போட்டோகிராஃபி – எரிக் கிம்

தெரு புகைப்படக் கலைஞர்களுக்கான (Street Photography) மன சிகிச்சை

Image result for street photography

நீங்கள் கலையை உருவாக்குகிறீர்கள்:

தெரு புகைப்படம் எடுத்தல் (Street Photography) என்பது கலையை உருவாக்கக்கூடிய இடத்தில் இருக்கிற மிகவும் திறந்த மற்றும் ஜனநாயக வடிவங்களில் ஒன்றாகும். நீங்கள் எந்தத் தெருக்களையும் சுற்றி நடக்கலாம், நீங்கள் பார்க்கும் எதையும் புகைப்படம் எடுக்கலாம். நம் மனதின் படைப்புசார்ந்த கலைத்திறன்களையும் செயல்பாடுகளையும் நாம் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் நம் மனம் அமைதியற்றதாகிறது, மனச்சோர்வு தரக்கூடிய எண்ணங்களைக் குறித்துச் சிந்திக்கத் துவங்குகிறது. 

எனவே, நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ, அதிகமான கலையை நாம் உருவாக்க வேண்டும். தெருப் புகைப்படம் எடுத்தல் மூலம் இதனை நாம் எளிதாக அடைய முடியும். 
நீங்கள் மக்களுடன் தொடர்புகொள்கிறீர்கள்

மனிதர்கள் சமூக உயிரினங்கள், நாம் சமூக உயிரினங்களாக வாழ்வதற்கு கடுமையாக உழைக்கிறோம். நாம் (போதுமான அளவு) சமூகமாக இல்லாவிட்டால், மனச்சோர்வு தரக்கூடிய எண்ணங்கள் குறித்துச் சிந்திக்கத் துவங்குகிறோம். 

முந்தைய காலங்களில், உங்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விஷயங்களில் ஒன்று (மரணத்தைவிட மோசமானது), உங்கள் சொந்த நாடுகளிலிருந்து நாடுகடத்தப்படுவது அல்லது உங்கள் சமூகக் குழுவிலிருந்து வெளியேற்றப்படுவது. 

நாம் எதைச் செய்தாலும், அது நம்மைச் சமூகத்தோடு இருக்க அனுமதித்தால், அது நம் மன ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் மனிதர்களுடன் இணைந்து பழகத்தான் ஆசைப்படுகிறோம். மேம்போக்காக ஒருவர் மீது கோபம் கொண்டாலும், நம் ஆழ்மனதின் ஆசை என்பது, மக்களோடு இணைந்து பழக வேண்டும், அந்தச் சமூகக் குழுவில் தானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.  

தெரு புகைப்படம் எடுத்தல் என்பது மக்களுடன் உங்களைத் தொடர்புகொள்ள அனுமதிக்கிறது. புகைப்படங்கள் எடுக்க ஒரு இடத்திற்குள் செல்கிறீர்கள், ஒரு மனிதர் உங்கள் கண்களுக்கு வசீகரமாகத் தெரிகிறார், எனவே அவரைப் புகைப்படம் எடுப்பதற்காக, அவரிடம் சென்று பேசுகிறீர்கள், அவர்களோடு உரையாடுகிறீர்கள். பின்பு, அவரை உங்கள் போட்டோகிராஃபிக்குத் தகுந்தபடி நிற்கவைத்து, புகைப்படங்கள் எடுக்கிறீர்கள். ஆனால், புகைப்படம் எடுப்பதற்குமுன்பு, எப்போதும் ஒருவரிடம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. நமக்கு அந்தத் தருணங்கள்தான் வேண்டும். எனவே, முதலில் அந்தத் தருணத்தைத் தவறவிடாமல் புகைப்படம் எடுத்துவிட்டு, பின்பு அவரிடம் சொல்லலாம்.

புதியவர்களின் அனுமதியின்றி, கேண்டிட் புகைப்படங்களை எடுத்தாலும், அது நல்லதுதான் என்று நினைக்கிறேன் – ஏனென்றால், அந்தப் புதிய மனிதர்களுடன் நாம் இன்னும் அதிகமாக இணைந்திருப்பதாக உணர்கிறோம். 

Related image

ஆனால், நேரடியாகவோ, மறைமுகமாகவோ நீங்கள் மனிதர்களுடன் தொடர்பிலேயே இருக்கிறீர்கள். 

தெரு புகைப்படம் எடுத்தல், உங்களை, அந்நியர்களுடனும் மற்றவர்களுடனும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உரையாடல் வழியாகவும் இணைக்க உதவுகிறது. மற்ற மனிதர்களுடன் நாம் எவ்வளவு அதிகமாக இணைத்துக்கொள்கிறோமோ, அந்தளவிற்கு நம் துக்கங்கள் குறைகின்றன. 

உங்களைக் கவலைகளிலிருந்து கலை ஆற்றுப்படுத்துகிறது. 

நடைபயிற்சி மற்றும் மன ஆரோக்கியம்

நடைபயிற்சி மனிதர்களுக்கு சாப்பிடுவது அல்லது தூங்குவது போன்று அத்தியாவசியமானது என்கிறார் தத்துவவியலாளர் நாசிம் தலேப் (Nassim Taleb). 
இந்தக் கோட்பாட்டை ஆய்வுசெய்வதற்கு முன், உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், மனிதர்களுக்கு எதற்காக மூளை இருக்கிறது? மூளை இல்லாத உயிரினங்களுக்கு எதிராக மூளையுள்ள உயிரினங்களை வேறுபடுத்துவது எது?

Shot on a walk around Central Park. NYC
Figure 1 Shot on a walk around Central Park. NYC

 மூளையில்லாத உயிரினங்கள் நகரவேண்டிய தேவையில்லை, மூளையுள்ள உயிரினங்கள் உணவைப் பெறுவதற்காக நகர வேண்டும். 
ஆகவே, இயக்கத்தை/ நகர்வுகளை ஒருங்கிணைப்பதற்கும், குறிப்பாக நீண்ட நேரம் நீண்ட தொலைவு நடந்துசெல்வதற்கும் மனிதர்கள் மூளைகளைக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் (நமக்கு இரு கால்கள் இருப்பதற்கான நன்மை என்னவென்றால், நம்மை நான்கு கால் விலங்கு நண்பர்களுடன் ஒப்பிடுகையில், நாம் மெதுவாக நடக்கும்போது, குறைந்த சோர்வுடன் நீண்ட தூரம் பயணிக்க முடியும்). 

“sea squirt” எனும் சுவாரஸ்யமான உயிரினம் ஒன்று உள்ளது – இது தான் இனி நகரவேண்டிய அவசியம் இல்லாதபொழுது, இது தன் சொந்த மூளையைத் தின்றுவிடுகிறது. 
எனவே, ஒரு மனிதன் நகரவில்லை என்றால் – நமக்கு எதற்காக மூளை தேவைப்படுகிறது?

இதனால், நாம் எவ்வளவு அதிகமாக நடக்கிறோமோ, அந்தளவிற்கு நம் மனம் மற்றும் மூளை துரிதமாகச் செயல்படுகிறது. ஏனென்றால், அப்போதுதான் இயக்கத்திற்குத்/நகர்விற்குத் தேவையான மன செயலாக்கச் சக்தியை நம்மால் ஒருங்கிணைக்க முடிகிறது. 

சில நேரங்களில் தனியாக நடப்பது சலிப்பை ஏற்படுத்தும். அந்நேரத்தில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டே நடப்பது, அந்நடைப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது, ஏனென்றால் நாம் நடக்கவும் செய்கிறோம், புகைப்படங்களும் எடுக்கிறோம், இதன் மூலம் ஒரு கலைப் படைப்பையும் உருவாக்குகிறோம். 

இதனால், தெரு புகைப்படங்கள் எடுப்பது நம்மை நடக்க ஊக்குவிக்கிறது, மேலும் நாம் எவ்வளவு அதிகமாக நடக்கிறோமோ, அந்தளவிற்கு நம் மன ஆரோக்கியமும் நன்றாகயிருக்கும். 

இவ்வுலகத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் நாம் காணக்கூடிய அழகைப் பாராட்டுதல்

நம்மில் பலரும் பரிதாபகரமானவர்கள் மற்றும் பற்பல மன வேதனைகளை அனுபவித்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நாம் ‘மகிழ்ச்சி’யாக இல்லை. 
ஆனால், மகிழ்ச்சியைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அது எல்லாமே நாம் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது பொறுத்ததுதான். மற்றவர்களைப் பாராட்டுவதிலிருந்துதான் பெரிய அளவிலான மகிழ்ச்சி நம்மை வந்தடைகிறது என்று நினைக்கிறேன். இந்த வாழ்க்கையில் இருப்பதற்காக அவர்களைப் பாராட்டுதல், அன்புக்குரியவர்களைத் தங்கள் வாழ்வில் வைத்திருப்பதற்காகப் பாராட்டுதல் மற்றும் இந்த அழகான வாழ்க்கையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான பாராட்டுகள். 

இதெல்லாமே புகைப்படங்கள் எடுக்கும்பொழுது நமக்குக் கிடைக்கின்றன. அனைவருக்குமே, தான் எப்படி இருக்கிறோம், இந்தப் புகைப்படத்தில் தான் என்னவிதமாகத் தோன்றுகிறோம், என்பதைக் காண ஆர்வத்தோடு இருப்பார்கள். எனவே, தெரு புகைப்படங்கள் எடுத்தல், நம் அன்றாட வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சிகரமான உணர்வுகளைக் காண உதவுகிறது. என் கேமராவை நான் கழுத்தில் மாட்டிக்கொண்டவுடன், அல்லது கைகளில் ஏந்தியவுடன், நடக்கும்பொழுது எனக்கு அந்த உணர்வு தெரியும், நான் மேலும் புன்னகைக்கிறேன். தாத்தா தனது பேத்தியுடன் சாலையில் நடப்பது அல்லது விளையாட்டு மைதானத்தில் ஊஞ்சலில் ஆடுகிற குழந்தைகள், அல்லது காதல் ஜோடிகள், உணவகத்தில் ஒரு நல்ல பொழுதைக் கழிப்பது என பல விஷயங்களை நான் கவனிக்கிறேன்.


நாம் அன்றாட வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைப் பெற எளிதான மற்றும் இலவசமான வழி - நாம் சந்திக்கும் அழகான, இவ்வுலக வாழ்க்கைக்குரிய, அன்றாட தருணங்களின் புகைப்படங்களை உருவாக்குவது: அது தெருக்களில் பார்த்த நிகழ்வுகளாக இருக்கலாம், அல்லது நம் வீட்டிற்குள்ளேயே பார்த்த நிகழ்வுகளாகவும் இருக்கலாம். எந்த இடம் என்பது முக்கியமில்லை, அந்தத் தருணங்களே முக்கியமானவை. 

நான் வீட்டில் இருக்கும்போது, நான் ‘தனிப்பட்ட புகைப்படம் (personal photography)’ எடுப்பது பற்றி பயிற்சி செய்கிறேன் – என் நேசத்திற்குரியவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட அர்த்தமுள்ள புகைப்படங்களை உருவாக்குகிறேன். அதேபோல, என்னை நானே செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் விரும்புகிறேன். 


நான் தெருக்களில் நடக்கும்பொழுது, எனக்கான நினைவூட்டல் வாக்கியங்கள் இவைதான்:

“வாழ்க்கையின் இருத்தலும், இந்த மக்கள் அனைவராலும் சூழப்பட்டிருப்பதும் – சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் என்னவொரு மகிழ்ச்சியான விஷயம்! இந்த வாழ்க்கையின் கொண்டாட்டத்தை அனுபவிக்க, நம்முடன் நாம் மற்ற மனிதர்களையும் கொண்டிருக்க வேண்டும்.”

நாம் வாழ்க்கை செல்கிற வேகத்தை நிறுத்தி, அதன் தருணங்களை உற்றுப்பார்க்க வைக்கின்றன இந்தத் தெரு புகைப்படங்கள், மேலும் இவ்வுலகில் உள்ள அழகைப் பாராட்டவைக்கிறது. நாம் ஷட்டரைக் க்ளிக் செய்யும்பொழுதெல்லாம், நாம் ஒரு முத்தத்தைப் பறக்கவிடுகிறோம் அல்லது அழகான அல்லது முக்கியமான ஒன்றைப் பாராட்டுகிறோம். புகைப்படங்கள் எடுக்கிறபொழுது, நம்மால் சிறு சிறு விஷயங்களில் கூட, பெரிய மகிழ்ச்சிகளைக் காண முடியும். 

இதோ, உங்களுக்குச் சில பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதைச் சரியாகச் செய்ய முயற்சியுங்கள். 

தெரு புகைப்படம் எடுத்தலுக்கான மனநிலையை அதிகரிக்கும் பயிற்சிகள்:

உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கும், எதிர்மறை எண்ணங்களை உங்களிடமிருந்து நீக்குவதற்கும், வாழ்க்கையில் உங்கள் மகிழ்ச்சியையும், மனநிலையையும் அதிகரிப்பதற்கான ஒரு கருவியாக போட்டோகிராஃபியை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், இதோ உங்களுக்கான பணிகள்.

ஒரு அந்நியரைப் பாராட்டுங்கள், அவரது உருவப்படத்தை (portrait) க்ளிக் செய்ய, அவரிடம் அனுமதி கேளுங்கள்: இலவச பாராட்டுக்களை விரும்பாதவர்கள் யாராவது உண்டா? ஒருவேளை அந்நபர் ‘இல்லை/ வேண்டாம்’ என்று சொன்னால், அவரிடம் கோபமடையாதீர்கள், அவரது உணர்வுகளை மதியுங்கள், அவரைப் பார்த்து எளிமையாகப் புன்னகத்து, நன்றி சொல்லி, அங்கிருந்து நகருங்கள். தேடுதலைத் தொடருங்கள். 

உங்கள் கேமராவைப் பிடித்தபடி, அந்தத் தெருவைச் சுற்றிலும் பதினைந்து நிமிடங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளுங்கள்: நான் வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறபொழுது, மனச்சோர்வுதரும் எண்ணங்கள் உள்ளத்தில் கிளர்ந்தெழும்பொழுது, அல்லது அவமானமாக எதையோ உணரும்பொழுதோ, உடனே நான் கழுத்தில் கேமராவை மாட்டிக்கொண்டு, சிறு நடைப்பயணத்தை மேற்கொள்வேன், அந்தப் பயணத்தில் நான் வழக்கமாக ஒருசில புகைப்படங்களை எடுப்பதோடு முடித்துக்கொள்கிறேன், இச்செயல் என் முகத்தில் ஒரு புன்னகையைத் தோற்றுவிக்கிறது, மேலும் நடைபயிற்சி எனும் எளிமையான செயல் எனது மனநிலையை மேம்படுத்துகிறது. 

பொதுவாக, நீங்கள் தெருக்களில் காண்கிற அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கிற தொடர்பற்ற விஷயங்களையும்கூட புகைப்படம் எடுங்கள்: உதாரணத்திற்கு நடைபாதையில் உள்ள விரிசல், சுவரில் காரை பிய்ந்த தாரைகள், அல்லது துரு, இல்லையேல் ஏதேனும் கட்டிடங்கள் அல்லது பொருட்களில் மறைந்திருக்கும் ஸ்மைலி முகங்களைத் தேடுங்கள். உங்களை ஒரு குழந்தையைப் போல கற்பனைசெய்து கொள்ளுங்கள் – மற்றும் தெரு புகைப்படங்கள் எடுத்தலை ஒரு புதையல் வேட்டையைப் போல பின்தொடருங்கள். இது இந்த உலகத்தில், அதிக அழகான தருணங்களைக் கண்டுபிடிக்க உதவும். 

அப்படியெனில், என் வாழ்க்கையில் இருக்கிற பண கஷ்டம், மன கஷ்டம் என எல்லாவற்றையும், புகைப்படம் எடுத்தல் எனும் செயல் தீர்த்துவிடுமா? என்று கேட்காதீர்கள்.

நிச்சயமாக, தெரு புகைப்படங்கள் எடுத்தல், உங்களின் எல்லா வாழ்க்கைப் பிரச்சினைகளையும் சரிசெய்யாது – ஆனால், இது நிச்சயமாக, அப்பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய உங்கள் மனநிலையை அதிகரிக்கவும், மற்றவர்களுடன் இனிமையாக பழகவும், ஒரு மிகச்சிறிய நடை பயணத்தை அனுபவிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். 
வாழ்க்கை அழகானது, அதில் உயிருடன் இருப்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த வாழ்க்கையின் பரிசை, தெரு புகைப்படங்கள் எடுத்தலுடன் கொண்டாடுவோம். 

Portrait of Cartier-Bresson as a younger man.
Figure 2 Portrait of Cartier-Bresson as a younger man.

நிச்சயமாக, நீங்கள் கூகுளில் ‘ஸ்ட்ரீட் போட்டோகிராஃபி’ என்று தேடும்போதெல்லாம், அதில் எப்போதும் முதலில் வரக்கூடிய போட்டோகிராஃபர் ஹென்றி கார்டியர் ப்ரஸ்ஸான்.

(பின்னர் அவர் லெய்கா கேமரா மூலம்தான் புகைப்படங்கள் எடுத்தார், நான் உட்பட, பல போட்டோகிராஃபர்களையும் இந்தக் கேமரா தன் பக்கம் அழைத்துச்செல்கிறது, அவரைப் போலவே புகைப்படம் எடுப்பதற்கு, முதலில் இந்த லெய்கா கேமராவை வாங்கவேண்டும் என்று நினைத்ததுண்டு).

எப்படியிருந்தாலும், ஆரம்பத்தில் ‘தீர்க்கமான தருணம் (the decisive moment)’ என்ற இந்தக் கருத்தில் நான் அதிகம் ஈர்க்கப்பட்டேன் – ஒவ்வொரு புகைப்படக் காட்சியின் ’உச்ச தருணத்தை’ எப்படி ஹென்றி கார்டியர் ப்ரஸ்ஸானால் மட்டும் கைப்பற்ற முடிகிறது? என்று சிந்தித்திருக்கிறேன். அவர் தனது புகைப்படங்களில் காலத்தை மிக நேர்த்தியாக வடிவமைக்க முடிந்தது, மேலும் அவரது புகைப்படங்களை மிக நேர்த்தியாக கம்போஸ் செய்திருப்பார் (மற்றும் இதை எளிமையாகக் கொண்டுவந்திருப்பார் என்று நினைக்கிறேன்.)