என்னைப் போலவே சிந்திக்கும் அந்த ஒரு நபருக்காகவே படம் எடுக்கிறேன் – இயக்குனர் லீ சாங் டாங் பேட்டி

-Patrick Brzeski

தமிழில்: ஜிப்ஸி

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி, கேன்ஸ் திரைப் படவிழாவில் விமர்சனக்குழுவினரால் தேர்ந்தெடுக்கட்டப்பட்ட திரைப்படமான பர்னிங்(Burning) , புகழ் பெற்ற எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் "தி பார்ன் பர்னிங் (Barn Burning)" சிறுகதையில் இருந்து படமாக்கப்பட்டது. இந்த படத்தின் இயக்குனரான லீ சாங் டாங் (Lee Chang-dong) அவர்கள் கொரியன் சினிமாவில் முக்கியமான இயக்குனர், அறுபத்தைந்து வயதான இவர் ஆரம்பத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்து பின்பு நாவல்கள் எழுதத்துவங்கி தனக்கான வாசகர்களை ஏற்படுத்திக்கொண்டார். அடுத்தகட்டமாக திரைக்கதை எழுதுதல், டைரக்‌ஷன் என தன் பயணங்களை விரிவுபடுத்திக்கொண்டார். அவர் எடுத்த படங்களில் Oasis, Secret sunshine இவ்விரண்டு படங்களும் ஆஸ்கார் விருது விழாவில் பங்கேற்றன. தனது ஆறாவது படமான பர்னிங், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

 பின்தொடர்வது, பத்திரிகையாளர்களுடான சந்திப்பில் இயக்குனர் லீ சாங் டாங்கின் உரையாடல்.

தி பர்னிங் திரைப்படம் ஹாருகி முரகாமியின் “தி பார்ன் பர்னிங்” சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது, அதே தலைப்பை, வில்லியம் பாவுல்க்னெரும் (William Faulkner) தனது சிறுகதைக்கு வைத்துள்ளார். அவரையும் படத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட கதைகள். இந்த இரண்டு எழுத்தாளர்களிடமிருந்தும் உங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?

நான் முரகாமியின் கதையைப் படித்தபோது, உண்மையில் எனக்கு தாக்கமேற்படுத்திய முக்கியக் கூறு, கதை ஒரு மர்மமான நிகழ்வை ஒட்டியே பயணிக்கிறது, மொத்த கதையிலும் சந்தேகத் தன்மை ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்ந்து அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. மற்றும் கதை எந்த பிரச்னைகளையும் தீர்க்காமலேயே முடிகிறது. கதையில் பயணிக்கும் மர்மத்தை காட்சியூடகத்திற்கு ஏற்ப விரிவுப்படுத்த முயன்றேன். நாம் வாழும் வாழ்க்கையினுள் இருக்கும் மர்மத்தையும், சந்தேகத் தன்மை நிறைந்துள்ள இந்த வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதையும் காட்சிப்படுத்த முற்பட்டேன்.

நான் வெகு நாட்களுக்கு முன் வில்லியம் பாவுல்க்னெரின் கதைகளைப் படித்திருக்கிறேன். பாவுல்க்னெரின் பர்னிங் கதையில் வரும் கதாபாத்திரம் மிகவும் தெளிவானவன், அந்த கதை, மகன், தந்தையின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அமைந்திருக்கும். மற்றபடி, இந்த இரண்டு கதைகளும் முற்றிலும் வேறுபட்டவை. இறுதியில் இந்த இரண்டு கதையையும் இணைத்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தெளிவற்ற தன்மைகள் நிலவும் உலகில் எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லாமல் உழல்வதை விவாதிக்க விரும்பினேன். முக்கியமாக இப்போதிருக்கும் இளம் தலைமுறையினர், நாம் வாழும் உலகில் ஏதோ சரியில்லை என்பதை உணர்கின்றனர், ஆனால் அது எதனால் நிகழ்கிறது? இதெற்கெல்லாம் எது காரணம் ? இந்த பிரச்னைகளுக்கான அடிப்படை என்ன? என்பதைக் கண்டறிய சிரமப்படுகிறார்கள்.  

List of accolades received by Burning - Wikipedia

நீங்கள் சொன்னது போலவே, தற்காலச் சூழலில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மர்மங்களை படம் கையாள்கிறது - கதாபாத்திரங்கள் கேட்கும் கேள்விகள், கதையின் முக்கிய புள்ளிகள், கதையின் களம் இவை அனைத்தும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைகின்றன. மற்றும் கதையின் பின்னணியில்
பெரிய பிரச்சனைகளான கொரியாவின் முடிவில்லாத போர், அதிகமாகி வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சொல்லில் அடக்கமுடியாத அளவிற்கு மர்ம சம்பவங்களாக காட்சிப்படுத்தியுளீர்களல்லவா...  

முரகாமியின் கதை ஒரேயொரு மர்மத்தையே பின்தொடர்ந்து சென்றாலும், அது தெளிவற்றதாகவே அமைக்கப்பட்டிருக்கும். அந்த தெளிவற்ற தன்மையின் மூலமே எனக்கு திரைக்கதையில் பல அடுக்கில் மர்மப் புள்ளிகளை பொருத்தவும், கதையை விரிவுப்படுத்தக்கூடிய சாத்தியங்களையும் இந்த கதை கொண்டுள்ளது என்பதை உணர்ந்தேன். ஆனால் அதே சமயத்தில், நீங்கள் கவனித்ததுபோலவே கதையில் பல்வேறு பிரச்னைகளையும் மற்றும் சிக்கலான கருப்பொருள்களையும் கேள்விக்கு உட்படுத்தும் வகையில் வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் படத்தை உருவாக்கினோம். இந்த கதை பல்வேறு சம்பவங்களையும் பிரச்னைகளையும் பல்வேறு பரிமாணத்தில் அணுகக்கூடியதாக இருக்கிறது.
 
களம் மற்றும் கருப்பொருளில் உள்ள மர்மங்களின் சிக்கலானது வேறுபட்டது அல்ல. இத்தனை சிக்கலான அடுக்குகளையும் ஒரே படத்தில் உள்ளடக்கியதோடு, பார்வையாளர்களிடத்தில் ஒரே சமயத்தில் பலகேள்விகள் கேட்கக்கூடிய ஒரு சோதனை முயற்சியை செய்துபார்த்தேன். என்னைப் பொறுத்தவரையில் இப்போது வரும் படங்கள் அனைத்தும் மிகவும் எளிமையாகிக் கொண்டேபோகின்றன, பார்வையாளர்களும் எளிமையான கதைகளுக்கே ஆசைப்படுகின்றனர். கண்டிப்பாக பார்வையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறுதான் படங்களின் வடிவங்களிலும் மாற்றங்கள் நடக்கின்றன. அதற்கு மாறாக, ஒரு வேளை படம் பார்வையாளர்கள் மீது முடிவில்லாத கேள்விகளை வீசினால் எப்படி இருக்கும்? இவைதான் மர்மம் நிறைந்த பரந்த இவ்வுலகத்தின் முடிவில்லா கேள்விகள். இந்தப் படம்தான் என் பரிசோதனையின் முடிவு.

Haruki Murakami Wiki: Young, Photos, Ethnicity & Gay or Straight -  Entertainmentwise

கதைக்களத்தில் நிலவும் இந்நிச்சயமற்ற தன்மைகள்தான், பார்வையாளர்களுக்குத் தங்களை ஜோங்-ஸு (மையக்கதாபாத்திரம்) இடத்தில் வைத்துப் பார்ப்பது போன்ற உணர்வை அளித்து, அவன் உணரும் குழப்பங்களையும் தவறுகளையும் அவர்களிடம் கடத்துவதற்கான யோசனையா ?

படம்முழுவதும் பார்வையாளர்கள் ஜோங்-ஸுவை பின்பற்றுமாறே அமைக்கப்பட்டிருக்கிறது, அதே சமயம் பார்வையாளர்கள் அந்த பாத்திரத்திடமிருந்து சற்று விலகி அவரைப் புறநிலை பார்வையிலிருந்தும் கவனிக்க வேண்டும். அதேபோல் ஜோங்-ஸுவின் எண்ணங்களும் உணர்வுகளும் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். பார்வையாளர்களுக்கும், அந்தக் கதாபாத்திரத்தின்மீது எப்போதும் ஒரு வகையான குழப்பமும், சந்தேக உணர்வும் இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரம் நம்பமுடியாத செய்கைகளில் ஈடுபடக்கூடியது என்ற விழிப்புணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்தவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். உதாரணத்திற்கு ஹாய்-மி சூரிய ஒளியை எதிர்த்து நடனமாடும் காட்சியில், ஜோங்-ஸு அவளை ஒரு வேசி என்று அழைப்பான். மற்றொரு காட்சியில் செயலற்ற அணுகுமுறையில் இருப்பது மற்றும் கடைசி காட்சியில் அவன் கொலைசெய்வது- இவை அனைத்தும் உண்மையற்ற தன்மையைக் கொண்டிருக்கலாம், ஆனால் எனக்கு பார்வையாளர்கள் ஜோங்-ஸுவைப் பின்தொடரவேண்டும். அவன் இடத்திலிருந்தே அவனை உள்வாங்கிக்கொள்ளவும், அவனுடைய குழப்பமான உணர்வுகளை உணரவும் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் சற்றுவிலகியும் அவனை விமர்சனத்துக்குள்ளாக்கவும் வேண்டும்.
 
நீங்கள் குறிப்பிட்ட காட்சி அந்திவேளையில் ஜோங்-ஸு இல்லத்திற்கு வெளியே ஹாய்-மி நடனமாடும் Dance of the great hunger. அக்காட்சி அழகானதாகவும், படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் மிகமுக்கியமான காட்சியாகவும் இருந்ததென்று பல்வேறு கருத்துகள் வந்தன. அந்த காட்சியில் உள்ள களம், இசை, காலம், கதாபாத்திரங்களுக்கு இடையே நடப்பவை, அதற்கு ஒருவருக்கு ஒருவர் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள், இப்படி வித்தியாசமான கூறுகளைக்கொண்ட அந்த காட்சி உங்களுக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதைப் பற்றிச் சொல்லமுடியுமா?

இந்த காட்சி முரகாமியின் கதையில் இல்லாதபோதிலும், நான் முதலில் இந்த கதையை படமாக்க முடியும் என்ற எண்ணத்திற்கு வந்தபோதுதான், இந்த பிம்பத்தைக்குறித்துச் சிந்தித்தேன். முழுப்படத்தின் பல முக்கிய கூறுகளை இந்த ஒரு காட்சி உள்ளடக்கியுள்ளது. மேற்பரப்பில் இந்த படம் மாயமாய் மறைந்துபோன ஒரு பெண்ணைத் தேடும் இரண்டு ஆண்களைப் பற்றியதாக இருக்கும். படத்தில் வரும் இரண்டு இளைஞர்கள் ஜோங்-ஸு மற்றும் பென் இன்றைய நவீன உலகத்தின் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பக்கங்களிலிருந்து வளந்தவர்கள், முற்றிலும் முரணான சூழலில் வாழ்பவர்கள். இவ்விரண்டு முரண்களுக்கிடையே வருகிற ஹாய்-மி, அவளுக்கும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை- தெருவில் பொம்மை வேடமிட்டு ஆடுவது- கடன் கிரெடிட் கார்டு வாழ்க்கை-ஆனால் படத்தில் இந்த ஒரு காதாபாத்திரம்தான் வாழ்க்கையின் அர்த்தத்தை விடாப்பிடியாகப் பின்தொடர்கிறது. அவள் காணாமல் போகும் தருணத்தில், பார்வையாளர்களுக்கு, அவள் படத்தில் காணாமல் போயிருந்தாலும்கூட இப்போது இருந்திருக்கலாமே!, அந்த பாத்திரம் எதை முன்னிறுத்தியது? அவள் எதைத் தேடுகிறாள்? இது போன்ற கேள்விகள் எழவேண்டும். அவளுடைய இருத்தலின் முக்கியத்துவத்தையும் அவள் மறைவின் வெறுமையையும் அவர்கள் உணரவேண்டும். அந்த காட்சியின் நடனம் உண்மையில் படத்தில் அவளது முழு இருப்பையும் குறிக்கிறது.

Burning' Exclusive Music: Stream The Entire Score For One Of 2018's Best  Films

அவள் ’தி கிரேட் ஹங்கர்’ நடனத்தை ஆடும்பொழுது, வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறாள் மற்றும் உண்மையான சுதந்திரத்தைத் தேடுகிறாள். அவள் நடனமாடும் காட்சியில், அவளைச் சுற்றிலும் நாம் வாழும் இந்த பொய்யான வாழ்க்கை முறையும், உண்மையான இயற்கை அழகும் சூழ்ந்திருக்கும். அந்த காட்சி சூரியன் மறையும் அந்தி வேளையில் சம்பவிக்கிறது. நீங்கள் அந்த காட்சியில் பார்த்தால் அதில் வெளிச்சமும் இருளும் ஒரே தருணத்தில் இணைந்திருக்கும். மற்றும் வானத்தில் சந்திரன்- காற்றின் அசைவுக்கு ஏற்றபடி அலைபாயும் புற்கள், பண்ணையில் மேயும் கால்நடைகள், அரசியலுக்கான குறியீடாக வான்நோக்கி பறக்கும் கொரியன் நாட்டுக்கொடி என பல அடுக்கில் இந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் அனைத்து கூறுகளும் நம் வாழ்வியல் அம்சங்களைக் குறிக்கிறது- மில்ஸ் டேவிஸ் இசையும் அந்த உணர்வையே கடத்துகிறது. இந்த ஒரு குறிப்பிட்ட காட்சியில் வெவ்வேறு உணர்வுகளையும் காட்சியூடகத்தின் அனுபவத்தையும் ஒன்றிணைத்து அதை எவ்வளவு சிறப்பான முறையில் காட்சிப்படுத்த முடிகிறதோ அந்த அளவிற்கு பார்வையாளர்கள் காட்சியூடகத்தின் சாத்தியங்களையும், அதன் தனித்துவமான அழகியலையும் உணரமுடியும் என்று நம்பினேன். அதனால் அந்த காட்சியின் தொடக்கம் முதல் இறுதி வரை, ஹாய்-மி தன்னுடைய சுதந்திரத்தை அடையும் தருணம் நோக்கி அரங்கேற்றப்பட்டது போன்று இருக்கக்கூடாது. அது வாழ்வில் தற்செயலாக நிகழ்ந்ததைப் படம்பிடித்த ஒரு காட்சித்துணுக்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

உங்களது படம் எப்பொழுதுமே பார்வையாளர்களிடத்தில் கடுமையான உணர்வு ரீதியினாலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒவ்வொரு படத்திலும் மனித உணர்வுகளை நுட்பமாகக் கையாளுகிறீர்கள். அது எப்படி சாத்தியமாகிறது? அந்த உணர்வுகளை காட்சிப்படுத்துவதற்கான செயல்முறைகள் என்னென்ன? உங்களது கதை வடிவத்தையும் களத்தையும் உங்கள் படக்குழுவிடம் எப்படி விளக்குவீர்கள்?

அடிப்படையில் இதே கேள்விதான் படத்தைத் துவங்குவதற்கான ஒரு உந்துதலாக இருந்தது. என்னைப் பொறுத்தவரையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் தொடர்ந்து மேலும் மேலும் அதிநவீனத்துவமாகவும், சௌகரியமாகவும் மாறிக்கொண்டே வருகிறது. ஆனால் நாம் கண்டுகொள்ளாத பல பிரச்னைகள் அதற்குக் கீழே புதைந்து கிடக்கின்றன. இதுவே பிந்தைய-நவீனத்துவ உலகத்தின் இயல்பான பிரச்னைகள். எனக்கு எப்போதுமே தெளிவற்ற சிக்கல்களை, இதுபோன்ற படத்தில் எப்படிச் சித்தரிப்பது என்ற கேள்வி இருக்கிறது. அப்போதுதான் முரகாமியின் கதையில் இதே கேள்விக்கான ஒரு தொடர்பு இருப்பதை அறிந்தேன், என்னை நானே வெகு நாட்களாக கேட்டுக்கொண்ட கேள்விக்கான பதில் அந்த சிறுகதையில் இருந்ததை உணர்ந்தேன். படத்திலிருக்கும் மர்மமான நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் தெளிவற்றதே! ஆனால் அது பார்வையாளர்கள் மேல் தொடர்ந்து வீசப்படும் கேள்வியாக மட்டுமே இருக்கக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில் பார்வையாளர்கள் திரையரங்கில் அமர்ந்து படத்தைப் பார்க்கும்பொழுது மிகத் துல்லியமான சினிமா அனுபவத்தின் வழியே இந்த உணர்வுகள் கடத்தப்படவேண்டும். ஆனால் அதை எப்படிச் செய்வது ? முழுப்படத்தின் படப்பிடிப்பு செயல்முறைகள் முழுவதும் இதுதான், ஒரு பெரிய கேள்வியாகவே இருந்தது. அதற்கான பதிலை அடைய, படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரிடத்திலும் உரையாடினேன். எனக்கும் திரைக்கதை எழுத்தாளருக்கும் இடையே முடிவில்லாத விவாதங்கள் நிகழும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த உரையாடல் - பகிர்தல் தொடர்ந்துகொண்டே இருக்கும். நடிகர்கள், குழுவினர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என அனைவரிடத்திலும் இது நிகழும். படத்தொகுப்பு நாட்களில் கூட இந்த உரையாடல் தொடர்ந்தன, பார்வையாளர்களிடத்தில் இது வெறும் சில அறிவுசார் சிந்தனை பரிசோதனையாக மட்டுமல்லாமல் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை அவர்கள் அடைய வேண்டும் என்பதற்கான உரையாடல் படத்தின் இறுதி கட்ட தயாரிப்பு வரை நீண்டது.

Burning Is a South Korean Movie About Toxic Masculinity That You Didn't  Know You Needed | Vogue

படத்தின் முடிவை ஒரு வகையான எச்சரிக்கையாக விளக்குகிறீர்களா? படத்தில் திடீரென வெடிக்கும் வன்முறை இன்றைய இளைஞர்களின் கோபத்தின் வெளிப்பாடா?

ஆமாம், கடைசிக்காட்சி ஒரு எச்சரிக்கைதான். பெரும்கோபம் எப்படி வெடிக்கும்? ஒரு கோபம் இதுபோல வெடித்தால் என்னவாகும் என்ற கேள்வியும் இந்தக் காட்சியின் பின்னணியில் உள்ளது. கடைசி காட்சி, ஜோங்-ஸு - பென் இடையேயான உறவையும் - அந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு பின்னணியில் இருக்கும் அடுக்குகளையும் காட்டுகிறது- ஜோங்-ஸு, பென்னை கொலைசெய்ய முற்படும்போது, பென், ஜோங்-ஸுவை தடுக்கமாட்டான், எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் இருப்பான். இவ்வளவு நேரமும் ஜோங்-ஸு தன்னைக் கத்தியால் குத்துவதற்காகவே காத்திருந்தது போன்றே பென்னின் நடத்தையிருக்கும். பென்னின் இறப்பு ஜோங்-ஸுவிற்கு ஒருவகையான அனுதாப உணர்வையே கொடுக்கும். நீங்கள் பொதுவாக பார்க்கும் கொலைக் காட்சியிலிருந்து இது மாறுபட்டதே!, மற்றும் அந்த விஷயம் தான் உண்மையில் பார்வையாளர்களிடத்தில் ஒரு பதபதைப்பை ஏற்படுத்திகிறது. ஆனால் அது ஜோங்-ஸு - பென் இடையேயான உறவின் வேறு பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். அதேபோல் ஜோங்-ஸு கொலைசெய்ததற்கான தடயங்களை அழிப்பதற்காக தனது ஆடைகளை களைந்து எறிவான், மேலோட்டமாகப் பார்க்கும்போது அந்த காட்சி தடயங்களை அழிப்பதற்காக செய்ததாக தெரியும், ஆனால் அது ஒரு சினிமா அனுபவத்தை அளிக்கும் பிம்பம், அங்கே ஜோங்-ஸு புதிதாக பிறந்த குழந்தையைப் போல் தோன்றுவான், அதே சமயம் ஒரு கோபம் நிறைந்த அசுரனைப் போலவும் இருப்பான். இந்த ஒரு பிம்பம் இரட்டைத்தன்மையை தன்னுள்கொண்டுள்ளது. பின்னணியில் பொர்ஸ்செ(Porsche) எறிந்து கொண்டிருக்கையில் ஜோங்-ஸு தன்னுடைய truck-ல் புறப்படும்போது இந்த கதாபாத்திரம் எங்கே செல்கிறது? அடுத்து என்ன செய்யப்போகிறது? போன்ற கேள்விகள் பார்வையாளர்களிடத்தில் எழவேண்டும். அந்த கடைசி காட்சி உண்மையாக நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு, ஜோங்-ஸுவின் புது நாவலில் இடம்பெறலாம். அதனால் இந்த ஒரு காட்சி படத்தின் அனைத்து அடுக்குகளையும் வெளிப்படுத்தும் என்று நம்பினேன்.

ஒப்பிட்டுப் பார்க்கையில் மர்மம் நிறைந்த மற்ற இரண்டு கதாபாத்திரங்களையும்விட பென் கதாபாத்திரம் மிக ஆழமான புதிர்களைக் கொண்டுள்ளது, அந்த கதாபாத்திரத்தைப் பற்றியும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் கூறமுடியுமா? 

நீங்கள் மர்மம் நிறைந்த பென் கதாபாத்திரத்தை நவீன உலகத்தில் நிலவும் மர்மத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ளலாம். நான் கவனித்த வரையில், பென் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் தங்களுடைய சூழல், கலாச்சாரம் சார்ந்தே அதை வெவ்வேறு விதமாய் ஏற்றுக்கொள்கின்றனர். நாம் அடைய ஆசைப்படும் வாழ்க்கைத்தரத்தின் குறியீடாகத்தான் பென் கதாபாத்திரம் உள்ளது. எல்லோரும் அதி நவீனத்துவமும், அதி சௌகரியமான வாழ்க்கை முறையையும் அடையவே ஏங்குகிறோம். பென் மிகவும் புரிதல்கொண்ட, மனிதாபிமானம் கொண்டவன்போல் தோன்றுகிறான். நிஜத்தில் நாம் அனைவரும் பெரும்பாலும் அவனைப் போன்ற தோற்றத்தை மற்றவரிடத்தில் உருவாக்கிக்கொள்ளவே ஆசைப்படுகிறோம். அதேசமயம் அவனுள் இருக்கும் இருள் அவனால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளையும் வெளிக்கொண்டுவர நினைத்தேன்- நாம் உணராமல் இருந்தாலும் நம் வாழ்கையிலிருக்கும் இருள்படிந்த பக்கங்களையும் காட்ட விரும்பினேன். இப்போது பணம் கொண்ட பல இளைஞர்கள் மனித வாழக்கையின் இயல்பிலிருந்து முற்றிலும் தொடர்பின்றி உயிரற்ற பொருட்களுடன்தான் ஒன்றிப்போயிருக்கிறார்கள். அது மிகவும் சிக்கலானது. ரியல் எஸ்டேட், ஐ.டி. வேலைகளிருந்து பணம் சம்பாதிக்கின்றனர். அதிக அளவில் வேலையை விட்டு துரத்தப்படுவதில் துவங்கி, பல பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர். இதற்கிடையில் இன்னும் சிலர் கணினியில் ஆழ்ந்து வேலைசெய்கிறார்களே தவிர, தான் செய்வது என்ன? என்று சிறிதும் அறியாமல் எந்த வித குற்றஉணர்வுமின்றி வாழ்கின்றனர். இது மாதிரியான கட்டமைப்பில்தான் நாம் வாழ்கிறோம். அதனால், நீங்கள் வசதியாக வாழ்கிறோம் என்று நினைக்கும் வாழ்வியலில் கூட ஒரு மோசமான பகுதி இருக்கிறது என்பதைக் காட்ட விரும்புகிறேன்.

Burning' wins international critics' award

poetry மற்றும் burning படங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் நீங்கள் இரண்டு திரைக்கதையை எழுதி முடித்திருந்தாகவும், ஆனால் அவை படமாக்கப்படுவதற்கு ஏற்றவை அல்ல என்பதால் கைவிட்டுவிடீர்கள் எனும் செய்தியைக் கேள்விப்பட்டேன். உங்களைப் பொறுத்தவரை எப்போது ஒரு திரைக்கதை படமாக்க ஏற்றது என்பதை நம்புகிறீர்கள்? 

உண்மையில், ஒரு கதை படமாக்க ஏற்றதா? இல்லையா? என்று சொல்வது மிகக்கடினம். நான் எப்பொழுதும் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள், குழுவினருடன் தொடர்ந்து வேலைபார்ப்பேன். அவர்களுக்குக்கூட என் இந்த கதை படமாக முடியும், ஏன் முடியாது? என்பதைப் புரியவைப்பது கடினம். அது எப்போதும் எனக்கு பிரச்னைதான். எனக்கு நான் விளங்கவைப்பதே கடினம். படம் கொண்டாடும்படியாக உள்ளதா? கதை நகர்கிறதா? நல்ல விமர்சனம் வருகிறதா? என்பது பற்றிய கவலைகள் எனக்கில்லை. அது ஒருவகையான உணர்வே - இந்த கதை பார்வையாளர்களிடத்தில் இந்தப் புள்ளியில் சரியாகச் சென்றடையுமா ? பார்வையாளர்களிடத்தில் கொண்டு செல்லும் அளவிற்கு இந்த கதை தேறுமா? இது எனக்குள் நடக்கும் முக்கியமான மற்றும் உள்ளுணர்வு கொண்டு முடிவெடுக்கும் செயல்முறையாகும். 


யாருக்காக நீங்கள் படம் எடுக்குறீர்கள்? 

நான் நாவல் எழுதும்போதும், எப்போதும் ஒரு நபருக்காகவே எழுதுகிறேன். என்னை போலவே சிந்திக்கும் உணரும் அந்த ஒரு நபருக்காகச் செயல்படுகிறேன். கிட்டத்தட்ட ஒரு காதல் கடிதம் எழுதுவதைப் போலவே உணர்கிறேன். நான் எழுதும் அந்த குறிப்பிட்ட நபர் என்னுடைய வார்த்தைகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ள, என்னைப்போலவே சிந்திக்கவும் உணரவும் வேண்டும். ஒரு படத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் அதிகளவிலும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். ஆனால் நான் என்னுடைய படங்களை, என்னால் யாருடன் தொடர்பு கொள்ளமுடிகிறதோ, இது மாதிரியான படங்களை யார் புரிந்துகொள்கிறார்களோ, அவர்களுக்காகவே படம் எடுக்கிறேன். அந்த குறிப்பிட்ட நபருக்காக மட்டுமே. அவர்கள் யார்? அந்த கூட்டத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டால் உண்மையில் என்னிடம் அதற்கு பதில் இல்லை. சிலநேரம் எனக்கு, நான் உருவாக்கும் படங்களுக்கான பார்வையாளர்கள் இந்த காலகட்டத்தில் இல்லையென்றும், எதிர்காலத்தில் இருப்பார்களோ என்றும் தோன்றுகிறது. யாரென்று குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு இல்லை. ஆனால் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்த ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ, அவர்களுக்காக மட்டுமே நான் படமெடுக்கிறேன்.

Burning

ஆரம்பத்தில், இப்போது வரும் படங்கள் அனைத்தும் மிகவும் எளிதாக இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். எதனால் அப்படி நிகழ்கிறது என்று நினைக்கிறீர்கள்?

இந்நாட்களில் அது ஒரு ட்ரெண்ட் ஆக உள்ளது என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு இப்போது அதிகமாக மார்வெல் திரைப்படங்கள் மற்றும் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. நான் நினைக்கிறன் அது ஏதோ ஒரு வகையில் மக்களிடத்தில் உலகத்தை காப்பாற்ற சூப்பர் ஹீரோ வருவான் என்ற ஆசையை விதைக்கிறது. ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, உலகம் மேலும் சிக்கலான பாதையை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. எதிர்காலம் என்ன என்பதைக் கண்டறிவது மேலும் கடினமாகியுள்ளது. உலகின் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை, மேலும் இது ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன. தியேட்டர்களில் நீங்கள் பார்க்கும் படங்கள், நேரடியாகப் பொது மக்களைச் சென்றடைகின்றன. இந்த பெரிய வணிகப் படங்கள் எளிமையாக, எளிதாக பெரிய சிக்கல்களுக்கு ஒரு தீர்வைச் சொல்கின்றன மற்றும் கதாநாயக பிம்பம் போன்ற விவரிப்புகளை வெளிப்படுத்துகின்றன. இதுவே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன என்று நினைக்கிறேன். 

நன்றி: hollywoodreporter