ஸ்வீட் பிரியாணி


இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி பேட்டி

சினிமா ஆர்வம் எப்போதிருந்து ஆரம்பமானது?

சிறு வயதில் ஷூட்டிங் செய்வதுபோல விளையாடிக்கொண்டிருப்போம். வழக்கமாக, எல்லோருக்கும்போல, நம் ஊர்களில் வெளியாகிற சினிமாக்கள் பார்த்து, சினிமா மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரி படிக்கும்போதுதான், நாம் ஏதாவது ஒன்றை கிரியேட் செய்யவேண்டும் என்று தோன்றியது. அதுவரைக்கும், பள்ளியில் சிறு சிறு நாடகங்கள், கதை, கவிதை எழுதுவது இப்படித்தான் பங்களிப்பு செய்துகொண்டிருந்தேன். இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும்போதுதான், நானே ஒரு குறும்படம் எடுத்துப்பார்க்கலாம் என்று நினைத்தேன். நானே எடுத்து, நானே படத்தொகுப்பு செய்து பார்த்தேன். அங்கிருந்துதான், குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். 2006லிருந்து துவங்கி, இன்றுவரை கூட தொடர்ந்து குறும்படங்கள் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். 


திரைப்படம் எடுப்பவர்களுக்கு அரசியல் புரிதலும் அவசியம் தேவை. உங்கள் தந்தை தீக்கதிர் இதழின் ஆசிரியர், இடதுசாரிய சிந்தனை கொண்டவராக இருப்பதால், சிறு வயதிலிருந்தே, அரசியல் சார்ந்த புரிதல் ஏற்பட உதவியாகயிருந்ததா?

நிறையபேர் இதுகுறித்துக் கேட்பார்கள். ஆனால், உண்மையாகவே, வீட்டில் அரசியல் சார்ந்து, தீவிரமான ஒரு உரையாடல்கூட நிகழ்ந்ததேயில்லை. நான் புத்தகங்கள் படித்தது, நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் இருக்கிறதல்லவா, அதுதான் எனக்கான அரசியல் புரிதலைக் கட்டமைத்தது என்று நம்புகிறேன். என் அப்பா, என்னிடம், இது தவறு, இது சரி, இது சரியான அரசியல் பார்வை என்றெல்லாம் என்னுடன் பேசியோ, அரசியல் சார்ந்த, அல்லது சமூகம் சார்ந்த உரையாடலை, நாங்கள் அப்பாவுடன் பேசிய நிகழ்வோ, எதுவுமேயில்லை. ஒரு இருபது வயதிற்குமேல் வளர்ந்தவுடன்தான் சில விஷயங்களில், இது சரியாகயிருக்கிறது, இல்லை இது தவறாகயிருக்கிறது என்று பசங்களாக நாங்கள் சேர்ந்து பேசியிருக்கிறோம். அதைத் தவிர்த்து, நமக்கென்று ஒரு சுயம் கட்டமைக்கப்படுமல்லவா, அப்படியான உரையாடல்களும், விவாதங்களும் தந்தையுடன் நடந்ததேயில்லை. 


இரா.நடராசன் அவர்கள் எழுதிய ‘ஆயிஷா’ சிறுகதை எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அடுத்து, பெண் ஏன் அடிமையானாள்? என்ற சிறிய புத்தகம். மூலதனத்தைப் பற்றி அறிமுகம் தருகிற ஒரு சிறு புத்தகம். இதுபோல, பல நபர்களுடைய கதைப்புத்தகங்கள், நாவல்கள் வீட்டில் இருக்கும். பின்னர் மாத இதழ்கள், வார இதழ்கள் என்று படிக்க ஆரம்பித்தேன். அடுத்து, த.மு.எ.க.ச கூட்டங்கள் நடக்கும். அதில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். பிறகு, ஆறாம் வகுப்பு படிக்கும்போதே, நண்பர்களாகிய நாங்களெல்லாம் இணைந்து, கையெழுத்துப் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பித்தோம். அதில் கதை, கட்டுரை, கவிதைகள் போன்றவை இடம்பெறும். எங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கட்டுரையாக எழுதுவோம். அப்போது நாங்கள் செவ்வாய்ப்பேட்டையில் இருந்தோம். அந்தப் பகுதியில் நமக்குத் தெரிந்த பிரச்சினைகளை எழுதி, இருபத்தைந்து ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வோம். அங்கு வாராவாரம் த.மு.எ.க.ச கூட்டம் நடக்கும். அங்கு சென்று, நாங்கள் எடுத்துவைத்திருக்கிற பிரதிகளை விற்போம். ஒருசில நேரங்களில் கலை இரவுகள் நடக்கும். அங்கு நாம் சந்திக்கிற நபர்கள், அவர்களுடைய பேச்சுக்கள்தான், என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் புரிதலுடையவனாக உருவாக்கியது என்று நினைக்கிறேன். பெரும்பாலும் நான் படித்த புத்தகங்கள், என் அரசியல், சமூகப் புரிதலுக்கான காரணமாக விளங்கியது.

அண்மையில் நான் படித்ததில் சம்சுதீன் கீராவின் ‘மெளனத்தின் சாட்சியங்கள்’ புத்தகம் என்னை மிகவும் பாதித்தது. எழுத்தாளர் ஒரு இஸ்லாமியர். எனினும் அவர் கதை முழுக்க இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சாதகமாக எழுதவில்லை. ஒரு சண்டை நடந்தால், பாதிக்கப்படுவது இரு பக்கமுமுள்ள அடிமட்ட மக்கள்தான் என்ற கருத்தை, அந்தக் கதையில் சொல்லியிருப்பார். மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உஷாராக தப்பித்துக்கொள்கிறார்கள். இந்தப் பார்வை மிக முக்கியமான அரசியலாகப் பார்க்கிறேன். 


புத்தகங்கள் பற்றிச் சொன்னீர்கள். அதேபோல, உங்களுக்கு நெருக்கமாகயிருக்கிற இயக்குநர்கள், அவர்களது படங்கள்?
சார்லி சாப்ளின். பெரும்பாலும் அவரது அனைத்துப் படங்களும் பிடிக்கும். அவர் ஒரு மகத்தான படைப்பாளி, உன்னதமான கலைஞன் என்றால் சட்டென எனக்கு சார்லி சாப்ளின்தான் ஞாபகத்திற்கு வருகிறார். அதற்கடுத்து, திரைப்படமாக என்னை அதிகம் பாதித்த ஒரு படம் என்றால், அது லைஃப் இஸ் பியூட்டிபுல் (Life is beautiful). அந்தப் படம் எனக்குள் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. 

சிறுவயதில், நமக்குப் பார்க்கக் கிடைக்கிற படங்கள் என்றால், அது வெகுசன தமிழ்ப்படங்கள்தான். அவற்றைத்தான் நாம் பார்த்து வளர்கிறோம். அவையல்லாமல், எனக்குள் பெரிய திறப்பை உண்டாக்கிய படங்கள் என்றால், லைஃப் இஸ் பியூட்டிபுல் போன்ற படங்களும், சார்லி சாப்ளினின் படங்களும்தான். அப்படம் எடுத்துக்கொண்டிருக்கிற கதைக்களன், அதைச் சொல்கிற திரைமொழி, எல்லாமே வித்தியாசமாக இருந்தது. 


கல்லூரியில் படிக்கும்போது, விஸ்காம் துறையில் ஃப்லிம் லைப்ரரி இருந்தது. நான் கல்லூரியில் வேறொரு துறையில் படித்துவந்தேன். அங்கு ஒரு படத்தை நாம் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். அப்படத்தை ஒரு நாளுக்குள் பார்த்து முடிப்பது கஷ்டம். ஏனென்றால், நான் செவ்வாய்ப்பேட்டையிலிருந்து கிளம்பி, நுங்கம்பாக்கம் சென்று மீண்டும் வீடு வருவதற்கே, அன்றைய பொழுது முடிந்துவிடும். அந்த பயண நேரம் மிகவும் அதிகமாகயிருக்கும். எனவே, நான் லைப்ரரியிலிருந்து டி.வி.டியை வாங்கிவந்து, வீட்டில் நகல் எடுத்துவிட்டு, திரும்பக் கொடுத்துவிடுவோம். அப்படி சேமித்துவைத்த படங்களை, அந்த வார இறுதியில் பார்ப்போம். அப்படித்தான் நாங்கள் நிறைய படங்கள் பார்த்தோம். சிட்டி ஆஃப் காட் (City of God) திரைப்படமெல்லாம், அப்படிப் பார்த்ததுதான். செவ்வியல் திரைப்படங்கள் என்று நாம் இப்போது கொண்டாடுகிறோமல்லவா, அதுபோன்ற பல படங்களை, நான் அந்தக் காலகட்டத்தில்தான் பார்த்தேன். 

அண்மையில் வந்த இயக்குனர்கள் என்றால், அலெக்ஸாந்த்ரா கொன்சாலஸ் இனாரித்து (alejandro gonzález Iñárritu), வாங்க் கார் வாய் (Wong kar wai) படங்கள் மிகவும் பிடிக்கும். மெமரீஸ் ஆஃப் மர்டர் படம் எடுத்த போங்க் ஜூன் ஹூ (Bong Joon-ho) இயக்குனரும் பிடிக்கும். அடுத்து ஈரான் திரைப்படங்கள். மக்மல்பஃப், ஜாபர் பனாஹி போன்றோர் இயக்கிய படங்கள் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. ஈரான் திரைப்படங்கள் வேறொரு வாழ்க்கைச் சூழலைக் காட்டியது. நிஜத்தில் ஒரு சம்பவத்தை நாம் பார்க்கும்போது என்ன உணர்வை அடைவோமோ, அதே உணர்வை இப்படத்திலும் கொண்டுவந்திருப்பார்கள். வெறுமனே ஃப்லிம் மேக்கிங் என்றளவில் மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் மக்மல்பஃப் மற்றும் ஜாபர் பனாஹி சில விஷயங்களைச் செய்தார்கள். சில விருதுகளை அவர்கள் வாங்க மறுத்தார்கள். தங்களது படங்களில் பலவிதமான பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்த்தார்கள். அவையெல்லாமே, எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் திரைப்படத்திலிருந்து ஆரம்பித்து, ஒயிட் பலூன் , கலர் ஆஃப் பாரடைஸ் என இந்தப் பட்டியல் நீளும். ஈரான் படங்கள் என்னை அதிகம் ஈர்த்தது.

கல்லூரியில் என்ன துறையில் படித்தீர்கள்?

இளங்கலை, சோஷியாலஜி படித்தேன். முதுகலை மீடியா ஆர்ட்ஸ் படித்தேன். லொயலோவில் ஆரம்பிக்கப்பட்ட மிக நல்ல துறை அது. ஊடகம் பற்றி தமிழில் படிக்க முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தத் துறை இப்போது இல்லை. நீக்கிவிட்டார்கள். எனக்குத் தெரிந்து, தமிழில் ஊடகத்தைப் பற்றிக் கற்றுக்கொடுத்த முதல் துறை அது. ஃபாதர் ராஜநாயகம், அத்துறையை மிகவும் ஆசைப்பட்டு ஆரம்பித்தார். தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த பசங்களுக்கும் ஊடகம் சார்ந்த புரிதல் வேண்டும், போட்டி நிறைந்த இந்த ஊடகத் துறையில் அவர்களும் சமாளிக்க, இந்தப் பாடப்பிரிவு அவசியம் என்று நினைத்துதான் கொண்டுவந்தார்கள். அந்த பாடத்திட்டமே மிகவும் சிறப்பாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், விஸ்காம் துறையைவிட மிகவும் சிறப்பாகயிருக்கும். 

விஸ்காமில் பெரும்பாலும் தொழில்நுட்பத்திற்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். கேமரா, எக்ஸ்போஷர், என்றுதான் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இதில், கருத்து ரீதியாக மிகவும் வலுவான பாடத்திட்டத்தை வைத்திருந்தார்கள். இலக்கியத்தில் எவையெல்லாம் கதைக்கருக்களாக இருக்கின்றன என்பதில் ஆரம்பித்து அரசியல் ரீதியிலான விஷயங்கள் வரை சொல்லித்தந்த, மிகச்சிறப்பான துறையாக அது இருந்தது. ஆனால், அத்துறை இடையிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. 

ஆவணப்படங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன? குறும்படங்கள் எடுத்த அளவிற்கு ஆவணப்படம் எடுக்கவில்லையே ஏன்?

கல்லூரி படிக்கும்போது, புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறோம். ஆவணப்படங்கள் ஒருபோதும் திரைப்படங்களுக்கு குறைந்ததல்ல. ஆவணப்படங்கள், சொல்லவேண்டிய செய்தியை இன்னும் ஆழமாகவும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் விவாதிக்க உதவியாக இருக்கும். ஆனால், அதையும் சுவாரஸ்யமாகச் சொல்ல வேண்டும் என்று விரும்புவேன். சுவாரஸ்யம் என்றால், காட்சியை வேகவேகமாகக் கட் செய்வது, இசை சேர்ப்பது என்ற அர்த்தத்தில் அல்ல. எடுத்துக்கொண்ட செய்தியை, இன்னும் ஆழமாகவும், உண்மையாகவும், அதிக ஆராய்ச்சி முடிவுகளோடும் முன்வைக்க வேண்டும் என்று நினைப்பேன். அடுத்தடுத்து, தொடர் ஆவணப்படங்கள் எடுக்கிற திட்டமும் உள்ளது. 

சினிமா சார்ந்த புத்தகங்கள் படித்து, ஃப்லிம்மேக்கிங் சார்ந்து ஒரு அனுபவத்தைப் பெறுவது. மற்றது, சினிமா எடுத்துப் பழகி, அதன்வழி கிடைக்கிற அனுபவங்களைக் கொண்டு, அடுத்தடுத்து சினிமாக்கள் எடுப்பது. இவற்றில் நீங்கள் அதிகம் ஈடுபாடு காட்டியது?

நான் என்ன நம்புகிறேன் என்றால், சினிமா சார்ந்த புத்தகங்கள் படிப்பதைவிட, சினிமா எடுத்து எடுத்துப் பழகி, இன்னும் சினிமாவை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். விஸ்காம் படிக்கிறவர்கள் மூன்று வருடங்களை நிறைவு செய்தபிறகும் கூட, அவர்களுக்கு எப்படிக் கேமராவை திறம்படக் கையாள வேண்டும், எங்கு லைட் வைக்க வேண்டும், இம்மாதிரியான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் மட்டுமே தெரிந்திருந்தன. ஆனால், நான் தப்பும் தவறுமாக ஒரு மூன்று குறும்படங்கள் எடுத்தேன். நானே இயக்குனராகவும், படத்தொகுப்பாளராகவும் இருந்து, குறும்படங்களை எடுத்து முடிப்பேன். அப்படி வேலை செய்வதன் வாயிலாகவே, திரைப்பட உருவாக்கம் சார்ந்த சில நுணுக்கங்கள் பிடிபட்டு விட்டன. சினிமாவை எடுத்துப் பார்ப்பதைவிட, அதைக் கற்றுக்கொள்ள எளிய வழி ஏதுமில்லை. 
அடுத்து, சினிமா சார்ந்த புத்தகங்கள் என்றால், பெரும்பாலும் திரைக்கதை சார்ந்த புத்தகங்களும், இயக்கம் சார்ந்த புத்தகங்களும் படிப்பேன். வால்டர் முர்ச்சின் in the blink of an eye, போன்ற புத்தகத்தையெல்லாம் அண்மையில்தான் படித்தேன். கேமரா நகர்வு சார்ந்த புத்தகங்கள் பக்கம் அதிகமாகச் செல்வதில்லை. நானே குறும்படங்கள் எடுத்து, அதன்மூலமாகப் பெறுகிற பயிற்சியே, கேமரா நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளப் போதுமானதாக இருந்தன. 

நீங்கள் சொன்னதுபோல, குறும்படங்கள் எடுத்து, ஃப்லிம் மேக்கிங் நுட்பங்களைக் கற்றுக்கொள்வது. அதையும் செய்திருக்கிறீர்கள். அத்தோடு, இயக்குநர் சீனு ராமசாமி அவர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறீர்கள். அங்கு பணியாற்றுவதன் மூலம், ஒருவகையான சினிமா உருவாக்க முறை உங்களுக்கு அறிமுகமாகியிருக்கும். அங்கு நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னென்ன?
ஒரு பெரிய குழுவை எப்படி நிர்மாணித்து வேலை செய்வது என்ற விஷயத்தை அங்கு கற்றுக்கொள்ளலாம். படப்பிடிப்புத் தளத்தில் நிறைய பேர் வேலைசெய்வார்கள், கூட்டமாக இருக்கும், அதற்கு மத்தியில் நாம் எடுக்க வேண்டிய காட்சியில் எப்படி முழுக் கவனத்தையும் வைத்திருக்கிறோம், அந்தக் குழுவை எப்படிக் கட்டமைக்கிறோம், நமக்கு வேண்டிய காட்சியை எப்படிப் பெறுகிறோம், என்பதைக் கவனிக்க முடிந்தது. அந்தப் பெரிய படப்பிடிப்புக் குழுவை ஒழுங்கமைத்து வேலை செய்வது மிகப்பெரிய விஷயம். எனவே, நாம் எந்தளவிற்கு நம் படைப்பின்மீதும், நாம் எடுக்கப்போகிற காட்சியின் மீதும் கவனத்தைக் குவிக்கிறோமோ, அந்தளவிற்குக் காட்சி சிறப்பாக வெளிப்படும். 

அந்தக் கூட்டத்தால், நம் கவனம் சிதறடிக்கப்பட, அந்தக் கூட்டம் நம்மை உள்ளிழுத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நாம் வைத்திருக்கிற காட்சியை, அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும், காட்சியின் வீரியம் குறையாமல், திரையில் கொண்டுவருவதைக் கற்றுக்கொண்டது, நல்ல அனுபவமாக இருந்தது.

மெளன மொழி, களவு, அறம், டூ லெட், ஸ்வீட் பிரியாணி போன்ற குறும்படங்கள் எடுத்திருக்கிறீர்கள். இக்குறும்படங்களைப் பார்த்தளவில், இதில் இரண்டு விதமான கதை சொல்லல் பாணி இருக்கிறது. மெளன மொழி, அறம், ஸ்வீட் பிரியாணி போன்ற குறும்படங்களில், கதை, திரைக்கதை போன்றவை இருக்கும். இது கிட்டத்தட்ட நேரடியாகக் கதைசொல்லும் போக்கினைக் கொண்டிருக்கும். அதுவே, களவு, டூ லெட் போன்ற குறும்படங்கள், ஒரு உணர்வை, அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக்கொண்டு, அதை மட்டுமே காட்சியாக முன்வைப்பது. இதில் வழக்கமான கதை சொல்லல் பாணி இருக்காது. பரிசோதனை முயற்சிகள் போல, இவற்றை எடுத்திருப்பீர்கள். இப்படி இரு விதமான அணுகுமுறைகளையும் உங்கள் குறும்படங்களில் பயன்படுத்துகிறீர்கள். ஒரு கதையை இந்த அணுகுமுறையில்தான் சொல்லப்போகிறேன் என்பதை எதனடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்?

அதை, அந்தக் கதைதான் தீர்மானிக்கிறது. களவு குறும்படம் எடுக்கும்போது, நான் சொல்லவந்த விஷயம், அதுவாகத்தான் இருந்தது. எனவே, அந்த விஷயத்தை, மிகவும் வீரியமாகக் காட்சி வழி முன்வைப்பதற்கு, அந்த ட்ரீட்மெண்டே போதுமானதாக இருந்தது. அதிலும், சிறுவர்களை வைத்து, ஆரம்பத்தில் காட்சியை நகர்த்தும்போது, சில அனுகூலங்கள் இருக்கின்றன. சில விஷயங்கள் சிறுவர்கள் மூலம், சட்டென பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டுவிடும். மேலும் அந்த சிறுவயது, எந்தவித அரசியலும் புகாத வயது. ஆனால், அந்தக் கதைக்குள்ளும் ஒரு அரசியல் உள்ளது.
வெளியில் ஒரு பொதுபுத்தி உள்ளது. வெடிகுண்டு வெடிக்கிற இடத்தில் இஸ்லாமியர் இருந்தால், முதலில் கைதுசெய்யப்படுகிற நபர், அந்த இஸ்லாமியராகத்தான் இருப்பார். திருட்டு என்றால், சேரியில் வாழ்கிற ஒருவரை நோக்கித்தான் கை நீட்டுவார்கள். பொது சமூகம் ஒடுக்கப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் எப்படிப் பார்க்கிறது? என்பதை அந்தச் சிறுவர்கள் பிரதிபலிப்பார்கள். இது ஒரு பார்வை. அடுத்து, அந்தச் சிறுபான்மைச் சமூகத்தினரைச் சார்ந்தவர்களே, அவர்கள் வீட்டுப் பெண்களை எப்படி நடத்துகிறார்கள், என்ற இரண்டாவது பார்வை. இவ்விரு பார்வைகளுமே களவு குறும்படத்தில் இருக்கும். இந்நிகழ்வை, எவ்வளவு சுருக்கமாகச் சொல்லமுடியுமோ, அப்படிச் சொல்வதுதான் சிறந்த அணுகுமுறை என்று நினைத்தேன். அதனடிப்படையில்தான், களவு குறும்படமும் உருவாக்கப்பட்டது. 

டூ லெட், குறும்படமும் கிட்டத்தட்ட இதேபோலத்தான். டூ லெட், குறும்படத்தில் கைக்கொள்ளப்பட்டிருக்கிற திரைப்பட வடிவம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தச் சம்பவத்தை இப்படித்தான் சொல்லவேண்டும் என்றுதான் யோசித்தோம். பொருளாதாரப் பிரச்சினையில் ஒன்றேயொன்று மட்டும் மாறியது. அது என்னவென்றால், படத்தில் பார்க்கிற கதவு, உண்மையான கதவு கிடையாது. நீங்கள் திரையில் பார்ப்பது மட்டும்தான் கதவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சில பொருளாதாரச் சிக்கலினால், முழுக் கதவையும் எங்களால் கொண்டுவர முடியவில்லை. எனவே, இரு பக்கமும், லைட் ஸ்டாண்டைப் பயன்படுத்தி, கதவு மாதிரி வைத்துக்கொண்டோம். ஆனால், கதையை யோசிக்கும்போது, கதவிடுக்கில் தெரிகிற கதாபாத்திரமாகத்தான் அவரை யோசித்திருந்தோம். அதேநேரம், நான் குறியீடு மாதிரியான விஷயங்களுக்குள்ளும் சென்று சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. உள்ளேயிருப்பவர் குறுகலான பார்வை கொண்டிருக்கிறார், வெளியே நிற்பவர்கள் பரந்த பார்வை கொண்டிருக்கின்றனர், என்ற உணர்வைக் கொண்டுவரும் நோக்கில்தான், கதவை ஒரு பொருளாக அங்கு பயன்படுத்தினோம். எனவே, கதவு வழியாக, இந்தக் கதையைச் சொன்னால், படம் இன்னும் சிறப்பாக வரும் என்ற எண்ணத்தின் விளைவுதான் அது. 

வாடகைக்கு வீடு தேடுகிறவர்கள் சந்திக்கிற சம்பவங்கள், அதை இந்தத் திரைமொழியில் சொன்னால்தான், சரியாகயிருக்கும் என்ற முடிவிலிருந்துதான், அக்குறும்படத்தை அந்த திரைவடிவத்தில் சொன்னோம். மெளன மொழி, அறம், ஸ்வீட் பிரியாணி என, இம்மூன்றிலும் ஒரு கதை இருந்தது. பிரச்சினைகளுக்கான தீர்வாக அல்லாமல், கதைப்படி ஒரு முடிவும், அதற்குள் வைக்கப்பட்டிருந்தது. எனவே, அந்தக் கதைக்கு, திரைக்கதையாக ஒரு வடிவம் தேவைப்பட்டது. டூ-லெட் மாதிரியான படங்களுக்குக் கதையில்லை. அப்படம் எடுத்துக்கொண்டிருக்கிற திரைமொழிதான், அதற்கான கதை சொல்லல் முறையாகவும் அமைந்திருந்தது. இப்படி, அந்தக் கதைக்களனும், கருப்பொருளும்தான், அதை எந்த வடிவத்தில் சொல்லவேண்டும் என்ற வடிவத்தையும் தீர்மானிக்கிறது. 

திரைக்கதை புத்தகங்கள் படிப்பதாகச் சொன்னீர்கள். எழுதும்போது, திரைக்கதை விதிமுறைகள் ஏதேனும் பின்பற்றுவீர்களா? உங்கள் எழுத்து முறை என்னவாகயிருக்கும்?
திரைக்கதை புத்தகங்கள் படித்திருப்போம். இதுதான் திரைக்கதை விதிமுறைகள் என்பதைத் தெரிந்துகொண்டு, பின்பு அதைப் பின்பற்றாமல் எப்படி எழுத வேண்டும், என்பதற்காகத்தான், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகங்களைப் படித்தேன். ஆனால், இந்த விதிமுறைகளைக் கொண்டுதான் திரைக்கதை எழுத வேண்டும் என்ற எந்த கொள்கைகளையும் நான் பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றுவதும் பெரிய ஆபத்து என்பதை உணர்ந்தேதான் இருக்கிறேன். கதைக்கரு கிடைத்தவுடன், நம் மனதிலேயே ஒரு பாதையை அந்தக் கதை கண்டடையும். பின்பு சில சம்பவங்கள், கதை தொடர்பான புள்ளிகள், மனதில் ஆங்காங்கே தோன்றும். அவற்றை ஒன்றிணைப்பதுதான், திரைக்கதை எழுதுவது தொடர்பாக, நான் பின்பற்றுகிற வழிமுறை. 

அடுத்து ஒரு கதைக்கான ஐடியா கிடைத்தவுடன், அந்த ஐடியாவிற்கு முன்பு நடந்த சம்பவங்கள், அந்த ஐடியாவிற்குப் பின்பு நடந்த சம்பவங்கள் என்று, திரைக்கதை சார்ந்து யோசிப்போம். அப்படியில்லையெனில், நம் மனதில் கதை தொடர்பாக ஆங்காங்கே தோன்றுகிற புள்ளிகளை இணைத்து ஒரு திரைக்கதையை உருவாக்குவது. இங்கு புள்ளிகள் என்பது, எதைக் குறிக்கிறதென்றால், திரைக்கதையாசிரியர்கள் சொல்வதுபோல, ப்ளாட் பாய்ண்ட், த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்ச்சர், திருப்புமுனைப் புள்ளி போன்றவையல்ல. கதை தொடர்பாக சில சம்பவங்கள் சற்று இடைவெளி விட்டு, ஸ்தூலமாகத் தோன்றும். பின்னர் அந்தச் சம்பவங்கள் குறித்து சிந்தித்து, அவற்றைத் திரைக்கதை வழி இணைத்து எழுதுவேன். அதன்படி முழுமையான திரைக்கதையொன்று எனக்குக் கிடைத்துவிடும். 

ஒரு படம் எந்தச் சூழலில் வெளியாகிறது, என்ற அந்தக் காலகட்டத்தையும் நாம் கவனத்திற்குட்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த நடப்புச் சூழலில், ‘களவு’ குறும்படம் வெளியாகியிருந்தால், அது இஸ்லாமிக்போஃபியோவுடன் தொடர்புபடுத்தி, நீங்கள் சொல்லவந்த விஷயம் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. சமூகத்தில் அந்நேரத்தில் எது பேசுபொருளாக இருக்கிறதோ, அதுதான் எடுத்துக்கொள்ளப்படும் என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். நானும் கூட, இச்சமயத்தில் ‘களவு’ குறும்படத்தை சமூக வலைதளங்களில் பகிரலாமா? என்று யோசித்தேன். 

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கிற ஹிஜாப் பிரச்சினையில், நாம் அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறோம். களவு குறும்படத்தில் காட்சிப்படுத்தியிருப்பது, ஒருவகையான ஒடுக்குமுறை. இஸ்லாமியர்கள், பெண்கள் மீது, ஒருவகையான ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகிறார்கள். இந்த ஹிஜாப் விவகாரத்திலும் ஒரு ஒடுக்குமுறைதான் நிகழ்கிறது. மதநம்பிக்கைகளின்பேரில் பெண்கள் ஹிஜாப் அணிவதை, மற்றவர்கள் எதிர்ப்பது, ஒடுக்குமுறைதான். இந்த வித்தியாசங்களை புரிந்துகொள்வது, மிகவும் மெலிதான கோடுதான். நீங்கள் சொன்னதுபோல, ஒருவேளை ‘களவு’ படம் இப்போது வெளியாகியிருந்தால், நிச்சயமாக சில பிரச்சினைகளைச் சந்தித்திருக்கும். ஏனெனில், நீங்கள் படத்திற்குள் ஒரு பார்வையை முன்வைக்கிறீர்கள், வெளியில் ஒரு பார்வையை முன்வைக்கிறீர்கள், என்ற விமர்சனம் எழுந்திருக்கும். ஆகவே, இந்தச் சூழலில், களவு படம் வருகிறபோது, அது தவறுதலாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாகயிருக்கிறது. ஆனால், அதைத்தாண்டிய ஒரு புரிதல்தான் அவசியம் என்கிறேன். 

மிகவும் தட்டையாக, இது சரி, இது தவறு என்று சொல்லாமல், நான் களவு படத்தில் காட்டியிருப்பதும் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறைதான். எனவே, அதுவும் சரிதான். அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகத்தான் நாம் இருக்கிறோம். அதேநேரம், இன்னொரு மதத்தினர், சிறுபான்மையினரை ஹிஜாப் அணியக்கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கும் நாம் எதிராகத்தான் நிற்கிறோம். இப்படிச் சொல்லும்போது, நிறைய பேருக்குக் குழப்பம் வரும். 
இட ஒதுக்கீடு தொடர்பாக நாம் எதிர்கொள்கிற அதே பிரச்சினைதான் இங்கும் நிகழ்கிறது. சாதியே கூடாது என்கிறீர்கள், ஆனால், இட ஒதுக்கீடு மட்டும் வேண்டும் என்கிறீர்கள், என்று ஒரு தட்டையான ஒரு புரிதலில் கருத்து சொல்வார்கள். அதேபோலத்தான் களவு படத்திற்கும், ஹிஜாப் பிரச்சினைக்கும் இடையேயான வேறுபாட்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மதமே கூடாது என்கிறீர்கள், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து படம் எடுக்கிறீர்கள், ஆனால், கர்நாடகாவில் நடக்கிற பிரச்சினையில் மட்டும் எப்படி, ஹிஜாப்பிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறீர்கள் என்பார்கள். எனவே, இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள, இன்னும் கூடுதலான புரிந்துணர்வு தேவை என்று நினைக்கிறேன். இந்தப் பிரச்சினைகளை நாம் வெறுமனே தட்டையாக மட்டுமே அணுகக்கூடாது. 

ஸ்வீட் பிரியாணி குறும்படம் எடுப்பதற்கான நோக்கம் உங்களுக்கு என்னவாகயிருந்தது? மற்றும், உங்கள் இயக்கத்தில் வெளியான மற்ற குறும்படங்கள், ‘கட்டியங்காரன் கலைக்கூடம்’ என்ற உங்கள் தயாரிப்பிலிருந்து வெளியாகும். ஆனால், ஸ்வீட் பிரியாணியில் வேறொரு தயாரிப்பாளர் உள்ளே வருகிறார். இந்த வாய்ப்பு எப்படி அமைந்தது?
முதலில், இந்தப் படம் இந்த நோக்கத்திற்காகத்தான் எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம், எனக்கு இருந்ததில்லை. என்னிடம் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. அதை இந்தச் சமூகத்திற்குச் சொல்ல நினைக்கிறேன். குறும்படம் வாயிலாக அதைச் சொல்லிவிட்டேன். அவ்வளவுதான். மெளன மொழி எடுக்கிற நேரத்திலெல்லாம், குறும்படத்தின் நோக்கம் என்ன? என்று யாராவது என்னிடம் கேட்டால், என்ன பதில் சொல்வது? என்று எனக்குள்ளேயே பலமுறை கேட்டுக்கொள்வேன். “நாம் யாருக்கும் நல்லது செய்யாவிட்டாலும், யாருக்கும் கெட்டது செய்யாவிட்டால், நமக்குக் கெட்டது நடக்காது”, இதுதான் மெளன மொழி குறும்படத்தின் நோக்கம் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால், காலம் செல்லச் செல்ல, அப்படியொரு நோக்கம் வைத்துதான் படமெடுக்க வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து வெளியேறிவிட்டேன். அந்த நோக்கம் எப்படியானதாக வேண்டுமானாலும் இருக்கலாம். நான் சொல்ல நினைப்பது, வெறுமனே ஒரு கதையாக, ஒரு சம்பவமாக இருக்கலாம். இல்லையெனில், அதுவொரு சமூகப் பிரச்சினையாக இருக்கலாம். டூ லெட் குறும்படத்தில் காட்டியதும் ஒரு பிரச்சினைதான். களவு குறும்படத்தில் காட்டியதும் ஒரு சமூகப்பிரச்சினைதான். அதைக் காட்சி ஊடகத்தின் வாயிலாகச் சொல்ல நினைத்தோம், சொல்லிவிட்டோம். ஸ்வீட் பிரியாணியிலும் அதேபோல, நான் பார்த்த படித்த ஏதோவொன்று, என்னைப் பாதித்தது, அதை வெளியில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். சிலபேர் தன்னைப் பாதித்த விஷயம் குறித்து பேசிவிடுவார்கள், எழுதிவிடுவார்கள், இன்னும் சிலர் அந்தப் பாதிப்பை ஓவியமாகவும் வரைந்துவிடுவார்கள். அதேபோல, என்னுடைய ஊடகம், சினிமா வழி வெளிப்படுத்துவது. அப்படித்தான், அந்தப் பாதிப்பை குறும்படமாக, இந்தச் சமூகத்தின்முன் வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்படித்தான் நான் சினிமாவை அணுகுகிறேன். ஒரு கதை எனக்குள்ளேயே இருக்கிறது. அந்தக் கதையைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறோம். அந்தக் கதை வழி மறைமுகமாக, அரசியல் சொல்லப்படலாம், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், இப்படி பல விஷயங்கள் வெளிப்படலாம். ஸ்வீட் பிரியாணியிலும் ஒரு அரசியல் உள்ளது. அரசியல் இல்லாமல் வெறுமனே ஒரு கதையாக, ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லியும் படமெடுக்கலாம். எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், இதில் நோக்கம் என்ற ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதைச் சொல்வதற்காக, கதையைக் கட்டமைப்பதில், எனக்கு உடன்பாடில்லை. நான் அப்படி யோசிக்கவும் இல்லை. 

அடுத்து, இந்த ஸ்வீட் பிரியாணி தவிர்த்து, என்னுடைய எல்லா குறும்படங்களுமே, நண்பர்களிடம் பணம் வாங்கி, கூட்டு நிதி முறையில் எடுத்த படம்தான். இந்தக் கதை எனக்குள் முன்பே இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பே, இந்தக் கதையைப் படமாக்க, பலமுறை திட்டமிட்டோம். ஒரு சிலர் இதை எடுக்க, பணம் கொடுப்பதாகச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் பின்வாங்கிவிட்டனர். செகண்ட் ஷோ என்ற யூட்யூப் சேனல் நடத்தி வருகிற கலிலூர் ரஹ்மான், அவர் நம் நண்பர். அவர் இதைத் தயாரிப்பதாக இருந்தது. பின்னர், அப்போது அவருக்கிருந்த பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக, அவராலும், தயாரிக்க முடியாமல் போனது. அடுத்து, எப்போதும்போல, நண்பர்களிடம் பணம் வாங்கியே, இப்படத்தை எடுக்கலம், என்ற யோசனை இருந்தது. பின்னர் இந்தக் கதையை ஒரு ஓரமாக வைத்துவிட்டேன்.

ஓன்வி என்ற ஓ.டி.டி ப்ளாட்பார்ம் ஆரம்பிக்கப்படவிருந்தது. அவர்கள் எடுப்பதற்கு சில கதைகள் தேவைப்பட்டன. சரித்திரன், அவர்களுக்கு நெருக்கமாக இருந்தார். எனவே, சரித்திரனை வைத்து ஒரு கதையை எடுத்தால், அது நன்றாகயிருக்கும், என்று அவர்கள் யோசித்தனர். சரித்திரன் எனக்கும் மிக நெருங்கிய நண்பனாக இருந்ததால், என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். என்னிடம், இந்தக் கதை, தயாராக இருந்ததன் காரணமாக, இதையே எடுக்க முடிவுசெய்தோம். அப்படித்தான், ஸ்வீட் பிரியாணி நடந்தது. 

ஸ்வீட் பிரியாணி, குறும்படம் துவங்கும்போது, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கிறீர்கள். அவரது பங்களிப்பும் இந்தக் கதையில் உள்ளதா?
ஐந்து வருடங்களுக்கு முன்னால், ஆனந்த விகடன் இதழில், எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தார். அது என்னவென்றால், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கிற வயதான தாத்தா. அந்தத் தாத்தாவிற்கு ஒருவர் கொரியர் கொண்டுவந்து தருகிறார். அந்தக் கொரியர் பையனிடம் தாத்தா என்ன கேட்கிறார் என்றால், “ஒரு ஐந்து நிமிடம் என்கூட பேசிட்டு போறயாப்பா, அதுக்கு உனக்கு காசுகூட கொடுக்குறேன், ஒரு ஐந்து நிமிடம் பேசிட்டு போ” என்கிறார். அந்த முழு கட்டுரையில், இந்த நான்கு வரி சம்பவம் எனக்குள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத்தான், நான் ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று நினைத்து, திரைக்கதையாக எழுதி வைத்திருந்தேன். ஒரு கொரியர் கொடுக்கிற பையன், அவனது பயணமெல்லாம் காண்பிக்கப்படும். பிறகு, அவன் தாத்தாவிடம் கொரியர் கொடுக்கச் செல்கிறான். தாத்தாவிற்கும், அவனுக்கும் நடக்கிற உரையாடல்தான் க்ளைமேக்ஸாக இருந்தது. இப்படித்தான் திரைக்கதை எழுதி வைத்திருந்தேன். இந்தத் தயாரிப்பாளர்களிடமும் நான் இந்தக் கதையைத்தான் சொன்னேன். ஆனால், கொரியர் பையனை மட்டும் ஃபுட் டெலிவிரி செய்கிற பையனாக மாற்றிவிட்டேன். 

ஃபுட் டெலிவிரி செய்கிறவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்காகச் சாப்பாடு வாங்குகிற கடைகள் எல்லாம், புஹாரி, சரவணபவன் போன்ற பெரிய ஹோட்டல்களாக இருக்கும். ஆனால், அவர்கள் கை வண்டிக் கடைகளில்தான் சாப்பிடுவார்கள். இந்த ஒரு பிம்பம் எனக்குள் அழுத்தமாகப் பதிந்திருந்தது. இதனடிப்படையில்தான், கொரியர் செய்பவருக்குப் பதிலாக, ஃபுட் டெலிவரி செய்பவராக, கதையில் சிறு திருத்தம் செய்தேன். மற்றபடி, தாத்தாவிற்கும், அந்தப் பையனுக்கும் நடக்கிற உரையாடல் எல்லாம் அப்படியேதான் இருக்கும். இந்தக் கதை தயாரிப்பாளர்களுக்கும் பிடித்திருந்ததால், உடனே படப்பிடிப்பிற்குச் செல்வதற்கான வேலைகள் எல்லாம் துவங்கிவிட்டன. சரியாக, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னால், எஸ்.ராமகிருஷ்ணன் சாருக்கு, மரியாதை நிமித்தமாக, கதை குறித்து மின்னஞ்சல் அனுப்பினேன். “சில வருடங்களுக்கு முன்னால், ஆனந்த விகடனில் நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுக்கவிருக்கிறேன். இதற்கு, உங்கள் அனுமதியும், வாழ்த்தும் வேண்டும்” என்று எழுதியிருந்தேன். 

அப்போது, அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னவென்றால், சமர் படம் எடுத்த இயக்குநர் திரு, நீங்கள் சொன்ன அதே சம்பவத்தைத்தான் அந்தாலஜி படமாக எடுக்க, என்னிடம் அனுமதி கேட்டிருந்தார். போன வாரம், அந்தக் கதைக்கான படப்பிடிப்பையெல்லாம் முடித்துவிட்டார்கள். நீங்களும், அதே சம்பவத்தைக் குறும்படமாக எடுத்தால், ஒரே கதையை, இருவர் எடுக்க அனுமதி கொடுக்கிறார் என்று எனக்கு தப்பான பெயர் கிடைத்துவிடும்”, என்றார். உண்மையிலேயே இது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகுதான், இந்தக் கதையைப் படமாக்குவதற்கான சூழல் அமைந்திருக்கிறது. இன்னும் ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம்தான் இருக்கிறது. இப்போது இப்படி ஒரு அதிர்ச்சியான செய்திவருகிறதே! என்று யோசித்தேன். ஆனால், அந்த வருத்தமெல்லாம் கொஞ்சநேரம்தான் இருந்தது. 


கொரியர் செய்பவரை, ஃபுட் டெலிவரி செய்பவராக மாற்றிவிட்டோம். குறும்படமும் பெரும்பாதி, ஃபுட் டெலிவரி செய்வது தொடர்பாகவே இருக்கிறது. எனவே, அனுமதி கிடைக்காததும் ஒருவகையில் நல்லதுதான். ஏனெனில், ஃபுட் டெலிவரி சார்ந்தே, இதுவொரு ஆர்கானிக்கான முடிவிற்கு/ க்ளைமேக்ஸிற்கு நம்மை அழைத்துச்செல்லும் என்று நம்பினேன். முன்பு எழுதிய நீங்கள் ஸ்வீட் பிரியாணியில் பார்க்கிற அதே கதைதான், ஆனால், க்ளைமேக்ஸில் மட்டும் தாத்தா வந்துவிடுவார். அந்த க்ளைமேக்ஸ் மட்டும், கதையின் ஓட்டத்திலிருந்து சற்றுப் பொருந்தாமல் திணித்ததுபோல இருக்கும். எனவே, அதைத் தவிர்த்து, நாம் இந்தக் கதை எங்கு அழைத்துச்செல்கிறதோ, அதைப் பின்பற்றிச் செல்வோம். அதையே க்ளைமேக்ஸாக வைப்போம் என்று முடிவு செய்தேன். அப்படி யோசித்து, வைத்ததுதான், ஸ்வீட் பிரியாணியில் இப்போது வைத்திருக்கிற க்ளைமேக்ஸ் காட்சிகள். எனக்கு, இந்த க்ளைமேக்ஸ்தான், இக்குறும்படத்திற்குக் கச்சிதமான பொருத்தமாகயிருப்பதாகத் தோன்றுகிறது. ஏனெனில், இதுதான் பசி – உணவு போன்ற புள்ளிகளை இணைக்கிறது. 

ஆகவே, நான் ஆனந்த விகடனில் படித்த கதைக்கும், இதற்கும் தொடர்பேயில்லை. மொத்தமாகவே, கதை, திரைக்கதை எல்லாமே மாறிவிட்டது. இருப்பினும், இந்தக் கதைக்கான உந்துதல் தோன்றியது, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரையிலிருந்துதான். அதனால்தான் அவருடைய பெயரை, நன்றி பட்டியலில், முதலில் கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன். 

படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாலையைக் காண்பிக்கிறீர்கள். சாலையில் அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி கேமரா இயங்குகிறது. எதிரே ஒரு கார் வருகிறது. ஒரு அதிர்வான நிலையில் இக்காட்சி கட் செய்யப்பட்டு, திரையில் படத்தின் பெயர் காட்டப்படுகிறது. அடுத்து, சரித்திரன் அவர்களின் வித்தியாசமான நடையைக் காட்டுவதிலிருந்து கதை துவங்குகிறது. சாலையில் அலைபாய்கிற அந்த ஆரம்பக் காட்சி இல்லாமல், சரித்திரன் நடந்து வருவதிலிருந்தே கதையைத் துவங்கியிருக்கலாம் அல்லவா? ஏனென்றால், அக்காட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும், சொல்லவந்த கதை தெளிவாகவே புரிகிறது. 
ஆரம்பத்தில், ஒருவன் சாலையில் வளைந்து வளைந்து செல்வதை பாய்ண்ட் ஆஃப் வியூவில் காட்டும்போது, ஒருவன் நிலையில்லாமல் செல்கிறானோ என்ற உணர்வு கிடைக்கிறது. நிலைதடுமாறியவனின் ஊசலாட்டத்தைக் காண்பிப்பதுபோல, அக்காட்சி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், படத்தின் இறுதியில்தான், அவன் நிலைதடுமாறி பயணிப்பவனல்ல, என்பதும், அவன் நல்ல கவனத்துடன்தான் பயணிக்கிறான் என்பதும் புரிகிறது.

ஆனால், இந்தக் காட்சி எடுக்கும்போது, இந்த எண்ணத்தில் எடுக்கவில்லை. சரித்திரன் நடந்து செல்கிறார் அல்லவா, அதுபோலத்தான் காட்சியை எடுத்திருந்தோம். படத்தொகுப்பின்போது, இந்த ஐடியா தோன்றியது. அதற்காக அந்தக் காட்சியை ஆரம்பத்தில் வைத்தோம். 

சரித்திரனின் நடைதான் பலபேருக்கு எரிச்சலூட்டுகிறது. அவரது நடையின் வாயிலாகவே பலவித கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகிறார். மேலும், அவர் எந்த சமூகப் பின்னணியிலிருந்து வருகிறார் என்பதோடு, இந்த நடையும் பொருத்திப் பார்க்கப்படுவதால், அவர் பல பிரச்னைகளைச் சந்திக்கிறார். கதையில் ஒரு முக்கியமான பகுதி, சரித்திரனின் நடைக்கு உள்ளது. அவரது நடை, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கான காரணி என்ன?
நீயா நானாவில், பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இருவர் தங்களுடைய கதையைச் சொல்லியிருப்பார்கள். அதில் ஒரு மாணவன் நக்கலாக நடந்து வருவதைக் காண்பித்திருப்பார்கள். சரித்திரனின் நடையை இப்படி வடிவமைத்திருப்பதற்கான காரணம், அந்த ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், அந்த மாணவன் நடந்துவந்த தோரணைதான். அந்த மாணவன் திமிராகவோ, நக்கலாகவோ நடக்கவில்லை. அவனுடைய இயல்பான நடையே அதுதான். ஆனால், அந்நடை பலபேருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

அத்தோடு, எளிய, ஒடுக்கப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வருபவர்கள் இப்படி நடப்பது, இன்னொரு சமூகத்தினரை எரிச்சலாக்கும். சாதிய ஏற்றத்தாழ்வு உள்ள சமூகத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் யமஹா வண்டியை, சாலையில் ஓட்டிச்சென்றாலே, இன்னொரு சமூகத்தினருக்கு எரியும். எப்படி, இவன் என் முன்னால், தெனாவட்டாக நடந்து வரலாம், ஆர்.எக்ஸ்.100 பைக் ஓட்டலாம் என்று கோபப்படுவார்கள். அந்த அடிப்படைதான் இது.
இயல்பாகவே, தோளைத் தூக்கியபடி இப்படி நடக்கிற ஒருவன், அவன் எங்கிருந்து, எந்த சாதிய, சமூகச் சூழலிருந்து வருகிறான் என்ற பின்புலம் இருக்கிறது. அவன் அப்படி நடந்து வருவது, சமநிலையற்ற சமூகத்தில் பலபேருக்கு உறுத்துகிறது. அந்த உறுத்தலுக்குக் காரணமும் சமூக ஏற்றத்தாழ்வுதான். இந்தக் காரணிகள்தான் சரித்திரனின் நடையை இப்படி வடிவமைக்க வைத்தது. 

இந்தக் கதையை, வெறுமனே ஃபுட் டெலிவரி செய்கிற ஒருவரது கதை என்று மட்டும் பார்க்காமல், அவர் எந்தச் சமூகச் சூழலிலிருந்து வருகிறார், என்ற அவருக்கான வாழ்வியல் பிரச்சினையாகவும், இந்தக் கதையை எடுத்துக்கொள்ள முடியும். பீஃப் கறி சாப்பிடுகிற காட்சி வருகிறது. அதேபோல, பீஃப் சாப்பிட விரும்புகிற இன்னொரு பெண்ணிற்கு, சரித்திரன் கறியை பார்சல் வாங்கித்தருமாரு, அவரது அம்மா சொல்கிறார். “சாப்பிடப் பிடிக்கிறது, ஆனால், அந்த உணவை, வாங்குவதற்கு கெளரவம் பார்க்கிறார்கள்”, என்றுகூட சரித்திரன் கோபப்படுகிறார். கறி என்றாலே, அது ‘பீஃப்’ என்பதைத்தான் இங்கு குறிப்பிடுகிறார்கள், என்பது புரிகிறது. ஆனால், இந்தக் காட்சியிலெல்லாம், சப் டைட்டிலில் ‘பீஃப்’ என்ற வார்த்தை வருகிறது. ஆனால், கதாபாத்திரங்கள் பேசுகிற உரையாடலில், எங்கேயும் இந்த ‘பீஃப்’ என்ற வார்த்தை உச்சரிக்கப்படாதது எதனால்?

நீங்கள் சொன்னதுபோல, கறி என்றாலே பீஃப்தான் என்று எல்லோருக்கும் புரிந்துவிடும். மேலும், அம்மா கொண்டுவருகிற கறியைப் பார்த்தாலுமே, அது பீஃப்தான் என்பது தெரிந்துவிடும். ஆனால், படத்தை வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில் இருப்பவர்கள் பார்க்கும்போது, அவர்கள் மொழி புரியாமல், அது என்ன இறைச்சி, என்று குழம்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான், ‘பீஃப்’ என்பதை, சப் டைட்டிலில் குறிப்பிடுகிறோம். இங்கு பீஃப் என்பதில், ஒரு அரசியல் உள்ளதல்லவா, அதையும் அடிக்கோடிட வேண்டும் என்பதற்காகவும்தான், சப் டைட்டிலில் தெளிவாக அதைக் குறிப்பிட்டிருப்போம்.

ஃபுட் டெலிவரி செய்கிற ஒரு இளைஞன். அவன் எந்தச் சமூகப் பின்புலத்திலிருந்து வருகிறான், அவனுக்கான வாழ்வியல் சிக்கல்கள் என்னென்ன? என்ற இவ்விரு களன்களையும் இணைத்ததுதான் ஸ்வீட் பிரியாணி. அந்த இளைஞன் சட்டம் படிக்கிறார். தந்தை பெயர் அம்பேத்கர் என்கிறார். வாடகை, உள்ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்கிறார். சாதிய ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படுகிறார். கிடைக்கிற நேரத்தில், தன் எதிர்காலத்திற்காக சட்டம் படிக்கிறவராகவும் இருக்கிறார். இப்படியாக, வர்க்கப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை இவ்விரு மையத்தையுமே, அடிக்கோடிடும் வகையில், கதையை அமைத்த, அந்தச் செயல்முறை குறித்து?
இந்தக் கதைவழி நாம் சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட நினைக்கிறோம். டூ லெட் குறும்படத்தின் கதையும் நான் பார்த்த பிரச்சினையைத்தான் சொல்கிறது. வீடு தேடுவதிலும் ஒரு ஏற்றத்தாழ்வு பிரச்னை இருக்கிறது. அதேபோல, ஃபுட் டெலிவரி செய்பவர்களுக்கு நடக்கிற பிரச்னைகளும், நாம் பலமுறை பார்க்கிற, கேள்விப்படுகிற பிரச்னைகள்தான். ஃபுட் டெலிவரி செய்கிற, சாதிய ஏற்றத்தாழ்வுகளில் சிக்காத, இளைஞர்களும், இந்த வேலையில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுகளில் சிக்கியவர்களுக்கு இது கூடுதல் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது.

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். சினிமாத்துறையில்தான் பணியாற்றுகிறார். அவரது பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், அவரது பெயரின் காரணமாக, அவர் சந்தித்த பிரச்னைகளையும், சிக்கல்களையும் என்னிடம் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது பெயரின் காரணமாக, அவருக்குக் கிடைக்கவேண்டிய பல வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. இப்படி நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் இருக்கும். அதை வைத்துதான் நமது கதையில் கதாபாத்திரங்களை உருவாக்குகிறோம்.

அடுத்து, கதையை, கதாபாத்திரங்களை உருவாக்கும்போதே, இவரது பின்புலம் இதுதான் என்பதையும் உருவாக்கிவிடுகிறோம். இந்தப் பின்புலத்திலிருந்து வருகிற ஒருவர், அவரது வேலையில் இந்தச் சிக்கல்களையெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதுதான் மையக்கதை. அதன்வழிதான் அவரது உணவான பீஃப் போன்றவைகளெல்லாம் உள்ளே வருகின்றன. அடுத்து, அவன் சட்டம் படிப்பதென்பது, அவன் அடைய நினைக்கிற இடம்.

ஃபுட் டெலிவரி செய்கிற இடத்தில் கதாபாத்திரம் சந்திக்கிற பிரச்சினைகள், அந்தப் பயணம், அதன்வழி அவன் அடைகிற உணர்வுநிலை என்று சாதாரணமாக கதையை நகர்த்துவதைவிட, அக்கதாபாத்திரத்தெற்கென வலுவான பின்புலத்தை உருவாக்க நினைத்தேன். அதுவும் நாம் அன்றாடம் கவனிக்கிற, கடந்துபோகிற வாழ்க்கைச் சூழலை, பின்புலமாகப் பொறுத்த எண்ணினேன். சமூகத்தில் நாம் பார்க்கிற பிரச்சினைக்குரிய வாழ்வியலைக் கதைக்குள் பொறுத்தும்போது, நாம் கதையில் சொல்ல வருகிற செய்தியை, அது இன்னும் வீரியமாக்கும், என்பதன் வெளிப்பாடுதான் அது.
கைப்பந்து விளையாடுகிற இடத்தில் வாடிக்கையாளர்களுக்கும் ஃபுட் டெலிவரி செய்ய வந்தவருக்கும் இடையே மோதல் நடக்கிறது. உன் தந்தையின் பெயர் என்ன? என்றெல்லாம் கேட்டு சரித்திரனை வம்பிழுக்கின்றனர். இந்தக் காட்சி வடசென்னையில் நடப்பதாக காட்டியிருக்கிறீர்களா? ஏனெனில், அவர்கள் பேசும் மொழி, அவர்களில் பிரதான கதாபாத்திரத்தின் தோற்றம், இதை நினைவுறுத்தியது. ஒருவேளை அப்படியிருந்தால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களையே நிறுத்துகிற சூழல் உருவாகியிருக்குமே! 
இது வடசென்னையில் எடுக்கப்பட்டதல்ல. இந்தக் காட்சி உண்மையில் படமாக்கப்பட்ட இடமே, இப்படியான சாதி மோதல்கள் அதிகமாயிருக்கிற பகுதிதான். இங்கு மோதலே இடைநிலைசாதிகளுக்கிடையில்தான் உருவாகிறது. இதிலுமே, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் போன்ற பிரிவுகளெல்லாம் உள்ளதல்லவா, அவர்களுக்குள் மோதல் நடக்கிற ஒரு பகுதி என்று வைத்துக்கொள்வோம். எனவே, அந்த கைப்பந்து மைதானம் இருக்கிற இடம் வடசென்னை கிடையாது. உணவைக் கொடுப்பதற்கு, செல்லும் சாலைகளைக் கவனித்தாலே தெரியும். அதில் வடசென்னைக்குரிய தோற்றமே இல்லை. 

படத்தில் காட்டுகிற காட்சி நடக்கிற இடம், சென்னையின் மையம் அல்ல. சென்னையைத் தாண்டி, அதாவது போரூர் போன்று சென்னையிலிருந்து சற்று வெளியே தள்ளியிருக்கிற பகுதி. அங்கு நீங்கள் சென்றாலே, பெரும்பாலான வீடுகளின் சுவர்களில், சாதிக்கட்சி சார்ந்த கொடிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கமுடியும். இதுபோன்று, சென்னைக்கு சற்று வெளியேயுள்ள பல பகுதிகளில் பார்க்கலாம். அங்கெல்லாம் இந்த சாதியப் பாகுபாடுகள் சற்று அதிகமாகவே இருக்கும். டெலிவரி செய்ய வந்தவரை அடிப்பவர்களும், அவன் சார்ந்த அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதில் நான் கவனத்துடன்தான் செயலாற்றினேன்.

டெலிவரி செய்பவர்கள் வெயிலில் அலைந்து திரிவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்த வெயிலை உணரமுடியாத அளவிற்கு, ஒரு ப்ளூ டோன் (Blue color Tone), கொடுக்கப்பட்டிருக்கிறது எதனால்?
டெலிவரி செய்வதற்காக, சாலையில் செல்கிற காட்சியை பல காலப்பொழுதுகளில் எடுத்தோம். காலை நேரத்தில், மதியம், மாலை என்று பல நேரங்களில் அந்தக் காட்சிகளை எடுத்தோம். நீங்கள் சுட்டிக்காட்டுவது, டி.ஐ.யில் நடந்த மாற்றங்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி, அவர் மேம்பால வளைவில் பைக் ஓட்டிச் செல்கிற காட்சியெல்லாம், நல்ல வெயில் பொழுதில் எடுத்ததுதான். மேலும், படத்தில் வெயிலுக்கான ஷாட்டும் வைத்திருப்போம். பைக் ஓட்டும்போது, பாட்டு கேட்டுக்கொண்டே ஓட்டுவதுகூட, அந்தப் பயண நேரத்தின் வெறுமையைப் போக்குவதற்கான செயல்பாடுதான். இது அவன் சொகுசாக வேலை செய்கிறான் என்பதற்காக அல்ல. பயண நேரத்திற்கான இளைப்பாறுதல்தான் அந்தப் பாடல்கள். மேலும், உண்மையிலேயே ஃபுட் டெலிவரி செய்கிறவர்களின் அலைச்சல் என்பது, மிகவும் கொடுமையானது. இதில் மாற்றுக்கருத்தில்லை. 

இந்தப் படத்தில் பெரும்பாலும் இசை நிரப்பப்பட்டிருக்கிறது. அது கதைசார்ந்த உணர்வை எடுத்துக்காட்டுகிறது. ஆனால், படத்தில் ஒரு காட்சி. உணவு ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால், பணம் தரமாட்டேன் என்று தகராறு செய்கிற இடம். இந்தக் காட்சியில் இசை இல்லை. ஆனால், இசை இல்லாமலேயே இந்தக் காட்சி அதிகப்படியான சஸ்பென்ஸைக் கொடுக்கிறது. இதைத் தவிர்த்து, பெரும்பாலான காட்சிகளுக்கு இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னணி ஒலிகளை வைத்தும், ஒரு காட்சிக்கான உணர்வைக் கொண்டுவர முடியும். எனில் இசை அவசியமா? படத்திற்கான இசையை நீங்கள் என்னவிதமாக அணுகுகிறீர்கள்?
டூ லெட் குறும்படத்தில் இசை பயன்படுத்தப்படவேயில்லை. இயல்பாக என்ன பின்னணி ஒலிகள் இருந்தனவோ, அதுவே அப்படத்திற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், ஸ்வீட் பிரியாணி படத்திற்கு யோசிக்கும்போதே, இசையோடுதான் யோசித்து வைத்திருந்தேன். ஒரு கதை எழுதி, அதன் வாயிலாக ஒரு உணர்வுநிலையைக் கடத்துகிறோமல்லவா, அதனுடைய வேறொரு வடிவம்தான் இசை என்று நினைக்கிறேன். அப்படித்தான் ஸ்வீட் பிரியாணியிலும் இசையைப் பயன்படுத்த விரும்பினேன். 

ஸ்வீட் பிரியாணி படத்தில், கதாபாத்திரத்தின் பயணத்திலேயே ஒரு இசை இருக்கிறது. அவன் இசையுடனேயே பயணிக்கிற ஒருவன். கூடுதலாக, படத்திலேயுமே ஒரு பயணம் இருக்கிறது. உணவு கொடுப்பதற்காக அவனின் அலைச்சல், வாடிக்கையாளர்களிடம் சண்டையிடுவது, அவனது நடையால் ஏற்படுகிற பிரச்னை, பின்பு அதிலிருந்து அவன் ஒன்றைத் தெரிந்துகொள்ளுதல், என அவனது பயணம் அமைகிறது. இப்படி படம் முழுக்க ஒரு பயணம் இருந்துகொண்டே வருகிறது. ஆகவேதான், இந்தப் படத்தில் இசை இருந்தால், இப்படம் இன்னும் வீரியமாகயிருக்கும் என்று நினைத்தேன். 

அடுத்து, நான் இசையை மனதில் வைத்து காட்சிகளைக் கட் செய்யவில்லை. இந்த இடத்தில் இசையைக் கொடுத்து, பார்வையாளர்களை உணர்வு ரீதியில் அழுத்தவேண்டும் என்றெல்லாம் முயற்சிக்கவில்லை. என்னுடைய ஃப்லிம்மேக்கிங் செயல்முறையில், இசை என்பது இறுதிப் படிநிலைதான். ஒருவேளை, இசை இல்லாமலேயே படம் சிறப்பானதாக இருக்கிறதென்றால், இசையே வேண்டாம் என்ற மனநிலையில்தான் இருப்பேன். 

‘அறம்’ குறும்படத்தில் இதுதான் நடந்தது. எஃபெக்ட்ஸ் எல்லாம் முடித்துப் படம் பார்க்கையில், இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் மட்டும் இசையிருந்தாலே போதும் என்ற முடிவிற்கு வந்தேன். அறம் குறும்படம் பதினாறு நிமிட கால அளவு கொண்டது. ஆனால், அதில் ஒன்றரை நிமிட நேரத்திற்குத்தான் இசையே இருக்கும். ஸ்வீட் பிரியாணி படமும் எஃபெக்ட்ஸ் எல்லாம் முடித்துப் பார்க்கையில், இந்த இடங்களிலெல்லாம் இசை இருந்தால் நன்றாகயிருக்கும் என்று தோன்றியது. அதன்படி இசையமைத்தோம். இது நாம் சினிமாவைக் கற்றுக்கொள்வதன் படிநிலை என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை, அடுத்த வருடம் இதே படத்தை எடுக்கும்போது, இசை இன்னும் குறையலாம். 

முன்பே சொன்னதுபோல, உங்கள் படங்களின் பாணியில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன. ஒருவகை, பரிசோதனை முயற்சியாக நீங்கள் செய்கிற குறும்படங்கள். மற்றொன்று, ஒரு திரைப்படத்தின் சுருங்கிய பிரதியாக, ஒரு குறும்படம் எடுப்பது. இதற்கு டூ லெட் மற்றும் ஸ்வீட் பிரியாணியையுமே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். வாடகை தேடுகிற பிரச்சனையை, மிகவும் குறுகிய நேரத்திற்குள், மிகவும் வலுவாக அடையாளப்படுத்துகிற டூ லெட். அதே கதையைச் சற்று நீட்டி, இன்னும் விரிவாகச் சொல்லியிருந்தால், அது வேறொரு பரிமாணம் பெற்றிருக்கும். ஆனால், நீங்கள் டூ லெட் கதையை இப்படி, இந்தக் குறுகிய நேரத்திற்குள்தான் சொல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கிறீர்கள். அடுத்து, ஸ்வீட் பிரியாணிபோல, மினி சினிமா கதை. கதைதான், நாம் எடுக்கப்போகிற திரைப்பட வடிவத்தைத் தீர்மானிக்கும். ஆனால், அந்தக் கதையையும், அது சொல்லப்படப்போகிற திரைப்பட வடிவத்தையும், கிரியேட்டராக நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் ஒரு கதையை, சற்று வித்தியாசமான திரைமொழியைப் பயன்படுத்தி, மிகவும் சுருக்கமாகச் சம்பவத்தை மட்டும் அடிக்கோடிடுவது போல, எடுக்கிறீர்கள். அதே நீங்கள்தான், அப்படியே நேர் எதிராக, கதைசொல்லும் படங்களாக, கிட்டத்தட்ட மெலோ டிராமா படங்களாகவும் எடுக்கிறீர்கள். எப்படியான திரைமொழியுடன் ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் உரிமை. ஆனால், ஒரு கிரியேட்டராக, முரண்பாடுகளில்லாமல், நீங்கள் இருவிதமான அணுகுமுறையிலும் படங்கள் எடுக்கிறீர்கள் அல்லவா! இதில் எது உங்களுக்கு நெருக்கமானதாக இருக்கிறது? 

எனக்கு இரண்டுவிதமான போக்குகளிலுமே படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. மேலும், இவையிரண்டிலுமே அவையவைகளுக்குத் தகுந்தாற்போன்ற வசதிகள் இருக்கின்றன. டூ லெட் போன்ற படங்களில் வேலை செய்யும்போது, அதற்குள் பயங்கரமான படைப்பாக்கப்பூர்வமான வெளி கிடைக்கும். வழக்கமாக நாம் சில எல்லைகள் வைத்திருப்போமல்லவா! அதுபோன்ற எல்லைகள் எதற்குள்ளும் சிக்காமல், வழக்கமான சினிமா வடிவமே இல்லாமல், நாம் சொல்லவந்த விஷயத்தைச் சொல்வது, மிகப்பெரிய சுதந்திரம். 

டூ லெட் படத்திரையிடலுக்காக ஜெர்மனிக்குச் சென்றிருந்தேன். அங்கு சென்றிருந்தபோது, அங்கு திரையிடுகிற படங்களையெல்லாம் பார்த்தால், அவற்றில் எதிலுமே கதைகள் இல்லை. அவர்கள் எடுக்கிற படங்களில் கதைகளே இல்லை. அவர்கள் சினிமாவையே, காட்சி வழி கிடைக்கிற அனுபவமாகத்தான் பார்க்கிறார்கள். டூ லெட் குறும்படம் பல திரைப்பட விழாக்களுக்குச் சென்றதும், பல நாடுகளில் திரையிடப்பட்டதற்குமான காரணமே, அதன் திரைமொழிதான் என்று நினைக்கிறேன். சினிமா கதை சொல்லும் ஊடகம் என்பதை, அவர்கள் உடைத்துவிட்டார்கள். குறும்படங்கள் அதை இன்னும் சுலபமாக உடைத்துவிட்டன. அங்கு, ஒரு அனுபவம் கொடுப்பதற்காகவே, பல படங்கள் எடுக்கப்படுகின்றன. அது மிகவும் சவாலான காரியம்தான். ஆனால், அதுபோன்ற படங்கள் எடுப்பது, படைப்பூக்க ரீதியிலான சுதந்திரத்தை நமக்கு வழங்குகின்றன. 

ஆனால், அதேநேரம் சினிமாவில் கதை சொல்வதும், நமக்குள் இருக்கிற கிரியேட்டரை அது திருப்திப்படுத்தத்தான் செய்கிறது. நான், எந்த விதத்திலும் இதைக் குறைத்து மதிப்பிடவே மாட்டேன். டூ லெட் படம் எடுக்கும்போது, எனக்கு என்ன மனநிறைவு கிடைக்கிறதோ, அதே நிறைவு ஸ்வீட் பிரியாணி போன்று கதை சொல்லும் படங்கள் எடுக்கும்போதும் கிடைக்கிறது. ஆனால், இதில் கதைக்குத் தேவையில்லாத சில விஷயங்களை வைக்கக்கூடாது. சினிமா பார்த்து ஒரு சினிமாவை உருவாக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாகயிருக்கிறேன். நாம் வாழ்க்கையிலிருந்து கண்டுகொண்ட சில விஷயங்களிலிருந்துதான் கதைகளை உருவாக்க வேண்டுமே தவிர்த்து, ஒரு சினிமா பார்த்து சினிமா எடுப்பதை, எப்போதும் நான் செய்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உஷாராகயிருக்கிறேன். ஸ்வீட் பிரியாணி வரையிலுமே, வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களை வைத்துதான், அதை நம் பாணியில் எழுதுகிறோம், எடுக்கிறோம். 

சினிமாவில் கதைசொல்லும் போது, அங்கு சில நல்ல அனுகூலங்கள் நடக்கின்றன. ஒரு கதையைப் பொறுமையாக எழுதிப் பார்க்க, அதை மெருகேற்ற நேரம் கிடைக்கிறது. மேலும் நாம் ஒரு திரைமொழியைக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு கதையை எப்படியெல்லாம் சொல்லமுடியும். முடிந்தவரை மிகைப்படுத்துதல் இல்லாமல், யதார்த்தமாகவும், எளிமையாகவும் எப்படிச் சொல்லமுடியும், என்பதை கதை சொல்லும் சினிமாவிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியும். 

ஸ்வீட் பிரியாணியில், சரித்திரன் ஒரு இளைஞனிடம் பார்சலைக் கொடுக்கும்போது, அந்த இளைஞன் சிரிப்பான். ஆனால், சரித்திரன் கதாபாத்திரம், சிரிக்காமல் பயந்து அங்கிருந்து வெளியேறிவிடும். இந்தக் காட்சி எதற்காக வைக்கப்பட்டது? அடுத்த காட்சியில், இதேபோல சரித்திரன் ஒரு பெண்ணிற்கு பார்சலைக் கொடுத்துவிட்டு சிரிப்பான். ஆனால், அந்தப் பெண் அந்தச் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு சென்றுவிடுவார். இந்தக் காரணத்திற்காகத்தான் அந்த இளைஞன் சிரிக்கிற காட்சி வைக்கப்பட்டதா?
ஆம். அதற்காகத்தான். அவர் ஒரு Gay என்பது போலத்தான், சரித்திரன் கதாபாத்திரம் நினைத்திருக்கும். அதனால்தான், அந்த இளைஞன் சிரித்ததற்கு, பதிலுக்குச் சிரிக்காமல், பொதுப்புத்தியிலிருந்துதான் அவன் அங்கிருந்து சென்றுவிடுகிறான். அதே சரித்திரன் கதாபாத்திரம், அடுத்து ஒரு பெண்ணைப் பார்த்து, அந்த இளைஞன் சிரித்தது போலவேதான் சிரிப்பான். சரித்திரன் அந்த இளைஞனைப் புறக்கணித்தது போலவே, அந்தப் பெண் சரித்திரனைப் புறக்கணிப்பார். இவன் ஒரு பெண் மீது ஈர்க்கப்பட்டு சிரிப்பது எப்படி தவறில்லையோ, அதேபோலத்தான் அந்த இளைஞன் சிரித்ததும் தவறில்லை. அதையும் நாம் இயல்பான விஷயமாகத்தான் அணுகவேண்டும். இந்தத் தொடர்பை உணர்த்தத்தான் அவ்விரு காட்சிகளும் வைக்கப்பட்டன.

ஃபுட் டெலிவரி செய்பவர்களுக்கு இடையில் சம்பளப் பிரச்னைகள் இருந்தன. சரியாக சம்பளம் தராததால் போராட்டங்கள் நடத்தினர். அவர்கள் மீது நிறைய புகார்கள் வைக்கப்பட்டன. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு நீக்கிவிடலாம் என்ற நிலை இருந்தது. இப்போது, ஃபுட் டெலிவரி செய்பவர்களின் நிலைமை சற்றேனும் மாறியிருக்கிறதா? அவர்கள் நிலையைத் தொடர்ந்து கவனிக்கிறீர்களா?
அவர்களுக்கான சம்பளப் பிரச்சினை நடந்தபோது, அந்தச் செய்தி சார்ந்து தொடர்ந்து விசாரித்து அறிந்துகொண்டேன். அடுத்து, நான் இந்தப் படத்திற்காக என்றெல்லாம் அவர்களிடம் சென்று பேசவில்லை. வழக்கமாக நம்மிடம் உணவு டெலிவரி செய்வதற்காக வருவார்கள் அல்லவா, அவர்களிடமே நான் பேசுவேன். அப்படிப் பேசிய பல விஷயங்களின் தொகுப்புதான் ஸ்வீட் பிரியாணி படம். நாம் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறோம். அதற்காக, ஃபுட் டெலிவரி செய்பவர்களைச் சந்தித்து, விபரங்கள் சேகரிக்க வேண்டும் என்று நான் முயற்சிக்கவில்லை. நாம் பார்த்த, கேட்ட விஷயங்களைச் சேகரித்துதான், படத்தில் வைத்திருக்கிறேன்.

இக்குறும்படம் ரிலீசாகி, அடுத்த ஒரு வாரத்திலேயே பெங்களூரில், படத்தில் இருப்பதுபோல ஒரு சம்பவம் நடந்தது. ஊடகத்தில், அந்தப் பிரச்சினை பெரிதாகும்போது மட்டுமே அவர்கள் காப்பாற்றப்படுகிறார்களே தவிர்த்து, அவர்களுக்கென ஒரு நிலையான பிடிப்பு இத்தொழிலில் இல்லை. ஒரு நபரை வேலையை விட்டு வெளியேற்றினாலும், அந்த வேலைக்கு வருவதற்கு, வெளியே பத்து பேர் காத்திருக்கிற சூழ்நிலை இருக்கும்வரை இந்நிலை மாறாது. 

ஸ்வீட் பிரியாணி இந்தியன் பனோரமாவில் தேர்வாகியிருக்கிறது. பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டிருக்கிறது. டூ லெட், குறும்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தைத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதில், உங்களது அணுகுமுறை என்னவாகயிருக்கிறது? ஒரு சிலர் Filmfreeway போன்ற இணையதளங்கள் வாயிலாக, அவர்கள் எடுத்த படங்களை அனுப்புவார்கள். இன்னும் சிலர், இடைத்தரகர் மூலமாக படங்களை அனுப்புவர்கள். இதில் உங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன?
நான் இடைத்தரகர் வாயிலாக எந்தப் படமும் அனுப்பியதில்லை. எல்லாமே, தனிப்பட்ட முறையில் நானேதான் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருக்கிறேன். மேலும் தொண்ணூற்றியொன்பது சதவீதம், எவ்வித நுழைவுக்கட்டணமும் இல்லாத திரைப்பட விழாக்களுக்குத்தான் என் படங்களை அனுப்பியிருக்கிறேன்.

ஒரு சில திரைப்பட விழாக்களைப் பார்க்கும்போதே, அது என்னமாதிரியான அணுகுமுறையில் இயங்குகிறது, அதன் வழிமுறை என்ன, என்பதெல்லாம் தெரிந்துவிடும். மேலும், அத்திரைப்பட விழாக்கள் குறித்துப் படித்துப் பார்ப்போம். அது சிறப்பானதாக இருக்கும் பட்சத்தில் படத்தை இதற்கு அனுப்பலாம் என்று முடிவெடுப்போம். இப்போது படங்களை திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கென பல இணையதளங்கள் வந்துவிட்டன. அதேநேரம், அந்தளவிற்கு மதிப்பில்லாத திரைப்பட விழாக்களும் நிறைய வந்துவிட்டன. அதற்கும் உங்கள் படங்களை அனுப்பலாம். எல்லாவற்றிலும் ஒரு நல்ல விஷயம், கெட்ட விஷயம் இருக்கும். அதுபோலத்தான் இதுவும். அப்படியும் நீங்கள் விருதுகள் வாங்கி, உங்கள் படத்தின் முன்னால், இத்தனை விருதுகள் வாங்கியிருக்கிறது என்று குறிப்பிடலாம். ஆனால், இந்தத் திரைப்பட விழாக்கள் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவர், அவற்றைப் பார்த்தால், அந்த திரைப்பட விழாக்களின் உண்மைத்தன்மையை அறிந்துவிடுவார். 

ஆனால், நாம் தேர்ந்தெடுத்து, நல்ல திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும்போது, நம் படத்திற்கான அங்கீகாரம் நல்லமுறையில் கிடைக்கும். அடுத்து, நாம் இங்கிருந்துகொண்டே, உலகின் பல மூலைகளில் இருப்பவர்களிடமும், நாம் எடுத்த படத்தின் வாயிலாகத் தொடர்புகொள்ள முடிகிறது, அவர்களோடு உரையாட முடிகிறது என்பது மிக நல்ல வாய்ப்பு. டூ லெட் படம் ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அங்குமே இந்த வாடகைக்கு வீடு தேடுகிற பிரச்சினைகள் இருந்தன. அவர்களால் எளிதாக, படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. கேரளா, ஜெர்மன் போன்ற இடங்களில் படம் பார்க்க நிறைய பேர் வந்திருந்தனர். சில திரைப்பட விழாக்களுக்கு, அவர்களின் இணையதளங்களில், நேரடியாகவே அனுப்புவேன். அண்மையில்தான், Filmfreeway போன்ற இணையதளங்களில் படங்களை அனுப்புகிறேன். அதுவுமே கூட, நல்ல திரைப்பட விழாக்களாகத் தேர்ந்தெடுத்துதான் அனுப்புகிறேன். அத்திரைப்பட விழா ஆரம்பித்து, மூன்று வருடங்களுக்கும் குறைவாக இருந்தால், அதற்கு படத்தை அனுப்புவதைத் தவிர்ப்பேன். 

நாம் எடுத்த படம், பிற நாடுகளில் இருக்கிற மக்களோடும் உரையாட வேண்டும், அவர்கள் இந்த படத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்பதையெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், உங்கள் நோக்கம் நேர்மையானதாகயிருந்தால், இந்தத் திரைப்பட விழாக்கள், உங்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். 

உங்கள் பயணம் அடுத்தடுத்து என்னவாகயிருக்கப்போகிறது. தொடர்ந்து சுயாதீன சினிமா சார்ந்து இயங்க நினைக்கிறீர்களா? அல்லது மைய நீரோட்டத் தளத்தில் திரைப்படம் எடுக்கிற முயற்சியில் இருக்கிறீர்களா?
இந்த வருடத்திற்குள் ஒரு திரைப்படம் எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அதன் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் நிறைவேறிவிட்டன. அதற்குள் ஒரு குறும்படம் எடுக்கலாம் என்று அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். திரைப்படங்கள் எடுத்தாலும், நான் தொடர்ந்து குறும்படங்கள் எடுத்துக்கொண்டேதான் இருப்பேன். மையநீரோட்ட சினிமாவில் இயங்கும்போது, நமக்கென சில எல்லைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். நாம் அதற்குள்தான் இயங்கவேண்டிய சூழல் இருக்கும். ஆனால், குறும்படங்கள் நம்முடைய படைப்பாக்கத் திறனை, வளர்ப்பதற்கான பெரிய திறப்பைத் தருகிறது. நாம் நமது கிரியேட்டிவிட்டியை புத்துணர்வாக வைத்துக்கொள்வதற்கு, நமக்கிருக்கிற ஒரு ஊடகமாக, நான் குறும்படங்கள் எடுப்பதையே பார்க்கிறேன். இதில் எந்தவொரு எல்லைகளும் உங்களுக்கு இல்லை. வியாபார ரீதியாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. நாம் நினைக்கிற விஷயத்தை, அதே வீரியத்தோடு, குறும்படமாக எடுக்க முடியும். ஒரு படைப்பாளியாக நம்மை உயிர்ப்போடு வைத்துக்கொள்கிற ஊடகமாக நான் குறும்படங்களையே கருதுகிறேன். படைப்பாளியாக இருக்கும்வரை தொடர்ந்து குறும்படங்கள் எடுத்துக்கொண்டேயிருக்கத்தான் ஆசைப்படுகிறேன். 

குறும்படங்களுக்கான சந்தை இங்கு சாத்தியமா?
குறும்படங்கள் இலவசமாகக் கிடைக்கும்வரை, அதற்கான வியாபாரம் சாத்தியமில்லை. குறும்படங்கள் என்றாலே, யூட்யூபில் இலவசமாகப் பார்த்துவிடலாமே, என்ற சிந்தனை இருக்கிறது. பின்பு, எப்படி அவர்கள் பணம் செலுத்திப் பார்ப்பார்கள்? எங்கள் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு வலைத்தளம் ஆரம்பித்தார்கள். குறும்படத்தைப் பார்க்க இருபத்தைந்து ரூபாய் விலை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், நான், பத்து ரூபாய் விலை வையுங்கள். அப்போதுதான் அதிக மக்கள் பார்ப்பார்கள் என்றேன். ஏனெனில், அத்தனை குறும்படங்கள் இலவசமாகப் பார்க்கக் கிடைக்கின்றன. இலவசமாகக் கிடைக்கிற ஒன்றை ஏன் பணம் கொடுத்துப் பார்க்க வேண்டும், என்றுதான் மக்கள் யோசிப்பார்கள். எனவே, அந்தக் குறும்படத்தை எடுக்கிற இயக்குனர்கள், என் படத்தை இலவசமாகப் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்தால், இது சாத்தியம். மற்றது. இப்போது ஓ.டி.டி தளங்கள் அதிகமாயிருப்பதால், அனைத்து ஓ.டி.டி தளங்களிலும் குறும்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். மூபி, ஹாட்ஸ்டார், ஜீ போன்ற தளங்கள் எல்லாமே குறும்படங்களையும் ஒளிபரப்புகிறார்கள். எனவே, குறும்பட இயக்குனர்கள் அத்தகைய ஓ.டி.டி தளங்களை நாடினால், வாய்ப்புகள் அமையலாம். 

யூட்யூபில் குறும்படங்களை வெளியிடுபவர்களில் பெரும்பாலானோர், சினிமாத்துறையை நோக்கிப் போகவேண்டும் என்று நினைப்பவர்கள். அதை ஒரு வழியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். மற்றொரு வகையினர், எப்படியாவது என் படத்தை மக்கள் பார்த்துவிட வேண்டும், எப்படியாவது அதிகப்படியான மக்களைப் பார்க்கவைத்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களுக்கு, யூட்யூப் நல்வாய்ப்பாகவே அமைகிறது. அதன்வழி சில நல்ல குறும்படங்களும் யூட்யூபில் பார்க்கக் கிடைக்கின்றன. அவர்களெல்லோரும் ஓ.டி.டி தளங்களை நாடினால், குறும்படங்களுக்கான சந்தை மதிப்புகள் சாத்தியம்தான். குறும்படங்களை சந்தைப்படுத்துவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. 

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இரு இயக்குனர்கள், பாலு மகேந்திராவும், மகேந்திரனும். அவ்விருவரையும் நீங்கள் பேட்டி கண்ட அனுபவம் குறித்து?
பாலு மகேந்திரா அவர்களை நான் நேரில் பார்த்து, பேட்டியெடுத்தேன். மகேந்திரன் அவர்களை தொலைபேசி வாயிலாகத்தான் பேட்டியெடுக்க முடிந்தது. இரண்டுமே மிக நீண்ட உரையாடல்கள். 
பாலு மகேந்திரா சாரை முதலில் சென்று பார்த்துவந்தேன். அவரது ‘வீடு’ திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். இருந்தாலும், அவர் எனக்கு ஒரு டி.வி.டி கொடுத்தார். ‘வீடு’ படம் கலரில்தான் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த வண்ணத்தில் ஏதோவொரு பிரச்னை என்றுதான், எனக்கு கறுப்பு வெள்ளையில் வீடு படத்தின் பிரதியைக் கொடுத்தார். இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த டி.வி.டி.யின் பின்பக்கம் ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்தார். இந்தப் படம் பார்க்க Brightness, Contrast எவ்வளவு புள்ளிகள் வைத்துப் பார்க்க வேண்டும் என்று எழுதிக்கொடுத்தார். நானும் அதேபோல வைத்துப் பார்த்தேன். அதற்குப் பிறகுதான் அந்த பேட்டி எடுக்கச் சென்றேன். 

பெரும்பாலும், கேள்விகளை அனுப்பச் சொல்லிவிட்டு, பதிலை அனுப்புவதுதான், அவரது வழக்கமாகயிருந்ததாக அவரே சொன்னார். நேரில் எப்போதும் பேட்டி தரமாட்டேன். பெரிய பெரிய பத்திரிக்கைகள் முதற்கொண்டு, இந்த வழிமுறையைத்தான் பின்பற்றிவருவதாக அவர் சொன்னார். எனக்குத் தெரிந்து, தமிழ்ஸ்டுடியோவிற்கு பாலுமகேந்திரா கொடுத்ததுதான் கடைசி நேரடிப் பேட்டியாக இருக்கும். அந்தப் பேட்டி எடுத்த அனுபவமே மிகவும் சிறப்பாகயிருந்தது.
நிறைய கேள்விகள் தயாரித்துக்கொண்டு சென்றிருந்தேன். துவக்கமான சில கேள்விகள் அவருக்குப் பிடிக்கவில்லை. பேட்டியைத் துவங்குவதற்காகத்தான் வழக்கமான அந்த நான்கைந்து கேள்விகளை வைத்திருந்தேன். “வீடு படம் உருவாவதற்கான காரணம் என்ன?” இதுபோன்ற கேள்விகள் எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை. பலமுறை இதே கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருந்ததால், சலிப்படைந்திருந்தார். எனவே, நான் தயாரித்து வைத்திருந்த முதல் ஐந்து கேள்விகளைக் கேட்காமல், நேரடியாக ஆறாவது கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு ஆறு, ஏழாவது கேள்வியிலிருந்துதான், அவர் மிகவும் ஈடுபாடு காட்டத் துவங்கினார். அதற்குப் பிறகு வருகிற கேள்விகள் எல்லாமே மிகவும் ஆழமான கேள்விகளாகத்தான் இருந்தன. அதனால் அவர் மிகுந்த ஆர்வத்தோடு பதில் சொன்னார். நிறைய பேச ஆரம்பித்தார். நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொண்டார். 

பேட்டியின்போது பாலு மகேந்திராவைச் சந்திப்பதற்காக பி.ஆர்.ஓ நிகில் முருகன் அவர்கள் வந்திருந்தார். பாரதிராஜா அப்போது அன்னக்கொடியும், கொடிவீரனும் என்ற படம் எடுப்பதாக இருந்தது. அந்தப் படத்திற்கான பூஜையை, பாரதிராஜாவின் ஊரிலேயே வைத்திருந்தார். அவ்விழாவிற்கு தமிழ்த் திரையுலகைச் சார்ந்த முக்கியமான பிரபலங்களையெல்லாம் அழைத்திருந்தனர். அதற்கு பாலு மகேந்திராவையும் அழைக்கத்தான், நிகில் முருகன் அவர்கள் வந்திருந்தார். இருப்பினும், பாலு மகேந்திரா அவரைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேட்டியளித்தார். நடுவில் ஒருமுறை மட்டும், கமல்ஹாசன் தொலைபேசியில் அழைத்திருந்தார் என்று நினைக்கிறேன். அப்போது மட்டும்தான், “இருப்பா, கொஞ்சம் பேசிக்கிறேன்” என்று அங்கிருந்தே போனில் பேசினார். மற்றபடி, எவ்வித தடங்கலும் இல்லாமல் முழுமையான பேட்டியளித்தார். அந்தப் பேட்டியும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகவே இருந்தது.

அந்தப் பேட்டியில் பாலு மகேந்திரா சாரே, ஒரு பதில் சொல்லியிருப்பார். “வீடு படத்தின் முக்கியத்துவம் என்ன?” என்று அவரிடம் கேட்கும்போது, “உன்னைப்போல இருபத்தைந்து வயதுப் பையன், உன்னுடைய வேலையையெல்லாம் விட்டுவிட்டு, இருபத்தைந்து வருடத்திற்கு முன்னால் வந்த ஒரு படத்தைப் பற்றி, அர்த்தமுள்ள உரையாடலை நிகழ்த்துகிறாய் அல்லவா, அதுதான் வீடு படத்தின் வெற்றியாக நினைக்கிறேன்” என்றார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகயிருந்தது. பின்னர், அந்தப் பேட்டியை முழுவதுமாக முடித்த பின்னர், அவர் என்னை அழைத்து, அந்த வீட்டைச் சுற்றிக்காண்பித்தார். சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தார். அவரது தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்தார். இந்த பேட்டியை எழுதி முடித்தபின்னர், பேட்டி எப்படி வந்திருக்கிறது என்று என்னிடம் சொல்லு, என்றார். இதெல்லாம், மிகச்சிறந்த அனுபவமாக அமைந்தது. அவர் சொன்ன ஒவ்வொரு பதிலுமே, நமக்கான மிகப்பெரிய பாடம் என்று நினைக்கிறேன். அந்தப் பேட்டியை படிக்கும்போதே, நமக்குள் உள்ள பல மாயைகள் உடையும். முக்கியமாக, தமிழ் சினிமாவில் இடைவேளை விடுவது பற்றியெல்லாம் அவர் பேசியிருப்பார். “இடைவேளை என்பது வியாபாரி பாப்கார்ன் விற்பதற்காக உண்டாக்கப்பட்ட விஷயம், திரைக்கதை எழுதும்போது, ஏன் அதைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள்” என்று சொல்லியிருப்பார். அவருடன் நாம் சிறிதுநேரம் இருந்தாலே, நமக்குள் இருக்கிற சினிமா பற்றிய பார்வையெல்லாம் மாறிவிடும். அதுவரை நாம் பெரும்பாலும் அந்த கமர்ஷியல் சினிமா மனநிலையில்தான் இருப்போமல்லவா, அதெல்லாம் பாலு மகேந்திரா அவர்களுடன் இருக்கும்போது, ஒரு படியாவது குறையும். அவருடன் ஒரு மணி நேரம் பேசினாலே, நாம் நல்ல சினிமாவை நோக்கி நகர ஆரம்பித்துவிடுவொம். அதுபோன்ற நல்லதொரு அனுபவமாக இருந்தது.
மகேந்திரன் சாருடன் நடத்திய பேட்டியும், மறக்கமுடியாத பேட்டிதான். அவருடைய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானதாக இருக்கும். அவரது எல்லா படங்களிலுமே வழக்கமான, சாதாரண பெண்களைப் பார்க்கமுடியாது. இந்தக் கேள்விக்கு, “உன்னால், பெண்கள் இல்லாத வாழ்க்கையைக் கற்பனை பண்ணமுடியுமா? உலகத்தில் பெண்கள் இல்லாத இடம் எங்கேயிருக்கிறது? அவர்கள் இல்லையெனில் என்ன வாழ்க்கை இருக்கிறது? எனவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை, படத்திற்குள் துண்டாக, தனியாக வைக்கவில்லை. பெண்கள் நம் வாழ்க்கை முழுக்க நிறைந்தே இருக்கிறார்கள். அதைத்தான் நான் சினிமாவில் காட்சிப்படுத்துகிறேன்? என்றார். போனில் எடுத்தாலுமே, அந்தப் பேட்டியும், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகச் சென்றது. இரண்டு பேருமே, சலிக்காமல், ஒரு நொடிகூட சோர்ந்து போகாமல், பேட்டியளித்தார்கள். இவர்களைப் பேட்டியெடுத்ததில் எனக்கு சந்தோஷம், பெருமை என்பதையெல்லாம் தாண்டி, இது எனக்கு பெரிய பாடமாக அமைந்தது. சினிமா பற்றிய ஒரு பெரிய விரிவுரையை ஒருவருக்கு மட்டும் நடத்தியதுபோல இருந்தது.