிப்பதும் என் வழிமுறை அல்ல. இப்படிச் செய்பவர்களின் உலகில் என்னால் வாழ முடியாது; அவ்வுலகுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.

வித்தியாசப்பட்டுக்கொள்வது (difference) என்பது முக்கியமானது, தேவையானது. வித்தியாசப்பட்டுக்கொள்வதில் அறவியல் ஒன்று அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன்; உண்மையை விவாதம் மூலம் தேடிக்கண்டறிவதையும் வேறு (Other) என்பதுடனான உறவையும் அடிப்படையாகக் கொண்ட அறவியல் இங்கே அடங்கியிருப்பதாகக் கருதுகிறேன்.

கேள்வி-பதில், உரையாடல், விவாதம் என்பது தீவிரமானதொரு விளையாட்டு. பரஸ்பர விளக்கமளித்தலை ஊக்குவிக்கும் இந்த வேலையில், விவாதத்தில், ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரின் உரிமைகளும் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டவை ஆகும். விவாதச்சூழலின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற உண்மை பொதிந்திருக்கிறது.

கேள்வி கேட்கிற நபர் தனக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமை ஒன்றைத்தான் செயல்படுத்துகிறான். எனவே அளிக்கப்படும் பதிலால் திருப்திப்பட்டுக்கொள்ளாம லிருக்கவும் அப்பதிலில் முரண்பாடு ஒன்றைக் கண்டறியவும் இன்னும் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் பதிலுள்ள வெவ்வேறு தத்துவ அடிப்படைகளைச் சுட்டிக்காட்டிவிடவும் பதிலிலுள்ள தவறான காரண-காரிய உறவை எடுத்துக்காட்டவும் கேள்வி கேட்பவனுக்கு உரிமை நிச்சயமாக உண்டு.

பதில் சொல்பவனைப் பொறுத்தவரையில் விவாதத்துக்கு அப்பால் போகாத அளவில் அவனுடைய உரிமை உள்ளது. ஏற்கனவே அவனால் பேசப்பட்ட சொல்லாடலின் தர்க்கத்துள் அவன் கட்டுப்பட்டிருக்க வேண்டும். கேள்வி - பதில் என்பது ஒரே சமயத்தில் சுவாரசியமானதும் சிரமமானதுமான ஒரு விளையாட்டாக இருக்கிறது. விவாதம் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவத்துள் செயலாற்றும் இருதரப்பினரும் பரஸ்பரம் அளித்துக்கொள்கிற உரிமைகளின் அடிப்படையில்தான் அது நடைபெற முடிகிறது. விவாதங்களின்போது தாக்குதலில் ஈடுபடுகிற நபர், ஏற்கனவே தனக்கிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற அந்தஸ்தில் உட்கார்ந்துகொண்டு செயலாற்றுகிறார்; தனது அந்தஸ்தை அவர் கேள்விக்குட்படுத்திக் கொள்வதே இல்லை. யுத்தமொன்றை நடத்திக்கொள்வதற்கான அதிகாரம் தனக்கிருப்பதாகவும் அந்த யுத்தத்தை நடத்துவது நியாயமானதுதான் என்று காட்டும் பணியும் தனக்கிருப்பதாகவும் இந்த நபர் நம்புகிறார். இந்த நபர், தான் எதிர்கொள்கிறவர்கள் யாரையும் உண்மைகளை விவாதம் மூலம் அறிவதற்கான கூட்டாளிகளாகக் கருதுவதில்லை.

மாறாக, தான் எதிர்கொள்கிற மனிதர்களை எதிரிகளாக, தப்பே செய்துகொண்டிருக்கிறவர்களாக, கெடுதல் விளைவிப்பவர்களாக, அபாயகரமானவர்களாகக் கருதுகிறார். இவர். தன்னுடன் விவாதத்தில் ஈடுபட வருபவர்களைப் பேசும் உரிமைகள் கொண்ட தன்னிலைகளாக கருத மறுக்கிறார். இவரைப் பொறுத்தவரை விவாதம் என்கிற விளையாட்டு, தன்னுடன் விவாதிக்கவருகிற நபர்களை நிர்மூலம் ஆக்குகிற செயல்பாடு என்று நம்புகிறார்; விவாதத்திலிருந்தே அவர்களை வெளியேற்றுகிறார். இவரது குறிக்கோளானது, சிக்கலான உண்மையொன்றை விவாதத்தின் மூலம் கொஞ்சம்கொஞ்சமாக நெருங்குவதாக இருப்பதில்லை; மாறாக, ஏற்கனவே தனதாக வைத்துக்கொண்டிருக்கிற நியாயமான முடிவை, ஏற்படுத்திக்கொண்டுவிட்ட இலட்சியத்தை அடைந்துவிடுவதாக இருக்கிறது. ஆக, ஒரு விவாதத்தின்போது தாக்குதலைத் தொடுப்பவர், தாக்கப்படுபவருக்குக் கிடைக்கவே முடியாத நியாயவாதத்தின் மூலமாகத்தான் செயல்பட முடியும்.

தாக்குதல் என்பது பற்றிய நீண்ட வரலாறு யாராலாவது ஒருநாள் எழுதப்பட வேண்டும்; தாக்குதல் என்பது எப்படி விவாதத்தின் மீதான ஒட்டுண்ணியாக, உண்மையைக் கண்டறிவதற்கான தடையாக இருந்துவந்துள்ளது என்பது வரலாற்றுரீதியாக யாராலாவது ஒருநாள் விளக்கப்படவேண்டும். விவாதங்களின்போது சர்ச்சைகள், தாக்குதல்கள் நடக்கிற வடிவங்களாக இன்று பின்வரும் மூன்று வடிவங்களைக் கூறமுடியும்:

1. மத-வடிவம்
2. நீதிபரிபாலன-வடிவம்
3. அரசியல் - வடிவம்
மதவடிவத்தில், தாக்கப்படுபவர் மீது மாறமுடியாத, மாற்றப்படமுடியாத விதிகளை, கோட்பாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அப்படி எந்தெந்த இடங்களை தாக்கப்படும் நபரானவர் மீறிவிட்டிருக்கிறார், கவனிக்காமல் இருந்திருக்கிறார், என்பதைத் தீர்மானிக்கும் செயல்பாடாக தாக்குதல் இயங்குகிறது. அப்படியான மீறல்களை அறரீதியான வழுவல்களாக தாக்கும் நபர் பட்டியலிடுகிறார். மதக்கோட்பாடுகளை மீறுபவர்களை மதமானது heretics என்று தாக்குவது போல இது நடந்தேறுகிறது. இறுதியில் தாக்கப்படும் நபருக்கான தண்டனை வரையறுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அப்படியாக தண்டனை வழங்கப்படும்போது, இதுவரை தாக்கப்பட்டுவந்த நபர் ஆசை, வேட்கை, உணர்ச்சி, சுய நலம் போன்றவற்றின் அடிப்படையில் இதுவரை இயங்கியுள்ளார் என்ற விளக்கமும் தரப்படுகிறது. இத்தகைய பலவீனங்களே தாக்கப்பட்டவருடைய வழுவல்களுக்குக் காரணம் என்பது நிறுவப்படுகிறது.

நீதிபரிபாலன - வடிவத்தில் தாக்குதல் நடந்தேறும் வழிமுறைகளைப் பார்ப்போம். இங்கேயும் சமஅளவிலான பரஸ்பர விவாதம் என்பது இருப்பதில்லை. அதற்கான சாத்தியப்பாடுகள் மறுக்கப்படுகின்றன. நீதிபரிபாலன -வடிவத்தில் நடக்கும் தாக்குதல், விசாரணையைப் போல் நடந்தேறுகிறது. தாக்கப்படும் நபர், இங்கே குற்றம் செய்துவிட்டதாக சந்தேகிக்கப்படுபவராவார். தாக்கப்படும் நபரின் குற்றஉணர்ச்சி அலசப்படுகிறது; அலசப்பட்டவுடன் அவர்செய்த குற்றத்தின் அளவு தீர்மானிக்கப்பட்டு அவர்மீதான தீர்ப்பு வழங்கப்பட்டு அவர் தண்டிக்கப்படுகிறார். இங்கே இருதரப்பினரும் விவாதத்தின் மூலம் தமது தேடலைப் பங்கிட்டுக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக தாக்குகிற நபரானவர், தனக்குத்தானே வழங்கிக்கொண்டுவிட்ட அதிகாரத்தின் பேரில் உண்மை என்கிற தீர்ப்பை வழங்குகிறார். மூன்றாவதான அரசியல்வடிவத்தில் நடந்தேறுகிற தாக்குதல்தான் இன்று மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். இங்கே தாக்குதல் என்பதே அணிகளை வரையறுத்து, ஆள்பிடித்து, குறிப்பிட்ட நலன்களை ஒன்றிணைத்து, ஏதோ ஒரு தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நடக்கிறது. வேறு (Other) என்ற நபரே எதிரியாகவும், எதிரான நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவராகவும் அமைக்கப்பட்டுக் கொண்டுவிடுகிறார். இந்த எதிரி தோற்கடிக்கப்படும் வரையிலும் அல்லது சரணடையிலும் வரையிலும் அல்லது காணாமல்போகும் வரையிலும் நடத்தப்படும் போராட்டமாக தாக்குதல் நடந்தேறுகிறது.


மத-வடிவத்திலும் நீதிபரிபாலன வடிவத்திலும் அரசியல் வடிவத்திலும் நடந்தேறுகின்ற இத்தாக்குதல்கள் உண்மையில் நாடகங்கள் (theater); அவ்வளவுதான். இந்த அரங்கேற்றத்தில் தாக்குகிற நபரானவர் வீராவேசமான பாவனைகளை, சைகைகளைச் செய்துகாட்டுகிறார்; அவ்வளவுதான். செய்யப்படுகிற கண்டனங்கள், விலக்குதல்கள், கொடுக்கப்படுகிற சாபங்கள், போடப்படுகிற தடைகள் எல்லாமே பேச்சு (Speech) என்பதற்கான பல்வேறுவழிமுறைகள் தானே! சொல்லாடலின் ஒழுங்கமைப்புக்குள் செய்துகாட்டப்படும் இந்த பாவனைகளுக்கேயான குறிப்பிடத்தக்க விளைவுகளும் நிச்சயமாக உண்டு! இந்த விளைவுகளைப் பின்வருமாறு
விளக்குவோம் :

முதலில் தாக்குதலுக்கே உரித்தான காயடிக்கும் விளைவுகள், தாக்குதல்களிலிருந்து புதிய, பருண்மையான கருத்துக்கள் எதுவும் வந்ததேயில்லை என்பதைக் கவனித்தால் இந்தவகை விளைவுகள் புரியும். விவாதத்தில் ஈடுபடுவதாக உள்ளவர்கள், தமது நிலைப்பாடுகளைக் கேள்விக்குட்படுத்திக் கொள்ளாமல் தமது வெளிப்பாட்டு உரிமைகளையே மீண்டும் மீண்டும் பாதுகாத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கத் தூண்டப்படுவதை வேறெப்படித்தான் புரிந்து கொள்வது! விவாதத்தில் ஈடுபடுபவர்கள் தமது அப்பாவித்தனத்தை அடிக்கொருமுறை பறைசாற்றிக்கொள்வதை வேறெப்படித்தான் புரிந்து கொள்வது! அடுத்ததாக, இன்னும் தீவிரமான விளைவுகள். பரஸ்பரத்தாக்குதலில் ஈடுபடுபவர்கள் தமாஷான விஷயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்: யுத்தமொன்றை இவர்கள் 'மிமிக்ரி' செய்துகாட்டிக்கொண்டிருக்கிறார்கள்; மோதல்களை, அழித்தொழிப்புகளை மற்றும் நிபந்தனையற்ற சரணடைவுகளை 'மிமிக்ரி' செய்துகாட்டிவருகிறார்கள். இவற்றில் ஈடுபடுபவர்களின் கொலைவேட்கைக்கு (kiler instinct) இங்கே, முழுமையான இடமளிக்கப்படுகிறது. ஆனால் இவ்வழிமுறைகள் மூலமாக உண்மையை அடையமுடியும் என்று யாராவது கருதினால் அது அபாயகரமானதாகும்; இவ்வழிமுறைகளைக் கோருகிற அரசியல் போக்குகளை குறியீட்டியல் ரீதியாகவேனும் நியாயப்படுத்துவதும் அபாயகரமானதாகும்! உதாரணமாக, தாக்குதல்களில் ஈடுபடுகிற இருதரப்பினரில் ஒருவருக்கு இன்னொருவர்மீது முழுமையான அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வாய்ப்பு தரப்பட்டால் என்னென்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! ஏன், கற்பனை செய்யக்கூடத் தேவையில்லை. மொழியியல் (linguistics) மற்றும் உயிர்மூலக்கூற்றியல் (genetics) பற்றி சோவியத் யூனியனில் கொஞ்சக்காலத்துக்கு முன்பு நடந்தேறிய விவாதங்களின் விளைவுகளைப்பற்றி நினைவுகூர்ந்தாலே போதும். சரியான விவாதங்களின்போது, தவறி நடந்து போய்விட்ட பிறழ்வுகள் என்று இவற்றைக் கூறிவிடுவதுடன் நின்றுவிட்டால் போதுமா? கிடையவே கிடையாது. விவாதத்தின்போது நடக்கிற தாக்குதல்களின் நிஜஉலக விளைவுகளாகத்தான் இவற்றைக் கணிக்க முடியும்! விவாதத்தின்போதே நடக்கிற இன்றைய தாக்குதலில் அதன் அபாய விளைவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன; அவ்வளவுதான்.

அறவியல், அரசியல் மற்றும் உண்மை குறித்த வம்சாவழியியல் ஆகியவற்றைச் சுற்றி உங்கள் ஆய்வுகள் அமைகின்றன என்று கூறலாமா?
அறவியல், அரசியல், விஞ்ஞானத்துறைகள் ஆகியவற்றுக்கிடையிலான உறவுகள் பற்றியதாக எனது ஆய்வுகள் உள்ளன என்று சந்தேகமின்றிக் கூறலாம். ஆனால் இப்படிக்கூறுவது நான் செய்வதாக ஆரம்பித்த ஆய்வுகள் பற்றிய சரியான கணிப்பாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால், அந்த அளவில் ஆய்வுகளை வைத்திருப்பதை நான் விரும்பவுமில்லை! மாறாக, அரசியல் அமைப்புகள், அறவியல் சடங்குகள்/செயல்பாடுகள் மற்றும் விஞ்ஞானத்துறைகள் ஆகியவற்றின் உருவாக்கத்தில் நடந்தேறுகின்ற போக்குகள் எத்தகையவை என்பதையே ஆராய முற்படுகிறேன் நான்.


உதாரணமாக, உளவியல்-ஆய்வை எடுத்துக்கொள்வோம். இத்துறையின் அறிவுக்கோட்பாட்டு அடிப்படை இன்று ஆராயப்பட முடிவதாக உள்ளது; இத்துறை இயங்குகிற அரசியல் நிறுவனங்களின் கட்டமைப்புக்குள்ளாக இதனை ஆராய்வது இன்று சாத்தியம்; அதேபோல இத்துறையின் அறவியல்-விளைவுகளை வைத்தும் இதனை ஆராய்வது இன்று சாத்தியமாகி உள்ளது. உளவியல் ஆய்வாளருக்கும், உளவியலின் ஆய்வுப்பொருளாக வருகிற நபருக்கும்
இடையில் நடப்பது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது சாத்தியமாகி உள்ளது. ஆனால் என்னுடைய குறிக்கோள் இதுவல்ல! உளவியல்-ஆய்வு என்பதே, இத்துறையின் களவீச்சு என்பதே, அக்களவீச்சின் எல்லைகள் என்பனவே, தனது ஆய்வுப்பொருளை வரையறுக்கும் வழிமுறையே, குறிப்பிட்ட ஓர் அரசியல் அமைப்புக்கும் ஓர் அறவியல் சடங்கு/செயல்பாட்டுக்கும் வழிவகுத்துவிட்டதாக இருக்கிறது என்பதுதான் எனது விளக்கம். உளவியல்-ஆய்வு என்பது விஞ்ஞானரீதியான ஒரு துறையாக வளர்ச்சி பெற்றதற்குக் குறிப்பிட்ட அரசியல் அமைப்பும் அறவியல் சடங்கு/செயல்பாடும் அடிப்படையாக இருந்துள்ளன; அதுமட்டுமின்றி இவ்வரசியல் அமைப்பும் அறவியல்-சடங்கு/செயல்பாடும் இந்த வளர்ச்சிக்கேற்றவாறு மாறியும் வந்துள்ளன
என்கிறேன்.

"பிரச்சனைப்பாடுகளின் வரலாறு" பற்றி அண்மையில் அடிக்கடி பேசிவருகிறீர்கள்.
அப்படியென்றால் என்ன? விளக்க முடியுமா?
சிந்தனையின் வரலாறு என்பதை கருத்துகளின் வரலாறாக அன்றியும் மனப்பாங்குகளின் வரலாறாக அன்றியும் அணுக முடியுமா என்று வெகுகாலமாக யோசித்து வருகிறேன். கருத்துகளின் வரலாறு என்பது குறியிடல் -அமைப்புகள் (representations) பற்றிய ஆய்வாகவும் மனப்பாங்குகளின் வரலாறு என்பது பார்வைகள், செயல்பாடுகளின் வகைகள் குறித்த ஆய்வாகவும் ஆகிவிடும் என்பதால் இவையிரண்டிலிருந்தும் வேறுபட்டதான "பிரச்னைப்பாடுகளின் வரலாறு" குறித்துப் பேசலானேன்! குறிப்பிட்ட நடப்பு (behaviour) ஒன்றின்
அடித்தனமாக உள்ள குறியிடல் - அமைப்புகளிலிருந்தும் அந்த நடப்பைத் தீர்மானிப்பதாக உள்ள பார்வைக்களத்திலிருந்தும் வேறுபட்டதாக இருப்பது சிந்தனை என்று பேசலானேன்........
சிந்தனை என்பது, ஏதோ ஓர் ஊடகத்தில் குடியிருந்து அதற்கு உள்ளடக்கம் கொடுக்கும் விஷயமல்ல; மாறாக, செயல்பாடு (action) என்பதிலிருந்தும் எதிர்வினை (reaction) என்பதிலிருந்து விலகி ஓரடி பின்னால் எடுத்துவைப்பதற்கு ஏதுவாக இருப்பதே சிந்தனையாகும்; தன்னையே சிந்தனைக்கான ஆய்வுப்பொருளாக நிறுத்திக்கொண்டு, தனது அர்த்தங்கள், இலட்சியங்கள், அடிப்படைச்சூழல்களை கேள்விக்குட்படுத்துவதே சிந்தனையாகும். ஆக, செயல்பாட்டுடன் தொடர்புள்ள சுதந்திரமே சிந்தனையாகும்; தான் தன்னிடமிருந்தே கழன்று கொண்டுவிடுவதற்கான இயக்கமே சிந்தனையாகும்; தன்னை ஆய்வுக்கான பருண்மைப்பொருளாக நிறுவுவதே சிந்தனையாகும்; தன்னை ஒரு பிரச்னையாக எதிர்கொள்வதே சிந்தனையாகும்.

பைத்தியக்காரத்தனம், குற்றவியல்தன்மை, பாலியல்நிலை - இவை தொடர்பான செயல்களம் என்பது எப்படி சிந்தனைக்களத்துக்குள் நுழைய முடிகிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். அப்படி நுழைந்தாக வேண்டுமென்றால், அச்செயலானது நிச்சயமற்ற ஒன்றாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்; அதற்கான பல பிரச்னைகள் உருவாகியிருக்கக்கூடும் என்கிறேன். இப்பிரச்னைகளுக்கான அரசியல் ரீதியான, சமுதாயரீதியான, பொருளாதார ரீதியான காரணங்கள், போக்குகள் இருக்க வேண்டும் என்கிறேன். ஆனால் அக்காரணங்கள், போக்குகளின் பங்கானது தூண்டுதல் (instigation) மட்டுமே ஆகும். வெகுகாலமாக இத்தூண்டுதலானது நடைபெற்றுக்கொண்டிருக்கலாம். சிந்தனையானது இதை ஒரு பிரச்னைப்பாடாகக் கணிக்கும் வரை அப்படிச் சிந்தனை தலையிடும் தருணத்தில், எதிர்கொள்ளப்படுகிற பிரச்னைகளின் நேரடிவிளைவாகவோ வெளிப்பாடாகவோ அச்சிந்தனையானது உருவாவதில்லை; மாறாக, சிந்தனையானது தன்னளவில் பிரத்தியேகமான ஒன்றாக உருப்பெறுகிறது; பரஸ்பர முரண்கள் கொண்டவை உட்படப் பல வடிவங்களில்
தோன்றுகிறது என்கிறேன்....

எதிர்கொள்ளப்படும் ஒவ்வொரு பிரச்னைக்கூட்டத்துக்கும் பல்வேறு எதிர்வினைகள் சாத்தியம். பெரும்பாலும் ஒவ்வொரு பிரச்னைக்கும் வெவ்வேறு எதிர்வினைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒரே சமயத்தில் பல எதிர்வினைகள் (simultaneous-ஆக) சாத்தியம் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்... பல்வேறு எதிர்வினைகளை, தீர்வுகளைச் சாத்தியப்படுத்துகிறாற்போல் அமைந்த பொதுவான பிரச்னைப்பாடு எத்தகையது என்பதைக் கண்டுபிடிப்பதாகும். எதிர்கொள்ளப்படுகிற பிரச்னைகளை மாற்றியமைத்து இந்த பிரச்னைப்பாடானது உருவாகிறது. (பிரச்னைகளை நேரடியாக வெளிப்படுத்தியோ, விளக்கியோ இந்த பிரச்னைப்பாடு
உருவாகிறதில்லை!) இந்த பிரச்னைப்பாட்டின் இயக்கத்தை முதலிலிருந்தே கண்காணித்து விவரிப்பதே சிந்தனையின் வரலாறு மேற்கொள்ள வேண்டிய பணி என்பேன்.

நன்றி: மீட்சி/35/1991
(வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதை போன்ற இலக்கிய வடிவங்கள், ஆவணப்படுத்தப்பட வேண்டும் எனும் நோக்கில், மீட்சி இதழில் 1991ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை, பேசாமொழி இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.)