திரைமொழி - 3 முதல் பாகம் – Visualization – The Process அத்தியாயம் 2 – Production Design

ஷாட் பை ஷாட் தொடரின் சென்ற அத்தியாயத்தில், Vishualization பற்றிப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தை இனி தொடங்குவோம்.

திரையுலகில் கலை இயக்குநர் என்று ஒரு பெயரை திரைப்பட டைட்டில்களில் கண்டிருப்பீர்கள். முதலிலெல்லாம் ‘கலை’ என்று மட்டும் வரும்.இப்போது ‘production design’ என்றே டைட்டில்களில் இந்தப் பெயர் காட்டப்படுகிறது.’ஆர்ட் டைரக்டர்’ என்ற சொல்லின்மூலம் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பொறுப்பு பற்றித்தான் இந்த அத்தியாயம்.

ஒரு இயக்குநர் அவரது திரைப்படத்தைப் பற்றி முதலிலேயே அவரது மனதில் விஷுவலைஸ் செய்கிறாரோ இல்லையோ, ஒரு திரைப்படத்தின் காட்சிகளின் விஷுவல் பின்னணியை உருவாக்கி, அவற்றை வெற்றிகரமாக ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை கட்டிக்காப்பது, ப்ரொடக்ஷன் டிஸைனர் மற்றும் அவரது குழுவின் பொறுப்பாகும். திரைப்படத்தின் கதை சரித்திர காலத்தில் நிகழ்ந்தாலும் சரி, தற்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ நடந்தாலும் சரி – ஒவ்வொரு காட்சியின் பின்னணியையும் கச்சிதமாக வடிவமைக்கவேண்டிய பொறுப்பு ப்ரொடக்ஷன் டிஸைனருடையதே. ஹாலிவுட்டின் திரைப்பட வரலாற்றின் ஆரம்பத்திலேயே, கதையின் தேவையை வைத்தோ அல்லது திரைப்பட தயாரிப்பின் வணிக சிக்கல்களுக்கு ஏற்பவோ, இந்த ப்ரொடக்ஷன் டிஸைன் உருவாகிவிட்டது. அதிலும், திரைப்படங்களில் ஆக்கபூர்வமான பங்களிப்போடு, தயாரிப்பில் முக்கிய நபராகவும் ஒரு கலை இயக்குநர் உருவானது, ஹாலிவுட் திரைப்படங்களின் வசனங்களில்லாத மௌனப்படங்களின் காலத்திலேயே நடந்துவிட்டது. அக்காலத்தில் திரைப்படங்கள் என்பன மேடை நாடகங்களின் நீட்சியாக மட்டுமே இருந்தன.ஆகவே கலை இயக்குநர் என்பவர் வெறுமனே காட்சிகளின் பின்னணியில் இயற்கைக் காட்சிகளை வரைபவராக இருந்தார்.அப்போதைய திரைப்பட செட்களுமே, இதைப்போன்ற பல பின்னணிகள் மற்றும் ஒரு சில தட்டுமுட்டு சாமான்கள் ஆகிய பொருட்களை மட்டுமே கொண்டிருப்பதாக இருந்தது.ஹாலிவுட்டில் 1910களில் மிகப்பிரபலமாக விளங்கிய இயக்குநர் D.W க்ரிஃப்ஃபித் (Griffith), நாடக பாணியில் இயங்கிக்கொண்டிருந்த திரைப்படங்களில் செட்களை உருவாக்கும் முயற்சிக்கு அடிகோலினாலும், அக்காலத்தில் வெளிவந்த இடாலியன் திரைப்படங்களின் செய்நேர்த்தி கண்டு, ஹாலிவுட் படங்களையும் அவற்றின் தரத்துக்குப் படமாக்கியே ஆகவேண்டிய தேவையை க்ரிஃப்ஃபித் போன்ற இயக்குநர்கள் உணர்ந்துகொண்டனர்.

’Quo Vadis?(1912)’ மற்றும் ’Cabiria (1913)’ ஆகிய இரண்டு இடாலியன் படங்கள், தொழில்நுட்ப ரீதியிலும் சரி, காலத்தை விஞ்சி நிற்கும் பாணியிலும் சரி-அக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த படங்கள். இரண்டு படங்களிலும் முழுமையான முறையில் மிகத்துல்லியமாக உருவாக்கப்பட்ட செட்கள், செயற்கை லைட்டிங் முறைகள் மற்றும் ஓரளவு நகரும் கேமராவை வைத்துப் படமாக்கப்பட்ட காட்சிகள் ஆகியவை இருந்தன. அக்காலத்தில் இவைதான் இந்த தொழில்நுட்ப விஷயங்களை முழுமையாக உபயோகித்த படங்கள்.அவைகளின் பிரம்மாண்ட வெற்றியால் அப்போது ஹாலிவுட்டில் சிறந்து விளங்கிய க்ரிஃப்ஃபித்தின் படங்களே ஓரங்கட்டப்பட்டுவிட்டன.ஆனால், இந்த இரண்டு படங்களின் தாக்கம்தான் க்ரிஃப்ஃபித்தின் அடுத்த படங்களான ’Judith of Bethulia (1913)’, ‘Birth of a Nation (1915)’ மற்றும் ’Intolerance (1916)’ ஆகியவை எனலாம்.

இப்படித் துவங்கிய ப்ரொடக்ஷன் டிஸைன் வரலாறு, விரைவில் ஒரு உண்மையைப் புரிந்துகொண்டது.மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் செட்களுக்கும் காமெராவுக்குமான தொடர்பே அது. எத்தனை பெரிய செட்டாக இருந்தாலும் சரி, கேமராவின் ஃப்ரேமுக்குள் இடம்பெறும் பகுதிகள் மட்டுமே திரைப்படத்தில் இடம்பெறும் என்பதால், விரைவிலேயே கேமராவில் தெரியும் பகுதிகளை மட்டும் துல்லியமாக உருவாக்குதல் நிகழ்ந்தது. போலவே, காட்சிகளில் இடம்பெற்ற வரையப்பட்ட பின்னணிகளுக்குப் பதில், மேட் ஷாட்கள் (Matte shot என்பது, இரண்டு வெவ்வேறு விஷயங்களை ஒன்றாக ஒரே ஷாட்டில் காண்பிப்பது. அதாவது, முன்னணியில் இருக்கும் நடிகர் மற்றும் வேறு இடத்தில் எடுக்கப்பட்ட பின்னணிஆகியவற்றை ஒன்றாகக் காண்பிப்பது), மற்றும் மாடல்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்துதல் நடந்தது. அதேபோல் கலை இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்குமான உறவும் ஒற்றுமையும் மேம்பட்டது. காட்சிகளை எடுக்குமுன்னர் ஒளிப்பதிவாளருடன் விவாதித்தே ஆகவேண்டிய தேவையை இந்த ப்ரொடக்ஷன் டிஸைனர்கள் புரிந்துகொண்டனர்.இப்படித்தான் நாடகபாணி பின்னணிகளிலிருந்து, திரைப்படத்துக்குத் தேவையான தத்ரூபமான பின்னணிகளை வடிவமைத்தல் நிகழ்ந்தது.
இதைத்தொடர்ந்து, திரைப்படங்களை வேகமாகவும் தரமாகவும் எடுத்தால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை, ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்குப் புரிய ஆரம்பித்தது.இதன்விளைவாக ப்ரொடக்ஷன் டிஸைன் என்பது வேகமாக வளர்ந்தது.ஒரே சமயத்தில் பல படங்களில் இந்த ப்ரொடக்ஷன் டிஸைனர்கள் பணிபுரிய ஆரம்பித்தனர். இதன்பின்னர் திரைப்படத்தின் ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டுக்கும் – திரைக்கதை, செட்கள் உருவாக்குதல், ப்ராப்பர்டிக்கள், காஸ்ட்யூம், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் - தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டதும் நிகழ்ந்தது.

1915க்களில், ஒரு திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட செட்கள், ப்ராப்பர்டிக்கள் மற்றும் காஸ்ட்யூம்கள் ஆகியவை சர்வசாதாராணமாக பிற படங்களிலும் உபயோகிக்கப்பட்டன.இதனால் ஒவ்வொரு திரைப்படத்தின் பல டிபார்ட்மெண்ட்களும் பிற திரைப்படத்தின் டிபார்ட்மெண்ட்களோடு அடிக்கடி தொடர்பு கொண்டு பணிபுரியவேண்டிவந்தது. ஒரு திரைப்படத்தில் அதிக ஆட்கள் தேவைப்படுவது செட்கள் உருவாக்கத்தில்தான் என்பதால் ப்ரொடக்ஷன் டிஸைனர் என்பவர் இயல்பாகவே திரைப்படத்தின் உருவாக்கத்தை மேற்பார்வை இடுபவராக மாறிப்போனார். ப்ரொடக்ஷன் டிஸைனர்களிடம் இருந்த ஒரு விஷயம் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்களிடம் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.என்ன அது?அதுதான் வரைபடம்.ப்ளூப்ரிண்ட்.தான் நிர்மாணிக்கப்போகும் செட்களின் வரைபடம் மற்றும் விபரங்கள் (ஸ்கெட்ச்கள், மாடல்கள் இத்யாதி) ப்ரொடக்ஷன் டிஸைனர்களிடம் இருந்தன.இந்த வரைபடங்களை, பிற டிபார்ட்மெண்ட்களில் இருப்பவர்களும் எளிதில் புரிந்துகொண்டனர்.இதே சமயத்தில் ஒளிப்படங்களில் செய்நேர்த்தியை க்ரிஃப்ஃபித் போன்ற இயக்குநர்கள் கொண்டுவந்தனர். இதனால் பல ஸ்டுடியோக்கள், பத்திரிக்கைகளில் ஓவியர்களாக இருந்தவர்களை பணிக்கு அமர்த்தின. இவர்களால் பெருமளவில் எடுக்கப்பட்டுவந்த புதிய திரைப்படங்களின் தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்று இந்த ஸ்டுடியோக்கள் நம்பின. ஆர்ட் டிபார்ட்மெண்ட் என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட இந்த கலைப்பிரிவினால் ஒரு திரைப்படத்தை திட்டமிட்டு உருவாக்கமுடியும் என்ற விஷயம்தான் ஹாலிவுட் திரைப்படங்கள் அக்காலத்தில் வெற்றியடையத் துவங்கியதற்கான பெரும் காரணம். மௌனப்படங்களின் காலங்களில் இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், ஆயிரமாயிரம் ஷாட்களுடன் உருவாக்கப்பட்டன.

திரைப்படங்களின் கலைப்பிரிவில் அடுத்த பெரும் வளர்ச்சி, இருபதுகளில் நிகழ்ந்தது.இந்தக் காலகட்டத்தில் ஜெர்மன் திரைப்படங்கள் உலகையே திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.முதல் உலகப்போரின்போது, பல சிறிய ஜெர்மன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு UFA என்ற அமைப்பின்கீழ் சேர்ந்தன.UFA என்பது Universum Film Aktien Gesellschaft என்பதன் சுருக்கம்.முதலாம் உலகப்போரைப் பற்றிய பிரச்சாரப்படங்கள் எடுக்கும் ஒரு அமைப்பாகவே முதலில் இது உருவாக்கப்பட்டது.அரசின் நிதியுதவி பெருமளவில் கிடைத்ததால் மளமளவென்று வளர்ந்து, பல திரைப்படங்கள் எடுக்கும் அமைப்பாக மையம் கொண்டது இந்த UFA.அச்சமயத்தில் ஜெர்மனியில் வளர்ந்துவந்த எக்ஸ்ப்ரஷனிஸம் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசிய படங்கள் (Kammerspielfilm) ஆகிய இரண்டுவிதமான இயக்கங்களின் மூலம், உளவியல்ரீதியான படங்கள் எடுக்கப்பட்டன. இந்தப் படங்களின் உளவியல் தன்மை காரணமாக, செட்களின் பிரம்மாண்டமும் சரி, திரைப்படங்களின் இயற்கையான கதைக்களங்களும் சரி, கேமராவின் நுட்பங்கள் மற்றும் சிறப்பான பின்னணிகள் ஆகிய விஷயங்களோடு நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டன. UFAவின் சிறந்த இயக்குநர்கள், திரைக்கதையாசிரியர்கள் மற்றும் கலைஞர்கள் (Karl mayor, Karl Strauss, Fritz Lang, F.W. Murnau, G.W. Pabst and A.E. Dupont), இருபதுகளில் திரைப்படங்கள் வடிவமைக்கப்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருந்தார்கள். கூடவே, கேமராவை நகர்த்தி அருமையான ஷாட்கள் வைப்பதற்கும், கூர்மையான ஆங்கிள்களுக்கும் இவர்களே காரணம்.
ஜெர்மானிய இசைமேதை வாக்னரின் ஆப்ராக்களில் இருப்பதைப்போன்ற பிரம்மாண்டமான செட்களை திரைப்படங்களில் உபயோகப்படுத்தியது UFA.அதேபோல், திரைப்படத்துக்குத் தேவையான வெளிப்புறக் காட்சிகளும் கூட ஸ்டுடியோக்களின் உட்புறத்திலேயே படம்பிடிக்கப்படலாம் என்பதையும் UFA நிரூபித்தது.இந்த நுணுக்கமான செட்களின் மூலம், ஆர்ட் டைரக்டர்களுடைய திறமையும் வெளிக்கொணரப்பட்டுப் புகழடைந்தது.இந்த ஸ்டுடியோ செட்களோடு சேர்ந்துகொண்ட இன்னொரு விஷயம், இருபதுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட ‘ஒலி’ என்ற புதிய நுணுக்கம்.

முதலில் இணைத் தயாரிப்புகளிலும், பிறகு ஐரோப்பாவின் சிறந்த திரைப்பட நிபுணர்களை ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்ற அழைத்ததன்மூலமாகவும், உடனடியாக UFAவின் திறமையை ஹாலிவுட் உபயோகப்படுத்திக்கொண்டது. மௌனப்படங்களின் இறுதிக்காலத்தில் ஹாலிவுட்டில் கச்சிதமான ஸ்டுடியோ அமைப்பு வந்தாகிவிட்டது.ஆர்ட் டைரக்டர் என்பவர் இந்த அமைப்பில் இன்றியமையாத தலைமைப் பொறுப்பை ஏற்றார்.இதனால் ஒவ்வொரு ஸ்டுடியோவுக்கும் ஒரு குறிப்பிட்ட பாணி அமையப்பெற்றது.ஒவ்வொரு ஸ்டுடியோவிலும் இருந்த ஆர்ட் டைரக்டரின் பாணியே அந்த ஸ்டுடியோவின் முத்திரையாக அறியப்பட்டது.ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸில் வில்லியம் டார்லிங், ரிச்சர்ட் டே மற்றும் லைல் வீலர் (William Darling, Richard Day & Lyle Wheeler); வார்னர் ப்ரதர்ஸில்எதார்த்தமான, அழுத்தமான செட்கள் மூலம் பிரபலமடைந்த ஆண்டன் க்ராட் (Anton Grot), MGM நிறுவனத்தின் செல்வச்செழிப்புமிக்க செட்களைப் போட்ட செட்ரிக் கிப்பன்ஸ் (Cedric Gibbons), பாரமௌண்ட் ஸ்டுடியோவின் ஐரோப்பிய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் செட்களைப் போட்ட ஹான்ஸ் ட்ரெயர் (Hans Dreier), யுனிவர்ஸலில் இருள்மையானமென்சோகத்தை நினைவுபடுத்தும் செட்களைப் போட்ட ஹெர்மன் ராஸ் மற்றும் சார்லஸ் டி. ஹால் (Herman Rosse & Charles D. Hall), RKO ஸ்டுடியோவில் சிடிஸன் கேன் திரைப்படம் மற்றும் Astaire-Rogers என்ற புகழ்பெற்ற திரைப்பட இணையின் நடன அசைவுகளை திரைப்பட ரசிகர்களுக்குக் கொண்டுசேர்க்கும் வகையிலான செட்களை அமைத்த வான் நெஸ்ட் போல்க்ளாஸ் (Van Nest Polglase) என்று இப்படி பல ஸ்டுடியோக்களிலும் முத்திரை பதித்த ஆர்ட் டைரக்டர்கள் இருந்தனர்.

ஆர்ட் டைரக்டர் என்ற பதம் 1939 வரை புழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம். அந்த வருடத்தில்தான் Gone with the Wind திரைப்படத்துக்கான ஆஸ்கரை, புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ப்ரொடக்ஷன் டிஸைன் என்ற பதவிக்காக வில்லியம் கேமரான் மென்ஸீஸ் (William Cameron Menzies) பெற்றுக்கொண்டார். இதற்கு பத்து வருடங்கள் முன்னர் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகளிலும் இவர்தான் ஆர்ட் டைரக்ஷனுக்காக விருது வாங்கியவர்.

ப்ரொடக்ஷன் டிஸைனரின் வேலை படத்துக்குப் படம் மாறுபட்டாலும், ஆர்ட் டைரக்டர் என்ற பொறுப்பை விடவும் பலமடங்கு அதிகப் பொறுப்பை ஒரு ப்ரொடக்ஷன் டிஸைனர் வகிப்பதில் சந்தேகமே இல்லை. திரைப்படத்தின் செட்கள், காஸ்ட்யூம்கள் மற்றும் ப்ராப்பர்டிக்கள் ஆகியவைகளை டிஸைன் செய்வது மட்டுமல்லாமல், ஷாட்களின் தொடர்ச்சி மற்றும் இதைப்போன்ற மாறிக்கொண்டே இருக்கும் பல அம்சங்களில் இவரது பங்களிப்பு பெருமளவில் இருப்பதை அவசியம் புரிந்துகொள்ளமுடியும். இதற்கு உதாரணமாக வில்லியம் கேமரான் மென்ஸீஸைப் பற்றியே சொல்லலாம்.Gone with the Wind படத்தில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் மிக விவரமான ஸ்கெட்ச்களை ஆயிரக்கணக்கில் வரைந்திருக்கிறார் மென்ஸீஸ். இந்த ஸ்கெட்ச்களில் ஒவ்வொரு ஷாட்டின் உள்ளடக்கம், எடிட்டிங் செய்யவேண்டிய இடங்கள் ஆகியவை இருந்திருக்கின்றன.இந்த வகையில் ‘கண்டின்யூட்டி’ என்று சொல்லப்படும் ஷாட்களின் தொடர்ச்சிக்கு இந்த ஸ்கெட்ச்கள் மிக உதவியாக இருந்திருக்கின்றன.இப்படி, ஆர்ட் டைரக்டர் என்ற நிலையிலிருந்து, ஒரு திரைப்படத்தின் காட்சிகளை நிர்ணயிக்கக்கூடிய உள் வட்டமான இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், திரைக்கதையாசிரியர் ஆகியவர்களோடு ப்ரொடக்ஷன் டிஸைனரும் இணைந்துகொண்டது இந்தக் காலகட்டத்திலிருந்துதான் என்று அறிகிறோம்.

Production Illustration
பண்டைய காலத்தில் பின்பற்றப்பட்ட வடிவமான, ஒரு ஸ்டுடியோவுக்கு ஒரு ஆர்ட் பிரிவு இருந்துகொண்டு அதன் பல படங்களில் வேலை செய்தல் என்பது தற்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது. அதற்குப்பதில் இப்போது ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ப்ரொடக்ஷன் டிஸைனர் இருக்கிறார்.அவருக்குக்கீழே அவருடன் முந்தைய படங்களில் வேலை செய்த, அவரை நன்கறிந்த டீம் வேலை செய்கிறது.ஒவ்வொரு டீமிலும், முக்கியமான பொறுப்புகளாக, art director, prop stylist, draftsman, production illustrator and costume designer ஆகியவை விளங்குகின்றன.

ஆர்ட் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு நபரும், கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளில் இடம்பெறக்கூடிய வரைபடங்களைத் தயாரிக்கிறார்.

Concept and final design illustrations: திரைப்படத்தில் இடம்பெறக்கூடிய செட்கள், ப்ராப்பர்ட்டிக்கள், காஸ்ட்யூம்கள், ஒப்பனைகள் மற்றும் ஸ்பெஷல் எஃபக்ட்கள் ஆகியவைகளைப் பற்றிய வரைபடங்கள் இந்தப் பிரிவில் அடங்கும். இவை ஷாட்களின் தொடர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.மாறாக, திரைப்படத்தின் பல்வேறு இடங்களில் வரக்கூடிய தனித்தனியான வரைபடங்கள் இவை.திரைப்படத்தின் காட்சிகளின் ஸ்டைல் எப்படி வரவேண்டும் என்று உணர்த்துபவை இவை.

Plans, Elevations and Projections: மேலே சொன்ன வரைபடங்களை செட்களாக உருவாக்குவதைப் பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் அடங்கிய வரைபடங்கள் இவை.

Continuity sketches and Storyboards: வரிசையாக, ஒரே ரீதியில் அமைந்த படங்கள் இவை. திரைக்கதையை பல ஷாட்களாகப் பிரித்து, ஒவ்வொரு ஷாட்டிலும் இடம்பெறக்கூடிய விஷயங்கள் இந்தப் பிரிவில் வரையப்படுகின்றன.

Concept and Final Design Illustrations
பொதுவாக, ப்ரொடக்ஷன் டிஸைனில் இடம்பெறும் வரைபடங்கள் மிகத்துல்லியமாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை.திரைப்பட தயாரிப்பின் துவக்கத்தில் வரையப்படும் ஸ்கெட்ச்கள், பொதுவாகவே மிக எளிய முறையிலேயே இருக்கும்.காரணம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பொதுவான கருத்தை விளக்கும் வகையிலேயே இவை இருக்கும்.திரைப்படம் எடுக்கப்படும்போதுதான் இந்த பொதுவான வடைபடங்கள், மிகவும் நுணுக்கமான படங்களாக வரையப்படும்.அதேபோல், இந்த ஸ்கெட்ச்களின் நோக்கம், ஒரு செட்டின் உணர்வு மற்றும் மனப்பாங்கைப் பிரதிபலிப்பதே.கூடவே லொகேஷன், ஒப்பனை, காஸ்ட்யூம்கள் ஆகியவையும் எப்படி இருக்கவேண்டும் என்பதும் இந்த ஸ்கெட்ச்களில் விளக்கப்படுகின்றன.எனவே, அந்த ஸ்கெட்ச்கள் மிகமிகத் துல்லியமாக, கதாபாத்திரங்களை நகலெடுத்ததுபோல் இருப்பது அவசியமில்லை.மேற்சொன்ன விஷயங்கள் தெளிவாக இருந்தாலே போதும்.எனவே, வழக்கமான பாணியிலேயே, இயல்பான பெயிண்ட்களைக் கொண்டே (gouache, tempera, எண்ணைகள், வாட்டர்கலர், வண்ண இங்க்கள், அக்ரிலிக்) இவை வரையப்படுகின்றன.

‘Star Wars’ படத்தை எடுத்துக்கொண்டால், ப்ரொடக்ஷன் இல்லஸ்ட்ரேட்டர் என்ற, மேலே சொன்ன மூன்று பிரிவுகளில் முதல் பிரிவைச் சேர்ந்த ரால்ஃப் மெக்காரி (Ralph McQuarrie), திரைக்கதையின் எட்டு பிரதான ஸீன்களை முதலில் விபரமான ஓவியங்களாக வரைந்தார். இவையே அந்தப் படத்தின் அத்தனை காட்சிகளின் அடிப்படைத் தொனிக்கும் முன்மாதிரிகளாக இருந்தன. இந்த எட்டு ஸீன்களுக்கான மெக்காரியின் ஸ்கெட்ச்களை வைத்தே பிற காட்சிகளுக்கான ஆயிரக்கணக்கான ஸ்கெட்ச்கள் வரையப்பட்டன.அப்படி வரையப்பட்ட அத்தனை ஸ்கெட்ச்களுமே மெக்காரியின் ஓவியங்களில் இருக்கும் தொனியையே பின்பற்றின.

வரும் இதழில், இந்த ஸ்கெட்ச்களுக்கான பல உதாரணங்களைப் பார்ப்போம்.கூடவே, பிற இரண்டு பிரிவுகளான Plans, Elevations and Projections மற்றும் Continuity sketches and Storyboards ஆகியவற்றை விபரமாக நோக்கலாம்.

Trailers:

தொடரலாம்.