’சைக்கோ’வின் சைக்கோ – ஹிட்ச்காக்

உலகமெங்கும் உள்ள சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வெகுபிரசித்தி பெற்ற இயக்குனர்கள் என்றால் இருவரைச் சொல்லலாம், ஒருவர் சார்லி சாப்ளின் மற்றவர் ஆல்பிரெட் ஹிட்ச்காக். சைட் & சவுண்ட் சினிமா இதழில் ஹிட்ச்காக்கின் 1958ஆம் ஆண்டு படமான ’வெர்டிகோ’ உலகளாவிய திரைப்பட விமர்சகர்களின் வாக்கெடுப்பில் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஹிட்ச்காக்கின் படங்கள் குறித்து புதிய புதிய விமர்சன மதிப்பீடுகளும், வாழ்க்கை வரலாற்று ஆய்வுகளும் நடந்தவண்ணமே உள்ளன. 

கடந்த இருபது ஆண்டுகளில், ஹிட்ச்காக் ஒரு நாடகத்தின் (டெர்ரி ஜான்சனின் ஹிட்ச்காக் ப்ளாண்ட் (Terry Johnson's Hitchcock Blonde)), ஒரு பிரித்தானிய நாவலின் (நிக்கோலா அப்ஸனின் ஃபியர் இன் தி சன்லைட் – 1930களில் நடப்பதுபோன்று அமைக்கப்பட்ட த்ரில்லர் கதை) மற்றும் மூன்று படங்களின் மையப்புள்ளியாக இருந்திருக்கிறார். அனைவருமே அவரது தன்மை, நடவடிக்கை மற்றும் செய்திருக்கிற வேலைகள் மீதுதான் பரவலான ஆர்வத்தைக் குவிக்கின்றனர். உண்மையில் அவற்றிலிருந்து ஹிட்ச்காக் எனும் தனிமனிதனை பிரிக்க முடியாததாகவும் கருதுகின்றனர். எனில், இம்மனிதர் ஏன் மிகவும் போற்றப்படுகிறார்? ஏனெனில், அவர் நாம் பாதிக்கப்படக்கூடிய இருண்ட பக்கங்களுக்கு நம்மை அழைத்துச்செல்கிறார், பின்னர் மீண்டும் நம்மை நமது சாதாரண வாழ்க்கைக்கு மீட்டுக்கொண்டு வருகிறார். 

ஹிட்ச்காக்கை ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வெளிவந்த மூன்று படங்களில், முதலாவது ராபர்ட் லெபேஜின் சாகசத் திரைப்படமான தி கன்ஃபெஷனல் (Robert Lepage - The Confessional). இது ஒப்பீட்டளவில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியது, ஏனெனில் இது பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருந்தது, மற்றும் க்யூபெக் சிட்டியில் உள்ள ஒரு குடும்பத்துக்கும் ஐ கன்ஃபெஸுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றியது, ஹிட்ச்காக் அங்கு 1952-ல் படப்பிடிப்பில் இருப்பதுபோல கதை அமைக்கப்பட்டிருக்கும். 


படத்தில் ரான் பர்ரேஜ் (Ron Burrage) ஹிட்ச்காக்காக நடித்திருப்பார். அவர் தன் உடல் மற்றும் குரல் வாயிலாக ஹிட்ச்காக்கின் தோற்றத்தை செதுக்கியுள்ளார். மறைந்த வில்லியம் ஹுட்கின்ஸ் (ஹிட்ச்காக் ப்ளாண்ட் நாடகத்தில், லண்டன் மேடையில் தோன்றியவர்) மட்டுமே ஹிட்ச்காக்கின் உண்மையான தோற்றத்தை மிக நெருக்கத்தில் பொருத்திக் காண்பித்தவர். ஹிட்ச்காக்கை மையக்கதாபாத்திரமாகக் கொண்டு வெளிவந்த மற்ற இரு சமீபத்திய திரைப்படங்களில் ஒன்று, டோபி ஜோன்ஸ் நடிப்பில் ஜுலியன் ஜரோல்டில் இயக்கத்தில் ஒரு தொலைக்காட்சித் திரைப்படமாக வெளியான தி கேர்ள் (இப்படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று பிபிசி2-ல் ஒளிபரப்பப்பட்டது.) 

Image result for anthony hopkins hitchcock
அடுத்த திரைப்படம், அந்தோனி ஹாப்கின்ஸ் நடிப்பில் சாக்சா கெர்வாசியின் இயக்கத்தில் உருவான ஹிட்ச்காக். நாம் இங்கு விவாதிக்கப்போவது இந்த மூன்றாவது திரைப்படத்தைப் பற்றிதான். 

ஹிட்ச்காக்கின் தலைசிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுகிற திரைப்படம் ‘சைக்கோ’. இப்பட உருவாக்கத்தின் பொழுது ஹிட்ச்காக்கிற்கு இருந்த மனநிலை, கனவுகள், தன் மனைவிக்கும் தனக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சந்தேகங்கள், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகள், அனைவராலும் சிலாகிக்கப்படுகிற ஷவரில் குளிக்கும் காட்சி காட்சிப்படுத்தப்பட்ட விதம், படத்தொகுப்பில் ஒரு படத்தை உருவாக்கும் யுக்தி என அனைத்தையும் கதைக்களம் உள்ளிழுத்துக்கொண்டுள்ளது. 

இதில் ஹிட்ச்காக்காக நடித்திருக்கும் அந்தோனி ஹாப்கின்ஸ், வயதிற்கேற்ற கதாபாத்திரம் என நடை, உடை, பாவனையில் கண்முன்னே ஹிட்ச்காக்கை நிலைநிறுத்துகிறார். ஒரு புரிதலுக்காக படத்தின் கதையை முதலில் பார்த்துவிடுவோம். 

Image result for anthony hopkins hitchcock

1959ஆம் ஆண்டு ஹிட்ச்காக்கின் ‘நார்த் பை நார்த்வெஸ்ட் (North by Northwest)’ வெளியாகிறது. ஒரு படம் விமர்சனம் அல்லது வணிகம் என ஏதாவதொன்றில் வெற்றிபெற்றாலே பெரிதும் மதிக்கப்படக்கூடிய ஒன்றாக மாறிவிடுகிற சூழலில், இப்படம் விமர்சனம் வணிகம் என்ற இரண்டிலும் வெற்றிபெற்ற திரைப்படமாக இருந்தது. இப்படத்தினைக் காண வந்த பார்வையாளர்கள் படம் குறித்த தங்கள் மனநிறைவைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால், பத்திரிக்கையாளர் தரப்பிலிருந்து வந்தவர்கள், ஹிட்ச்காக்கின் வயதைக் காரணம் காட்டி, ‘அவர் ஓய்வு பெற வேண்டும்’ என்பதுபோன்ற கருத்தைச் சொல்லிவிடுகின்றனர். நிரூபரின் இந்த வற்புறுத்தலால் மிகவும் கலங்கிப்போகிறார் ஹிட்ச்காக். படம் பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள், அவர்களைக் கவரவேண்டும், நிரூபர்கள் மத்தியிலும் தனக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற மனப்போராட்டம் அதிகரிக்கிறது. 

கேசினோ ராயல், தி டைரி ஆஃப் அன்னே ஃபிராங்க் (Casino Royale and The Diary of Anne Frank) போன்ற பிரசித்திபெற்ற கதைகளை இயக்குகிற வாய்ப்பு தன்னைத் தேடி வருகிறபொழுதும் அதை நிராகரிக்கிறார். சைக்கோ கொலையாளிகள், யதார்த்த வாழ்வில் பல குற்றங்களைச் செய்திருக்கிற மனிதர்களின் வாழ்க்கையை அடியொற்றி வரலாற்றுக் கதைகளும், சுயசரிதைகளும், புதினங்களும் எழுதப்படுவதுண்டு. அதுபோல எட் ஜீன் (Ed Gein) என்ற கொலைகாரனின் நிஜ வாழ்க்கைக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ராபர்ட் ப்ளாச் (Robert Bloch) எழுதிய, ’சைக்கோ (Psycho)’ என்ற திகில் நாவலின் பக்கம் ஹிட்ச்காக் கவனத்தைத் திருப்புகிறார். ஒரு அர்த்த ராத்திரியில் மனைவியை எழுப்பி ‘இதுதான் எனது அடுத்த படம்’ என்று அறிவிக்கிறார். ஆனால், மனைவியோ இன்னொரு எழுத்தாளரின் படைப்பைத்தான், ஹிட்ச்காக் தனது அடுத்த திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஹிட்ச்காக் அதற்கு இசைந்துகொடுக்கவில்லை. 

Image result for anthony hopkins hitchcock

ஹிட்ச்காக்கின் மனைவி அல்மாவும் கூட ஒரு உதவி இயக்குனராக இருந்து, பின்னர் தான் ஹிட்ச்காக்கை மணந்துகொண்டார். எனவே, அவருக்கும் திரைப்பட உலகம் சார்ந்த புரிதலும், எந்தக் கதை பார்வையாளர்களை ஈர்க்கும் போன்ற மனப்பக்குவமும் வாய்த்திருக்கவே செய்தது. அடுத்து சைக்கோ கொலைகாரனான ஜீன், படம் முழுவதும் காட்சிகளில் தோன்றுகிறார், இதன் மூலம் சைக்கோ கதையைப் பற்றிய ஹிட்ச்காக்கின் கற்பனையைத் தூண்டுவதாகத் தெரிகிறது. வயதானதன் காரணமாக ஓய்வெடுக்கச் சொல்லிய நிரூபர், வயதானதன் காரணமாகவே தன் மனைவி தன்னைப் புறக்கணிக்கிறாளோ போன்ற எண்ணங்கள் ஹிட்ச்காக்கை அலைக்கழிக்கின்றன. அதேபோல, ஹிட்ச்காக்கின் ஆழ்மனதின் செயல்பாடாகவே ஜீன் தோன்றுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். 

Image result for anthony hopkins hitchcock

ஹிட்ச்காக் தனது சஸ்பென்ஸ் கதை வெகு எளிதாக யாருக்கும் சென்றுவிடக்கூடாது என்று நினைப்பவர். படம் ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு யாருக்கும் திரையரங்கில் அனுமதியில்லை என்று தைரியமாக அறிவிப்பு வெளியிட்டவர். இது சைக்கோ படத்தின் பொழுதுதான் நிகழ்ந்தது. மேலும், சஸ்பென்ஸ் என்பது கடைசிநேர திருப்பத்தில் தான் அமைந்திருக்கிறது. சைக்கோ கதையையே எடுத்துக்கொள்ளலாம். ஹோட்டல் உரிமையாளர், தன் தாய் இறந்துவிட்டதைப் பொருட்படுத்தாது அந்த சடலத்தோடே உரையாடி வருகிறார். அந்த ஹோட்டல் உரிமையாளர்தான் உண்மையான சைக்கோ என்பது படத்தின் இறுதியில்தான் வெளிப்படுகிறது. 

மேலும், இப்படம் ‘சைக்கோ’ என்ற நாவலை அடியொற்றி எடுக்கப்படுகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கிற வாசகர்களுக்கு எளிதில் அந்த சஸ்பென்ஸ் தெரிந்துவிடும் என்ற காரணத்திற்காக, ஹிட்ச்காக் அந்தப் புத்தகங்களையெல்லாம் திரும்பப் பெறுகிறார். நாம் ஒரு கதையை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுக்க விரும்பினால், அந்த எழுத்தாளரின் ஒரு புத்தகத்தை மட்டுமே விலைக்கு வாங்குவோம். ஆனால், சைக்கோவின் முடிவு என்னவாகயிருக்கும்? என்பது எந்த வாசகருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில், மார்கெட்டில் விற்பனையிலிருக்கும் ராபர்ட் ப்ளாச்சின் ’சைக்கோ’ புத்தகம் அனைத்தையும் ஒன்று மீதமில்லாமல் வாங்கிவிடுகிறார். 

Image result for anthony hopkins hitchcock

ஹிட்ச்காக்கின் மனைவியும், தன் படைப்புகளில் கலைரீதியிலான ஒத்துழைப்பு நல்கிவருபவருமான அல்மா, ’சைக்கோ’ கதையை திரைப்படமாக எடுப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக அல்மாவின் எழுத்தாளர் நண்பரான விட்ஃபீல்ட் குக் (Whitfield Cook), தனது சொந்தத் திரைக்கதையை படமாக்கும்படி வற்புறுத்துகிறார் என்பதால், அவர் சைக்கோவைப் படமாக்குவது குறித்து ஈடுபாடு காட்டுவதில்லை. 

இருப்பினும், ஹிட்ச்காக்கின் முடிவிற்கு அல்மா ஒத்துப்போகிறார். படத்தின் ஆரம்பத்திலேயே பெண் கதாபாத்திரத்தைக் கொல்வதற்கான புதுமையான சதித்திருப்பம் இருந்தால் இன்னும் நன்றாகயிருக்கும் என்று தன் ஆலோசனையைப் பரிந்துரைக்கிறார். பாரமவுண்டில் உள்ள ஸ்டுடியோ நிர்வாகிகளின் செயல்பாடுகளினால் இப்படத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வது மிகவும் கடினமான காரியம் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. மேலும் அந்நிறுவனம் தனிப்பட்ட முறையில் இப்படத்திற்கு நிதியுதவி செய்ய ஹிட்ச்காக்கைக் கட்டாயப்படுத்தியதுடன், அவரது ஆல்பிரெட் ஹிட்ச்காக் பிரசண்ட்ஸ் தொலைக்காட்சி குழுவினரையும் படத்தை உருவாக்கப் பயன்படுத்தினார். 

இருப்பினும் பட உருவாக்கம் சார்ந்த அழுத்தங்கள், ஹிட்ச்காக்கின் பழக்க வழக்கங்கள், முன்னணிக் கதாபாத்திரமான ஜேனட் லீ ஆகியோருடன் ஹிட்ச்காக் கலந்துரையாடுவது அல்மாவை எரிச்சலூட்டுகின்றன. எனவே, அல்மா, ஹிட்ச்காக்கிடமிருந்து சற்று விலகி, அவருக்குத் தெரியாமல், விட்ஃபீல்ட் குக்- உடன் அவரது கடற்கரை இல்லத்தில், எழுத்து சார்ந்த உதவியை அளிக்கச் செல்கிறார். திரைக்கதை எழுதுதல் போன்றவை தனக்கும் கைவரக்கூடிய காரியம்தான் என்பதால், அல்மா, அவருக்கு எழுத்து ரீதியிலான தனது ஒத்துழைப்பை வழங்குகிறார். ஹிட்ச்காக்கிற்கு இது தெரியாது என்று அல்மா நினைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் இது அவருக்கும் தெரியவருகிறது. தன் மனைவி தனக்குத் தெரியாமல் இன்னொருவருடன் கடற்கரை இல்லத்தில் தங்கியிருக்கிறாள், தன்னைத் தவிர்த்து இன்னொரு ஆடவனுடன் தன் மனைவிக்குத் தொடர்பு உள்ளது என்று ஹிட்ச்காக் சந்தேகிக்கத் துவங்குகிறார். இது ஹிட்ச்காக்கின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரைப்பட வாழ்க்கையிலும் மோசமான மனச்சிதைவுக்கு ஆளாக்குகின்றன. ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஹிட்ச்காக், நேரடியாகவே மனைவியைப் பார்த்து, ’உனக்கு என்னைத் தவிர இன்னொரு ஆணுடன் தொடர்பு இருக்கிறதா?’ என்று கேட்கிறார். அல்மா, மிகக் கடுமையாகவும், கோபத்துடனும் அதை மறுக்கிறார். அவர் கோபமடைவதிலிருந்தே, அவர் மீது நியாயம் இருக்கிறது என்பதை ஹிட்ச்காக்கோடு சேர்ந்து நாமும் உணர்ந்துகொள்கிறோம்.

Related image 

ஹிட்ச்காக் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சைக்கோ பட உருவாக்கத்தில் மிகக் கடுமையாக வேலை செய்கிறார். ஒரு கட்டத்தில் அதிகப்படியான வேலையும், வயோதிகமும் அவரை படுக்கையில் வீழ்த்திவிடுகிறது. உடல் நலிவுறுகிறார். அச்சமயத்தில்தான், ஹிட்ச்காக்கின் பொறுப்பை அல்மா ஏற்றுக்கொள்கிறார், சைக்கோ பட உருவாக்கம் மீண்டும் துரிதமடைகிறது. ஹிட்ச்காக் மீண்டு வரும்வரைதான், அதற்கான பொறுப்பை அல்மா தற்காலிகமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனினும், ஹிட்ச்காக் உருவாக்கி வைத்திருக்கிற லென்ஸ் தேர்வு முதற்கொண்டு, ஷாட் ஃப்ரேமிங் வரை அல்மாவினால் கச்சிதமாகப் பின்பற்றமுடியவில்லை. உதாரணத்திற்கு, துப்பறிவாளர் ஆர்போகாஸ்டின் மறைவை உணர்த்துவதற்கு அல்மா 35எம்.எம் லென்ஸ் பயன்படுத்தியிருப்பார். ஆனால், அக்காட்சியை 50 எம்.எம் லென்ஸில்தான் படம்பிடிக்க வேண்டும் என்று ஹிட்ச்காக் மிகத் தெளிவாகத் தேர்ந்தெடுத்துக் குறித்திருப்பார். எனவே, இக்காட்சியானது படத்தில் மிகக்குறைவான தாக்கத்தையே உண்டாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. 

இதற்கிடையில் கிரேஸ் கெல்லிக்கு அடுத்தபடியாக, அடுத்த மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகையாக மாற்றுவதற்கான தனது திட்டத்தை ஏன் பின்பற்றவில்லை என்பதில் ஹிட்ச்காக் தனது ஏமாற்றத்தை வேரா மைல்ஸிடம் வெளிப்படுத்துகிறார். ஆனால், அதற்கு மாற்றாக வேரா மைல்ஸ் தனது குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவே கூறுகிறார்.

சைக்கோ திரைப்படத்தின் படத்தொகுப்பு பிரதி ஸ்டுடியோ நிர்வாகிகளால் மோசமாக உருவாக்கப்படுகிறது. அதேநேரத்தில் தனது நண்பன் என்று பழகி வந்த விட்ஃபீல்ட் குக், இதுநாள் வரை தான் வேலை பார்த்து வந்த அதே கடற்கரை வீட்டில் இன்னொரு இளம் பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டிருப்பதை அல்மா பார்த்துவிடுகிறாள். இதனால் அல்மா விட்ஃபீல்ட் குக்கிடமிருந்து விலகுகிறாள். ஹிட்ச்காக் மற்றும் அல்மா இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, சமரசம் செய்துகொண்டு ‘சைக்கோ’ படத்தை மேம்படுத்தும் பணியில் இறங்குகின்றனர். ஹிட்ச்காக், படத்தொகுப்பில் கைதேர்ந்தவர் என்றும், பட உருவாக்கத்தில் நேர்ந்த தவறுகளைப் படத்தொகுப்பில் சரிசெய்து, நேர்த்தியான விறுவிறுப்பான ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்று அல்மா ஹிட்ச்காக்கிற்கு நம்பிக்கையூட்டுகிறார். பின்னர் ஹிட்ச்காக்கும் முழு ஈடுபாட்டோடு படத்தொகுப்பில் ஈடுபடுகிறார்.

Related image 

ஷவரில் பெண்ணைக் குத்திக் கொல்கிற காட்சியில் இசையமைப்பாளர் பெர்னார்ட் ஹெர்மனின் அலறல் இசையைப் பயன்படுத்துமாறு அல்மா ஆலோசனை கூறுகிறார். ஹிட்ச்காக் அதை ஏற்றுக்கொள்கிறார். ஒருவழியாக பட உருவாக்கப் பணிகள் முழுமையடைகின்றன. அடுத்து தணிக்கையிலும் ஹிட்ச்காக் தன் தொனியில் பேசி, அனுமதி வாங்குகிறார். பல சூழ்ச்சிகளுக்குப் பின்னரும், படத்தின் உள்ளடக்கம் சிதையாமல் அப்படியே படத்திற்குள் வைத்திருந்தும், ஸ்டுடியோ நிர்வாகம் படத்தை இரண்டு திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்போவதாக அறிவிக்கிறது. 

Related image

மக்கள் படம் பார்க்க வேண்டும், மக்களின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவர்களைத் திரையரங்கின் பக்கம் அழைத்து வருவதற்கு ஏதேனும் வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்ற உண்மையை ஹிட்ச்காக் அறிந்துகொள்கிறார். அதன்படிதான், படம் துவங்கிய பின்னர், யார் வந்தாலும், திரையரங்கினுள் அனுமதி இல்லை, படம் துவங்கிவிட்டால் மக்களைத் திரையரங்கினுள் அனுமதிக்கத் தடை, போன்று பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில், சிறப்பு திரையரங்க வழிமுறைகளுக்கு ஹிட்ச்காக் ஏற்பாடு செய்கிறார். 

படம் முடிந்து அதைப் பார்வையாளர்கள் பார்க்கும் தருணம் அலாதியானது, பார்வைளர்கள் தனது படத்தை எந்தக் கோணத்தில் பார்க்கிறார்கள், அவர்களது எதிர்பார்ப்பு எப்படியிருக்கிறது, இவ்வளவுதூரம் உழைத்து உருவாக்கிய காட்சிகளைப் பார்வையாளர்கள் எங்கனம் ரசிக்கிறார்கள்? அல்லது திகிலடைகிறார்கள்? என்பதை அறிந்துகொள்ள அந்தப் படைப்பாளிக்கு எப்போதுமே ஆர்வமிருக்கும். அந்த ஆசை ஹிட்ச்காக்கிற்கும் இருந்தது. படத்தின் முதல் காட்சியில் ஹிட்ச்காக் முதலில் பார்வையாளர்களை புரொஜக்‌ஷன் அறையிலிருந்தும், அதன் சிறிய சன்னல் வழியாகவும் வெளியே பார்க்கிறார். அடுத்து, தன் படத்தைப் பார்க்கிற பார்வையாளர்களின் எதிர்வினையை அறிந்துகொள்ளும் பொருட்டு, லாபியில் காத்திருக்கிறார். முக்கியமாக, ஷவர் காட்சியில், அந்தப் பெண் குத்திக் கொல்லப்படும்பொழுது, வெளிப்படும் இசையை லாபியில் நடந்தபடி நடித்துக்காண்பித்து அனுபவிக்கிறார். படத்திற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

Image result for anthony hopkins hitchcock 

ஒரு திரைப்படம் பெருவெற்றி பெற்று இன்றளவும் அனைவராலும் ஒரு கல்வியியல் ரீதியாகவும் பார்த்து புரிந்துகொள்ளப்படுகிற நிலையிலும், அப்பட உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கதைகளை மிகவும் சுவாரஸ்யமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் படக்குழுவினர். படத்தின் இறுதித் தலைப்பு அட்டைகளில் ’சைக்கோ’வுக்குப் பிறகு ஹிட்ச்காக் மேலும் ஆறு படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், அந்தப் படங்களில் எதுவும் ‘சைக்கோ’ ஏற்படுத்திய அளவிற்கான, பெரிய வெற்றியைத் தாண்டவில்லை. மேலும் அவர் ஒருபோதும் ஆஸ்கார் விருதை வென்றதில்லை என்றாலும், அமெரிக்கத் திரைப்படக் கல்வி நிறுவனம் 1979ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை வழங்கியது. ஹிட்ச்காக் தனது வாழ்க்கையைப் போலவே, மனைவி அல்மாவுடன் அந்த விருதினைப் பகிர்ந்துகொண்டார். 

படத்தின் திரையிடலுக்கு நல்ல பெருவாரியான வரவேற்பு கிடைத்த நிலையில், அதைச் சாத்தியமாக்க உதவியதற்காக ஹிட்ச்காக் தனது மனைவிக்கு பகிரங்கமாகவே நன்றி செலுத்துகிறார். மேலும் அவர்கள் தங்கள் அன்பையும், கூட்டணியையும் உறுதிப்படுத்துகின்றனர். படத்தின் இறுதிக்காட்சி அவரது வீட்டில் நடக்கிறது. ஹிட்ச்காக் பார்வையாளர்களைப் பார்த்து உரையாடுகிறார். தனது திரையுலக வாழ்க்கையில் ’சைக்கோ’ ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய முக்கியமான திரைப்படம் என்று தெரிவிக்கிறார். தனது அடுத்த திரைப்படம் என்ன? என்பதைப் பற்றி ஹிட்ச்காக் யோசித்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு காகம் அவரது தோளில் வந்தமர்கிறது. 

Image result for hitchcock crow

நன்றி:

தி கார்டியன்
விக்கிபீடியா