நெஸ்டர் அல்மெண்ட்ரோஸ்




நெஸ்டர் அல்மெண்ட்ரோஸ் இன்று உலக அளவில் மிகச்சிறந்த ஒரு சில ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். ட்ரூஃபொவின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு இயக்குநராக பணியாற்றியவர். Days of Heaven என்ற ஹாலிவுட் படத்திற்காக ஆஸ்கார் விருதைப்பெற்றவர். தன் தொழில் நுட்பம் மற்றும் கலை குறித்து தெளிவான சிந்தனைகளை உடையவர். ஐரோப்பிய இயற்கை உணர்வுகளை அமெரிக்கப் படங்களுக்கு கொண்டுவந்தவர். ஃபிலிம் சொஸைட்டி இயக்கத்தின் மூலம் தன் சினிமா வாழ்வை துவக்கியவர். சமீபத்தில் இறந்துபோனார் இந்த காமிரா கலைஞன்.

“Days of Heaven” படத்திற்காக நான் முதன்முதலில் காமிரா வழியே பார்த்தபோது, ரிச்சர்ட் கிரீனுடைய கண்கள் மிகச்சிறியதாய் தெரிந்தன. ஆனால், இரண்டாவது முறை பார்த்தபோது , அது எனக்கு குறையாக தெரியவில்லை. உண்மையில் அதுதான் அந்த நடிகனுக்கு ஆழ்ந்த உயிரோட்டமான நளினத்தை தந்தது. அந்நடிகனின் இனக்கவர்ச்சிக்கே அந்த கண்கள்தான் காரணமாய் அமைந்தன.” 1987ல் Film Comment பத்திரிகையில் ஒரு கட்டுரையில் நெஸ்டர் அல்மெண்ட்ரோஸ் இவ்வாறு கூறுகின்றார். அக்கட்டுரை முழுவதும் அவரின் இது போன்ற ஆழமான ஆச்சர்யமான கருத்துக்களைப் பார்க்க முடியும். 1985ல் வெளியான அவரது A Man With The Camera புத்தகம் ஆழமான ஒரு சுயசரிதை மட்டுமல்ல, ஒளிப்பதிவில் நாட்டங்கொண்டவர்களுக்கு ஒரு அகராதியும் கூட.
1978ல் Days of Heaven படத்திற்காக அல்மெண்ட்ரோஸிக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இப்படத்தில் 1935களின் மத்திய மேற்கத்திய வயல் வெளிகளை ஒரு ஓவியனைப் போல் படம் பிடித்துக்காட்டினார். ஆனால் துரதிருஷ்டவசமாக இப்படம் ஹாலிவுட்டில் ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

”இயற்கையை நான் அத்தனை பொருட்படுத்தவதில்லை. ஆனால் அதே இயற்கை மனிதனின் இயற்கையை வெளிக்கொணரும்போது அதிலே எனக்கு அளவில்லாத ஆர்வம்” என்று கூறும் இவருக்கு பெண்களைப் படம் பிடிப்பதிலும் விஷேச ஆர்வம். “பெண்களை காமிரா வழியே அழகாக படைக்கும் பொழுது அதில் ஒரு அலாதியான திருப்தி எனக்கு. நான் இவ்வாறு கூறுவது என் பாலியல் நிலைப்பாட்டை வைத்து அல்ல” என்கிறார். மெரில் ஸ்டீரிப் (Meryl Streep) ஐ Kramer Vs Kramer (1979) Still of the Night (1981) Sophie’s Choice (1982) மற்றும் Heart Burn(1986) படங்களுக்காக படம் பிடித்தார். தன்னோடு பணியாற்றிய நடிகைகளிலேயே பாவங்கள் நிறைந்த மிகுந்த புத்திசாலி நடிகை என்று வர்ணிக்கிறார். ட்ரூஃபோவின் The Last Metro (1980) படத்திற்காக கேதரீன் தெனுவ் (Catherine Deneuve)வையும் Places in or the Heart (1984)ல் சேலி ஃபீல்டை (Sally field)யையும் மற்றும் எரிக் ரோமர், ட்ரூஃபோ படங்களுக்காக பல கவர்ச்சியழகிகளை படம் பிடித்த அவர், ஆண் நடிகர்களை கையாளுவதில் மிகவும் கண்டிப்பானவராக இருந்தார். ராய் ஷைடர், ஜேக் நிக்கல்ஸன் போன்ற நடிகர்கள், இவரின் வற்புறுத்தலுக்காக படப்பிடிப்பின்போது தங்களின் சூரிய குளியலைக் கைவிட வேண்டியதாயிற்று.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் பிறந்த இவர் 1948ல் க்யூபாவுக்கு குடியேறினார். அங்கு ஃபிலிம் சொஸைட்டி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் தாமஸ் குரியே அலியாவுடன் சேர்ந்து Unor Confusion Cotidiannaஎன்ற துண்டு படத்தை எடுத்தார். 1956ல் ஹவானாவில் பட்டம் பெற்றபின் சில காலம் நியூயார்க்கில் ஆசிரியராக இருந்தார். பின்னர் ரோமில் சினிமாட்டோகிராபி பயின்றுவிட்டு மீண்டும் 1959ல் கியூபாவுக்கு இயக்குநர் – ஒளிப்பதிவாளராக திரும்பினார். காஸ்ட்ரோவின் ஆட்சியோடு ஏற்பட்ட சில நெருக்கடி காரணமாக, பாரிசுக்கு வந்தார். அங்கு அவருக்கு இருந்த ஒரே தொடர்பு CinemathequeFrancaiseஆகும். ஒரு முறை எரிக் ரோமரின் Paris Vu Par(1964) படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்த போது ரோமர் தன் காமிரா மேனை சண்டை காரணமாக வெளியேற்றினார். அப்போது அல்மெண்ட்ரோஸ் தான் ஒரு ஒளிப்பதிவாளர் என்று கூறி அதை நிரூபிக்கவும் செய்தார். அதன் பின் ரோமரின் La Collectioneuse (1966), My Night with Maud (1969), Love In the Afternoon(1972) Pauline on the Beach (1982) படங்களுக்கு காமிராமேனாக பணியாற்றினார்.
1969ல் ட்ரூஃபோவுக்காக L’Enfant Sauvageபடத்தில் முதன் முதலாக பணியாற்றிய இவர் அவரின் கடைசிப் படமான VivementDimanchle(1983) படம் வரை அவர்களின் நட்பு தொடர்ந்தது. L’Enfant Sauvageபடத்தில் நெஸ்டர் அல்மெண்ட்ரோஸின் ஒளிப்பதிவு மிகச்சிறந்த ஒன்றாக கருதப்பட்டது. இப்படத்தில் இவரின் கறுப்பு – வெள்ளை ஒளிப்பதிவு பழைய புகைப்படங்களில் காணக்கூடிய அற்புத ஒளித்தன்மையை கொண்டிருந்தது. இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட Fades, gridesபோன்ற ஆப்டிகல் எஃபெக்ட்ஸ் மெளனப் படங்களை நினைவு கூர்வதாய் இருந்தது. இப்படத்தை பார்த்ததன் விளைவாகத்தான் ஹாலிவுட்டைச் சேர்ந்த ராபர்ட் பெண்ட்டான் தன்னுடைய Kramer Vs Kramer படத்திற்கு அல்மெண்ட்ரோஸை ஒளிப்பதிவாளராக அமர்த்தினார். இப்படம் ட்ருஃபோவுக்கு செலுத்தப்பட்ட ஒரு வித அஞ்சலியாகும்.
ஆரம்பத்தில் அமெரிக்காவில் பணிபுரிவது, அல்மெண்ட்ரோஸிக்கு கடினமாக இருந்தது. அங்கிருந்த தொழிற்சங்க கட்டுப்பாடுகள் அவருக்கு பல சங்கடங்களைக் கொடுத்தது. ஆனால், Days of Heaven படம் வெளிவந்த பின் இந்நிலை அடியோடு மாறியது. ஸ்வன் நிக்விஸ்ட் (Sven Nykvist) (பெர்க்மனின் காமிராமேன்), விட்டோரியா ஸ்டோரோரோ (Vittorio Stororo), வில்மாஸ் ஸிக்மாண்ட் (VilmosZsigmond) போன்ற ஒளிப்பதிவாளர்களுக்கு இணையான மதிப்பு இவருக்கும் கிடைத்தது. அதன் பின் பல ஆண்டுகள் இவர் நியூயார்க்கும், பாரிசிற்கும் இடையே பெண்ட்டான், ரோமர், ட்ரூஃபோ படங்களுக்காக பறந்துகொண்டிருந்தார். இயற்கை ஒளியை அதிகமாக பயன்படுத்தக்கூடிய இவரின் ஒளிப்பதிவு முறை அமெரிக்காவின் கோர்டான் விலிஸ் (Gordon Willis) ப்ரூஸ்ஸர்டீஸ் (Bruce Surtees) போன்ற ஒளிப்பதிவாளர்களை பாதித்தது. இவர்கள் காரணமாக, ஹாலிவுட் சினிமாவிற்கு ஐரோப்பிய இயற்கை உணர்வு வந்தது.

சமீப காலங்களில் அவரின் ஒளிப்பதிவு வேகம் குறையத் தொடங்கியது. ஒருவேளை ஒரே இயக்குநர்களின் படங்களுக்கு தொடர்ந்து பணியாற்றியது காரணமாக இருக்கலாம். 1986ல் மார்ட்டின் ஸ்கார்ஸிஸி (Martin Scorsese)யின் ஒரு விளம்பர படத்திற்கும், தொலைக்காட்சிப் படத்திற்கும் பணியாற்றினார்.
1988ல் க்யூபாவுக்கு திரும்பிய அல்மெண்ட்ரோஸ் Nobody Listens என்ற படத்தை எடுத்தார். இப்படம் காஸ்ட்ரோ ஆட்சியில் சித்திரவதைக்குள்ளான ஹோமோ ஸெக்ஸீவல்களைப்பற்றியது. துரதிருஷ்டவசமாக இப்படத்தை யாரும் பார்க்கவில்லை. கடந்த ஆண்டு அர்மானி பற்றிய மார்ட்டின் ஸ்கார்ஸிஸி இயக்கிய துண்டுபடத்தை ஒளிப்பதிவு செய்தார். இவரின் முக்கிய கடைசிப் படம் பெண்ட்டானுடைய Billy Bathgate ஆகும்.


சலனம் ஜீன் – ஜீலை - 1992