சினிமாவில் தொழில்நுட்ப வளர்ச்சியும், கதை சார்ந்த வளர்ச்சியும்…

சினிமாவில் ஒரு காட்சியை பல வகைகளில் படம்பிடிக்கலாம். பல ஷாட்களின் தொகுப்புதான் ஒரு காட்சி. அப்படியிருக்கையில், நாம் ஒரு காட்சிக்காக ஒரு ஷாட்டை இந்த வழியில்தான் படம்பிடிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால், இன்னொரு ஒளிப்பதிவாளர் அதே ஷாட்டை வேறொரு பார்வையில், வேறொரு கோணத்தில் வைத்துப் படம்பிடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைப்பார். நமக்குமே கூட, இந்த ஷாட்டை வேறு எப்படியெல்லாம் படம்பிடிக்கலாம் என்ற யோசனை சில நேரங்களில் தோன்றும். ஆனால், பலவிதமான ஆய்வுகளையும், சோதனைகளையும் கடந்தபின்பு, இந்த காட்சி இந்த முறையில் எடுத்தால்தான் சிறப்பாக இருக்கும், என்று ஒரு ஷாட் வகைமையைத் தேர்ந்தெடுத்திருப்போம். அப்படித் தேர்வு செய்த ஷாட்டில், எனக்குSecond thought வந்ததில்லை.

அடுத்து, என்னைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் நாம் எடுக்கிற காட்சியானது, இன்னொருவர் எடுத்தது போன்ற பாதிப்பில் வெளிப்படும். அல்லது, நாம் இதற்கு முன்பு எடுத்த காட்சியின் சாயலைக் கொண்டிருக்கும் என நான் எந்த முன் யோசனையையும் வைத்திருக்க மாட்டேன். ஒரு காட்சி உருவாக்குகிறபொழுது, என் மனநிலையும் அப்படியாக இருக்காது. எனக்குத் தெரிந்து என்னிடத்தில் ஒரு புதிதான கதையோ, ஐடியாவோ கொடுக்கப்படுகிறபொழுது, எனக்குத் தெரிந்த அறிவுநிலையிலிருந்தும், வரையறைக்குள்ளிருந்தும்தான் அது இயங்குகிறது. சிலநேரங்களில் அது ஒரே வகைமாதிரிக்குள்ளேயே கூட சுற்றிக்கொண்டிருக்கலாம். அது இன்னொன்றைப் பிரதியெடுக்கிற, நகலெடுக்கிற காட்சியாகக் கூட இருக்கலாம். அது என்னுடைய போதாமையாகத்தான் இருக்குமே தவிர, மற்றபடி காட்சி என்பது, காட்சியின் உணர்வு என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு காட்சியுமே ஒரு புதிதான தன்மையுடன்தான் இருக்கும். எனவே, இதற்கு Second thought என்பது இல்லை என்றே சொல்ல வருகிறேன்.


சினிமா தொழில்நுட்பங்கள் சார்ந்த மாற்றங்கள்:

தொழில்நுட்பம் சார்ந்து சினிமா மாறியிருக்கிறது என்பது அது வியாபாரத்தோடு தொடர்புடைய மிக நெருக்கமான விஷயம். சாதரணமாக ஒரு இரயில் வேகத்தில் சென்றதானால், மேம்பாலம் கட்டி மெட்ரோ ட்ரெயின் வாயிலாக, அதைவிட வேகமாகச் செல்வது. இதுபோன்ற தொழில்நுட்பங்களில் அதிகமான வளர்ச்சியடைகிறபொழுது, எப்படி மனித உடல் உழைப்பின்றி, ஒரு வேலையை மிக எளிதாகச் செய்துமுடிக்க முடியும், என்ற நிலையில்தான் யோசிப்பார்கள். அப்படித்தான் நாம், ஃப்லிம் மீடியத்திலிருந்து, டிஜிட்டல் மீடியத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளின்வாயிலாக இன்னும் சினிமா சார்ந்த அறிவியலில் முன்னகர்த்திக்கொண்டேயிருக்கிறார்கள். எனக்கு ultimate call என்றால், நாம் வாழ்கிற வாழ்க்கையை இயற்கையோடு தொடர்ந்து, மறு-உருவாக்கம் செய்வது, அதை உருவாக்கக்கூடிய மீடியம் எதுவாகயிருக்கிறதோ, அதுதான் மிகவும் சவாலான ஊடகமாகப் பார்க்கிறேன். இன்றைக்கிருக்கும் சினிமாவானது அதை நோக்கித்தான் நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது. கண்களுக்கு Three Dimensional-ஐ கொடுப்பதற்கான, 3 டி படங்கள் வருகின்றன. நம் கண்கள் எப்படி இங்கிருக்கிற இயற்கையை முப்பரிமாணங்களில் அணுகுகிறதோ, அந்தமாதிரி ஒரு புரொஜக்‌ஷனை உருவாக்கியிருக்கிறார்கள். ஒலி சார்ந்து அட்மோஸ் (atmos) போன்ற பல பரிமாண விளைவுகளை திரையரங்கில் அனுபவிக்கிறோம்.

இதெல்லாமே, எதை நோக்கி சவால் விடுகிறது? நாம் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும்பொழுது, இயற்கையை நாம் ஐம்புலன்களின் வாயிலாக என்னவாக உள்வாங்குகிறோம்? என்பதும், இந்த ஐம்புலன்களையும் உள்ளடக்கக்கூடிய ஒரு ஊடகத்தை உருவாக்கவேண்டிய தேவையிருக்கிறது.


இந்தச் சாலையில் பூக்கடைகளைத் தாண்டிச் செல்கிறபொழுது, அந்தப் பூவின் வாசனை நம்மை மயக்குகிறது. அதைச் சினிமாவிற்குள் கொண்டுவர முடியாது.

பார்வையாளர்களுக்கு அந்த வாசனையைக் கொடுக்கமுடியாது. ஆனால், அந்த முயற்சிகள் மிகத்துரிதமாக நடந்து வருகின்றன. ஆனால், அதை வணிகமாக்கும் இடத்திலிருந்து அணுகுகிறார்கள். அதேபோல, நகரக்கூடிய திரையரங்குகளும் உள்ளன. நீங்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கிறீர்களென்றால், அந்த அதிர்வுணர்வை, உங்களுக்குக் கடத்த முடியும். அப்படியெனில், ஐம்புலன்களையுமே முழுதாக உள்ளடக்க முடியும். அப்படி இயற்கையையொத்த ஒரு ஊடகத்தை உருவாக்குவதென்பதுதான், மிகவும் சவாலானது. அந்த மீடியத்தை நோக்கி நகர்த்துவதற்கான அடுத்தடுத்த சாத்தியக்கூறுகளை வைத்திருக்கிற ஊடகமாகத்தான் சினிமா இருக்கிறது. அப்படித்தான் இன்றைக்கு திரையரங்குகள் எல்லாம் உருவாகியிருக்கின்றன. ஏற்கனவே, 3 டி இருந்ததுபோல, இப்போது 3 டி ஒலி வசதிகள் உள்ளன. சில திரையரங்குகளில் சினிமா காட்சிகளில் மழைபெய்தால், அதற்கேற்ப திரையரங்கில் சாரல் விழும். அதுபோன்ற சூழல்களெல்லாம் செயற்கையாக அமைக்கப்படுகின்றன. பார்வையாளர்களுக்குக் காட்சியின் ஒருபகுதியாக தானும் ஆகிவிட்டதைப் போன்ற உணர்வைக் கொடுப்பதற்கு மிகவும் முயற்சிக்கின்றனர்.


 இதுபோன்ற சாகசம் தருகிற அனுபவத்தைச் சில திரையரங்குகள் மட்டுமே தருவது போல உள்ளது. இயற்கைக்கு நெருக்கமான உணர்வுகளைக் கொடுக்கையில், நாம் அதற்குள்ளேயே சென்று வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். அந்த காட்சியை பக்கத்தில் இருந்து பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. புரொஜக்‌ஷன், எதாவது ஒன்றில் பட்டு திரைப்படமாக உருவாவதற்குப் பதிலாக, 7-டி புரொஜக்‌ஷன் போல உருவாக்கப்பட்டிருக்கிறது. வெற்றிடத்தில் ஒரு திரைப்படத்தை உங்களால் திரையிட முடியும். இம்மாதிரியான நவீன வசதிகள் கொண்ட புரொஜக்‌ஷனுமே வந்துவிட்டது. தொழில்நுட்ப ரீதியாக யதார்த்தத்தன்மைக்கு நெருங்கி வரக்கூடிய சினிமாக்களைத் தொடர்ந்து உருவாக்குகிறார்கள். இத்தகைய வளர்ச்சி தொடர்ந்து நடக்கிறது. மேலும் அதைக் கமர்ஷியலுக்குள்ளும் கொண்டுவருகிறார்கள்.

கதை சார்ந்த வளர்ச்சி

நான் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்ததன் காரணமாக, எனக்குக் கிடைத்த வாய்ப்புகளின் மூலம் உலக சினிமாக்களைப் பார்ப்பது, இந்திய சினிமாக்களை அவதானிப்பது, எல்லாம் இயல்பாக நடந்தது. அதையெல்லாம் பார்க்கிறபொழுது, மிகவும் எளிய மக்களின் வாழ்க்கையை சினிமாவிற்குள் பதிவுசெய்வதற்கான பெரிய கதையாடல்களை வைத்திருக்கிற சினிமா என்றால், தமிழ் சினிமா சூழலைத்தான் சொல்வேன். மற்ற சினிமாக்களில் நிகழ்வதைக் காட்டிலும் அதிகமான கதை சார்ந்த முன்னேற்ற சதவீதம் இங்கு நிலவுகிறது. ஆக, எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கிற, நெருடல்கள் அவர்களுக்குள் இருக்கிற வாழ்வியல்களைப் பதிவுசெய்வதென்பது, தமிழ்சினிமாவில் அதிகமாக நிகழ்கிறது. இதற்கு முன்பிருந்த காலகட்டத்தைவிட இப்போது அதிகமாக நிகழ்கிறது. ஆனால், இன்னுமே அதை ரொமாண்டிசைஸ் செய்து புரிந்துகொள்ளக்கூடிய மனோபாவம் மிக அதிகம். அதை ட்ராமட்டிக்கலாகப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம்தான் இன்றைக்கும் நம்மிடம் காணப்படுகிறது. நேரடியான எதார்த்தத்திற்குள்ளிருந்து போய் அதைப் புரிந்துகொள்ளாமல், அதை மிகவும் டிராமாவாக புரிந்துகொள்வதாகத் தோன்றுகிறது. சிவாஜி சாரின் நடிப்பைக் குறைசொல்லவில்லை. ஆனால், அவர் நாடகத்தன்மையான நடிப்பிற்குள்ளிருந்து கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறபொழுது, நடிப்பை இன்னும் மிகைப்படுத்தி புரிந்துகொள்வதை, சிறந்த நடிப்பாக ஏற்றுக்கொள்கின்றனர். அதே நேரம் மிகவும் அடக்கி வாசித்து, மிக யதார்த்தமாக நடிக்கிறபொழுது கிடைக்கிற சின்ன புரிதல் இருக்கிறதல்லவா? அதையும் நாம் உணரவேண்டும். மாறாக, ஒரே தகவலைமிகைப்படுத்தி, இங்கு புரிந்துகொள்கிற மனோபாவம் இருக்கிறது. அது இன்றைக்கும் தமிழ்சினிமாவில் தொடர்ந்து நடக்கிறது.


தமிழ்சினிமாவில் எடுக்கக்கூடிய கதைகளை மட்டும் கேட்டால், மிகவும் பிரமாதமான கதைகளாக இருக்கும். ஆனால், அந்தக் கதைகளை உருவாக்கக்கூடிய சினிமாவாக அதைப்பார்க்கிறபொழுது அது மிகவும் உயர்ந்த ட்ராமாவாக, அந்தத் திரையளவிற்கு உள்ளேயே, வியந்துபோகிற உணர்வை வைத்துக்கொள்கிற படங்களாக இருக்கின்றன. எனக்குத் தெரிந்து 3 டி படங்களாக இருந்தாலும், அந்தச் சினிமாக்களில் வருகிற கதாபாத்திரங்களின் உணர்வுத்தளங்களுக்குள் சென்று, நம் கருத்தும் அதனோடு பயணித்து, கதைமாந்தர்களோடு உரையாட முற்படுகிற சூழல் இருந்தால்தான், அதுவொரு முழுமையான படைப்பாக இருக்கும். ஆனால், அப்படி நிகழ்வதென்பது மிகவும் குறைவு.

எப்படி வெறுமனே, ஒரு டெம்ப்டேஷனுக்குள் ஒரு திரையரங்கையோ, திரையையோ பார்த்துவிட்டு, அங்கேயே அந்த உணர்வுகளையும் கைவிட்டு வரக்கூடியதாக நம் சினிமாக்கள் இருக்கின்றன. அந்தக் கதையை வேறுமாதிரியாக இங்கே பரிமாறுவதால் அப்படியிருக்கிறது. ஆனால் அதையொரு கதையாக நீங்கள் சொல்லிப்பார்க்கிறபொழுது, மிகவும் தரமான ஒரு கதையாக இருக்கும். அப்படியென்றால், இங்கு சினிமா என்பதன், உருவாக்கத்திற்கான நோக்கமென்பது வேறாக இருக்கிறது. ஆனால், இயக்குனராக அவர்கள் உருவாக்குகிற கதையம்சங்கள் மிகவும் நேர்மையானதாக இருந்தாலுமே, அதை வியாபாரமாகவும் இங்கிருக்கக்கூடிய, காட்சிமொழியின் வளர்ச்சியில், பார்வையாளனை அடுத்தத் தளத்திற்குள் தள்ளாமல், அவனுக்குத் தெரிந்த தகவல்கள் மற்றும் அவனுக்குப் பழக்கப்பட்ட தகவல்களிலிருந்தே கதைகளை எடுத்து மீண்டும் அவர்களுக்கே திரையிட்டுக் காட்டி பணம் சம்பாதிக்கிற போக்குதான் தொடர்ச்சியாக நடக்கிறது. புதிய கதைகளைத் தேடுவதிலிருந்து தப்பித்துக்கொள்கிற மனோபாவம் அவர்களுக்குக் கைகூடியிருக்கிறது.


இந்தப் போக்கினைத் தவிர்த்துவிட்டு, பார்வையாளர்களையுமே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற ஒரு பாணியை உருவாக்கவேண்டிய சூழ்நிலை வேண்டும். ஹாலிவுட்டின் அதிகப்படியான பிரதிபலிப்புதான், நம் தமிழ்சினிமாக்களின் வளர்ச்சியுமாக இருக்கிறது. ஹாலிவுட்டைப் பிரதியெடுத்துதான் கதை சொல்கிற பாணியை தமிழ்சினிமா கொண்டிருக்கிறது. அதைத்தவிர்த்துவிட்டு லத்தீன் அமெரிக்கப் படங்களோ, ஈரான் மாதிரியான படங்களோ, ஒரு படம் அந்தப் படம் பார்த்துமுடித்தவுடனும் அதனோடு பார்வையாளர்களுக்கு இருக்கிற தொடர்பு, உறவாடல், தொடர்ந்து அவர்களோடு உரையாடும், அந்த உணர்வுகளைக் கடத்தியிருக்கும் என்றால், அந்தப் படைப்பு மிகவும் வீரியமானதாகவும், மிகவும் வெற்றிகரமான படைப்பாகவும் மாறும். அதைநோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகள், இங்கு நிகழவேண்டும். அப்படி ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால்தான், அதனை கதை நிகழும் சூழலில் அடுத்தடுத்த வளர்ச்சி என்று சொல்லமுடியும்.
-தொடரும்…