பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II

என்னுடைய திரைப்படத்திற்கு எழுதப்பட்ட விமர்சனங்களைப் படிக்கிறபொழுது இதேதான் எனக்கும் தோன்றியது. ஒரு குழு எனக்கு ஆதரவாக எழுதுவார்கள், அல்லது என்னை எதிர்த்து எழுதுவார்கள். இதுதான் நடந்தது… ஆனால், பொதுப்படையாக திரைப்படங்களின் வடிவம் பற்றியும் உள்ளடக்கம் பற்றியும் எழுதப்படுகிற விமர்சனங்கள் அதிகம் வேண்டும். அதை வளர்த்தெடுக்க வேண்டும். பிரான்ஸ் மாதிரியான நாடுகளில் அவர்கள் எடுக்கிற சினிமாக்கள் அதிகம் உலக நாடுகளால் பேசப்படுகிற படங்களாகயிருக்க காரணமென்னவென்றால், அவர்களின் படங்களின் தரம் விமர்சன்ங்களிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அவ்வளவு திடமான அமைப்புகளையும், இயக்கங்களையும் அங்கு உண்டாக்கியிருக்கிறார்கள். நம் தமிழ்சினிமாவிலும் இது சாத்தியமே. படைப்பாளிகளுக்கும் விமர்சனம் செய்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி இங்கு அதிகமாகயிருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை இதற்கான காரணம் படைப்பு சார்ந்து, மட்டுமே விமர்சகர்கள் எழுதுகிற பொழுது இதற்கான தூரம் குறையக்கூடும். இவ்விருவருக்குமான உறவு கருத்தியல் ரீதியாக படைப்பு சார்ந்து மட்டுமே இருந்த்தானால் எதிர்வருகிற படைப்புகளும் சிறந்த்தாகவே அமைய வாய்ப்புள்ளது. தமிழ் ஸ்டுடியோ அருண் மெட்ராஸ் பட்த்திற்கு எழுதுகிற விமர்சன்ங்களையும் நான் படித்தேன். அதனடிப்படையில் தான் இதைச் சொல்கிறேன். கண்டிப்பாக விமர்சன்ங்கள் கவனிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்சூழலில் அது இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இதனை ஒரு இயக்கமாக முன்னெடுப்பதன் மூலமாகத்தான் அடுத்த கட்ட்த்திற்கு நகர்த்த முடியும் என்று நினைக்கிறேன். இதன் மூலமாக படைப்புகளை இன்னும் செழுமையாக்க முடியும். தர்க்க ரீதியான விமர்சன்ங்கள் என்றுமே வரவேற்கப்படும்.

தமிழ் சினிமாவில் இப்போது கதை திருட்டு என்பது கேள்விப்பட்ட ஒன்றாகிவிட்ட்து. மெட்ராஸ் பட்த்திற்கும் அதுபோன்றதொரு பிரச்சனை வருகிற நேரத்தில் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் தான் என் பக்கம் நின்றார். எனக்காகப் பேசினார். அட்டக்கத்திக்கும், மெட்ராஸ் பட்த்திற்கும் ஆம்ஸ்ட்ராங்க் எழுதிய விமர்சன்ங்களைப் படித்தேன். அதன்பின்பாகத்தான் எனக்கும் என் படங்களீன்மேல் அதீத நம்பிக்கை வந்த்து. அத்தோடு என் படங்களின் மீதான நியாயத்தை பிறரிடம் சொல்வதற்கும் நம்பிக்கையான ஆளாகவே ஆம்ஸ்ட்ராங்க் நின்றார். அவர் எழுதிய ஒளி எனும் மொழி புத்தகம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இயக்குனர் சார்லஸ்:

என் பேச்சை ஒரு கதையோடு துவங்கலாம் என்று நினைக்கிறேன். ஐ.டி. துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஆணும், பெண்ணும் காதலித்து மணமுடிக்கின்றனர். கல்யாணத்திற்கு முன்னாடியே அவர்கள் தங்கும் இடங்களையெல்லாம் வசதியோடு அமைத்துக்கொண்டனர். கல்யாணம் முடிந்தவுடன் அன்றிரவே அவ்விருவரும் அந்த புது வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டனர். மணப்பெண் தோழிகள், நண்பர்கள், உற்றார் உறவினர் என யாருமே அவ்வீட்டில் இல்லை. அன்றைய இரவு கழிகிறது. அடுத்த நாள் காலையில் மணமகன் விழித்துப்பார்க்கிறான். அந்தப் பெண் ஹாலில் அமர்ந்து செல்போனை ஆராய்ந்துகொண்டிருக்கிறாள். அந்தப் பையன் ஹாலுக்கு வந்தவுடனேயே, பெண் செல்போனை அங்கேயே வைத்துவிட்டு இன்னொரு அறைக்குள் சென்றுவிட்டாள். மேசையிலிருந்த செல்போனை அந்தப் பையன் எடுத்து சாவகாசமாக பார்க்கிறான். செல்போன் திரையில் யூ ட்யூப் வீடியோ இருக்கிறது. அது என்ன வீடியோவென்றால் “how to make tea?”. இவன் பார்த்துக்கொண்டிருக்கையில் சமயலறையிலிருந்த அந்தப் பெண் இவனை நோக்கி “குடிக்க டீ போட்ட்டுமா?” என்று கேட்கிறாள். இதுதான் கதை. ஆனால், புனையப்பட்ட்தல்ல, உண்மையாக நடந்த கதை.


இதை நான் கேள்விப்பட்டவுடன் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் இதற்கு முன்பு ஒரு காலம் இருந்த்து. கல்யாணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போன உடனேயே சமைக்கத் தெரியாட்டி கெட்ட பேராகிடும். ஒழுங்கா சமைக்க கத்துக்கோ, என்று தாயாரும் மற்றவர்களும் தயார் பண்ணுகிற ஒரு காலத்திலிருந்து, இன்றைக்கு திருமணமாகி ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டே, உதாரணத்திற்கு சமயலையே எடுத்துக்கொள்ளலாம் அதைக்கற்றுக்கொண்டே வாழ்க்கையையும் நட்த்துகிற சூழல் இருக்கிறது. இந்த விஷயங்களை நான் பொருத்திப்பார்ப்பது எதனோடுவென்றால், முன்பெல்லாம் படப்பிடிப்புத் தளங்களில் படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒளிப்பதிவாளர் கேமராவோடு நிற்பார்கள். அவர் எதைப் பார்க்கிறார், எதைப் படம் பிடிக்கிறார் எப்படி படம் பிடிக்கிறார் என்று யாருக்கும் தெரியாது, இது ஒரு மாயமாகவே இருக்கும். ஒரு மந்திரம் நடப்பது போன்ற உணர்வுதான் இருக்கும். ஏன், ஒளிப்பதிவாளருக்கே கூட அடுத்த நாள் காலையில் அந்தப்பட்த்தின் முன்னோட்ட்த்தினைப் பார்ப்பது வரையில் ஒரு பதட்டம் இருந்துகொண்டேயிருக்கும். இன்றைக்கு ஒரு காட்சி எடுத்தோம் , அது சரியாக வந்திருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாமல் தூக்கமில்லாமல் இருப்பார்கள். ஒரு மாயமான உலகமாகத்தான் சினிமா இருந்த்து.

இன்றைக்கு எடுத்துக்கொண்டால் எல்லோரும் முதலில் கேமராவை வாங்கிவிடுகிறார்கள். அதற்குப் பின்பாக ஒளிப்பதிவு என்றால் என்ன என்பதை கற்றுக்கொள்கிறார்கள். ஒரு கேமராவை வாங்குவதென்பதோ, அதனை தொடுவதோ, வேலை செய்யும் திறனை பார்ப்பதோ மிக எளிது. முன்பெல்லாம் ஒரு கேமராவை தொடுவதற்கே பல வருடங்கள் உதவியாளாக இருக்கவேண்டிவரும். அதற்குப் பின்பாகத்தான் வியூ பைண்டரில் நீங்கள் காட்சியைப் பார்ப்பதற்கே உரிமை வரும். இந்தக்காலத்திலிருந்து ஒரு பெரிய மாற்றம் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த மாற்றத்தில் நாம் தாக்குப்பிடிக்க நமக்கு தேவையானது இந்த மாதிரியான புத்தகங்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

கேமரா வாங்கியவுடன் முதலில் குறும்படங்கள் எடுத்து விடுகிறார்கள். பின்பு தான் நாம் படம் எடுக்கிறோம், ஆனால் எதோ தவறாகவே இருக்கிறதே என்று தோன்றிய பின்பே ஒளிப்பதிவு என்றால் என்ன என்பதையெல்லாம் தேடி கற்றுக்கொள்கிறான். இல்லையேல் இப்படி எடுத்துக்கொள்ளலாம் தியரிகளை கற்றுக்கொண்டே பயிற்சிகளும் செய்ய முடிகிறது. இது கிட்ட்த்தட்ட திறந்த பல்கலைக்கழகம் போல இதன் செயல்பாடுகள் நீள்கிறது. ஆக, இன்றைக்கு கேமராவைப் பற்றிக் கற்றுக்கொள்வதென்றால் இன்றைக்கு புத்தகங்களும், இணையமுமே அடிப்படையாக வருகின்றன. இன்றைய சூழலில் இது மாதிரியான புத்தகங்களின் தேவைகள் அதிகமாகிவருகின்றன. எனவே இந்தப் புத்தகத்தின் வரவு மிகமுக்கியம் என்றே சொல்லவருகிறேன்.

இன்றைக்கு தெருவுக்குத் தெரு குறும்படங்கள் எடுக்கிறார்கள். நான் கேமராவினைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள ப்லிம் இன்ஸ்டிட்யூட் ஒரு காரணம். அங்கு படித்த்தனால் அந்த கேமராக்களை தொட முடிந்த்து. மேலும் அங்கிருந்த பலரும் சிறந்த ஒளிப்பதிவாளர்கள் ஆனதற்கு காரணம் அவர்களெல்லாம் முறையாக படித்து வெளியே வந்தார்கள். பல வருடங்களாக உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய காலம் மாறி வந்து, இன்றைக்கு உடனடியாக கேமராக்களை கையாளக்கூடிய சூழல் இருக்கிறது. இதில் சரி தவறு என்ற வாத்த்திற்கு நான் வரவில்லை. ஆனால் இது காலகட்ட்த்தின் ஒரு மாற்றம். இந்த மாற்றத்தினை நாம் ஏற்றுக்கொண்டாகவேண்டும். மேலும் இந்த மாற்றத்திற்கு நாம் ஆட்பட அதனைப் பற்றி தெரிந்தவர்கள் எழுத வேண்டும். யாரோ ஒருவர் அவருக்குப் புரிந்த ஒரு சினிமாவை எடுப்பதற்கும், அந்த விஷயம் தெரிந்தவர்கள் எடுப்பதற்கும் வித்தியாசம் உணர முடிகிறது. டிஜிட்டல் சினிமா வரப்போகிறது என்று 90களின் தொடக்க காலத்தில் சொல்லிவந்தார்கள். அன்றைக்கே இதெல்லாம் வரவேண்டும் என்ற ஆர்வத்தோடுதான் இருந்தோம். இன்றைக்கு அது சாத்தியமாகியிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்க் கடந்த நான்கு வருடங்களாகவே தனது ப்ளாக்கில் எழுதி வருகிறார். பொதுவாக சினிமா தொழிற்நுட்பங்கள் சார்ந்து எழுத வருகிறவர்களுக்கு மொழி அமையாது , சரியாக எழுத வராது என்று சொல்வார்கள். செழியன், ஆம்ஸ்ட்ராங்க் மாதிரியான ஆட்கள் தான் கேமராமேனாக இருந்துகொண்டே எழுதவும் செய்கிறார்கள். அது வாசகர்களுக்கு புரியும் படியாகவும் தரமானதாகவும் இருக்கிறது. இந்தப் புத்தகத்திலிருந்து பல விஷயங்களைத் தேடுகிற துவக்கத்தை இதன் மூலமாக பெற முடியும். மேலும் ஒளிப்பதிவிலும் இன்னும் விளக்கமாக கூற வேண்டிய பல துறைகள் இருக்கின்றன. அதனைப்பற்றியும் ஆம்ஸ்ட்ராங்க் இனி வரப்போகிற புத்தகங்களில் எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அது ஒளி எனும் மொழி -1, -2, -3 என்று வரிசையாக வரவேண்டும். அதை ஆம்ஸ்ட்ராங்க் செய்துகாட்டுவார் என்று ஆசைப்படுகிறேன்.

இயக்குனர் பாலாஜி சக்திவேல்:

இந்தப்புத்தகம் ஒரு உதாரணத்தோடு ஆரம்பிக்கிறது. நான் ஒரு பாமரன். த்ரிஷ்யம் பட்த்தின் இயக்குனர் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அவருக்கு சினிமாவின் மீது எப்படி ஆசை வந்த்து என்று தொலைக்காட்சியில் கேட்கிறார்கள். அவர் சொல்வது என்னவென்றால், நான் எனது உறவினரோடு பட்த்திற்குச் செல்வேன். திரும்பித் திரும்பி படம் பார்ப்பேன். படம் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, என் உறவுக்கார பையன் கண்டினூட்டி பற்றியெல்லாம் சொல்வான். அவன் சொல்வதைக் கேட்ட பின்பாக படம் பார்க்கிற பொழுது எனக்கும் கண்டினூட்டி என்றால் என்ன என்பது புரிந்த்து. அதற்குப் பின்பாக படம் பார்க்கவும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. சினிமாவில் மீது ஆர்வம் வந்த்து. பின்னர் ஒரு நாள் டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். அச்சமயம் பயங்கரமான த்ரில்லர் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்த்து. அதே நேரத்தில் எனக்கு ஒரு போன் வந்த்து, எனவே தொலைக்காட்சி ஒலியை அணைத்துவிட்டு போனில் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது படம் பார்க்கிறேன், அந்த திகில் பட்த்தின் காட்சியமைப்புகள் என்னைப் பயமுறுத்தவே இல்லை. ஆக, இசை எவ்விதமாக சினிமாவில் பங்காற்றுகிறது என்றெல்லாம் பார்த்துப்பார்த்துதான் என் அனுபவங்களின் வாயிலாகத்தான் சினிமாவினைக் கற்றுக்கொண்டேன்.


தன் வாழ்க்கையிலிருந்து மிகவும் யதார்த்தமாக கற்றுக்கொண்ட விஷயங்களை ஜீத்து ஜோசப் சொல்வது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. இதை ஏன் சொல்கிறேனென்றால், நானும் கூட அப்படித்தான். ப்லிம் இன்ஸ்டிட்யூட்டில் நான் படித்தவன் இல்லை. ஆனால், அங்கு குறும்படம் எடுக்கிறவர்கள் கொடுக்கிற சின்ன சின்ன வேஷங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். அவர்கள் திடீரென்று புரியாத தொழிற்நுட்ப வாசகங்களைப் பேசுவார்கள். அதெல்லாம் எனக்கு மிகவும் பயமுறுத்தியது. இதுதான், ஒரு நடிகரின் வேலை என்னவென்றால் எவ்வித பயமுமில்லாமல் நடிப்பதுதான். இப்படி தமக்கு வராத விஷயங்களை இசை மூலமாக வரவழைப்பது, நடிகர்கள் மூலமாக வரவழைப்பது என்பதாகவே போய்விட்ட்து. அன்றிலிருந்து நடிகராக வேண்டுமென்பதை விட்டுவிட்டேன். இப்போது கூட அழகுக் குட்டிச் செல்லம் பட்த்தில் நடிக்க அழைத்தனர். நான் எப்படி நடிப்பேன் என்று எனக்கு தெரியுமென்பதால் மறுத்துவிட்டேன்.

இந்தப் புத்தகத்தைப் படிக்கிற பொழுது, தனக்குத் தெரியாத சந்தேகங்களை ஒருவர் தோழமையுணர்வுடன் நமக்குச் சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அந்த உணர்வினை இந்தப்புத்தகத்தின் வாசிக்கும்பொழுது அடைந்தேன். எழுத்து நடை அப்படித்தான் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் அமைத்துக்கொண்டிருக்கிறார். புதுமை என்பது பழமையோடு சேர்ந்துதான் வரும். அதுபோல டிஜிட்டல் வருவதற்கு முன்பிருந்த தொழிற்நுட்பங்களையும் சொல்லிச்சொல்லி டிஜிட்டலுக்கு வருகிறார். டிஜிட்டலுக்கு முன்பு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் இயக்குனராக முயற்சிக்கிறார் என்பதும் இந்தப் புத்தகத்தை படிக்கிற பொழுது தெரிகிறது. ஏனென்றால் அவர்களால் ஒரு கதையை எப்படி படமாக்க வேண்டும் என்பதில் அக்கறைகொண்டு எழுதுவார்கள். அந்தப்பாணியை இந்தப்புத்தகத்தில் காணமுடிகிறது.

உதாரணங்களுக்கு நாம் பார்த்த படங்களிலிருந்து சில காட்சிகளைச் சொல்கிறார். இது டிஜிட்டலில் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி படம்பிடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறபடியால்தான் இது எளிமையான வாசகனையும் சென்று சேரும் திறன் பெற்றிருக்கிறது என்று சொல்கிறேன். அடுத்த்தாக அவரது நேர்மை. கலையாளூமை, மொழியாளுமை உள்ள ஒருவரால் இந்தப்புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது. இதனை நம்பி வாங்கலாம் என்று நான் நூறு சதவீதம் உறுதியளிக்கிறேன்.

இந்தப்புத்தகத்தை பேசாமொழி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.