“Spring, Summer, Fall, Winter… and Spring”

“Spring, Summer, Fall, Winter… and Spring” தென் கொரிய சினிமாவின் நவீன தலைசிறந்த படைப்பாக இருப்பதற்கான 6 காரணங்கள்:

-vitor guima

கிம் கி தக் இயக்கிய தென் கொரிய திரைப்படமான “Spring, Summer, Fall, Winter… and Spring” 2003 ஆம் ஆண்டு வெளியானது. இதில் யியோங்-சு ஓ, யங்-மின் கிம், ஜாங்-ஹோ கிம், ஜெய்-கியுங் சியோ மற்றும் யியோ-ஜின் ஹா போன்றோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கிம் கி தக்கின் திரைப்படங்கள் பெரும்பாலும் மெளனங்களால் நகர்ந்து கதைசொல்லும் பாணியைப் பின்பற்றியிருக்கும். அவரது Mobeius திரைப்படம் முழுக்க முழுக்க உரையாடல்களைத் தவிர்த்து, மெளனத்தாலேயே அத்துணை சிக்கலான கதையை பார்வையாளர்களுக்குக் கடத்திய திரைப்படம். கிம் கி தக்கின் திரைப்படங்களுக்கு கொரியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் எளிமையாக இவரது படங்களைப் புரிந்துகொள்ள, அதிகபட்சம் உரையாடல்களைத் தவிர்த்து காட்சிமொழியில் கதைசொல்லும் உத்தியும் மிக முக்கியக் காரணம் என்றே சொல்லவேண்டும். “Spring, Summer, Fall, Winter… and Spring” இத்திரைப்படம் கூட இதற்கு விதிவிலக்கல்ல. 

ஒரு திரைப்படத்திற்கு வடிவம் மற்றும் உள்ளடக்கம் இரண்டும் அவசியம். இன்னும் இதை நுணுகி ஆராய்ந்தோமானால் உள்ளடக்கம் தான் அந்தத் திரைப்படம் மேற்கொள்ளப் போகிற வடிவத்தைத் தீர்மானிக்கிற காரணி என்று அழுத்தமாகச் சொல்லலாம். அதன்படி, “Spring, Summer, Fall, Winter… and Spring” படத்தை எடுத்துக்கொண்டால், இது பெளத்த துறவியின் வாழ்க்கையைப் பின்பற்றி நகர்கிற கதைக்களனைக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதை நடக்கக்கூடிய இடம், ஒரு கதாபாத்திரமாகவே அமைந்து, இப்படத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கிறது. உலக நடப்புகளிலிருந்து விலகி, அமைதியான ஒரு இடத்தில், சுற்றிலும் தண்ணீரால் சூழப்பட்டுள்ள ஒரு படகு வீட்டில்தான், அதாவது வனத்தின் நடுவில் தீவுபோல உள்ள மடத்தில்தான் பெரும்பாலான கதை நடக்கிறது. எனவே, கதையில் யதார்த்தமாகவே, உரையாடல் பகுதிக்கான தேவையென்பது இல்லாமல் போகிறது. நாம் இதற்கு முன்பு பார்த்தபடி, கதையானது பெளத்தத் தத்துவியலை அழுத்தமாகப் பேசக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு திரைப்படத்தின் உள்ளடக்கம்தான், அத்திரைப்படத்தின் வடிவத்தைத் தீர்மானிக்கும் காரணி. எனவே, திரைப்படம் கூட, பெளத்தத்திற்கு நெருக்கமான அமைதியைக் கடைப்பிடிப்பதும், உரையாடல் இல்லாமல் நகர்வதும் கதைக்களத்தோடு இயல்பாகப் பொருந்திப்போகிறது. மேலும், படம் பார்க்கிற பார்வையாளர்களுக்கும் பெளத்தத்தின் சமநிலைத்தன்மையைக் கடத்த முயற்சிக்கிறது. 
புத்த மடத்தில் ஒரு சிறுவன் வளர்கிறான். அவன் வளர்வதற்கு ஏற்ப, அந்த வனாந்திரத்தின் காலநிலையும் மாறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்நாள் பருவத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். வசந்தம், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம். கதையானது அச்சிறுவனின் வாழ்க்கையின் தருணங்களைக் காலநிலைப் பருவங்களைப் பயன்படுத்திப் பிரிக்கிறது. 


இங்கு படத்தின் தலைப்பை நினைவுபடுத்துகையில், மீண்டும் அது வசந்தத்தைக் கொண்டுவருகிறது. இது ஒரு சுற்றுவட்டம் போல, சுழல்கிறது. படத்தின் பெயர் குறிப்பிடுவது போல, ”வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம்…. மற்றும் வசந்த காலம்” ஆகிய ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பருவங்களின் அடிப்படையில், நாம் புதிய புத்தரின் வாழ்முறையைப் பின்பற்றிக் கதையைக் கவனிக்கிறோம். சிறுவனாக ஜெய்-கியோங் சியோ, யங்- மின் கிம் (இளம் வயது), மற்றும் கிம் கி தக்கும் நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏரியில் மிதக்கும் மடத்தில் இவர்களின் வளர்ச்சியானது காட்டப்படுகிறது. 

ஐ.எம்.டி.பி.யில்(IMDb ) 8.1 மதிப்பீடும், ரொட்டன் டொமோட்டோஸில் (Rotten Tomatoes) 95 சதவீத நன்மதிப்பீடும் இருப்பது மட்டும், இப்படத்தை இங்கே விவரிக்கக் காரணமில்லை. இது இத்தனை ஆண்டுகளைக் கடந்தபிறகும், மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருப்பதற்கு, கிம் கி தக்கின் தலைசிறந்த படைப்பு வளர்ச்சியைப் பற்றியது என்றாலும், புத்தமதத்தின் அணுகுமுறை என்றாலும், இது நம் அனைவரைப் பற்றியதும் கூட. இது நம் வாழ்க்கைக்கும் நெருக்கமான ஒரு படைப்பாகவே நிற்கிறது. 

திரைப்படத்தின் மீதும், திரைப்படத்துறையின் மீதும் ஆர்வமுள்ள ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய ஒரு தலைசிறந்த படைப்பு இது. எனவே, இத்தகைய சிறந்த படைப்பாக இது விளங்குவதற்குண்டான காரணங்களில் ஆறினை மட்டும் இங்கே பகுத்துப்பார்த்து அறிந்துகொள்வோம். 

படப்பிடிப்பு நடக்கும் இடம்

திரைப்படத் தயாரிப்பின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, காட்சிகள் எங்கு நடைபெறவேண்டும் என்பதை சரியான முறையில் தேர்ந்தெடுப்பது. படப்பிடிப்புத் தளங்களை அதாவது லொகேஷன்களைப் பற்றிச் சிந்திக்கிறபொழுது, இயக்குனர் சிட்னி லுமெட் (12 ஆங்க்ரி மேன், டாக் டே ஆஃப்டர்னூன் (“12 Angry Men”, “Dog Day Afternoon”)) கூறியதுபோல, அவரது திரைப்படங்களில் லொகேஷன்களும் ஒரு கதாபாத்திரங்களே, இதில் இப்படமும் சேர்த்தி.


எந்தவொரு நவீன நாகரிகத்திலிருந்தும் வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றும் மடத்திற்குப் பதிலாக, வேறு ஒரு இடத்திற்கு இந்தக் கதையை நகர்த்தினால், அதாவது வனத்திற்கு நடுவே இக்கதை நடைபெறாமல், சுற்றிலும் நகரம் சூழ்ந்த ஒரு பெரிய இடத்தில் இக்கதை நடைபெறுவதாகவோ, அல்லது ஏரியில் மிதக்கிற இந்த மடாலயத்திற்கு தொடர்பேயில்லாத வேறு எங்கேனும் இக்கதை நடைபெறுவதாக இருக்குமாயின், இக்கதை அதற்குண்டான மொத்த பலத்தையும் இழந்து நிற்கும். அப்படியான துர்சம்பவம் நடந்துவிடாமல், கதையின் ஆன்மாவைத் தாங்கி நிற்பவை, அந்தக் கதை நிகழும் கதைக்களன்களே ஆகும். 

அடுத்து, இந்தக் கதை எந்தக் காலத்தில் நடக்கிறது? போன்ற சந்தேகங்கள் எழக்கூடும். ஏனெனில், முற்றிலும் இது நகரத்தின் வாசனை தீண்டாத ஒரு காட்டிற்குள் நடக்கிற கதை. ஆனால், இயக்குனர் அதற்கான பதிலை சில கதைமாந்தர்களின் உடைகள் வாயிலாகவே நன்கு உணர்த்திவிடுகிறார். நவீன கால ஆடைகளுடன் தோன்றும் தாய் மற்றும் மகளை நாம் படத்தில் காண்கிறோம். தன் மகளின் மருத்துவத்திற்காக, இந்த மடத்திற்கு அவர்கள் வருகிறார்கள். அவர்களது உடைகளைக் கவனிக்கிறபொழுது இது நவீன காலத்தில் நடக்கிற கதை என்பதற்கான குறிப்புகள் அடங்கியிருக்கின்றன. 

Image result for kim ki duk spring summer fall winter

வனத்தின் நடுவேயிருக்கும் ஒரு ஏரி, அந்த ஏரியின் மத்தியில் இருக்கும் ஒரு மடாலயம் என்பது, நாம் இயற்கையின் நடுவே இருப்பதுபோல, இதை ஒரு உலகளாவிய கதையாக மாற்றுகிறது. கதைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுழற்சிகளும், பருவங்களும் படத்தின் மீது அதிகமான தாக்கத்தைச் செலுத்துகின்றன. ஆற்றல்கள், வானிலை மற்றும் இயற்கையை மட்டும் பாதிக்காமல் நம்மீதும் பாதிப்பு செலுத்துகின்றன, நாமும் இந்த பருவங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம்.

படத்தின் இறுதியில் செய்த தவறுக்கு வருந்தி, புத்தர் சிலையை உடலில் கட்டிக்கொண்டு இழுத்துச்செல்லும் கிம் கி தக், அதை ஒரு மலை உச்சியின் மீது வைத்துவிட்டு தியானிக்கிறார். இந்த இடத்திலிருந்து, மிகப்பெரிய இயற்கைக் காட்சியானது விரிகிறது. கதை நடக்கும் இடம், ஏரி போன்றவை இங்கிருந்து விரிவாகக் காட்சியளிக்கின்றன. புத்தர் அந்த இடத்தைக் கண்காணிப்பதுபோன்ற தோற்றத்தை, இந்தச் சட்டகம் உண்டாக்குகிறது. 

Image result for kim ki duk spring summer fall winter
 
வாழ்க்கையின் சுழற்சியைப் பேசுகிற கதைக்களம்

படத்தில் ‘கோடைகாலம்’ காமம் சார்ந்த பகுதியாக விரிகிறது. இதில் சிறுவன் வளர்ந்து இளம் வயதினனாக இருக்கிறான். மடாலயத்திற்கு வருகிற பெண்ணுடன் காதல், காமம் என மகிழ்ச்சியாக இருக்கிறான். இதற்கு மூத்த துறவியின் சம்மதம் இல்லாத காரணத்தினால், அவரது எதிர்ப்பிற்கு பயந்து காமம் உடைமை மற்றும் உடைமைக்கான ஆசைக்கு வழிவகுத்தல் என்பதனடிப்படையில் தான் காதலித்த பெண்ணைத் தொடர்ந்து தனக்கான தனித்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் பொருட்டு, மடாலயத்திலிருந்து குருவிற்குத் தெரியாமல் ஓடிவிடுகிறான். முதிர்ச்சியடைந்த குரு இதற்காகவெல்லாம் கலங்குவதில்லை. அமைதியாகவே தனக்கான வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார். காலங்கள் நகர்கின்றன. பின்பு ‘இலையுதிர் காலத்தில்’ ஓடிப்போன இளைஞன் திரும்பி வருகிறான். அவனுக்கு ஆசைகளின் பின்னால் இருக்கும் துன்பங்கள் தெரியவருகின்றன. தன் மனைவியைக் கொலை செய்துவிட்டுத்தான் அவன் இந்த மடாலயத்திற்குத் திரும்பியிருக்கிறான். 


முதிய துறவி, புதியவரின் வருகையை எதிர்பார்த்திருக்கிறார். வந்தவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அந்த இளைஞனுக்கு முன்பிருந்த அமைதி, கிடைக்கவில்லை. அவனது மனம் அலைக்கழிகிறது. எனவே, தன் உயிரைத் தானே போக்கிக்கொள்வதென அதற்கான சடங்கில் ஈடுபடுகிறான். தற்கொலைச் சடங்கின் நடுவில் இருக்கும் அந்த இளைஞனின் செயலைக் கண்டிக்கும் விதமாக, மூத்த துறவி, அவரைப் பிரம்பால் நன்றாக அடிக்கிறார். ”இந்த உலகத்தை விட்டு அவ்வளவு எளிதில் சென்றுவிட முடியாது” என்று கூறுகிறார். 
பின்னர், இரண்டு போலீசார் வந்து, இளைஞனை அழைத்துச் செல்கின்றனர். அந்த இளைஞன் மடாலயத்திலிருந்து செல்வதற்கு முன், மூத்த துறவி, அவன் மனதை ஆசுவாசப்படுத்தி, சாந்தப்படுத்தி அனுப்புகிறார். முன்பு இளைஞன் தற்கொலைக்கு முயற்சிக்கையில் அதை எதிர்த்தவர், இப்போது தனது கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், இந்த உலகத்திலிருந்து இந்த உடல் வெளியேறவேண்டிய தருணம் வந்துவிட்டதுபோல, தன்னைச் சுற்றிலும் நெருப்பு வைத்துக்கொள்கிறார். அவரது வாழ்க்கையை தீப்பிழம்புகள் எடுத்துக்கொள்கின்றன. 

’குளிர்காலத்தில்’, இப்போது வயது வந்தவராக இருக்கும் இளம் துறவி மடாலயத்திற்கு மீண்டும் வருகிறார். அவர் தனியாகவே வருகிறார். அவருடன் யாரும் இல்லை. அவர் பனியிலிருந்து ஒரு புத்தர் சிலையை உருவாக்குகிறார். ஏரி உறைந்து பனிக்கட்டியாகயிருக்கிறது. அந்தப் பனியில் உடற்பயிற்சி செய்யத்துவங்குகிறார். மேலும் இதன் வாயிலாகத் தனது குருவின் இடத்தைப் பிடிக்க அவர் தயாராவது தெரிகிறது. 

Image result for kim ki duk spring summer fall winter

இந்த இளம் துறவியிடம், ஒரு பெண், குழந்தையை விட்டுச் சென்றவுடன், படம் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது. எல்லா பருவங்களுக்கும் அவரால் செல்ல முடிந்ததால், அந்த இளம் துறவி தன் குருவின் ஸ்தானத்தை அடைந்து, அந்த இடத்திலிருந்து தனது ஞானத்தை பரப்பத் தயாராகயிருக்கிறார், கடைசியாக தனது வாழ்க்கையின் மீது கட்டுப்பாட்டை வகுத்துக்கொள்ளும் நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. இப்போது, படத்தின் ஆரம்பத்தில் வந்த சிறுவன் மீண்டும் தோன்றுகிறான். அதே செயலைத் திரும்பச் செய்கிறான். மீண்டும் வசந்தம் வருகிறது. இந்தப் பருவகாலங்கள் தொடர்வதுபோல, மனிதர்களுக்குண்டான காலங்களும் சுழற்சியில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன, என்பதை உணர்கிறோம்.

 ஒவ்வொரு சட்டகமும் ஒரு ஓவியம்

ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு பெயிண்டிங் போல வடிவமைக்கப்பட்ட தலை சிறந்த 50 படங்களை உலகம் முழுவதிலிருந்து எடுத்துப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் இந்தப் படமும் இடம்பெறும். 

இந்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறபொழுது, எந்த ஃப்ரேமில் வேண்டுமானாலும் நிறுத்தி, அந்தக் காட்சியமைப்பைக் கவனித்துப் பாருங்கள். அந்த ஃப்ரேமின் லைட்டிங்க், வண்ணப் பயன்பாடு, கம்பொஸிஷன், கதாபாத்திரங்கள் நிற்கும் நிலை, என எல்லாவற்றிலும் கிட்டத்தட்ட பூரணத்துவம் கிடைக்கக் கூடும். எல்லா ஃப்ரேம்களுமே ஒரு ஓவியங்கள் போல, அதனளவில் அதன் முழுமைத்தன்மையை அடைய முயற்சித்திருக்கின்றன, என்பதை அதன் காட்சியமைப்பைப் பார்க்கிறபொழுதே தெரிகிறது. 

Image result for kim ki duk spring summer fall winter

இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள் மற்றும் குறியீடுகள் யாவும், கிழக்குக் கலாச்சாரம் மற்றும் பெளத்தம் பற்றிய குறிப்புகள் நிறைந்தவையாகவே இருக்கின்றன. மேலும், ஏரியின் நடுவில் மிதக்கும் மடாலயம் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது, இந்தக் கதையை உருவாக்க இதுவொரு அற்புதமான இடம், மற்றும் அந்தக் கதாபாத்திரங்கள் இத்தகைய ஓவியங்களையொத்த அற்புதமான பிம்பங்களை உருவாக்குகிறபொழுது உயிர்ப்பிக்கப்படுகின்றன. 

Related image

டோங்-ஹியோன் பேக்கின் ஒளிப்பதிவு, இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அற்புதமான பயன்பாட்டைக் காட்டுகிறது. மேலும், இயற்கை வண்ணங்களை அதிக செயற்கைத்தன்மையுடன் பயன்படுத்தாமல், ஒளிப்பதிவானது அந்த இயற்கையை மதிக்கும் விதத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இயற்கை வண்ணங்களையும், அத்தகைய அற்புதமான நிலப்பரப்புகளுக்கு நடுவில் அவற்றின் கதாபாத்திரங்களின் இடங்களையும் சரியாக இடம்பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறுத்தி, அதை ஒரு புகைப்படமாக நம் சுவரில் தொங்கவிடலாம். அத்தகைய திறன், இப்படத்தின் ஒளிப்பதிவுக்கு உண்டு. 

இதன் தலைசிறந்த டைரக்‌ஷன் ஸ்டைல்:

”பியாட்டா (2012) மற்றும் 3-ஐயர்ன் (2004) போன்ற திரைப்படங்களால் புகழ்பெற்ற கிம் கி தக், தென் கொரிய ஃப்லிம்மேக்கர்களின் கடைசித் தலைமுறையின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர். அவரது தலைசிறந்த படைப்பாக பெரும்பாலனவர்கள் கருதுகிற “Spring, Summer, Fall, Winter… and Spring” என்பது 21ஆம் நூற்றாண்டின் மிக அற்புதமான இயக்குநர் சாதனைகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது. 

திரைப்படத்தின் சிக்கலான மைஸ்-என் – சீன் (mise-en-scène) மீது நீங்கள் கவனம் செலுத்துகையில், கதையானது காட்சியியல் ரீதியாக நகர்கிறது என்பதைக் குறிப்பாகக் கவனிக்க முடியும். கதை காட்சிரீதியாக முன்னேறுகிறது என்பதைக் கவனிக்கலாம். மேலும், உரையாடல் என்பதும் திரைப்படங்களுக்கு அவசியமானதாக இருந்தாலும், அது பிம்பங்களைப் போல அத்துணை முக்கியத்துவமானது அல்ல. பெரும்பாலும், உரையாடல் வசனங்களால் நகர்கிற படங்களைப் பார்த்து அலுத்தவர்களுக்கு, இத்தகைய படங்கள் புத்துணர்வூட்டக்கூடியவைகளாக இருக்கின்றன. 


இந்தக் காட்சியியல் கதைசொல்லல் அணுகுமுறையானது பெரும்பாலான சமகால திரைப்பட உருவாக்கத்தில், குறைவாக, மிகக் குறைவாகவே பார்க்கிறோம். கதையைப் பொறுத்தவரை கிம் கி தக் எல்லாவற்றையும் காட்சியியல் ரீதியாகவே வெளிப்படுத்துகிறார். அவரது சிறந்த டைரக்‌ஷன் அணுகுமுறையானது இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவரது நடிகர்களுக்கு சிறந்த நடிப்பை வழங்க அனுமதிக்கிறது. 

எல்லா காட்சிகளும் அர்த்தமுள்ளவையாக இருப்பதால், அவை படத்தில் மந்தமான தருணங்கள் இல்லாத கதைக்களத்திற்குப் பங்களிக்கின்றன. கதைசொல்லலில் கிம் கி தக்கிற்கு இருக்கும் கட்டுப்பாடு, தெளிவான பார்வை, மேலும் அது காட்சிரீதியிலான அணுகுமுறையுடன் முற்றிலுமாக இணைந்திருப்பது, இப்படத்தை, கடந்த தசாப்தங்களில் நாம் பார்த்த திரைப்படங்களின் மிக அற்புதமான சாதனைகளில் ஒன்றாக, திகழச்செய்கிறது. 

காலநிலைகள்/ பருவங்கள்தான் இத்திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள்.

படத்தின் முதன்மை கதாபாத்திரமான – இளம் துறவியுடன் பருவங்களைத் தொடர்புபடுத்தும்பொழுது, இயற்கையின் இந்த மாற்றங்களை இந்தக் கதாபாத்திரத்தின் சுழற்சியுடன் நாம் தொடர்புபடுத்தலாம். 

’வசந்த காலத்தில்’ இயற்கையின் உயிருள்ள சக்தியை அவர் மதிக்கக் கற்றுக்கொள்கிறார்: ’கோடை – காலத்தில்’ அவர் காதலையும் காமத்தையும் அதன் பின்னாலுள்ள ஆபத்தையும் கண்டுபிடிப்பார்: ’இலையுதிர் காலத்தில்’ அவர் செய்த தீமைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும், ஏனெனில் எல்லாமே வீழ்ச்சியடைகின்றன; மற்றும் பருவங்களில் மிகவும் கடினமான ‘குளிர் காலத்தில்’ – அவர் தனது குரு, விட்டுச்சென்ற இடத்தை அடைய, உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்துத் தடைகளையும் கடக்க வேண்டும்.

Related image 

இந்த சுழற்சி, ஜோசப் கேம்பெல்லின் ’கதாநாயகனின் பயணத்துடன்’ தொடர்புடையதாக இருக்கலாம். ஏனெனில் பல திரைப்பட ஆர்வலர்கள் இதனை மேற்கோள் காட்ட விரும்புகிறார்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது இயற்கையின் ஆதார சக்திகளாகும், இயற்கையும் நம் வாழ்க்கையின் சுழற்சிகளை வெளிப்படையாகவே பாதிக்கின்றன, தாக்கம் செலுத்துகின்றன, நாம் என்ன செய்தாலும் அதுபற்றி கவலையில்லை, தானே தனக்கு சொந்த எஜமானனாக மாறும்வரை, அதற்கான நம் நேரம் வரும்வரை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு சமாளிக்க வேண்டும். 

இது எல்லாமே வட்டத்தை(சுழற்சியைப்) பற்றியது:

“Spring, Summer, Fall, Winter… and Spring” படத்தில், பெளத்தம் பற்றிய குறிப்புகள் நிறைந்திருந்தாலும், இது எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைச் சுழற்சியைப் பற்றிய திரைப்படமாகும். இந்தக் கட்டுரையில் முன்பு கூறியதுபோல, இயற்கையின் மரியாதை முதல், காதல் மலரும் தருணங்கள், துறவி தனது குருவின் இடத்தைப் பிடிப்பதற்கு கடினமான தடைகளை எதிர்கொள்வது வரை; இவையனைத்தும் மனிதர்களாகிய நம்முடைய நிலைக்கு ஒரு உருவகமாகும். படத்தின் ஒரு கதாபாத்திரத்தின் நிலையை வைத்து, நாம் நமது கதையைத் திரையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். படத்தில் காண்பிப்பதுபோன்றே, நாமும் நமது நிஜ வாழ்க்கையில் இத்தகைய பருவங்களையும், அந்தப் பருவங்களுக்குரிய சம்பவங்களையும் கடந்தே வந்திருக்கிறோம். 

நம்மைச் சுற்றியுள்ள இடத்தையும், சுற்றுப்புறத்தையும் மதிக்கவும் புரிந்துகொள்ளவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும், நம் உணர்வுகளின் ஆபத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளுக்கு நம் உடலையும் மனதையும் நல்லெண்ணங்களால் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்குக் கிடைத்த இந்த அறிவை, எப்படியாவது அடுத்த தலைமுறையை நோக்கி முன்னோக்கி அனுப்ப வேண்டும். 

இந்தப் படத்தினைப் பார்க்கிற பார்வையாளர்கள் எந்த மதத்தினை, சமயத்தினைப் பின்பற்றுபவர்களாகயிருந்தாலும், மேலும் அவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும், அந்தப் படத்தினுள் சென்று, அந்தப் பருவங்கள் அனைத்தையும் தன் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திக்கொள்வதற்கான சாத்தியக்கூறு இதில் அடங்கியிருக்கிறது. ஆனால், மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், நாம் ஒரு தவறு செய்துவிட்டால், அந்தத் தவறினை உணர்ந்து, அதைத் திருத்திக்கொண்டு, மீண்டும் தனது சுழற்சியை முதலிலிருந்து துவங்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்க்கையில், சில விஷயங்களைச் சரிசெய்து மீண்டும் துவங்குவதற்கு எப்போதும் ஒரு வழி இருக்கக்கூடும். மேலும் புதிய சுழற்சி துவங்கும்போது மிகச்சிறப்பாகத் துவங்கலாம். 

Related image

“Spring, Summer, Fall, Winter… and Spring” என்பது பலவிதமான கருப்பொருள்களில், பல அணுகுமுறைகளைக் கொண்ட, நிச்சயமாக சமகாலத்தில் ஒரு தலைசிறந்த படைப்பாக நிற்கிறது. படத்தின் அடிநாதமாக இருக்கிற பெளத்த தத்துவ விசாரணைக்காகவும், காட்சியியல் ரீதியாகக் கதைசொல்லும் விதத்திலும் இது தனித்துவமானது, எனவே, எந்தவொரு திரைப்பட ரசிகரின் மனதிலிருந்தும் இப்படம் அவ்வளவு எளிதில் மறைந்துவிடாது. 

நன்றி:tasteofcinema