சினிமா வழியாக சமூகம் மாறுவதைக் காட்டிலும், சமூகம் வழியாகத்தான் சினிமா மாறும் - இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டி

இயக்குனர் ஹெச்.வினோத் பேட்டியின் தொடர்ச்சி

ஜி.நாகராஜன் விலைமாதுக்கள் குறித்து அதிகம் எழுதியிருக்கிறார். பெண்களின் பிரச்சினைகளைத் தன் கதைகளில் விவாதித்திருக்கிறார். நீங்கள் ஜி.நாகராஜனைப் படித்திருக்கிறீர்கள். அந்த தாக்கமும் ’பிங்க்’ திரைப்படத்தைத் தமிழில் இயக்குவதற்கான ஒரு காரணமா?

’பிங்க்’ திரைப்படத்தை மிகவும் கவனத்தோடு இயக்க வேண்டும் என்றும், என் வாழ்க்கையிலேயே மிகக் கவனத்தோடு செய்யவேண்டிய வேலை இதுதான் எனவும் முடிவு செய்திருந்தேன். இதற்கு இரண்டு காரணங்கள். முதலில் நான் அதிகம் பெண்களுடன் பேசியதே இல்லை. அம்மா, தங்கை, அக்கா தவிர, பெண்களுடன் அதிகமாகப் பேசிய பழக்கமே எனக்குக் கிடையாது. அதனால்தான் என் கதையில் பெண் கதாபாத்திரங்கள் அதிக தீவிரத்தோடு இடம்பெறாது. ஆகவே, பெண்கள் எப்படி நிற்பார்கள்? எப்படி பேசுவார்கள்? இயல்பாக எப்படி நடந்துகொள்வார்கள்? அவர்களின் யதார்த்தமான பாவனை, என எல்லாமே நான் பார்த்து வந்த சினிமாக்கள், அதில் வருகிற பெண்களின் பிம்பம்தான் எனக்குள் இருக்கிறது. இவ்வளவு வலிமையான ஒரு கதையை, நாம் எப்படிக் கொண்டுசெல்ல போகிறோம்? என்ற அடிப்படையான பயம் இருந்தது. எனவே, அப்படியிருக்கும்பொழுது, இதுபோன்ற கதை ஏன் என்னைத் தேடி வருகிறது? என்ற கேள்வியும் இருக்கிறது. 

Image result for nerkonda paarvai shooting spot

இதற்கு ஏதேனும் பிரத்யேகக் காரணம் இருக்கிறதா? என்றெல்லாம் யோசித்துப் பார்த்தால், இதை நான் இயக்குவதற்கான எந்த நியாயமுமே இல்லை. பெண் கதாபாத்திரங்களைக் கச்சிதமாகச் சித்தரிக்கக்கூடிய இயக்குனர், இந்தப் படத்தை எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், நான்தான் இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதில் அஜித் சார் மிகவும் தீர்மானமாக இருந்தார். எனவே, அதன்பின்னர், ’பிங்க்’ படத்தை மீண்டும் மீண்டும் பார்த்து, தெளிவாக உள்வாங்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முயற்சித்தேன். ’பிங்க்’ படம் வாயிலாக நான் நிறைய கற்றிருக்கிறேன். உணர்வுத்தளத்திலிருந்து அதை அணுகாமல், ஒரு பொறியியலாளர் போல அதைக் கட்டுடைப்பு செய்தேன். இந்தியில் ’பிங்க்’ படம் உணர்வுரீதியாகக் கடத்தப்பட்டிருக்கும். ஆனால், ’நேர்கொண்ட பார்வை’யில் இந்த லேயரில் என்ன சொல்கிறார்கள்? இங்கு ஏன் இடைவெளி இருக்கிறது? அப்படிப் பிரித்துப் பார்த்தேன். இதன்மூலம் நான் தெரிந்துகொண்டது, அந்தப் படத்தில் ஒவ்வொரு ஷாட்டிற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. 

Related image

இதை அவர்கள் திட்டமிட்டு செய்தார்களோ! இல்லையோ! ஆனால், அந்தப் படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலிருந்தும் நம்மால் ஒரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள முடிகிறது. எனவே, இவ்வளவு மெனக்கெடலும் திட்டமிடலும் இருக்கிறபொழுது, அதைத் தமிழில் சிதைத்துவிடாமல் கொண்டுவர வேண்டும் என்று எண்ணி, அதற்கான கால – அவகாசம் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டோம். மற்றபடி, இந்தப் படத்தை நான் இயக்கியதற்கும், ஜி. நாகராஜனின் தாக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

Image result for yuvan shankar raja ner konda paarvai

நீரவ் ஷா, யுவன் ஷங்கர் ராஜா போன்றவர்களின் பங்களிப்பு குறித்து?

நீரவ் ஷா, யுவன் சங்கர் ராஜா போன்றோரிடம் வேலை செய்கிறபொழுது, ஏற்கனவே இச்சினிமாத் துறையில் நன்கு பரிச்சயம் உள்ளவர்கள் என்பதால், நமக்கு அதிக நேரம் தேவைப்படாது. அங்கு பிரச்சினை இருக்காது. போதிய அனுபவம் இருப்பதால், நாம் என்ன சொல்கிறோம் என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிடும். இந்தக் காட்சியை எப்படி எடுக்க நினைக்கிறேன் என்று நாம் சொல்கிறபொழுதே, அவர்களும் இந்தக் காட்சியை இப்படி எடுக்கலாம் என்று இரண்டு யோசனைகள் சொல்வார்கள். பின்பு இருவரும் பேசி, எந்த யோசனை சிறந்தது என்று முடிவுசெய்து, அதன்படி படப்பிடிப்பு நடத்துவோம். யுவன் சங்கர் ராஜா, மிகவும் வேகமாக வேலை செய்யக்கூடியவர். கதைக்கு என்ன தேவையோ, அதை விரைவாகக் கொடுப்பார். 

Related image

ஷாட்களுக்கான ரெஃபரன்ஸ்?

நீதிமன்றக் காட்சிகளுக்கு எதுவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் நடக்கிற காட்சிகளை இயல்பாக எடுக்க வேண்டுமானால், ஒருவர் இன்னொருவரைப் பார்ப்பதுபோல பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட்டில் எடுக்க வேண்டும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான ஷாட்களை எடுக்க வேண்டாம் என்று தோன்றியது. ஏற்கனவே மக்களுக்கு இது நீதிமன்றத்தில்தான் நடக்கிறது என்ற புரிதல் இருக்கும். எனவே, ஷாட்களை மாற்றினோம். நீதிமன்றக் காட்சிகளின் ஆரம்பத்தில், க்ளோஸ் அப் ஷாட்களாக எடுத்துவிட்டு, பின்னர் செல்லச் செல்ல நீதிமன்றத்தை வெளிப்படுத்தினோம். 

Image result for nerkonda paarvai shooting spot

’சதுரங்க வேட்டை’ திரைப்படம் பெரும்பங்கு உரையாடலால் நிரப்பப்பட்டிருக்கும். உரையாடல் மூலமாகவே கதை நகரும். இப்பொழுது ’நேர்கொண்ட பார்வை’யும் உரையாடல் மூலமாகவே கதை நகர்கிறது. ”சினிமா என்பது காட்சி ஊடகம்” என்ற நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அக்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கிருக்கிற முரண் என்னவென்றால், ”நாம் எதை சினிமாவாகக் கருதுகிறோம்” என்பதோடு, “மக்கள் எதை சினிமாவாகக் கருதுகிறார்கள்?” என்பதும் முக்கியம். நீங்கள் ஒரு பொருளை விற்பது என்று முடிவுசெய்துவிட்டால், அந்த இடத்தில் அப்பொருளைத் தயாரிப்பவர்கள் மட்டும் முக்கியமானவர்கள் அல்ல. வாங்குகிறவர்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அதனுடைய தேவை என்ற ஒன்று உள்ளது. இரண்டு வகையான வியாபாரம். நமக்கு என்ன தேவையோ, அதைக் கொண்டுவந்து விற்பவர்கள் வியாபாரிகள். நமக்குத் தேவையோ இல்லையோ, அதை வாங்க வைப்பவர்கள் இன்னொரு வகையான வியாபாரிகள். இதில் சினிமா முதல் வகையினத்திற்குள் வருகிறது. மக்களுக்கு என்ன தேவை, என்பதுதான் முக்கியம். நேர்கொண்ட பார்வைக்கும், விஸ்வாசம் என இவ்விரு திரைப்படங்களுக்கான வசூல் விபரங்களை எடுத்துப் பார்த்தீர்களேயானால் இது உங்களுக்குப் புரியும். மக்களின் அறிவும் இங்கு முக்கியம். நான் அவர்களுக்கு அறிவு இல்லை என்ற புள்ளியிலிருந்து சொல்லவில்லை. அவர்களுக்கு யோசிப்பதற்கு நேரம் இல்லை. அவர்கள் கடுமையாக வேலை செய்துகொண்டே இருக்கின்றனர். அன்றாடம் அவர்களுக்கு வேலை இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சோர்வாக இருக்கிறார்கள். அவர்கள் திரையரங்கிற்கு வருவதே, அந்தக் கஷ்டத்தை மறப்பதற்காகத்தான். சாப்பாட்டுக் கடைக்குச் சென்று சாப்பிட அமர்ந்தால், அதில் சப்பாத்தி, சோறு, இனிப்பு, என எல்லாமும் இருக்க வேண்டும். அதுபோல, அவர்கள் சினிமாவிற்கு வரும்பொழுதும், அத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர். எனவே, மக்கள் இதுபோன்ற நல்ல சினிமாக்களைப் பார்க்க, அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அவர்களைத் தயார்படுத்துவதென்பது உடனே நடக்காது. முதலில் இங்கு சமாந்திர சினிமாக்கள் வரவேண்டும். இதன்மூலமாக, மெதுமெதுவாகத்தான் மக்களை நல்ல சினிமாக்களை நோக்கி நகர்த்த முடியும் என்று நினைக்கிறேன்.

Image result for Pink movie 

நானும், இந்த மத்திய சினிமாக்களைத்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதிகக் கமர்ஷியல் படங்களையும் எடுக்கக் கூடாது, உயர்ந்த கலை சினிமா பக்கமும் செல்லாமல், இரண்டிற்கும் நடுவில் உள்ள மத்திய சினிமாக்களைத்தான் நான் முயற்சிக்கிறேன். 

’பிங்க்’ படம் எடுக்கிறபொழுது, அந்தப் படத்தின் கதையை உள்வாங்கிக்கொண்டு, அதை உங்கள் பாணியில் எடுக்கவேண்டும், கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தீர்களா? 

இந்தப் படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்கிறபொழுது எனக்கு விதிக்கப்பட்ட முதல் விதிமுறையே ”இந்தக் கதையை அப்படியே இங்கு எடுக்கவேண்டும்” என்பதுதான். இந்தப் படத்தைப் பொறுத்தவரை நீங்கள் எதை மாற்றினாலும், சிக்கிக்கொள்வீர்கள். இந்தப் படம் என்பது ’கதை’ அல்ல. அது நிகழ்த்துகிற ‘விவாதம்’தான். இரண்டு வழிக்கறிஞர்கள் நின்றுகொண்டு, அதில் ஒருவர் மக்களின் பொதுப்புத்தியையும், இன்னொரு வழக்கறிஞர் அதை உடைக்கவும் முயற்சித்துக்கொண்டே இருப்பார். ஆகவே, இதில் கதை என்பது எங்கோ ஒரு லேயரின் உள்ளேயிருக்கிறது. கதையின் பங்கு மிகவும் குறைவு. பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதால், அவர் திருப்பி அடித்துவிட்டார். இந்தக் கதைதான் படம் முழுவதும் வருகிறது. எனவே, படத்தில் கதையின் பங்கு மிகவும் குறைவு. எல்லாமே விவாதங்கள்தான். இதைத் தமிழுக்குத் தகுந்தாற்போல மாற்ம் செய்வது தேவைப்படவில்லை. ஃபேண்டஸி படம் என்றால், சில மாற்றங்கள் செய்திருக்கக்கூடும். ஆனால், ‘பிங்க்’ நிகழ்த்துவது சென்ஸிபிள் உரையாடல். எனவே அதைச் சிதைத்துவிடக் கூடாது என்பதுதான் எனது நோக்கமாகவும் இருந்தது. அத்தோடு அதை நிறைய பேருக்கு புரியவைக்கவும் முயற்சி செய்தேன். 

பெரும்பாலும் அதிக ஆங்கிலக் களப்பு இல்லாமல், நிறைய லேயர்கள் இல்லாமல் உரையாடல் அமைத்தேன். சில விஷயங்களில் நிறைய உள்ளார்ந்த அர்த்தங்கள் பொதிந்திருக்கும், அதை நேரடியாகச் சொல்ல முயற்சித்தேன். 

’அஜித்’ அதிகமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிற படங்கள், கதாநாயக சாகசத் தன்மை கொண்டதாக இருக்கும். அதிலிருந்து மாறுபட்டதாக ‘பிங்க்’ திரைப்படம் உள்ளது. முன்னணி நடிகர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான முயற்சியில் ஈடுபடுவதைக் குறித்து? அத்தோடு, இந்தப் படம் எடுக்கிறபொழுது, அஜித்தின் ரசிகர்கள், அவர்கள் படத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பை நாம் பூர்த்திசெய்ய வேண்டும் போன்ற அழுத்தத்தை உணர்ந்தீர்களா?

இந்தப் படத்திலும் சிறு கதாநாயகத் தன்மை இருக்கிறது. அதைத் தவிர்த்து, எல்லா நடிகர்களுக்குமே நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். மக்கள்தான் அதற்கான வாய்ப்பை அமைத்துத்தர வேண்டும். மக்கள் வாய்ப்புத் தராத வரையில் நல்ல படங்கள் வராது. என்னமாதிரியான படங்கள் வரவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். ஆனால், அவர்களை யோசிக்கவிடாமல் வாழ்க்கை நகர்ந்துகொண்டேயிருக்கிறது. 

Image result for ajith fight nerkonda paarvai

இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். தொலைபேசி அதிகம் உபயோகிக்க மாட்டேன், சமூக வலைத்தளங்களிலும் நான் பங்கெடுத்துக்கொள்வதில்லை. எனவே, இதுபோன்ற அழுத்தங்களையெல்லாம் நான் கவனித்தில் கொண்டுவரவே இல்லை. என் ஒரே நோக்கம், ’எனக்கு அடுத்த படம் கிடைக்க வேண்டும்” என்பதுதான். அந்த ஐடியாவிலிருந்துதான் நான் எழுதுகிறேன். ஒரிஜினலாக, இந்தப் படத்தை அப்படியே எடுக்கலாம் என்றுதான் ஆரம்பித்தோம், அஜித் சார் ஏற்று நடிக்கிற கதாபாத்திரத்தின் வயதிக்கேற்ப, மிக இயல்பாகவே, ஒரு ஆக்‌ஷன் காட்சி வருவதற்கான வெளி, கதையில் இருந்தது. முதலில் அஜித் சார், சண்டைக் காட்சி வேண்டாம் என்றுதான் சொன்னார். பின்னர் மும்பைக்குச் சென்று, தயாரிப்பாளர் போனி கபூரைச் சந்தித்து, பிறகு சிவா சார் சொல்லிதான், ‘அஜித் சார்’ சண்டைக் காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டார். அதனால், நாங்கள்தான், அவரைச் சண்டைக் காட்சியில் நடிக்க சம்மதிக்க வைத்தோம். அஜித் சாருக்கு இருந்த எண்ணமெல்லாம், “இந்தப் படம் வெற்றிபெறுகிறது, வெற்றிபெறவில்லை என்பது அடுத்த நிலை, ஆனால், நான் நடித்து ஒரு நல்ல படத்தைக் கெடுத்துவிட்டேன், என்ற பெயர் வந்துவிடக்கூடாது” என்று நினைத்தார். 

Related image

திரையரங்கில், படம் பார்த்த மக்களிடமிருந்து, பெரும்பாலும் ’ரங்கராஜ் பாண்டே’ கதாபாத்திரம் பேசுகிற வசனங்களுக்குத்தான் கைதட்டல்கள் கிடைத்தன. கவனித்தீர்களா?

நான் திரையரங்கில் படம் பார்க்க மாட்டேன். எப்பொழுதுமே இதுபோல நடக்கும் என்று தெரியும். நாம் என்ன நினைத்து எடுக்கிறோம் என்பது படமல்ல, அதை மக்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதும், அவர்களிடம் அது எப்படிப் போய்ச்சேருகிறது என்பதும்தான் படம். நாம் ஒன்று நினைத்து எடுத்திருப்போம், அதை மக்கள் தவறான பார்வையில் புரிந்துகொண்டிருப்பார்கள். இது எப்பொழுதுமே நடக்கும். கமர்ஷியல் படத்திற்கும் இதுபோல நடக்கும். 

’அமிதாப் பச்சன்’ பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறவர். அவர் பிகு, பிங்க், போன்ற படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார். அதுபோன்ற முயற்சிகள் ஏன் தமிழ் சினிமாக்களில் அதிகம் நிகழ்வதில்லை?

எதை எடுத்துப் பேசினாலும், அதற்கு மார்க்கெட் வேண்டும். மார்க்கெட் இல்லாமல் எதுவும் நடக்காது. மும்பையில் அதற்கான மார்க்கெட் இருக்கிறது. அங்கு ‘பிங்க்’ என்ற படம் எடுத்தால்கூட, இந்தியா முழுக்க உள்ள 100 நகரங்களில், இரண்டு மால்களில் பத்து காபி வீதம் ரிலீஸ் பண்ண முடியும். இங்கு சென்னையில், பிங்க் படத்தையே, சத்யம், ஐனாக்ஸ், ஏ.ஜி.எஸ், போன்ற இடங்களில் நான்கு பிரிண்ட்கள் ரிலீஸ் செய்ய முடியும். அப்படி அவர்களால் இந்தியா முழுக்க ஆயிரம் பிரிண்ட்கள் வெளியிடலாம். இதற்கு ஒரு அடிப்படையான மார்க்கெட் உள்ளது. அதே ’பிங்க்’ படத்தை தமிழில் எடுத்தால், உங்களால் எவ்வளவு தொகைக்கு விற்க முடியும்? என்ற நிலையும் இருக்கிறது. நீங்கள் ரிஸ்க் எடுக்க முடியாதல்லவா? எனவே, இங்கு மாற்றங்கள் மெது மெதுவாகத்தான் நடக்கும். சொல்லப்போனால், மாற்றங்கள் மெதுவாக நடந்தால்தான் அது ஆர்கானிக். மாற்றங்கள் உடனே நடந்தால், அது அதிக நாட்களுக்கு நீடிக்காது. அதுதான் இயற்கை. அதற்கான நகர்வுகள் மக்களிடத்தில், தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து சினிமா வழியாக சமூகம் மாறுவதைக் காட்டிலும், சமூகம் வழியாகத்தான் சினிமா மாறும். அதாவது சமூகத்தின் வேரிலிருந்து, அதாவது கல்வியிலிருந்து இதை ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமூகம் மாறி, அது அப்படியே சினிமாவில் பிரதிபலிக்க வேண்டும். 

சினிமா, சமூகத்தை மாற்றிவிடும் என்பதைக் காட்டிலும், சினிமா சமூகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும். அவ்வளவுதான். 

’பிங்க்’லிருந்து ‘நேர்கொண்ட பார்வை’ எடுத்திருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே சில மாற்றங்கள் செய்திருக்கிறீர்கள். உதாரணத்திற்கு வித்யாபாலன் வருகிற காட்சிகள் மூலப்படத்தில் இல்லை. ஆக, ஒரு படத்தை ரீ-மேக் செய்கிறபொழுது அந்தக் கதையின் மையம் சிதையாமல், அதில் மாற்றம் செய்வதற்குண்டான உங்களது எல்லைகள் என்னென்ன?

உண்மையாகச் சொல்லப்போனால், இதில் எல்லைகளே இல்லை. ’சதுரங்க வேட்டை’ படத்தை என் நண்பன் ராமநாதபுரத்தில் வாங்கி, ஒரு பிரிண்ட் போடுகிறான். பக்கத்தில் அதேநேரத்தில் இன்னொரு படம் ரிலீஸ் ஆகிறது. என் நண்பன் போன் செய்தான், “நானூறு பேர் அமர்கிற தியேட்டர், எப்படியும் இருநூறாவது ஃபுல் ஆகிவிடும்” என்றான். நானும் சரி என்றேன். ஆனால், முதல் காட்சிக்கு எட்டு பேர் வந்திருந்தனர். ஆனால், பெரிய நடிகர் நடித்த படம் முதல் காட்சி நிரம்பிவிட்டது. எனவே, அங்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இங்கு வருவார்கள், என்று நினைத்திருந்தான். ஆனால் வரவில்லை. இயல்பாக, ஒரு இடத்தில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அவருக்குப் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், இன்னொரு திரையரங்கிற்கு வரவேண்டும் அல்லவா? ஆனால், அப்படி நடக்கவில்லை. இரண்டாம் காட்சிக்கு 15 பேர், மாலைக் காட்சிக்கு 25பேர் தான் ’சதுரங்க வேட்டை’ படம் பார்த்தனர். ஞாயிறு மட்டும்தான் 150 பேர் பார்த்திருந்தனர். மக்களுக்கு அது சினிமா என்றே தோன்றவில்லை. 

இதே ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வேறு ஏதேனும் ஒரு நடிகர் நடித்திருந்தால் 4கோடி ரூபாய் வரைக்கும் விற்பனையாகும். இதே படம் 40கோடிக்கு மேல் ஷேர் பண்ணுகிறது என்றால், அதில் அஜித் என்ற நடிகர் நடித்திருக்கிறார் என்ற காரணத்தினால்தான். இதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள், இல்லை என்பது வேறு விஷயம். ரங்கராஜ் பாண்டே பேசுகிற வசனத்திற்கு கைதட்டுகிறவர்களுக்குக் கூட அவர்கள் மனதிற்குள் அந்த வசனம் சென்று நுழைந்துவிடும். அதற்குண்டான வேலை, அவர்கள் மனதில் துவங்கிவிடும். அவர்கள் சிந்திக்கத் துவங்குவார்கள். இதுபோன்ற படங்களின் வேலை, விதையை ஊன்றுவதுதான். அது முளைத்ததா? இல்லையா? என்பது அடுத்த விஷயம். சினிமா, சிந்தனையைத் துவக்கிவைக்க வேண்டும். 

மக்களுக்கும் படத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி, பாடல், சண்டைக்காட்சி எல்லாம் தேவைப்படுகிறது. கதையைக் கெடுக்காமல், இதையெல்லாம் படத்திற்குள் கொண்டுவரமுடியுமா? என்று யோசித்து, செயல்படுத்தினோம்.
 
குறைவான நேரத்திற்குள் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குண்டான உணர்வுகளைத் தர்க்க ரீதியாக நியாயப்படுத்துவது, போன்ற சிக்கல்கள் அதில் இருக்கின்றன, அது ஒருவகையான செயல்பாடு. சில பேருக்கு அது பிடித்திருக்கிறது, சிலருக்கு அது பிடிக்கவில்லை. 

இதுபோல சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிற பொழுதோ, பாடல் காட்சிகளை வைக்கிறபொழுதோ, கதை மையத்தின் தீவிரம் மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா?

நீர்த்துப்போவது நடக்கும், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், மீண்டும் அதே கேள்விதான். மக்கள் எதற்காகத் திரையரங்கிற்கு வருகிறார்கள்? மக்கள் இந்த சண்டைக் காட்சிகளையும், பாடல்களையும் எதிர்பார்த்துதான் திரையரங்கிற்கு வருகிறார்கள். நாம் அதனூடாகத்தான் சொல்லவேண்டிய கருத்தைச் சொல்லவேண்டுமேயொழிய, நேரடியாகக் கதையில் கருத்து சொல்கிறபொழுது, முற்றுமுழுதாக அதைப் புறக்கணித்துவிடுவார்கள். ’நேர்கொண்ட பார்வை’ படத்தைப் பார்க்கக்கூடாது, என்பதுபோன்ற பிரச்சாரங்களும் நடந்தன அல்லவா? அதையும் தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்க்கிறோம், விமர்சனங்களிலும் சொல்லவந்த கருத்தைப் புரிந்துகொள்ளாமல் விமர்சிக்கின்றனர். சாதாரணமாக பார்வையாளர்களுக்கு இந்தக் கருத்து புரியவில்லை என்பது வேறு விஷயம், ஆனால், விமர்சகர்களுக்கே, இப்படம் சொல்கிற கருத்து புரியவில்லையென்றால், அவர்களும் இதைப் பார்க்க வேண்டாம், என்று சொல்கிறார்களானால், இங்கு யாரிடத்தில் பிரச்சினை என்று யோசித்துப்பாருங்கள். 

Image result for ajith fight nerkonda paarvai

சண்டைக் காட்சிகள் வைக்கும்பொழுதுதான் ஓரளவிற்கு அந்தப் படம் காப்பாற்றப்படுகிறது. எனவே, சினிமாவாகப் பார்க்கிறபொழுது சண்டைக்காட்சிகள் கதையை மட்டுப்படுத்துகின்றன. ஆனால், அதை வியாபாரம் என்ற ரீதியிலிருந்து பார்க்கிறபொழுது, ஒரு நன்மதிப்பாகத்தான் பார்க்கிறேன். 

பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால், அவர்களது குரலில் தனக்கான பிரச்சினைகளைப் பேசி, அதற்குரிய தீர்வுக்குப் போராடுவது என்பது ஒரு நிலை. ஆனால், இங்கு, பெண்களின் பிரச்சினையைப் பேசுவதற்கும், ஒரு ஆண்தான் தேவைப்படுகிறாரா?

பணமெல்லாம் ஒரு விஷயமே இல்லை, என்று ஒரு பணக்காரன் சொன்னால்தான் நாம் காதுகொடுத்து கேட்போம். அதுவே ஒரு ஏழை, ’வாழ்க்கையில் பணமெல்லாம் முக்கியமில்லை’ என்று சொன்னால், அவரைக் கெட்டவார்த்தையால் திட்டுவோம். அப்படித்தான், ஆண்கள் சரியில்லை என்பதை, பெண் சொல்வதைக் காட்டிலும், அதை ஒரு ஆணே சொன்னால் இன்னும் நிறையபேர் கேட்பார்கள். இன்னும் அதிகம் கவனிக்கப்படும் என்று நினைக்கிறேன். 

இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்த பொழுது, என்னைக் காட்டிலும், இன்னொரு பெண் இயக்குனர் இந்தப் படத்தை இயக்கினால் இன்னும் நன்றாகயிருக்கும் என்று, ஒரு பெண் இயக்குனரின் பெயரை பரிந்துரை செய்தேன். அதற்கு அஜித் சார், ”அந்தப் பெண் இயக்குனர் இந்தப் படம் எடுத்தால், இந்தக் கதை பேசுகிற கருத்தை எளிதாகப் புறந்தள்ளிவிடுவார்கள். ஒரு பெண் தனக்குச் சாதகமாகத்தான் பேசுவார் என்று நினைப்பார்கள். இது ஆண்களுக்கான படம். ஆண்கள்தான் பெண்களைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, ஒரு ஆண் இந்தப் படத்தை எடுப்பதுதான் சரியாகயிருக்கும்.” என்று சொன்னார். இதன்பின்னர்தான் படத்தை இயக்குவதில் முழுமனதோடு செயல்பட்டேன். 

-தொடரும்…