இலங்கை தமிழ் சினிமாவின் கதை: நான் உங்கள் தோழன்

- தம்பி ஐயா தேவதாஸ்

1978 ஆம் ஆண்டு பிறந்து விட்டது. இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இந்த ஆண்டு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய காலகட்டமாகும். வருடத்திற்கு ஒன்று, இரண்டு என்று வந்து கொண்டிருந்த படம் என்ற நிலைமாறி இந்த ஆண்டில் அடுக்கடுக்காக ஆறு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்த 6 படங்களில் முதலாவது வந்ததுதான் ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படமாகும். இது வீ.பி. கணேசனின் இரண்டாவது தமிழ்ப்படமாகும். வீ.பி. கணேசன் ‘புதியகாற்று’ திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றிருந்தார். இரண்டாவது படத்தில் பல புதிய அம்சங்களைச் சேர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தார்.


எல்பிட்டிய என்ற ஊரில் பிறந்து, சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய தமிழ் இளைஞர் எஸ்.வி. சந்திரன் இயக்கிய முதல் தமிழ்ப் படம்தான் இது. (ஆனால் இவர் இயக்கிய ‘காத்திருப்பேன் உனக்காக’வே முதலில் திரைக்கு வந்தது.) படத்தொகுப்பும் இவரே.

1957 இல் கொழும்பில் கார்டினர் அவர்களால் ‘சிலோன் ஸ்டூடியோ’ ஆரம்பிக்கப்பட்டது. அங்கே உதவி ஒளிப்பதிவாளராக ஒரு தமிழ் இளைஞர் சேர்ந்து கொண்டார். 1963 இல் ஹெந்தலையில் கே. குணரட்ணம் அவர்கள் ‘விஜயா ஸ்டூடியோ’வை ஆரம்பித்தபோது இங்கே வந்து சேர்ந்துவிட்டார். இந்த இளைஞர் அங்கு கடமையாற்றிய எம். மாஸ்தானை குருவாகக்கொண்டு பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகக் கடமையாற்றினார். இந்த இளைஞனின் பெயர்தான் எஸ். வாமதேவன். இவர்தான் ‘நான் உங்கள் தோழன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

கொழும்பில் பல நாடகங்களை எழுதி நெறியாண்டு நடித்து புகழ்பெற்று விளங்கினார் ஒரு இளங்கலைஞர். இவர் தினகரன் நாடக விழாவில் ‘சிறந்த இயக்குநர்’ என்ற பரிசையும் பெற்றவர். சிறுவயது முதலே சினிமா ஆர்வம் மிக்கவராக விளங்கிய இவ்விளைஞருக்கு இப் படத்துக்கான கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. எம்.எம். ரவூப் எனும் அந்த முஸ்லீம் இளைஞரின் புனைப்பெயர்தான் ‘கலைச்செல்வன்’. இவர் இப் படத்துக்கான கதை வசனத்தை எழுதியதுடன் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தார்.

பிரதான பாத்திரத்தில் தயாரிப்பாளர் வீ.பி. கணேசனே நடித்தார். ‘சுமதி எங்கே’யில் அறிமுகமாகி ‘பொன்மணி’யில் நடித்த சுபாஷினியே கதாநாயகி. சிங்கள நடிகைகள் ஜெனீடா, ருக்மணிதேவி ஆகியோரும் ஒப்பந்தமாகினர்.

‘கோமாளி’களில் அறிமுகமாகி ‘புதிய காற்றில்’ வில்லனாக நடித்த கே.ஏ. ஜவாஹருக்கு இப் படத்திலும் வில்லன் வேடம் கிடைத்தது. ‘காத்திருப்பேன் உனக்காக’வில் அப்பாவாகத் தோன்றிய எம்.எம்.ஏ. லதீப் இப் படத்தில் இளம் வில்லனாகத் தோன்றினார். நகைச்சுவை வேடத்தில் எஸ். ராம்தாஸ், குடியானவனாக ஏகாம்பரம் ஆகியோரும் நடித்தனர். எஸ்.என். தனரெத்தினத்துக்கு கிறிஸ்தவ பாதிரியார் வேடம் வழங்கப்பட்டது.

இவர்களுடன் எஸ். சின்னையா, ஹரிதாஸ், சிவலிங்கம், தம்பிராசா, மைக்கல், டொன்போஸ்கோ, ஆர்.டி.ராஜா, எஸ். ராஜா சிதம்பரம், யோகநாதன், பஞ்சலிங்கம், அந்தனி ஜீவா, ரகுநாதன் போன்றவர்கள் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.


சந்திரகலா, ஜெயதேவி, ராஜம், நிர்மலா போன்றோர் பெண் பாத்திரங்களை ஏற்றனர். எம். றொக்சாமி இசை அமைத்த இரண்டாவது தமிழ்ப்படம் இதுவாகும். சாந்தி, முருகவேள், சாது ஆகிய கவிஞர்கள் பாடல்களை இயற்றினர்.

முத்தழகு, கலாவதி, பாலச்சந்திரன், மொஹிதீன்பெக், சுஜாதா, கனகாம்பாள் ஆகியோர் பாடல்களைப் பாடினர். ஒலிப்பதிவு கே. பாலசுப்பிரமணியம், ஒப்பனைப் பொறுப்பு சுப்புவுக்கு. பட ஆரம்ப விழா 12.11.76 இல் ஹெந்தல விஜயா ஸ்டூடியோவில் நடைபெற்றது.

படப்பிடிப்பு யாழ்ப்பாண நகர வீதிகள், மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோவில் பகுதி போன்ற பல இடங்களில் இடம்பெற்றது. ஒரு வருடம் தயாரிப்பில் இருந்த இப் படம் 06.01.78 இல் ஏழு நகரங்களில் திரையிடப்பட்டது.

‘டொக்டர் கண்ணன் பின்தங்கிய கிராமம் ஒன்றில் பணியாற்றுகிறான். அக்கிராமத்துப் பெண் ராதா, கண்ணன் மீது காதல் கொள்கிறாள். ஆனால், அதைக் கண்ணன் மறுக்கிறான். ராதா மீது மோகம் கொண்டிருந்த ராஜன் தன்னை மணமுடிக்கும்படி அவளை வற்புறுத்துகிறான்.


ராதா கண்ணன் மீது கொண்டிருந்த காதலை அறிந்த ராஜனுக்கு டொக்டர் மீது வெறுப்பு. ஒருநாள் ராஜனின் பிடியிலிருந்து தப்புவதற்காகக் கண்ணனின் வைத்தியசாலைக்குள் தஞ்சமடைகிறாள் ராதா. தண்ணீர் தாகத்தினால் அவள் தவறுதலாக மயக்க மருந்தைப் பருகிவிடுகிறாள். அங்கு வில்லனால் அவள் கெடுக்கப்படுகிறாள். பழி கண்ணன் மீது விழுகிறது. இறுதியில், குற்றத்தை ஒப்புக்கொள்கிறான் வில்லன். இதுதான் ‘நான் உங்கள் தோழன்’ கதைச் சுருக்கம். கண்ணனாக கணேசனும், ராதாவாக சுபாஷினியும், ராஜனாக லதீப்பும் தோன்றினார்கள்.

அப்பொழுது ‘சிந்தாமணி’ பத்திரிகையில் ‘ஈழத்துத் திரைவானில்’ என்ற பகுதி பிரசுரமாகி வந்தது.

‘பிரபல தொழிற் சங்கவாதியான வீ.பி. கணேசன் திரைப்படங்கள் மூலம் தொழிலாளர்கள் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டி வருகிறார். அவர் புதிய காற்றை அடுத்து ‘நான் உங்கள் தோழனை’ வழங்கியுள்ளார். உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வாழ்ந்த அரக்க உள்ளங்களை அன்பின் துணை கொண்டு பண்புடன் வென்ற மாவீரனின் இலட்சியக் காவியமே ‘நான் உங்கள் தோழன்’ என்று அந்தச் செய்தி அமைந்திருந்தது.’ 

‘சிந்தாமணி’யில் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியவர் வீ.ரி. இரத்தினம். இவர் அப்பொழுது இப் படத்தைப் பார்த்துவிட்டுத் தன் அபிப்பிராயங்களை எழுதினார்.

‘….ஈழத்தில் தமிழ்ப்பட வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று கூறுதுபோல் ‘நான் உங்கள் தோழன்’ வந்திருக்கிறது… தொழிலாளர் வர்க்கத்தின் தோழனாக வாழ்க்கையில் உயர்ந்த வீ.பி. கணேசன் திரைப்படம் மூலம் தனது இலட்சியத்தை எடுத்துக் காட்டமுனைந்த செயலே ‘நான் உங்கள் தோழன்.’ .....இலங்கைத் தமிழ்ப் படங்களை முன்னேற்றப் பாடுபட்டு வரும் வீ.பி. கணேசனின் துணிவும் நல்லெண்ணமும் அவருக்கு எதிர்காலத்தில் நல்ல வெற்றிகளைத் தேடித் தரப்போகிறது…. எது எப்படியோ ‘புதியகாற்று’ வாசனையுடன் புறப்பட்ட வீ.பி. கணேசனை ‘நான் உங்கள் தோழன்’ ஒரு படி உயர்த்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை...’ என்று எழுதினார்.

கொழும்பிலிருந்து பல காலமாக ஒரு சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதுதான் கே.வி.எஸ். மோகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘கதம்பம்’. இந்தச் சஞ்சிகையும் இலங்கைப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதுவும் ‘நான் உங்கள் தோழன்’ பற்றி விமர்சனம் எழுதியது.

‘....வீ.பி. கணேசன் ‘புதியகாற்றை’ விட நன்றாக நடித்துள்ளார். சிங்கள நடிகை ஜெனீடா, தாயாக நடிக்கும் ருக்மணிதேவி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள். தனரெத்தினத்தின் பாதிரியார் நடிப்பு அருமை. பண்ணையார் ஜவாஹர் வில்லனுக்குரிய கொடுந்தன்மை முழுவதையும் முகத்தில் தேக்கி மனதில் நிற்கும்படி நிலைத்துவிட்டார். இளம் வில்லன் லத்தீப்பின் நடிப்பில் நயமுண்டு. வயது முதிர்ந்தவராக வரும் கலைச்செல்வன் எம்.எம். ரவூப், நவரச நடிகராக விளங்குகிறார். ராம்தாஸ் மருந்து கலக்குபவராக வந்து பச்சைத் தமிழ் பேசுகிறார். ஜுனியர் சிவலிங்கத்தை நாம் மறக்கமுடியாது. சுபாஷினிகூட உணர்ச்சிகளை அழகாக முகத்தில் காட்டியிருக்கிறாரே! ஏகாம்பரம் சோடைபோகவில்லை.

வாமதேவின் ஒளிப்பதிவு குளிர்ச்சியாக இருக்கிறது. டொக்டருக்குக் கிராமத்தவர் தரும் வரவேற்பு சற்று மிகையானது. வில்லனின் மன மாற்றம் இயற்கையாக அமையவில்லை. இவ்வாறு சில குறைபாடுகள் இருந்தாலும் டைரக்டர் சந்திரன் திறம்பட செய்துள்ளார்’ இவ்வாறு ‘கதம்பம்’ விமர்சனம் எழுதியது.

தினகரனில் அடிக்கடி சினிமாக் கட்டுரைகளை எழுதி வருபவர் எம்.எவ். ஜெய்னுலாப்தீன். அவரும் விமர்சனம் எழுதினார். ‘நான் உங்கள் தோழ’னில் நாடகத்துறை நடிகர்களின் நடிப்பைத்தான் முதலில் பாராட்டவேண்டும். கதாநாயகனும் தயாரிப்பாளருமான வீ.பி. கணேசன் நடிப்பில் புதியகாற்றைவிட முன்னேறியுள்ளார். அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

கே.ஏ. ஜவாஹர், எம்.என். நம்பியாரைப் போல் கிராமத்தை ஆட்டிப்படைக்கிறார். அவர் மகனாக வரும் லத்தீபும் இவருக்குச் சளைத்தவரல்ல என்பதை நடிப்பின் மூலம் நிரூபிக்கிறார். கலைச்செல்வன், சுபாஷினியின் தந்தையாக வந்து சுடர் விடுகிறார். தனரெத்தினம் அசல் பாதிரியாராகவே மாறிவிடுகிறார். ஏகாம்பரம் டொக்டரைக் கெஞ்சும் காட்சியில் அப்ளாஸ் வாங்கிவிடுகிறார். சின்னையா தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். சிதம்பரம் முரடன் என்பதைத் தனது உருவ அமைப்பினால் நிரூபித்துள்ளார். ராம்தாஸ், ஜுனியர் சிவலிங்கம், டொன்பொஸ்கோ ஹாஸ்ய வெடிகளைக் கூறியிருக்கிறார்கள். படத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் எம்.கே. றொக்சாமியின் இசை அமைப்பாகும். முத்தழகுவும் பாலச்சந்திரனும் இனிமையாகப் பாடியுள்ளார்கள்’ என்று அந்த விமர்சனம் இடம்பெற்றது.


மித்திரன் வாரமலரில் லக்ஷ்மி அதிகமான இலங்கைத் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறார். அவரும் விமர்சனம் எழுதினார். கவர்ச்சி மங்கையின் பாத்திரத்தை ஜெனீடா ஏற்றுள்ளார். ராதாவின் உணர்ச்சி மிக்க பாத்திரத்தை ஏற்று சுபாஷினி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். ஜெயதேவியின் நடிப்பும் பரவாயில்லை. நடனமாடும் மங்கையாக சந்திரகலா தோன்றி மேலை நாட்டு நடனம் ஆடுகிறார். இவர் பெண் எழுத்தாளர் என்பதால் பெண் பாத்திரங்களை முக்கியமாகக் குறிப்பிட்டார் போலும்.

‘நான் உங்கள் தோழன்’ பெரும் பாலும் மலையகப் பிரச்சினைகளை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டது. ஆனால், அது மலையகத்தைவிட வடகிழக்குப் பகுதிகளிலேயே அதிக நாட்கள் ஓடியது.

இப் படம் மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 55 நாட்களும், தென்கொழும்பில் (பிளாஸா) 27 நாட்களும் ஓடியது. யாழ் நகரில் (ராணி) 56 நாட்கள் ஓடிய இப் படம் வவுனியாவில் (இந்திரா) 25 நாட்களும், மன்னாரில் (அயின்) 20 நாட்களும், காங்கேசன்துறையில் (யாழ்) 15 நாட்களும், முல்லைத்தீவில் (சிவசோதி) 10 நாட்களும் ஓடியது. மட்டு நகரில் (றீகல்) 31 நாட்களும், கல்முனையில் (தாஜ்மஹால்) 18 நாட்களும், வாழைச்சேனையில் (வெலிங்டன்) 10 நாட்களும் ஓடியது. திருகோணமலையில் (சரஸ்வதி) 20 நாட்கள் ஓடிய இப் படம் மூதூரிலும் (நியூ இம்பீரியல்) கிண்ணியாவிலும் (ஸ்ரீதேவி) தலா 10 நாட்ள் ஓடியது. பதுளையிலும் (கிங்ஸ்), ஹட்டனிலும் (விஜிதா) தலா 18 நாட்கள் ஓடிய இப் படம் கண்டியிலும் (ஓடியன்) மாத்தளையிலும் (சென்றல்) தலா 14 நாட்கள் ஓடியது.

1978ஆம் ஆண்டில் முதன் முதலாகத் திரையிடப்பட்ட ‘நான் உங்கள் தோழன்’ 6 வருடங்களின் பின் மீண்டும் ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டது.

அப்பொழுதும் பெரும்பாலான ரசிகர்கள் பாராட்டினார்கள். எது எப்படியோ ‘புதியகாற்று’ திரைப்படத்தில் இருந்த ‘மண்வாசனை’ இப் படத்தில் இருக்கவில்லை. ஜனரஞ்சக அம்சங்கள் நான் உங்கள் தோழனில் மிக அதிகமாகவே இருந்தன. எப்படியாயினும் இரண்டாவது வெற்றிப் படத்தையும் தயாரித்த வீ.பி. கணேசன் பாராட்டுக்குரியவரே.

-தொடரும்