ஆவணக்காப்பகம்: அரிதாரம் பூசிப் பெருவேட்கை கொண்டுழலும் நாடகக் கலைஞன்

-ச.முருகபூபதி

-இரத்தினக்குமார்

நெடிய மரபைக் கொண்ட தமிழ் நாடகக்கலைக்கு பெரும் பார்வையாளர்களோ தனித்த வாசகர்திரளோ தற்போது குறைவு அல்லது இல்லையென்றே சொல்லலாம். இத்தகைய வெறுமை [படர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நாடகக் கலைஞன் தன்னைத் தனது, படைப்பைப் பிரதானப்படுத்திச் சமூக அசைவாக்கங்களோடு வினையாற்றும் வெளியேற்ற நிலை தமிழ்ச்சூழலின் அபத்தம். இவ்பதத்திற்கிடையேயும் முருகபூபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசு, தனியார் நிறுவன ஆதரவுகள் எதுவுமின்றி தன்னையும் தனது மணல்மகுடிக் குழுவினரையும் நண்பர்களையும் நம்பி தன்னம்பிக்கையுடன் நாடகங்கள் இயற்றியும் மக்கள் முன் அதை நிகழ்த்தியும் வருவது கவனிக்கத்தக்கது.கூந்தல் நகரம் (2௦௦1), செம்மூதாய்(2௦௦9)ஆகிய நாடகத் தொகுப்புகள் முருகபூபதியின் தனித்த நாடகப் பயணத்தைக் காட்டுபவை. இவை தவிர கதைபூமி(2௦௦8),மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்புகள் (2௦௦9) போன்ற நூல்கள் இவரது முக்கிய ஆக்கங்கள்.மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்புகள், முன்னோடி நாடக ஆளுமைகளின் வரலாற்றுப் பதிவுகளற்ற தமிழ்ப் பரப்பில், கடும் உழைப்பில் தோற்றம்பெற்ற முக்கிய ஆவணம் மட்டுமின்றி மாற்று வரலாற்றெழுதியாலிற்கு ஆதாரமாகவும் அமைந்த தொகுப்பு.

 பூபதியின் நாடக வடிவங்களும் உருவாக்கமும் மாறுபட்டவை.அவை கலைந்து பிறழ்ந்த எடுத்துரைப்பியல்(Non Linear Narration)வடிவைக் கொண்டவை.மணல்குடிக் குழுவினரின் நாடகச் செயல்பாடுகள் தமிழ் நாடகத் தளத்திலிருந்து விலகிப் புதிய வழித் தடங்களைத் தோற்றுவித்து வருபவை.அண்மைக் காலங்களில் இக்குழுவினர்களால் நிகழ்த்தப்பட்ட செம்மூதாய் (மதுரைக் கல்லூரி-மதுரை,மற்றும் தேசிய நாடக விழா-டெல்லி,ஜனவரி,௦9), குற்றம் பற்றிய உடல் (புரிசை- அக்டோபர் 2௦௦8),கதை பூமி (சேதுபதி மேல்நிலைப்பள்ளி-மதுரை,செப்டம்பர் ௦9),மிருக விதூஷகம் (காந்தி அருங்காட்சியகம்-மதுரை,12 ஜுன் 2௦1௦) போன்றவற்றைத் தொடர்ந்து காணவாய்ப்புக் கிடைத்தது.நவீனத் தமிழ் நாடக அரங்க்கேற்றங்களில் இவை மிக முக்கியமானவை.

எட்டு இழைகளாகத் தொண்ணுறு நிமிடங்கள் நடைபெற்ற செம்மூதாயின் மையப்பொருளும் வடிவமும் ஐரோப்பிய நாடகப்பண்புகளுக்கு எதிர் நிலையில் இயங்கியதோடு நம் மரபுவழிப்பட்ட குணாம்சங்களுடன் அமைந்திருந்தது. உலகமயமும் தாராளமயமும் பொருளாதாரச் சீரழிவுகளுடன் இயற்கை நசிவுகளை ஏற்படுத்திவரும் சூழலில்,வனங்களோடு பிணைந்து வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களின் நெருக்கடி நிரம்பிய வாழ்வைச் சித்திரிக்கிறது செம்மூதாய். மலைவாழ் முதுகுடிகளின் நிலம் அழிக்கப்படுவதோடு வித்துக்கள் மலட்டுத்தன்மையாக்கப்பட்டு, நதிகள் கழிவுகளின் வடிகால்களாக்கப்படுகின்றன.மரங்கள் அழிந்து,வானம் பொய்த்து,பறவைக்கூட்டங்கள் தொலைந்துபோகின்றன. பழங்குடிகள் சுரைக்குடுவைகளை அசைந்து, கொம்புகளை ஊதி, பலிகொடுத்து, குலக்குடி தெய்வங்களை வழிபட்டு இழந்த எல்லாவற்றையும் மீட்கப் போராடுகின்றனர். அதற்குப் பழமரபுச் சடங்குகளைக் குழுவாக இணைந்து நடத்துகின்றனர். குரவைக் கூத்துக்களும் இறைவெறியாடல்களும் மழையாட்டப் பாடல்களும் ஆடி தாங்கள் எதிர்கொள்ளும் புதிய சிக்கல்களை நீக்கப் பார்க்கின்றனர்.மாற்றம் நிகழவில்லை.வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட அம்முதுகுடிகள் அச்சத்துடன் தங்கள் குலதேவதையான முதுகிழவியை அழைத்து மூதாதையர் போன்று இயற்கையோடு வாழ்வதற்கு வழிகளை அழுகையும் ஒப்பாரியுமாகக் கேட்கின்றனர். அதிகாரம் நிகழ்த்தும் பேரழிவின் சூட்சுமங்களை உணர்ந்த செம்மூதாயின் இமையசையாத மெளனம் அவர்களை நிர்க்கதியாக்கிவிட்டதன் உண்மையைப் புலப்படுத்துகிறது.வீடிழந்து,வனமிழந்து பழங்குடிகள் வாழ வழியின்றி நாடோடிகளாக, நகர. வீதிகளில் திரிய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சமூகமும் அரசும் அவர்களைக் குற்றங்களில் ஈடுபடத்தூண்டி கைதிகளாகச் சிறைக்கொட்டடிகளில் பூட்டுகின்றன. சிறையில் சிலர் தூக்கிலிடப்பட சிலர் எங்க அம்மா வருவா? அய்யோ இருட்டா இருக்கே. அடிக்காதீங்க சார்.. போன்ற அவலக் குரல்களால் அலற இறுதிக்காட்சி நிறைவுறுகிறது. இருட்டறைகளில் எழும் அப்பாவிகளின் அழுகுரல்களும் ‘இந்தப் பூ அவளுக்கு சார். அதக்கொடுங்க..’ என்ற மன்றாடலும் மனதைப் பிசைவன. மரங்களோடு, பறவைகளோடு, உரையாடிய மனிதர்கள் சிறைக் கம்பிகளோடு இருளில் பேசும் துயரமும் சுதந்திரத் தன்னிலைகளாகத் திரிந்தஉடல்கள் எண்களாக ஆக்கப்படுவதும் கொடுமை. அது, நர்மதாவில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பது நம் கால ஜனநாயக முடை கார்ப்பரேட் முதலாளித்துவமும் அமெரிக்கப் பினாமிகளாகச் செயல்படும் அரசுகளும் அக்னி சாட்சியாகத் தழுவிக்கொண்டு அரங்கேற்றி வரும் அதிகார துஷ்பிரயோகங்களை,மனித அழிப்புச் செயல்களைப் புனைவாக்கியுள்ளது செம்மூதாய்.

மண்ணின் மக்களான இந்திய விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலையை ஏழு பகுதிகளாகப் பிரித்து எண்பது நிமிடங்களில் பதிவு செய்தது ‘குற்றம் பற்றிய உடல்’. விதர்பா, பிளச்சிமாடாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்கள் கைவிடப்பட்டநிலையில் அடையும் துயர்களைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. வட இந்தியப் பகுதியில் பயணிக்கும் நாடகக் குழு நடத்தும் நாடகத்தின் ஊடாகக் கதைத்தளம் நகர்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசு விதவைகளையும் அநாதைகளையும் திட்டமிட்டு உற்பத்தி செய்து பெருக்கி வருவதைக் கறாராகக் காட்சிப்படுத்தியது.நாடகத்திற்குள் நாடகம்,நாடகம் மீறும் நாடகம் என நாடகத்திற்குள் பிறிதொரு நாடகத்தை அடுக்கி ஒருவகையான Meta Fiction தன்மையில் நாடகம் நகர்ந்தது. விவசாயிகள் யார்? நடிகர்கள் யார்?என்று பிரித்தறிய முடியாது,பிரதியும் நடிகர்களும் மாறி மாறி இயக்கம் கொண்டது ரசிக்கத்தக்கது.மணல் பரப்பின் இடைவெளிகளை முடங்கிய கால்களால் ஓலத்துடன் சடங்குகளால் வரைந்த நடிகனின் நடிப்பும் (மயில்சாமி)பெண் கதாபாத்திரத்தின் (ஸ்டெல்லா) ஒப்பாரியும் நாடகத்திற்குப் பிறிதொரு பரிமாணத்தைத் தந்தன. பாரம்பரிய வித்துக்களை இழந்த விவசாயிகளின் உடல்களே விதைகளாக உருமாறின. தரிசு நிலங்களைக் கழுத்தில் கட்டிய கலப்பைகளால் விவசாயிகள் உழுவது, மண்மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விவசாயிகளின் பாவனைப் பகிர்தல்கள் பார்வையாளர்களை ஈர்த்தன. மண்ணைப் பிரிய மனமில்லாத விவசாயிகளின் உடல்கள் மண்ணில் விதைகள் போல் சிதறிக் கிடப்பதும் ஆவிகளாக நிலங்களில் அலைந்து திரிந்ததும் நிலத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவு அதிகார மீறல்களால் அகற்ற முடியாதது என்பதைக் காட்டின.பொருளாதார மண்டலங்களுக்காக அடுக்குமனைக் குடியிருப்புகளுக்காக காவு கொள்ளப்பட்ட நிலங்களிலிருந்து வெளியேறிய விவசாயக் கூலிகள் நகரத்தின் தெருக்களில் குழந்தைகள் சகிதமாக மூட்டை முடிச்சுகளோடு சோகம் மண்டிய முகத்துடன் கடைகள் முன் வேலைகேட்டு நிற்பது தொடரும் பெருந்துயரம். பெரும் அழிவை நோக்கி ஒரு தேசம் பயணிப்பதின் தொடக்கம்.


மாயக்கதைகளைப் புனைந்துதிரியும் கதைசொல்லிக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவை அங்கதத் தொனியில் உரையாடிய பிரதி கதை பூமி.கதை தேடும் குழந்தைகள் கதை கேட்க அலைய, கதைப்பித்தன் கதை மூட்டைகளைச் சுமந்து திரிகிறான். கதையாளன் கேடு விளைவிப்பவனென்று எண்ணிய ஆட்சியாளர்கள் அவனைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அரசிற்கும் சமூகத்திற்கும் அவன் தேவையற்றவனாகக் காட்சியளிக்கிறான். கலகக்காரனென்று அதிகாரப் பீடங்களால் காது செய்ய,துரத்தப்படுகிறான். வேறு வழியின்றி கதைகளைக் காடுகளில் உள்ளவிலங்குகளிடமும் பறவைகளிடமும் கதைத்துத் திரிகிறான். படைப்பிற்கும் படைப்பாளிகளுக்கும் எதிராக இயங்கும் அரசுகளையும் அதன் அடக்குமுறையையும் அது சார்ந்த சமூக அமைப்பையும் கதை பூமி கேள்விக்குள்ளாக்குகிறது. நம் காற்றுகூட கதை சுமக்கும் காற்று.ஆநாள்,கதையாளன் மாபெரும் குடிமைச் சமூக அமைப்பின் போலி வாழ்வால் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறான்.ஆனாலும் அவற்றை உதறித் தனது கதைகள் வழியாகத் தன்னை மற்றொரு வடிவில் தகவமைத்துக்கொண்டு விடுகிறான்.ஷிரஷாத்களும் முல்லாக்களும் வெவ்வேறு ரூபங்களில் பெருகிக்கொண்டேயிருப்பார்கள் என்பதுதானே உண்மை. கதைசொல்லிகளும் மாயக்கதைகளும் எப்போதும் அரசுகளைப் பதற்றமடையச் செய்வன.கைது செய்தாலும் கதை வழியே கதைசொல்லி முன்னகர்ந்து விடுவதை அதிகாரங்களால் எதுவும் செய்து விட முடியவில்லை என்பதை எள்ளல் தொனியில் நிகழ்த்திக்காட்டினர் பள்ளி மாணவர்கள்.இது சிறுவர்களுக்கான நாடகமாகப் பேய்க்காமனால் பல, பள்ளிகளில்,தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலங்களில் உலகப் பொதுமனிதத்திரள் எதிர்கொண்டுவரும் புதிய வாழ்வியல் சிக்கல்களை உள்ளுறையாக்கியிருந்தது மிருக விதூஷகம்.நடிகர்கள் விதூஷகர்களாக உருக்கொண்டு அரங்கேறினர். பாமரமக்கள் உயிர் வாழ்தல் இன்றைய நிலையில் பெரும் போராட்டம் நிறைந்ததாகிவிட்டதை மையபிழையாகப் பின்னிச்சென்றது மிருக விதூஷகம்.

Miruga Vidhushagam:" Contemporary Theme And Haunting Idioms | The Theatre  Times

இலங்கைத் தமிழர்களின் முள்ளிவாய்க்கால்படுகொலைகளை,அவர்களின் புலம்பெயர்வு வாழ்வை,அகதிகளாகிப்போன சிதைந்த வாழ்வியல் கோலங்களை முதலிரு காட்சிகள் நினைவுபடுத்தின.நாடோடிகளாக அலையும் பாணர் கூட்டங்களும் முள்வேலி முகாம் அகதிகளும் பெருவேட்டையின் தடங்களாகிப் போன நிலங்களிலிருந்து வெளியேறித் தெருவில் பாலிதீன் பைகள் பொறுக்கித் திரியும் நாட்டார் கலைஞர்களும் கோமாளி வடிவில் வெளிப்பட்டனர். போர்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் அதிகாரத்திலிருப்பவர்களை நத்தித்திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டு யதார்த்தமாகிப் போன கொடுமை போன்றவற்றை பத்திற்கும் மேற்பட்ட காட்சிகளில் மிருக விதூஷகம் பதிவுசெய்தது. பன்முகமான கதையாடல்களின் வடிவ அணுகல்கள் படைப்பிற்குஅழுத்தத்தைத் தந்தன. நடிகர்கள் ஆட்டு மந்தைகளாகி ஒவ்வொன்றாக வீழ்ந்து மடிந்ததும் அதற்கேற்ப இசைந்த இசையின் லயமும் பார்வையாளர்களை நெகிழ்ச்சியடையச் செய்தன.செல்போன் பயன்பாடுகளின் முட்டாள்தனங்களைக் காட்சிப்படுத்தியிருந்த விதம் Slapstick comedyக்கு மிகச்சிறந்த உதாரணம்.அநீதிகளுக்கு எதிராகப் பேசவிடாமல் அப்பாவிகள் ஒருவரையொருவர் வாய்பொத்தி உயிர்வாழும் நிர்ப்பந்தம்,பஞ்சாரங்களில் துளையிட்டு தலையையும் இருகைகளையும் நீட்டி ஊர்ந்து வாழும் ஆமை மனிதர்கள்,சாக்குகளால் கட்டப்பட்டு பலியிடுதலுக்கு காத்திருக்கும் உடல்களை பன்னருவாளால் அறுத்தெறிந்து விடுவிக்கும் பெண்,மறைந்த பூச்சிகளையும் பறவைக்கூட்டங்களையும் தேடித்திரியும் கோமாளிகளுமாகக் காட்சி பல்வேறு களங்களில் விரிந்து சென்றது.கோமாளிகளின் உருமாறும் அடையாளங்களும் அங்கதத் தொனியில் அமைந்த கலக அரசியலும் குறியீட்டுச் செயல்பாடு மிகுந்தவை. இன்று பெரும்பாடுகளுடன் உயிர்வாழும் மனிதர்களின் மன உளைச்சல்களும் உடல் வாதைகளும் உலகச் சமூகத்தில் அதிகரித்து வந்தாலும் அதில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதம் Optimistic ஆக இறுதிக் காட்சியை அமைத்திருந்தது எதிர்பாராதது.மகிழ்ச்சிக்கும் வியப்பிற்கும் உரியது.விதூஷகர்கள் ஒரு கையில் பூவையும் மற்றொரு கையில் சகக் கோமாளிகளையும் தழுவி மிருகவிதூஷகம் எனக் கோர்வையாகத் தொடர்ந்து அரற்றியது அரங்கில் துள்ளலுணர்வைப் பெருக்கின.கோமாளிகளையும் மிருகங்களாக மாற்றாதீர்கள் நாங்கள் பூக்களைச் சூடி வருபவர்கள்.மிருகம்,பூ இரண்டில் எதை நாங்கள் தேர்ந்தெடுக்க? இரண்டில் எது வேண்டும் உங்களுக்கு? என அரசுகளையும் சுரண்டல் பேர்வழிகளையும் பார்த்து வினவுவது போன்றிருந்தது.யாசர் அராபத் ஒரு கையில் ஆலிலையையும் மறு கையில் ஏ.கே.47 யும் ஏந்தி ஐ.நா.சபையில் எதை நான் தேர்ந்தெடுக்க? என்று கேட்டது நினைவிற்கு வந்து போயின.பல நேரங்களில் போராளிகள் சமாதானத்தையே விரும்புகிறார்கள்.ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் ஆயுதமேந்தத் தள்ளப்படுகிறார்கள்.அதற்குக் காரணம் எது?யார்?கோமாளிகளையும் போராளிகளாக மாற்றிவிடாதீர்கள்.அல்லது மாறவேண்டிய தருணத்தை ஏற்படுத்தித் தராதீர்கள்.

அநீதிகளுக்கு எதிராகப் பேசவிடாமல் 
அப்பாவிகள் ஒருவரையொருவர் 
வாய்பொத்தி உயிர்வாழும் நிர்ப்பந்தம்,
பஞ்சாரங்களில் துளையிட்டு
தலையையும் இருகைகளையும் நீட்டி 
ஊர்ந்து வாழும் ஆமை மனிதர்கள்,
சாக்குகளால் கட்டப்பட்டு
பலியிடுதலுக்கு காத்திருக்கும் 
உடல்களை பன்னருவாளால் 
அறுத்தெறிந்து விடுவிக்கும் பெண்,
மறைந்த பூச்சிகளையும் பறவைக்
கூட்டங்களையும் தேடித்திரியும்
கோமாளிகளின் உருமாறும் 
அடையாளங்களும் அங்கதத்
தொனியில் அமைந்த கலக அரசியலும் 
குறியீட்டுச் செயல்பாடு மிகுந்தவை.
இன்று பெரும்பாடுகளுடன்
உயிர்வாழும் மனிதர்களின் மன
உளைச்சல்களும் உடல் வாதைகளும்
உலகச் சமூகத்தில் அதிகரித்து
வந்தாலும் அதில் நம்பிக்கையை
ஏற்படுத்தும் விதம்
ஷீஜீஹீவீனிவீஉஹீவீநீ ஆக இறுதிக் 
காட்சியை அமைத்திருந்தது
எதிர்பாராதது.மகிழ்ச்சிக்கும்
வியப்பிற்கும் உரியது.
               
அவன் மக்கள் கலைஞன். உவகையின் இருப்பிடம்.

நிலங்களை இழந்த அபலைமனிதர்கள், போர் ஏற்படுத்திவரும் அழிவுகள், தாராளமயமாக்கல் கட்டமைக்கும் ஒற்றைக்கலாச்சாரம் நவீனத்துவம் தோற்றுவித்திருக்கும் பண்பாட்டு நெருக்கடிகள்,நிராகதியடைந்த முதுகுடிகளின் அலைவுகள்,சாமான்ய மனிதர்கள் எதிர்கொள்ளும் அடையாளச் சிக்கல்கள்,தேசந்தோறும் எல்லைகளில் போர்புரியப் பிசாசுகளாய்க் காத்துக் கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனங்கள்,சூழலியல் நசிவுகள் போன்றவை பூபதியின் நாடகங்களில் உக்கிரமாகப் பேசப்பட்டு வருகின்றன.நிலம் பற்றிய கதையாடல்கள் பெரும்பாலான நாடகங்களின் உள்ளீடாக இயக்கம் கொள்கின்றன.நவீன வாழ்வை இயற்கையை நோக்கித்திருப்புதல், வனங்கள், கானுயிர்கள் மீது பரிவு,கடும் அரசு,ஊடக எதிர்ப்பு என புனைவுப் பரப்புகள் சமூக அக்கறையுடன் விரிவு கொள்கின்றன.தமிழர் தொல்குடிமரபை, மறுவரைவு செய்வதோடு நிலத்தின் அழகியலையும் மறு ஆக்கம் செய்கின்றன.பெளத்த,சமணக் கருத்தியல்களை மீட்டெடுப்பதோடு சிதைவுற்ற இன்றைய மானுட வாழ்வில் ஏற்படுத்தப்படும் மனப்பிறழ்வும் குழப்பங்களும் கவனப்படுத்தப்படுகின்றன. சங்கக்குடிகளின் தொன்மக் கூறுகளும் அண்மைக்காலத்து நம்பிக்கைகளின் தொடர்ச்சியும் இணைந்தே பூபதியின் பிரதியாக்கங்களில் வெளிப்படுகின்றன.முல்லைப்பாட்டில் முதுபெண்டிர்,ஊர் எல்லைப்புறத் தெய்வத்தை நாழியில் நெல்லிட்டு வழிபடுவது போன்று ‘குற்றம்பற்றிய உடலில் நாழி வைத்து ஊர்ப்புற தெய்வத்தை விவசாயிகள் வழிபடுவது,செம்மூதாயின் தொடக்கக் காட்சியில் சாக்கில் விளக்குகளிட்டு இன்றும் முதுகுடிகள் வழிபாடு செய்து வருவதெனப் பிரதி சரித்திரத்தின் நீட்சிகளைப் பின்னுகிறது.ஒருவகையான தொல்தொரு படிமங்கள்(Primordial Synthetic Imagination) பூபதியிடம் நவீனப் படைப்பூக்கப் படிமங்களாகத் (Modern Creative Imagination)தொடர்கின்றன.இவை தொல்பிரதிகளை மறுஉற்பத்தி செய்வதோடு நவீனப் பிரதிகளுடன் அவற்றை ஊடாடி(intertextuality) இடைப்பட்ட பல்லாயிரம் பிரதிகளின் மௌனங்களையும் இடைவெட்டுகளையும் கலைக்கின்றன.விதர்பா விவசாயிகளின் துயரம் (குற்றம் பற்றிய உடல்) பிரம்மதேயங்களிலிருந்து விரட்டப்பட்டவர்களை,இணைவியக்கம் கொள்ளச்செய்கிறது.இலங்கைத் தமிழ் அகதிகளின் துயர்களை (Monie camp) ஆஸ்விட்ச் யூத அகதிகளோடு சேர்த்து (மிருக விதூஷகம்) வழிகளைப் படரவிடுகிறது.


உடலின் சவால்களும் அதன் ஆவேச அசைவுகளும் தமிழ் நாடகப் பரப்பில் அருகி வரும் நிலையில் பூபதியின் நாடகங்களில் உடல்களின் கூடலும் கலைவும் பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குபவை. விளிம்பு மனிதர்களின் நலிந்த வாழ்வை கூட்டுடல்களின் உருவெளித் தோற்றங்களால் பிரதியுருவங்களாக்கிப் புனைந்து விடுவது இந்நாடகங்களின் தனித்துவம்.நடிகர்கள் யதார்த்த வாழ்வில் காணப்படும் உதிரிகளாகவே நாடகத்திலும் பிரதிபலிக்கின்றனர். எந்த நடிகர்களுக்கும் தனித்த பெயர்கள் இல்லை.தனிப்பெயர்களை மறைப்பதன் வழி பொது மனிதச் சாயலை நடிகர்கள் பெறுவதுமுண்டு.இது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. தனிமனித உடல்கள் நடிப்பின் மூலம் சமூக /இயற்கையின் உடல்களாக மாறுகின்றன.நடிகர்கள் மரம்,பூ,ஆந்தை,பூனை,ஆடு, பறவை எனப் பல்கிப் பெருகும் பல்லுயிர்களாகக் காட்சிகளில் உருமாறிவிடுகின்றனர்.இது மனிதனை பரிணாமத்தை நோக்கித் திருப்புவதோடு,பிரிவினைகளால் பிரிந்து கிடக்கும் மானுடத்தின் வேறுபாடுகளையழித்து மனிதனை இயற்கையில் முகிழ்த்த ஒரு துகளின் நீட்சியெனச் சித்தரிக்கவும் முயல்கிறது (செம்மூதாய் என்பது நெல்லைத் தேரிக்காட்டு மணலில் புதைந்து வாழும் ஒரு வகைப்பூச்சி மனிதனின் ஆதிவடிவமும் பூச்சிதான்). நாவால் இன்னொரு நடிகனின் பாதங்களை வருடுவது, ஒருவரையொருவர் மோப்பமிடுவது,மரவேரைப் பிணைவது, ஓர் உடல் இன்னொருஉடலுக்குள் ஒளிந்து ஓருடலாவது,நிலத்தைக் கரங்களால் கோர்த்தணைத்து அழுவது, பிய்த்தெடுப்பது, பெரிய விதைக்குத் தாய்ப்பாலூட்டுவது,நிலத்திலிருந்து விதை முளைவிடுவதுபோல் எழுவது, நத்தைபோல் சுருண்டுவிடுவது, மண்ணை நாவால் தடவுவது போன்ற நடிகர்களின் பாவனைகள் பல் உடலிகளை ஓர் உடலியாக்கி,அதன் ஆதி வடிவத்தை நோக்கிப் பயணிக்கச்செய்து பேரண்டத்தின் ஒரு புள்ளியில் இணைக்கிறது. முருகதாஸ்,கோபி,கண்ணன்,விஜயக்குமார்,கருப்பசாமி,ரஞ்சன் போன்ற நடிகர்களின் அசாத்தியமான நடிப்பால் அரங்கவெளி வினோத விளையாட்டுக்களமாக மாற்றப்படுகிறது.நடிகர்களின் சைகை,குரல், ஆரவார ஒலிகள்,நடிப்பின் அதிக சாத்தியங்களைப் பெருக்கிக் காட்டுபவை. தனி நடிகர் பின்னகர்த்தப்பட்டு குழு முன்வைக்கப்படுகிறது.மரணம்,பிரசவம் நாடகத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. பெண்கள், அரவாணிகள், மாற்றுத்திறனாளிகள், கோமாளிகள் போன்றோர் நாடகத்தில் சிறப்பிடம் பெறுகின்றனர். அரவாணி முக்கிய மாந்தராகளவிஸ் (ஸ்மைல் வித்யா)வருகிறார். நடிகர்களின் அற்புதமான நடிப்பும் மேடைப்பரப்பை அவர்கள் பயன்படுத்தும் லாவகமும் இக்குழுவினரின் பெரும் பலம்.தமிழ் நாடகச் சூழலில் இது அபூர்வம்.இக்கலைஞர்கள் கவனிக்கப்பட வேண்டியதும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதும் அவசியமானது.பொறுப்புள்ளவர்கள் இதைச் செய்வார்கள் என்று அனைவரும் ஒதுங்கிவிடவேண்டாம்.


யதார்த்த வாழ்வில் புரையோடிய சாதிய மத,காழ்ப்புகளை மாற்றியமைக்க நாட்டார் சடங்குகளையும் நாடகக் கதையாடல்களின் எடுத்துரைப்பிற்கு பயன்படுத்துகின்றனர் மணல்மகுடிக் குழுவினர்.பண்டைச் சமூகத்தில் இடம் பெற்ற குன்றக் குரவை,வேலன் வெறியாட்டு,கிராமியச் சடங்குகள், மந்திர தந்திரங்கள், பலதரப்பட்ட நிகழ்த்துக் கலைகள் போன்றவை பிரதியின் உபவெளிகளில் வினைபுரிவதற்காகவே முன்தீர்மானத்தோடு அமைக்கப்படுகின்றன. தம் குழு நடிகர்களைக் குலசேகரப்பட்டினம், பாம்புநடனச் சடங்குகள்  


முருகதாஸ்,கோபி, கண்ணன், 
விஜயக்குமார், கருப்பசாமி,ரஞ்சன் 
போன்ற நடிகர்களின் அசாத்தியமான  
நடிப்பால் அரங்கவெளி வினோத
விளையாட்டுக்களமாக
மாற்றப்படுகிறது.நடிகர்களின் சைகை,
குரல், ஆரவார ஒலிகள், நடிப்பின் 
அதிக சாத்தியங்களைப் பெருக்கிக்
காட்டுபவை. தனி நடிகர் 
பின்னகர்த்தப்பட்டு குழு
முன்வைக்கப்படுகிறது.மரணம்,
பிரசவம் நாடகத்தில் முக்கிய இடம்
பெறுகின்றன. பெண்கள்,
அரவாணிகள், மாற்றுத்திறனாளிகள்,
கோமாளிகள் போன்றோர் நாடகத்தில்
சிறப்பிடம் பெறுகின்றனர்.
   


(கேரளா),கொல்லிமலை ஆதிவாசிகளின் திருவிழாக்கள்,தலித் சடங்குகள் (இராமநாதபுரம்) என, திசைதோறும் அழைத்துச் சென்று பார்வையாளர்களாகப் பங்கேற்கச் செய்து அங்கு நடக்கும் சடங்குகளில் உள்வாங்கியவற்றை நடிகர்களின் புலன்களில்,உராய்வுகளை ஏற்படுத்தச்செய்து உருவாகும் வேதியியல் ரசமாற்றங்களில் நடிக்கத்தூண்டுவது பூபதியின் தணியாப் பெருவேட்கையின் விளைவு.அகிரா குரசேவா,தனது பிரதான நடிகர் தொஷிரோ மிபுனோவைத் தொலைக்காட்சியில் புலி, மானை வேட்டையாடுவதைத் தொடர்ந்து பார்க்கச்செய்து ‘ரஷோமா’ னில் நடிக்கச்செய்தது நினைவிற்குரியது. காட்டுமுனி,ஏழுகன்னிமார்கள்,ஒண்டிவீரன்,சங்கிலிக் கருப்பு போன்ற தெய்வங்களையும் பிற பேய்,பிசாசு வடிவங்களையும் ஆற்றல் வாய்ந்தவைகளாக நாடகங்களில் பயன்படுத்துகின்றனர். பெருந்தெய்வங்களுக்கு எதிரிடையாக (Binary Opposition), சடாமுனிகளையும் கொள்ளிவாய்ப் பிசாசுகளையும் காட்சிகளில் உருவகம் செய்து ஏவிவிடுவது முக்கியப் பின் காலனிய அரசியல் செயல்பாடாகக் கருதலாம்.மணல்மகுடிக் கலைஞர்களின் நாடகக் கட்டமைப்பு,உச்சபட்ச உடலியக்கங்கள் வழியாக வாழ்வை விஸ்தரிக்கும் உடல் அரங்காக(Body Theatre) அமைந்தாலும் நடிகர்களிடம் காணப்படும் தொல் மனிதனின் வேட்டைக்கான அசைவுகள்,புணர்தலுக்கான சமிக்ஞைகள்,எதிரிகளை அச்சுறுத்த எதிர்வினையாற்றும் விலங்குருவ பாவனைகள்,இயற்கையோடு இயைபுகொள்ள உடல் ஆற்றலை வளர்ப்பதற்கு பழங்குடிகள் நிகழ்த்தும் குழுநடனங்கள் போன்ற தொல்பண்பாட்டுச் செயல்பாடுகளால் பூபதியின் நாடகங்கள் Tribel theatre வடிவையும் Ritual Theatre உருவத்தையும் வரித்துக்கொள்வது உண்டு.

தென் தமிழகத்தின்ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று கலைஞர்கள் குடிலிட்டு தாங்களே உணவு தயாரித்து அம்மண்ணின் பண்பாட்டுக் கூறுகளோடு இணைந்து விடுகின்றனர்.நடிப்பின் பயிற்சிகளும் பலநாட்கள் நிகழ்த்திய ஒத்திகைகளும் முடிந்தபின் அந்த மண்ணிலே நாடகம் அரங்கேற்றப்படுகிறது.ஒப்பனைப் பொருள்களை அந்நிலங்களிலிருந்து நடிகர்கள் தயாரிப்பது,அப்பகுதிகளின் இசைக் கருவிகளை தேர்ந்தெடுத்து அந்த நாடகத்தின் மையக்கதையோட்டத்திற்கேற்ப இசைத்துப் பயிற்சி எடுப்பது,அரங்க வெளிகளை நெடு மணல் பரப்புகளில் தேடி அமைப்பதென ஒவ்வொரு நாடகத்திற்கும் அந்தந்த நிலச்சூழலியல் அமைவிற்கேற்பத் (Eco system)தன்னையும் தனது குழுவையும் புதுப்புனருத்தாரணம் செய்தபின்பே நாடகம் நிகழ்த்தப்படுகிறது.பிரதி (script) இந்நிகழ்வுகளூடே வளர்சிதை மாற்றமடைந்து முழுமையைடைகிறது.நாடகப்பிரதி புனைவுத்தன்மை மிக்கதாக இருக்கிறது.பல வரிகள் அற்புதமான கவித்துவத்தின் உச்சத்தை அடைந்து நாடக மொழி எது? புனைவு மொழி எது? எனப் பிரித்தறிய முடியாது மயங்குகின்றன. பாடல்களே பல நேரங்களில் உரையாடல்களாக இருக்கின்றன.

மணல்மகுடிக் குழுவினரின் அரிதாரங்கள்,கலைப் பொருட்கள்,இசைச் சேர்க்கைகள், ஒளி அமைப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கின்றன.சாக்குகளால் தயாரிக்கப்பட்ட அரையாடை அணிந்து கருஞ்சாம்பல் பூசப்பட்ட கரிய உடல்களாக வருகின்றனர் நடிகர்கள்.முகங்கள் வேறுபட்ட முகமூடிகளால் மூடப்பட்டு நடிகர்களுக்குரிய புற அடையாளங்கள் பூடகமாகப் புனையப்படுகின்றன.பச்சை இலைச் சாறுகளாலான உதடுகள், வண்ணப்பூச்சுகளாலான முகங்கள், மாட்டுக் கொம்புகளையுடைய மொட்டைத் தலை மனிதன்,மனித உடலில் எருமைத்தலை போன்ற மாறுபாடுகொண்ட ஒப்பனைகள் மூலம் மானுடப் பல்முரண்களும் பொருந்தாத் தன்மைகளும் குறியீடுகளாகக்கப்படுகின்றன.மரப்பொம்மைகள்,தாழிகள்,சுரைக்குடுவைகள்,இறகுகள்,கந்தல் உடைகள்,சிமிழ்விளக்குகள்,வைக்கோல்பிரி, பனையோலை போன்ற புழங்கு பொருட்கள் ஐரோப்பிய நாடக மரபிற்கு பதிலீடாக தமிழ் நாட்டார் மரபிலிருப்பவற்றை முதன்மைப்படுத்துகின்றன. பழங்குடியினருக்கான புழங்குபொருள் பண்பாட்டு வேர்களில் காணப்படும் அடையாளங்களை உயிர்ப்புக் கொள்ளச் செய்கின்றன.கலைப் பொருட்கள் அடையாள மீட்பு மற்றும் ஆதிக்க எதிர்ப்பு என்ற நுண் அரசியலுடன் பிரதானப்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.வெள்ளை ஆடைகளுக்குள் மூடப்பட்டு நடிகர்கள் எழுந்திருப்பது,ஈரத்துணியால் போர்த்தியவற்றுள்ளிருந்து விதைகள் முளைத்து நிமிர்வதை உருவகப்படுத்துகிறது. செம்மூதாய்க் கிழவியின் நீண்ட ஆடையில் அனைத்து நடிகர்களும் புகுந்து மறைந்துகொள்வது,தொப்புள்க்கொடி வம்சாவளியினரின் கொடிவழி உறவை தக்கவைக்க மூலவடிவத்தில் புதையும் இனமறைப்பெனலாம்.மண்ணில் புதைந்த புத்தனின் பிரதிமையை மஞ்சளாடையால் ஒத்தி எடுத்து இந்துமயமாக்கலை மறுத்து பெளத்தத்தை மீட்கும் தேவையை வலியுறுத்துகிறது.

இசைக்கருவிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து சிரத்தையுடன் சேகரிக்கப்பட்டு ஒத்திசைவாக இசைக்கப்படுகின்றன. (இசை: முருகபூபதி,சந்தானபூபதி,முருகதாஸ்)கொக்கரை,கொம்பு,தோல் வாத்தியம்,சங்கு,குழல்,டிஜிரிடு(ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் இசைக்கருவி),முதலிய கருவிகள் நிலத்தின் தனித்துவங்களை ஓர்மையுடன் இசைக்கின்றன.மக்களின் கருவிகளின் ஓசையும் மலைவாழ் மக்களின் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கூட்டு ஒலிகளும் குலவைகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.துயரத்தைப் பிளிற்றுவது, ஒருங்கிணைப்பது, துடிசாமிகளை அழைக்கும் பேயாட்டப் பாடல்கள்,மழையாட்டப் பாடல்கள்,குழுநடனங்களென நாட்டார் இசை இயல்பாக இடம்பெற்றுக் காட்சிகளுக்கு வலுச்சேர்க்கின்றன.

ஒளியமைப்புக் காட்சிகளை ஓவியங்களாக்குகின்றன.பெரும்பாலான நாடகங்கள் இரவின் பின்புலத்திலே நடத்தப்படுகிறது.விரிந்து பரந்த மேகங்களுக்கு,ஊடாக ஒளிரும் தாரகைகளுக்குக் கீழே,திறந்த வெளியின் இருளில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களிடம் கனத்த மௌனத் தயாரிப்பைக் கோரி நிற்கிறது.காரிருளில் அசைந்தசைந்து வரும் சிமிழ் விளக்குகளும் பற்றி எரியும் தீப்பந்தங்களும் இருள் கசியும் மணல் பரப்பில் சுழலும் வண்ண ஒளிகளில் (ஒளியமைப்பு: சந்தானராஜ்) காட்சி ரூபங்கொண்டு அழகு செய்கின்றன.மண்ணிலிருந்து ஊர்ந்துவரும் நில உடலிகள் பல்வேறு ஒளிச் சிதறல்களில் கசிந்த நிறப்பிரிகைகளால்நிழல்களாக,உடலின் அரூபங்களை மணல் முற்றங்களில் வரைந்து மனத்தில் கனவுத் தன்மையையும் மயக்க நிலையையும் படர்த்துவன. Wong Kar Wai படங்களில் காணலாகும் வண்ணக் குழம்புகளாலான காட்சிப் படுத்தல்களை அவை ஒத்திருந்தன.ஒளிச்சிதறல்களில் உடல்களின் பிம்பங்கள் நிகழ்த்தும் வினோதங்கள் உன்மத்தத்தின் உச்சத்திற்கு நம்மைக் கொண்டுசெல்பவை.இரவுகளில் கூட்டுடல் நிழல்கள் வரையும் காட்சிச் சித்திரங்கள் நம் உணர்வுக் கொந்தளிப்பை அதிகரிப்பவை.அறிவுசார் பார்வையாளனுக்கு ஏற்படும் உணர்வும் மனப்பயணங்களும் அலாதியானவை.பல்வேறுபட்ட படிமங்களைக் கிளர்த்துபவை.

கதைகேட்பது, கதைசொல்வது,கதைதேடுவது, அரசு, ஊடக எதிர்ப்பு,நாடகத்தில் வந்துகொண்டே இருக்கிறது.நம் காலத்துயர்களைத் தமிழ் நிலப்பரப்பில் காணப்படும் கூட்டுச் சடங்குகளையும் தொல்தொன்மங்களையும் இணைத்து உடல்வாதைகளாகப் பாவித்துக்காட்டி வருகின்றனர் மணல்மகுடிக் கலைஞர்கள். அது தேரிக்காடுகளிலும் உலகறியா உள்காடுகளிலும் முன்னர் நிகழ்ந்து வந்தது. தற்போது அது மதுரை,சென்னை என விரிந்து பயணிக்கத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.முருகபூபதி,நாடகம் நடக்கும் ஊர்களில் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பைப் பயிற்றுவித்துப் பயன்படுத்தி வருவது சவாலான செயல்.வெற்று ஆரவாரங்களால் ஊதிப் பருத்த பலூன்களில்(பல்கலைக்கழகம்,கல்லூரி)செயல்படமுடியாத கலைத் தினவுகொண்ட மாணவர்களைத் தேடிக் கண்டறிந்து தொடர்ந்து,தனது நாடகங்களில் நடிக்கத்தூண்டி வருவது மகிழ்ச்சிக்குரியது.உதாரணம் மானேஜ் மற்றும் பழனியின் நேர்த்தியான நடிப்பு(மிருக விதூஷகம்).பெரும் நாடகப் பேராசிரியர்கள் சமீபகாலங்களில் செய்யத் தவறிய அல்லது செய்ய விரும்பாத இடங்களை கல்விப் புலங்களுக்கு வெளியிலிருந்து பிரதி பலனின்றி,கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே முருகபூபதி நிரப்பி வருவது பாராட்டுக்குரியது.

Murugaboopathy - YouTube

பல்லுயிர் வாழ்வின் ஆதாரமான சூழலியலின் நசிவை வீரியமிக்க நாடகமுயற்சி. அதில் காலனிய அடையாள அழிப்பின் வழி(Decolonising mind) தமிழ் அடையாளங்கள் மீளாக்கம் செய்யப்படுகின்றன.தமிழ் நாடகக்கலையினை வடிவம் சார்ந்து அடுத்த தளத்திற்கு நகர்த்தும் முனைப்பையும் மாற்றுத்தேடலையும் பூபதியிடம் காணமுடிகிறது.இவை தமிழ் நாடகச் சூழலில் மாற்றுப்பாதையை ஏற்படுத்துவதோடு புதிய சாளரங்களை உடைத்துத் திறக்கும் ஆற்றலுடையவையாக இருக்கின்றன.நாடக ஆளுமைகள் அருகி வரும் நிலையில் முருகபூபதியும் அவர்களது குழுவினரும் பெருத்த நம்பிக்கையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.  

நன்றி: உயிரெழுத்து