ஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா

எனது பால்ய வயசுகளில் எனது பெற்றோருடன் நான் பார்த்த லைலா மஜ்னு, ஞான செளந்தரி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன், மிஸியம்மா போன்ற படங்களும் சட்டென்று ஞாபகத்திற்கு வராத இன்னும் சில தமிழ்ப்படங்களும்தான் சினிமாவுக்கும் எனக்குமான முதல் அனுபவம்.

பின்னர் எனது பதின் வயதுகளின் முற்பகுதியில் சினிமா என்ற இந்த அற்புதமான ஊடகத்தின் மீது எனக்கு வெறி, மோகம் ஏற்பட்டு படங்களைப் பார்க்க ஆரம்பித்தபோது என்னை ரொம்பவும் கவர்ந்தவர் இயக்குனர் பீம்சிங். ‘பா’ வரிசைப் படங்கள் என அப்போதும் இப்போதும் அறியப்படும் பாவமன்னிப்பு, பாலும் பழமும், பாசமலர், பார்த்தால் பசிதீரும் போன்ற அவரது படங்கள். அது ஒரு Team. பீம்சிங், சிவாஜி சார், கண்ணதாசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி காம்பினேஷன். இவர்களோடு சாவித்திரி அம்மா, ரங்காராவ், எம்.ஆர். ராதா, பாலையா போன்ற மகா திறமைசாலிகள் கதையின் தேவைக்கேற்ப அவர் படங்களில் சேர்ந்துகொள்வார்கள். 

குடும்ப உறவுகளை வலியுறுத்தும் உணர்ச்சிபூர்வ கதைகளைக் கொண்ட பீம்சிங்கின் ஒவ்வொரு படத்தையும் மூன்று நான்கு தடவைகளாவது பார்த்துவிடுவேன். பாசமலரை மட்டும் இருபது தடவைகள் பார்த்ததாக ஞாபகம். பீம்சிங் காலத்தில் ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன் – பஞ்சு போன்றவர்களின் படங்களும் சேர்ந்து என்னை பரவசப்படுத்தியதுண்டு. கலைஞரின் பராசக்தியை யாராவது மறக்க முடியுமா? நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற படத்தோடு ஸ்ரீதர் சார் அட்டகாசமாக ஆரம்பித்தார். நான் அவருடைய பரம ரசிகனானேன். ஸ்ரீதர் சார் கதைகளுக்கும் காட்சிகளுக்கும் அழுத்தமான இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் ஏ.வின்சென்ட். அவரது லைட்டிங்கும் கேமரா கோணங்களும் தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத புதுமை.

பீம்சிங், ஸ்ரீதர் ஆகியோரைத் தொடர்ந்து என்னை ஈர்த்த இயக்குனர் கே.பாலசந்தர் சார். நடுத்தர வர்க்க குடும்பங்களின், பெரும்பாலும் பிராமணக் குடும்பங்களின் கதையை வைத்து தனக்கென ஒரு பாணியில் அவர் செய்த நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், போன்ற படங்கள் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. எனக்கு மிகவும் பிடித்த கே.பி.சாரது படம் தண்ணீர் தண்ணீர். இந்தப் படத்தின் கதை கோமல் சுவாமிநாதனது.

தமிழ் சினிமாவில் எஸ்.பி.முத்துராமன் அவர்களை குறிப்பிட்டுத்தானாக வேண்டும். அதே சமயம் இவருக்கு நேர் எதிரான ஒரு தமிழ் சினிமாவை அறுபதுகளின் முற்பகுதியிலேயே செய்யத் துணிந்த எழுத்தாளர் த. ஜெயகாந்தன் இட்ட பிள்ளையார் சுழியின் தொடர்ச்சிதான் நானும் என் போன்றோரும்.

புனே திரைப்படக் கல்லூரியில் பயின்று வந்தவன் விளைவாக அழியாத கோலங்கள் முதல் அது ஒரு கனாக்காலம் வரை கேமராவால் எழுதப்பட்ட கதைகளாக இருந்தன என் படங்கள். துரையின் பசி தமிழில் மிக முக்கியமான படம். ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு எடுத்துச் சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும். மகேந்திரனது முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளராக நான் பணியாற்றினேன். அதன் பின் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் எனக்கு மிகவும் பித்த தமிழ்ப் படங்களில் ஒன்று. எனக்குப் பின் வந்தவர்களில் மணிரத்னத்தை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவரது முதல் படத்திற்கு நான் தான் ஒளிப்பதிவாளர். எனக்குப் பிடித்த 10 தமிழ்ப் படங்கள் பட்டியலில் மணியின் மெளனராகம், நாயகன், இருவர் ஆகியவை உண்டு. தமிழ் சினிமாவை தேசிய, சர்வதேசிய கவனிப்புக்கு உள்ளாக்கியவர் மணிரத்னம்.

Buy BALU MAHENDRA Pictures, Images, Photos By India Today ...

அடுத்து வந்தவர்களில் முக்கியமானவர் ஷங்கர். இவரது படங்கள் ”பிரம்மாண்டம்” என்ற அம்சத்தை தமிழ் சினிமாவுக்கு மீண்டும் கொண்டுவந்தன. “பிரம்மாண்டம்” என்று சொல்லப்படும் வித்தையை ஷங்கருக்கு முன்பே தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்தவர்கள் அடையாறு திரைப்படக் கல்லூரி மாணவர்களான ஆபாவாணன், அரவிந்தராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர்தான். பிரம்மாண்டம் இல்லாமல் வந்த ருத்ரைய்யாவின் ‘அவள் அப்படித்தான்’ மறக்க முடியாத படம். இன்றைய இளம் இயக்குனர்களில் எனது பாலா, பாலாஜி சக்திவேல், சேரன், தங்கர்பச்சான், செல்வராகவன் ஆகியோர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

இவர்கள் போக என் நண்பரும் இந்த மண்ணின் மிகச்சிறந்த சினிமா நடிகர்களுள் ஒருவருமான கமல்ஹாசன் அவர்களது ஊடகம் பற்றிய அறிவும் அவரது தொடர்ந்த தேடலும் என்னை பிரமிக்க வைப்பதுண்டு. அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவுக்கு என்னால் முடிந்த சிறிய பங்களிப்பை செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு மன நிறைவுண்டு. இறைவன் அருள் பாலித்தால் இன்னும் இரண்டொரு விஷயங்கள் செய்துவிட்டுப் போக ஆசை.

முடிவாக இன்னுமொரு விஷயம் – இனிவரும் ‘நல்ல சினிமா’ என்று சொல்லத் தகுந்த படங்களிலெல்லாம் பாலுமகேந்திரா என்ற இந்தப் படைப்பாளியின் தாக்கம் இருக்கும் என்று சொல்வதில் எனக்குக் கூச்சமில்லை. மாறாக கர்வமே உண்டு.
 
தமிழ்த் திரையின் வானவில்

ரவி கே. சந்திரன்

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவின் கடந்தகாலம் ஆச்சரியம் மிக்கது. இன்றைய ஒளிப்பதிவு நம்பிக்கை தருகிறது.

சினிமா ஒளிப்பதிவு அழகான சலனப் படங்களை செலுலாய்டில் பிடித்துத்தருவது மட்டுமல்ல. ஒரு நல்ல திரைக் கதையை மக்கள் விழித் திரையிலும் மனத்திரையிலும் மறக்க முடியாத காவியமாக பதியவைக்க உதவும் கருவி அது. நல்ல ஒளிப்பதிவு காலத்தை வென்று நிற்கவேண்டும்.

ravi k. chandran on Twitter: "Adithya Varma | Official Teaser HD ...

சந்திரலேகா முதல் காதல் வரை தமிழில் சிறந்த ஒளிப்பதிவாளர்களால் எடுக்கப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன. 1930களில் நாடகத்திலிருந்து தான் சினிமாவுக்கு நிறைய நடிகர்கள் வந்தார்கள். அவர்கள் கேமரா முன்னால் நின்று நாடகங்களை நடித்தார்கள். வசனங்களை உரக்கப்பேசி, மிகையான உடலசைவுகளைக் காட்டி, பாடல்களைப் பாடி நடித்தார்கள். இதனால் கேமரா உத்திகளும் சினிமா மொழியின் இலக்கணங்களும் பல வருடங்களுக்கு சரிவர உபயோகப்படுத்தப்படவில்லை. தவிர ஆரம்பத்தில் வந்த படங்களும், சரித்திரம், தந்திரக் காட்சிகள் என்று இருந்தன.

இந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவுக்கு வண்ணப்படத்தைக் கொண்டு வந்தார். நாடோடி மன்னன் பாதி படம் கலரில். அலிபாபாவும் 40 திருடர்களும் முழுநீள வண்ணப்படம். படம் கொஞ்சம் சிவப்பாகத்தெரியும். என்னைக் கேட்டால் 60களில்தான் ஒளிப்பதிவுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தது. இயக்குனர் ஸ்ரீதரும் அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வின்செண்ட் மாஸ்டரும் சேர்ந்து செய்த படங்கள் இன்னும் அசத்துகிற காவியங்கள். கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு இப்படி நிறைய. கதையை விறுவிறுப்பாகச் சொல்ல புதுப்புது கோணங்கள், சரியான லென்ஸ்கள், காட்சிகளின் கம்போசிஷன், ஒளி, ஃப்ரேம்கள், ட்ராலி மற்றும் க்ரேன் ஷாட்கள், மினியேச்சர் என்று சகல உத்திகளையும் சரிவரப் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் ஸ்ரீதர். நான் பாய்ஸ் படம் எடுக்கும்போது என் ரெஃபரன்ஸுக்காக காதலிக்க நேரமில்லையில் வரும் ’விஸ்வநாதன் வேலை வேணும்’ பாடல் காட்சிகளைப் பார்த்து அசந்துவிட்டேன்.

1977ல் பாரதி ராஜா - நிவாஸ் கூட்டணியில் கமலின் அபார நடிப்பில் வந்த பதினாறு வயதினிலே தமிழ் சினிமாவின் மைல்கள். இந்தப் படம் இந்திய அளவில் மிகமிக பேசப்பட்டிருக்க வேண்டிய படம். தென்னிந்தியாவில் எடுக்கப்பட்டதாலேயே இதற்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்பதில் எனக்கு இன்றும் வருத்தம் உண்டு. நிவாஸின் கேமராவின் தாக்கம் புதிய வார்ப்புகள், கல்லுக்குள் ஈரம் என்று தொடர்ந்து நிழல்கள் வரை இருந்தது. அதே காலகட்டத்தில் மகேந்திரன் இயக்கத்தில் அசோக்குமாரின் மென்மையான ஒளிப்பதிவில் வந்த மெட்டி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள் போன்ற படங்களும் அவர் பெயரை தமிழ் சினிமாவில் நிரந்தரமாகப் பதித்தன. இயற்கை ஒளி, மேக் அப் இல்லாத கலைஞர்கள், இயல்பான வசனங்கள் என்று புதுமைகள் படைக்கப்பட்ட காலம் அது. தமிழ் சினிமா ஒளிப்பதிவிற்கு அடுத்த மைல்கல் ஒளிப்பதிவாளர், இயக்குனர் பாலுமகேந்திரா. அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, முள்ளும் மலரும் போன்றவை ஒளிப்பதிவில் சாதனை படைத்தன. இதில் முள்ளும் மலரும் படம் OROW கலரில் எடுக்கப்பட்டது என்பதை நினைத்தால் சிலிர்க்கிறது.

80களின் பிற்பகுதியில் மணிரத்னம் மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரின் வரவு இந்திய திரைப்பட உலகை தமிழகத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. மெளன ராகம் படத்தின் பாடல் காட்சிகளும் இரவுக் காட்சிகளும் தமிழ்த் திரை ஒளிப்பதிவின் புதிய பரிமானங்கள். பி.சி.ஸ்ரீராமின் இலக்கணத்தை மீறிய ஒளிப்பதிவு புதுக்கவிதைகளைப் படைத்தது. தமிழ் சினிமா ஒளிப்பதிவை உலகத் தரத்திற்கு இட்டுச் சென்றது. நாயகன், அக்னி நட்சத்திரம், இதயத்தை திருடாதே, திருடா திருடா என ஒவ்வொரு படமும் என் போன்றவர்களுக்குப் பாடமாக அமைந்தது. அவருக்குப் பிறகு தமிழ் சினிமா உலகில் ஒளிப்பதிவாளருக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

அவரிடம் பயின்ற கே.வி. ஆனந்த், ஜீவா, திரு, பாலமுருகன், பாலசுப்ரமணியன், எம்.எஸ்.பிரபு என எல்லோரும் சிறப்பான ஒளிப்பதிவாளர்கள் ஆனார்கள். தளபதி மூலம் மேலும் ஒரு ஒளிப்பதிவு மேதையை தமிழுக்குக் கொண்டு வந்தார் மணிரத்னம். அவர் சந்தோஷ் சிவன். இவரது ரோஜா, இருவர் இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவுப் படங்களில் அடங்கும். பிறகு வந்த பிதாமகன், காக்க காக்க, நந்தா, ரன், காதல், தவமாய் தவமிருந்து வரை புதிய முயற்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் தமிழ் சினிமா முதல் இந்தி சினிமா வரை நடிகர், நடிகைகளை அழகாகக் காட்ட வேண்டும் என்பதில் தொடங்கி, அதிலேயே முடிந்துவிடுகிறது. எனவேதான் தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களால் உலகத்தரத்தில் ஒரு படம் எடுக்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. பெருவாரியான மக்களுக்குப் பிடிக்கும் படங்களில் அது சாத்தியப்படாது என்பதுதான் வருத்தம் தரும் யதார்த்தம். 
 
பிளாஸ்டரில் கலைவண்ணம்!

தோட்டா தரணி

சினிமாத்துறையின் முக்கியமான அங்கமான கலை இயக்கத் துறை பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இன்று ஆழமாக அகலமாக வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கிறது.

ஒருவகையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். கோடம்பாக்கம் அகில இந்திய சினிமாவின் தலைமையகமாக இருந்த காலத்தில் சினிமா ஸ்டுடியோக்களில் 4 வயதிலிருந்தே விளையாடித் திரியும் பாக்கியத்தை ஆண்டவன் எனக்குக் கொடுத்தான். என் அப்பா தோட்டா வெங்கடேஸ்வரராவ் ஒரு கலை இயக்குனர். அவருடன் சினிமா செட்களில்தான் வளர்ந்தேன் என்பதால் கறுப்பு வெள்ளை யுகத்திலிருந்தே பல படங்கள் உருவாவதை மிக நெருக்கமாகப் பார்த்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஓவியக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அப்பாவுக்காக இரவு நேரங்களில் வந்து செட் வேலைகளைச் செய்துகொடுப்பேன். 
Madras, through lines and strokes - The Hindu
அப்பா ஒரு மாஸ்டர் என்றால், அந்தக் காலத்தில் அப்பாவே மதிக்கும் பல மாஸ்டர் ஆர்ட் டைரக்டர்கள் இருந்தார்கள். கங்கா சார் (திருவிளையாடல்), கொட்டோங்கர் (நாகேஸ்வரராவின் தேவதாஸ்), சாந்தா ராம், கலாதர் & கோகலே (மாயா பஜார்), கிருஷ்ணா ராவ் (எங்க வீட்டுப் பிள்ளை) ஜி.வி. சுப்பா ராவ், நாகராஜன் சார் (விட்டலாச்சார்யாவின் பல படங்களுக்கு மினியேச்சர் செட்களைப் போட்டுக்கொடுத்தவர்), அங்கமுத்து (பல எம்.ஜி.ஆர் படங்கள்), சலம் சார் (சகலகலா வல்லவன்) என்று பலரது பணிகளை நேரில் பார்க்கவும், இவர்களில் கணிசமானவர்களுடன் பணியாற்றவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேசும் தமிழ் சினிமா ஆரம்பித்து 75 வருடங்கள் கழித்துப் பார்க்கையில் சினிமாவில் ஆர்ட் டைரக்‌ஷன் வெகுவாக முன்னேறியிருப்பதாகப் படுகிறது. 


அந்தக் காலத்தில் ஸ்டுடியோ யுகம் முறையாக வருவதற்கு முன் வெளியேதான் செட் போட்டு எடுத்திருக்கிறார்கல். செட் என்றவுடன் எல்லோருக்கும் சந்திரலேகா படம்தான் நினைவுக்கு வரும். அந்த பட செட்களின் புகைப்படங்களின் பார்த்தா நான் பயந்துபோனேன். அதனால் கலை இயக்குனராக பணியாற்ற வந்த பிறகும் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. அவ்வளவு பயம். அதில் கலை இயக்குனராகப் பணியாற்றிய ஏ.கே. சேகர் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட அந்த முரசு நடன செட் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியது. ஜெமினி ஸ்டுடியோவின் அதிபர் எஸ்.எஸ்.வாசன் அந்த செட் போடுவதில் அதீத ஆர்வம் காட்டியதாகச் சொல்வார்கள். முதலில் மினியேச்சர் செட் போட்டு அதை 16 எம்.எமில் ஷூட் செய்து வாசன் திருப்தியடைந்த பிறகே பிரம்மாண்ட செட்டுக்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த அளவுக்கு பர்பெக்‌ஷன். ஏ.கே. சேகர் சாருக்கு எவ்வளவு நேரம் கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள். ஆனால் இப்போது கலை இயக்குனர்களுக்கு அவ்வளவு நேரமெல்லாம் கிடைப்பதே இல்லை. “சீக்கிரமா முடிச்சுக்கொடுங்க” என்பதுதான் பெரும்பாலான கலை இயக்குனர்களுக்குத் தரப்படும் ஒரே உத்தரவு.

நான் ராஜபார்வைக்காக கமல் வசிக்கும் அறை ஒன்றை வடிவமைக்க ஒரு ஸ்டுடியோவுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு வினோதமான தொட்டி இருந்தது. “இது என்னய்யா?” என்று அங்கிருந்த நண்பரைக் கேட்டேன். “இங்கதாங்க பிலிம் கழுவுனாங்க. பக்கத்துலதான் எடிட்டிங் ரூம் இருந்தது” என்றார். இருக்கிற வசதியை வைத்துக்கொண்டே நம் ஆட்கள் எத்தனை பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வகையில் ஏ.பி.நாகராஜன் சாரின் படங்கள் எல்லாமே ஒரு எபிக் என்பேன். அவரது ராஜ ராஜ சோழன் படத்திற்கு போடப்பட்ட செட் மறக்க முடியாதது. அந்த நந்தி செட்டில் எத்தனை டீடெயில்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். அப்படத்தின் பல காட்சிகலை மைசூர் பிருந்தாவன் கார்டனில் எடுத்தாலும் அப்போதே அவுட்டோரில் மேட் ஷாட் பயன்படுத்தி பின்னணியில் தஞ்சை பெரியகோவில் தெரியும்படி செய்திருக்கிறார்கள். பிற்பாடு 1970களில் அவுட்டோர் ஷூட்டிங் அதிகமானது. அந்த காலகட்டத்தில் பதினாறு வயதினிலே கலை இயக்கத்திலும் ஒரு முக்கியமான படம். கிராமத்து வீடுகளை இயல்பாக உள்ளது உள்ளபடி காட்டிய படம் அது. பிற்பாடு எண்பதுகளில் சில காட்சிகளை செட் போட்டு எடுத்தால்தான் சரியாக வரும் என்று மீண்டும் ஆர்ட் டைரக்டர்களை நாடி வர ஆரம்பித்தார்கள். அந்த ட்ரெண்ட் இன்றும் தொடர்கிறது. 

கலை இயக்குனர்களுக்கு புதிய சவால்களைத் தரும் இயக்குனர்கள் இப்போது நிறைய இருக்கிறார்கள். மணிரத்னம், கமல்ஹாசன், பிரியதர்ஷன், ஷங்கர் என்று கலை இயக்குனர்களுக்கு நல்ல மரியாதை தரக்கூடிய இயக்குனர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரோடும் நான் பணியாற்றியிருக்கிறேன் என்பது சந்தோஷத்தைத் தருகிறது. தமிழின் புதிய இயக்குனர்களும் ஆர்ட் டைரக்டர்களுக்கு சவாலான அசைன்மென்ட்களைத் தருகிறார்கள்.

என் அனுபவத்தில் நாயகன், பம்பாய் படங்கள் சவாலானவை. தெருக்களைக் காட்டும்போது அதிலுள்ள வீடுகளை மக்கள் வாழும் வீடுகள் போல, வீட்டின் வயதையும் தோற்றத்தில் கொண்டுவர நாங்கள் நிறைய பாடுபட்டோம். அதற்கு பிஹாரி பாய் என்று ஒருத்தர் எனக்கு மிகவும் உதவினார். அவர் காலமாகிவிட்டாலும் அவரது மகன் நெளஷத் என்னுடன் இருக்கிறார். முதல்வன் ஷெட்டில் அந்த பானைகள் பொம்மைகள் காட்சி பலருக்கும் பிடித்திருக்கிறது. ஷங்கர் என்னிடம் இனிமேல் பானைகளை வைத்து யார் செய்தாலும் இதுபோல செய்ய முடியாத மாதிரி இருக்கவேண்டும் என்றார். அதே மாதிரி செய்துகொடுத்தேன் என்று நினைக்கிறேன்

இந்தத் துறையில் நுழைந்தபோது இருந்த கலை இயக்குனர்களுக்கு நான் 20 வருட ஜூனியராக இருந்தேன். இப்போது ஒரு சிலர் தவிர மற்ற கலை இயக்குனர்களுக்கு நான் 20 வருட சீனியர் ஆகிவிட்டேன்! சமீப வருடங்களில் பலரது கைவண்ணம் கவனிக்கத்தக்க வகையில் இருப்பதைப் பார்க்கிறேன். ஜி.கிருஷ்ணமூர்த்தி, மணிராஜ், கதிர், பிரபாகர், ஜி.கே., ஜே.கே., சாபு சிரில், ராஜீவன், மஹி, நாகு என்று பலர் சிறப்பாக செய்கிறார்கள்.

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வந்த பிறகு கலை இயக்குனர்களுக்கு வேலை போய்விடுமா என்று சிலர் கேட்டதுண்டு. ஒரு கலை இயக்குனருக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்பது மேலும் ஒரு கருவியாக இருக்கும் அவ்வளவுதான். பிளாஸ்டர், பேப்பர் மாஷ், கார்பென்ட்ரி என்று ஒரு நல்ல கலை இயக்குனருக்குத் தெரிந்திருக்கவேண்டிய அம்சங்களில் இதையும் வேண்டுமானால் இப்போது சேர்த்துக்கொள்ளலாம். என் ஜூனியர்களுக்கு நான் சொல்வது இதுதான்: ஒரு கதைக்குள் ஹீரோ குதிப்பதற்கு முன் நீங்கள் குதித்து அந்தக் கதையை வாழ்ந்து விடுங்கள். பிறகு எல்லாம் சரியாக வரும்.
 



நன்றி: இந்தியா டுடே
டிசம்பர் 28, 2005