உயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது

"Sequential Art" என்று உலகம் முழுவதும் அறியப்படும் சித்திர தொடர் மரபு (காமிக்ஸ்), ஒரு கலை வடிவமாக பெரிய அங்கீகாரம் பெற்றுள்ளது. அச்சு இயந்திரத்திலிருந்து வந்த காமிக் புத்தகங்கள், இன்று ஐ-பேட், ஆண்ட்ராய்ட் பேசி என அடுத்த கட்டமான மின்னனு மற்றும் சமூக ஊடகத்தில் இடம் பெற ஆரம்பித்து விட்டது. உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்களை தாண்டி அறியப் படாத இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலைஞர்கள் அல்லது அமெச்சுர் ஒவியர்கள் தாமே படம் வரைந்து அதற்கான கதையை எழுதி, படிமங்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்த இயலும் படைப்புகளை வெளியிடும் சாத்தியக்கூறுகளும் கிடைத்து விட்டது. சமூக ஊடகங்களில் தினமும் படைப்பை வெளியிட்டு தொடர்பு ஏற்படுத்தி வெற்றிப்பெற முடியும் என்ற நிலை இப்போது உண்டு.

காமிக் புத்தகங்களில் கதையை மட்டும் சொல்வதல்லாமல், உலக முழுவதும் நிகழும் பிரச்சனைகளைக் கூறுவதாகவும், மக்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுத்து செல்வதற்காகவும், சுகாதாரம், தினப்படி வாழ்க்கையில் மனிதனுக்கு அறிவுறுத்த வேண்டியவை போன்றவையும் சொல்ல முடிகிறது. குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்த நீதிக்கதைகள் அல்லாமல் பெரியவர்களுக்கான கிராஃபிக் நாவலும் வர துவங்கியது. மனித இனத்தின் பிரச்சினைகளை சொல்வது, நாடு விட்டு நாடு குடியேறும் அகதிகள், மனித இனத்தின் மகிழ்வையும் வேதனையும் சொல்லும் ஒரு தனித்த மொழியாக காமிக் புத்தகங்கள் விளங்குகிறது. இந்த 100 வருடங்களில் இப்படியான வளர்ச்சி திடீர் என ஏற்படவில்லை. கிராஃபிக் நாவல் வடிவத்தில் இதுவரை அசைவு இல்லாமல் இருந்தது, இப்போது அனிமேடட் கிராஃபிக் நாவல் வந்துவிட்டது. ஒரு சட்டகத்திற்கும் இன்னொன்றுக்கும் இருக்கும் தொடர்பு நிலையை, படிக்கும் மனிதனின் மனதில் காட்சியாக நிகழ்கிறது. டார்சான் ஒரு மரத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்கிறான் என்றால் இரண்டு படங்கள் இருக்கும், ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்கு செல்வது போல் ஒன்று, இன்னொரு மரத்தை அடைவது போல் அடுத்தது, இடையில் நடக்கும் நிகழ்வு காணும் மனிதனின் மனதில் நிகழ்கிறது. இதுவே இக்கலை வடிவத்தின் சக்தி.