மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள்

வணிக அடிப்படையில் வெற்றியடைந்த மலையாள திரைப்படங்களை வேட்கையுடன் மொழிமாற்றும் தமிழ்த்திரையுலகின் சமீபகால நடவடிக்கையைக் கலைப் பரிமாற்றம் என்று சொல்லலாம். மலையாள சினிமாவின் இனிமையான பழிவாங்கல் என்றும் சொல்லலாம். ஏனெனில் மலையாள சினிமாவின் தோற்றமும் வளர்ச்சியும் தமிழ் சினிமாவை அடியொற்றியும் ஆதாரமாகக் கொண்டும் நிகழ்ந்தவை.

ஏறத்தாழ நாற்பதாண்டுக் காலம் தமிழ் சினிமாவின் பாதிப்பு மலையாள சினிமா மீது கவிந்திருந்தது. கதையாடல், பின்னணி இசை, பாடல்கள், தொழில்நுட்பம் இவற்றிலெல்லாம் ஆரம்ப கால மலையாளப் படங்கள் தமிழ் சினிமாவின் அம்சங்களையே கொண்டிருந்தன. ’ஜீவித நெளகா’ (1951) படம் வந்து, வியாபாரத்துக்கு உதவும் வெகுசன ரசனைக்கூறுகளையும், ’நீலக்குயில்’ (1954), ‘நியூஸ்பேப்பர் பாய்’ (1955) ஆகிய படங்கள் வெளிவந்து மலையாள சினிமாவுக்குரிய அழகியலையும் உருவாக்கும் வரை தமிழ் சினிமாவின் துணைக்கோளாகவே மலையாளப் படவுலகம் இருந்தது.
உலக சினிமாவின் முதல் பொதுக் காட்சி 1895 இல் பாரீஸில் நடத்தப்பட்டது. லூமியர் சகோதரர்கள் அதை நடத்தினார்கள். வெற்றிகரமான திரையிடலாக இருந்தது அது. அந்த வியாபார வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள உலகப் பயணம் செய்து திரையிடல்களை நடத்தினர். லூமியர் சகோதரர்கள். பாரீஸில் முதல் திரைப்படக் காட்சி நடந்த மறு வருடமே பம்பாயிலும் லூமியர் காட்சி நடந்தது. லூமியே-ன் ஏஜெண்டுகள் காட்சி நடத்தித் திரும்பிப் போனார்கள். அவர்கள் விட்டுச்சென்ற கேளிக்கை வணிகத்தில் தூண்டப்பட்ட இந்தியர்கள் பலர் புரொஜக்டர்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து உள்நாட்டில் திரைக்காட்சியை நடத்த ஆரம்பித்தார்கள். திருச்சியைச் சேர்ந்த சாமிக்கண்ணு வின்செண்ட் அவர்களில் ஒருவர். ரயில்வே ஊழியரான வின்செண்ட் ஒரு பிரெஞ்சுக்காரரிடமிருந்து வாங்கிய ‘எடிசன் பயோஸ்கோப்’ என்ற படம் காட்டும் கருவியுடன் தென்னிந்தியா முழுவதும் அலைந்து திரையிடல்களை நிகழ்த்தினார். சினிமா ஊடகத்தை மலையாளிகளுக்கு இந்த தமிழர்தான் அறிமுகப்படுத்தினார்.

1906ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு வந்து சேர்ந்தார் வின்செண்ட். பூக்கள் மலர்வதும், பந்தயக் குதிரைகள் ஓடுவதும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சம்பவங்களும் திரையில் காட்சிகளாக விரிந்த கலையை மலையாளிகள் முதன்முறையாகப் பார்த்தார்கள்.

அந்த ஆண்டு இறுதியில் திருச்சூர் நகரத்தில் வின்செண்டின் பயாஸ்கோப் காட்சிகள் நடந்தன. உள்ளூர்வாசிகள் அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. வின்செண்டின் மனம் சோர்ந்து போனது. திருச்சூரைச் சேர்ந்த வாறுண்ணி ஜோசப் அந்தக் காட்சிகளின் அற்புதத்தில் கிறங்கிப் போனார். வின்செண்டிடமிருந்த படக்கருவிகளையும் பிலிம்களையும் விலைக்கு வாங்கிக்கொண்டார். 1907ல் திருச்சூர் பூரச்சந்தையில் கேரளத்தின் முதல் தற்காலிகத் திரையரங்கை ஜோசப் அமைத்தார். வின்செண்டின் தோல்வி ஜோசப்பின் வெற்றியாக மாறியது. முதல் மலையாளப் படம் எடுக்கப்படுவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே முதலாவது திரையரங்கு உருவானது. அங்கு திரையிடப்பட்ட வெளிநாட்டு பேசாப் படங்களைக் கண்டு ரசிக்க மலையாளிகள் திரண்டனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெனரேட்டர் அறிமுகமானதும் காட்டுக்காரன் வாறுண்ணி ஜோசப் அதைப் பிரத்யேகமாக அறிவிக்கும் வகையில் தனது கம்பெனிக்கு ‘ஜோஸ் எலக்ட்ரிகல் பயாஸ்கோப்’ என்று பெயரிட்டார். விரைவிலேயே கேரள நகரங்களில் திரையரங்குகள் பெருகின. அவற்றில் திரையிடப்பட்டவை ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட படங்களாயிருந்தன.
மங்களூர் கடற்கரையில் திரைப்படக் காட்சிகளுக்காக முகாமிட்டிருந்தார் ஜோசப். எதிர்பாராவிதமாக அவரது சினிமா உபகரணங்கள் அனைத்தும் கடலில் மூழ்கிப் போயின. சற்றும் மனந்தளராத ஜோசப் புதிய இரண்டு பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு இன்னொரு கம்பெனியை உருவாக்கினார். ‘ராயல் எக்ஸ்பிட்டர்ஸ்’ என்ற அந்தக் கம்பெனியைக் கேரளத்தின் முதலாவது திரைப்பட விநியோக நிறுவனம் என்று சொல்லலாம். மலையாளத்தில் படம் தயாரிப்பது கம்பெனியின் நோக்கமாகயிருந்தது. ஆனால் அதற்கான தொழில்நுட்பம் எளிதானதாக இருக்கவில்லை. முதலாவது மலையாளப் படம் உருவாவதற்கு முன்பே ஜோசப் காட்டுக்காரன் மறைந்தார்.
இதற்குள் உலக சினிமாவில் கணிசமான எண்ணிக்கையில் மெளனப் படங்கள் தயாராகி வெளிவந்தன. தாதாசாஎவை எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற சிலரும் மெளனப் படங்களை எடுத்திருந்தனர். தமிழின் முதல் மெளனப் படம் ‘கீசகவதம்’ (1917) நடராஜ முதலியாரின் தயாரிப்பாக வெளிவந்திருந்தது. கேரளம் இவற்றுக்கெல்லாம் காட்சிசாலையாக இருந்ததே தவிர உற்பத்திக் கேந்திரமாக இருக்கவில்லை. ‘ஜாஸ் சிங்கர்’ (1927) படத்துடன் உலக சினிமா பேசத்துவங்கியது. அப்போதுதான் மலையாளத்தின் முதல் மெளனப் படத்துக்கான முயற்சிகள் ஆரம்பித்தன.
இன்று தமிழகத்தின் பகுதியாகவுள்ள அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டிருந்த கன்யாகுமரி மாவட்டத்தினர் தாம் ஆரம்பகால மலையாளத் திரைப்படங்களுக்கு காரணமாகயிருந்தனர்.
அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த ஜே.சி.டானியல் தான் மலையாளத் திரைப்படத்தின் தந்தை. பல்மருத்துவரான டானியல் சினிமா ரசிகர். களரிப்பயற்றில் தேர்ந்தவர். அழகர். களரி வித்தையைப் பிரபலப்படுத்த சினிமாவைப் பயன்படுத்துவது என்பதுதான் அவரது பிரதான நோக்கம். இரண்டாயிரம் அடி நீளத்தில் ஒரு படமெடுக்க என்ன செல்வாகும் என்று சென்னையிலும் பம்பாயிலிலுமிருந்த ஸ்டுடியோக்களுக்கு விசாரித்து எழுதினார். ஒன்றுக்கொன்று முரணான பதில்கள் வந்தன. நேரில் போய் விசாரித்து அறிவது என்ற திட்டத்துடன் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலங்களை அடமானம் வைத்து காசு புரட்டினார். குடும்பத்தினர் எதிர்த்தார்கள். தடைசெய்ய நினைத்தார்கள். அதையெல்லாம் புறக்கணித்து சென்னைக்குப் புறப்பட்டார் டானியல். சினிமாவின் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதும் படப்பிடிப்புக்கான கருவிகளை வாங்குவதும் அவருடைய லட்சியமாகயிருந்தது. சென்னை ஸ்டுடியோக்களின் வாசலில் காத்துக் கிடந்து அனுமதி மறுக்கப்பட்டார். பின்னர் பம்பாய் சென்றார். தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டார். படப்பிடிப்புக்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் வாங்கிக்கொண்டு வெற்றி வீரராக கேரளம் திரும்பினார்.

திருவனந்தபுரத்தில் முதலாவது படப்பிடிப்பு நிலையத்தை அமைத்தார். ‘விகதகுமாரன்’ என்ற, மலையாளத்தின் முதல் மெளனப்படத்தின் படப்பிடிப்பு அங்கே ஆரம்பமானது. கூரையில்லாத அறையில் பகல் வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடக்கும். ஒளிப்பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பும், முறைப்படுத்துதலும் (Processing) இரவில் நிறைவேறும். திரைக்கதை, எழுத்தாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர், எல்லாம் டானியல்தான். பெற்றோரைப் பிரிந்த சிறுவனின் வாழ்க்கைச் சம்பவம்தான் விகதகுமாரனின் கதை. கதையோட்டத்துடன் படம் முழுக்க களரிப்பயற்றுக் காட்சிகளும் நிறைந்திருந்தன. அந்தக் காட்சிகளில் டானியலே பங்குபெற்றிருந்தார். அவர் மகன் சுந்தர் விகதகுமாரனாக நடித்திருந்தான். ரோஸி என்கிற கிறித்துவராக மாறிய புலையர் வகுப்பைச் சேர்ந்த பெண் கதாநாயகியாக நடித்தார்.

1928 நவம்பர் 7 ஆம் தேதி திருவனந்தபுரம் காப்பிடல் தியேட்டரில் ‘விகதகுமாரன்’ திரையிடப்பட்டது. முதல் திரையிடல் சுமாரான வெற்றியைப் பெற்றது. பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தாத படம் பண்பாட்டு அடிப்படையில் பார்வையாளர்களின் அதிருப்திக்கு உள்ளானது. ஒரு பெண் திரைப்படத்தில் தோன்றி நடிப்பதைப் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, காதல் காட்சிகளை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கூச்சலிட்டுக் குழப்பம் செய்தார்கள். படம் விழும் திரை மீது கற்களை வீசினார்கள். ஒரு கட்டத்தில் திரையே கிழிந்தது.

முதல் படத்தின் மூலம் ஓரளவுக்கு வருமானமும் அதைவிடப் புகழும் டானியலுக்குக் கிடைத்தது. எனினும் பொருளாதார நஷ்டத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. படத்தயாரிப்புக் கருவிகளை விற்றுக் கடன்களைச் சமாளித்தார். ஊரைவிட்டு வெளியேறினார். நீண்ட காலம் திருநெல்வேலியிலும் சென்னையிலும் வாழ்ந்தார். நோயாளியாக சொந்த ஊருக்குத் திரும்பினார். குடும்பச் சொத்தை விற்றுப் படமெடுத்த ஊதாரியை சொந்தக்காரர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். பக்கவாத நோயால் தளர்ந்து, பார்வையும் இழந்து, ஊராலும் உறவாலும் புறக்கணிக்கப்பட்டு எழுபத்தைந்தாம் வயதில் டானியல் மறைந்தார்.
மலையாளத் திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக கேரள அரசு வழங்கும் விருது மலையாள சினிமாவின் தந்தையான ஜே.சி.டானியலின் நினைவாகவே வழங்கப்படுகிறது. நிகழ்கால சினிமா உலகம் தனது முன்னோடியை நினைவுகூர்வது இந்த விருது மூலம்தான். ஆனால் டானியலை இன்னொரு காரணத்திற்காகவும் நினைவுகூற வேண்டும். சினிமாவின் ஆரம்ப காலத்தில் எல்லா இந்திய மொழிகளிலும் முதலாவது படங்கள் புராணக் கதைகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டன. (தாதா சாகேப் பால்கேவின் ‘ராஜா ஹரிச்சந்திரா’வும் நடராஜ முதலியாரின் ‘கீசகவதமும்’ உதாரணங்கள்.) அந்தப் பொதுப்போக்கிலிருந்து மாறுபட்டு சமூக எதார்த்தத்தைச் சார்ந்த கதை மையத்தைப் படமாக்கிய துணிவுக்காக டானியல் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறார்.

முதல் மலையாளப் படம் வெளிவந்து நான்காண்டுகளுக்குப் பிறகு 1932இல் இரண்டாவது மலையாளப் படம் தயாரிக்கப்பட்டது. ‘மார்த்தாண்ட வர்மா’. அதற்குள் இந்தியாவிலும் சினிமா பேசத் தொடங்கியிருந்தது. இந்தியில் ‘ஆலம் ஆரா’வும் தமிழில் ‘காளிதாஸீ’ம் (1931) திரையில் பேசியிருந்தன.

டானியலின் உறவினரான ஆர். சுந்தர்ராஜ் என்பவர்தான் மலையாளத்தில் இரண்டாவது படத்தயாரிப்பாளர். ஆரம்ப கால மலையாள நாவல்களில் ஒன்றான சி.வி.ராமன் பிள்ளையின் ‘மார்த்தாண்ட வர்மா’வைப் படமாக்கினார். மக்கள் வாசித்து ரசித்த ஒரு கதையைக் காட்சிப்படுத்துதல் என்ற சாகசத்துக்கு அவர் தயாராகயிருந்தார். அவரே அறியாமல் மலையாள சினிமாவின் பிரத்யேகமான போக்குக்குக் காரணகர்த்தராக இருந்தார் சுந்தர்ராஜ். இலக்கியத்தை சினிமாவின் அடிப்படையாக ஏற்கும் முறைக்கு அவர் தொடக்கமிட்டார். இன்றளவும் மலையாள சினிமா இலக்கியத்துடன் ஆழமான உறவு கொண்டிருக்கிறது. அதனால் கதையம்சத்தில் வலுவானதாக இருக்கிறது. இந்த உறவின் தொடக்கப்புள்ளி மார்த்தாண்ட வர்மா.

டானியலின் பணியிலிருந்து சுந்தர்ராஜ் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று – இயக்குநர் நாற்காலியில் அமரக்கூடாது என்பது. மார்த்தாண்ட வர்மா படத்தை வி.வி.ராவ் என்பவர் இயக்கினார். மலையாள நடிகர்கள் நடித்தனர். சுந்தர்ராஜீம் முக்கியப் பாத்திரமொன்றில் நடித்தார்.

திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மாவிடமிருந்து அரசுரிமையைப் பறிக்க அவரது எதிரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் நடத்தும் சதி, ராஜாவின் விசுவாசியான அனந்தபத்மநாபன் அதை முறியடிக்க மேற்கொள்ளும் சாகசங்கள், எதிரிகளின் பிடியில் அகப்படாதிருக்க மார்த்தாண்ட வர்மா பின்பற்றும் தந்திரங்கள் என்று திருப்பங்கள் நிறைந்த நாவல். அதை அப்படியே படமாக்கினார் சுந்தர்ராஜ். எழுத்து வடிவமல்ல திரைப்படம். ஒரு நிகழ்ச்சியை, காட்சிப்படுத்த திரைக்கதை என்ற இடைவடிவம் அவசியம் என்ற பட்டறிவை மலையாளத் திரையுலகத்துக்கு ‘மார்த்தாண்ட வர்மா’ கற்றுக்கொடுத்தது.

முதல் மலையாள சினிமா திரையிடப்பட்ட அதே அரங்கில் இரண்டாவது படமும் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்த காட்சிகளாகப் படம் சில தினங்கள் ஓடியது. மார்த்தாண்ட வர்மா நாவலின் பதிப்புரிமையை வைத்திருந்த திருவனந்தபுரம் கமலாலயம் புக் டிப்போ அனுமதியின்றி நாவலைப் படமாக்கியதாக வழக்குத் தொடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் படப்பெட்டி பறிமுதல் செய்யப்பட்டது. சுந்தர்ராஜ் எதிர்வழக்காடினார். ஆனால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையவில்லை. கடனாளியானார். படப்பிடிப்பு உபகரணங்களை விற்றுக்கடனை அடைத்தார். ‘மார்த்தாண்ட வர்மா’ படத்தில் தனக்கு ஜோடியாக ”சுலேகா” என்ற பாத்திரத்தில் நடித்த தேவகிபாயை திருமணம் செய்துகொண்டது மட்டும்தான் சுந்தராஜீக்கு வாய்த்த ஒரே ஆறுதல்.

டானியலுக்கு நேர்ந்த அதே கொடுமை சுந்தர் ராஜீக்கும் நேர்ந்தது. சொந்த பந்தங்கள் கைவிட்டன. கடன்காரர்கள் விரட்டினர். மனைவியுடன் இலங்கைக்குச் சென்றார். சிறிது காலம் கஷ்ட ஜீவனம் நடத்திய பின்னர் தாயகம் திரும்பினார். 1965இல் சுந்தர்ராஜ் மறைந்தார்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் பூனேவிலுள்ள திரைப்பட ஆவணக் காப்பகத்தின் இயக்குநராக அன்று பொறுப்பிலிருந்த பி.கே.நாயர் கமலாலயம் புக் டிப்போ கிடங்கிலிருந்து ‘மார்த்தாண்ட வர்மா’வை மீட்டார்.
பின்னர் வந்த ஐந்தாண்டுகள் மலையாளச் சூழலில் குறிப்பிடத்தகுந்த சினிமா முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கேரளத் திரையரங்குகளில் இந்தி, தமிழ் திரைப்படங்கள் ஓடின. தமிழ்படங்களுக்கு வெகுவான வரவேற்பு இருந்தது. இரு மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமை, கலாச்சார நெருக்கம் ஆகியவை காரணமாக மலையாளிகள் தமிழ் படங்களை ரசித்துப் பார்த்தனர். இந்த வரவேற்பைப் புரிந்துகொண்ட தமிழர் ஒருவர் தான் மலையாளத்தின் முதல் பேசும் படத்தைத் தயாரித்தார். 1938இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்த ‘பாலன்’ படத்தை ’நொட்டானி’ என்பவர் இயக்கினார். மெலோடிராமா நிறைந்த படம். மாற்றாந்தாய் கொடுமையால் அநாதைகளாக்கப்பட்ட பாலன் என்ற சிறுவனும் அவன் தங்கையும் கருணையாளரான ஒரு வக்கீலால் காப்பாற்றப்படுவதாகக் கதை. பாத்திரங்கள் பேசிய வசனங்களைத் தவிர மலையாள வாழ்க்கையுடன் வேறு எந்த வகையிலும் தொடர்பில்லாத படமாக இருந்தது ‘பாலன்’. ஆனால் வெற்றிப்படமாக மாறியது. எடுத்துக்காட்டக்கூடிய கலையம்சங்களோ தொழில் நுட்ப மேன்மையோ எதுவும் இல்லாமலிருந்த இந்தப் படம்தான் மலையாளத்தில் சினிமாத்தொழிலின் சாத்தியங்களை உருவாக்கியது. அடுத்து சுமார் பதினைந்தாண்டுக் காலம் வெளியான படங்கள் தொழிற்சாலை உற்பத்திச் சரக்குகளாகவே இருந்தன. கேரள வாழ்க்கையின் எதார்த்தத்தைச் சித்தரிக்கும் படங்களாக ‘நீலக்குயில்’ 1954லிலும் ‘நியூஸ் பேப்பர் பாய்’ 1955லிலும் வெளிவரும் வரை மலையாள சினிமா தமிழ்த் திரைப்படங்களின் சோகை பிடித்த உருவத்தையே கொண்டிருந்தது.

திரை டிசம்பர் 2005 இதழ்