எனக்குப் பிடித்த இயக்குனர் கிம் கி தக்: இயக்குனர் பிஜூ தாமோதரன் பேட்டி

Gajendra Singh Bhati

-தமிழில்: தீஷா

மலையாளத் திரையுலகில் சுயாதீன சினிமாக்களுக்கான அடையாளமாகத் திகழ்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் பிஜூ தாமோதரன். தன் படங்களுக்குள் மெளனத்தை அழகாகப் பயன்படுத்துகிறவர். தனக்கென தேர்ந்த சினிமா மொழியின் மூலம் உலகத் திரைப்பட விழாக்களிலும் தனிக்கவனம் பெறுகிறார். தனது சினிமா மீதான ஆர்வம் குறித்தும், உலகத் திரைப்பட விழாக்களின் அறிமுகம், மற்றும் விருப்பமான இயக்குனர்கள் என தன் அனுபவங்களை பிஜூ பகிர்ந்துகொள்கிறார். 

சினிமா பற்றிய உங்கள் ஆரம்ப கால நினைவுகள்?

நான் கேரளாவின் ஒரு எளிய கிராமப்புறத்திலிருந்து வந்தவன். சிறுவயதில் என் தந்தை, என்னை ஒரு சினிமாவிற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு பேய்ப்படம் என்று நினைக்கிறேன். சரியாக நினைவிலில்லை. ஆனால், நான் பார்த்த முதல் படம் என்றால் அது ‘காந்தி’ என்று சொல்லலாம். அப்பொழுது நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்ததால், மாணவர்களோடு அந்தப் படம் பார்க்கச் சென்றேன். அதன் பிறகு நான் பல வணிகத் திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன், ஆனால் இப்போது அவற்றை என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. எனக்கு இந்த ‘காந்தி’ என்ற படம் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

Kim Ki-duk | Laljose's Blog

ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த காந்தியா?

ஆம், அட்டன்பரோவால் எடுக்கப்பட்ட ’காந்தி’ திரைப்படம்தான். எனக்கு அந்தப் படம் நன்றாக நினைவிலிருக்கிறது, ஏனெனில் அப்பொழுது திரையரங்கில் உயர்சாதி என்று சொல்லிக்கொண்டவர்களுக்கு மட்டுமே இருக்கைகள் தரப்பட்டன, நாங்களெல்லாம் அந்தப் படத்தை தரையில் அமர்ந்துதான் பார்த்தோம். 

நீங்கள் சிறுவயதில் எப்படிப்பட்ட பையனாக இருந்தீர்கள்? என்னென்ன மாதிரியான கதை சொல்லலெல்லாம் உங்களுக்கு அருகாமையில் கிடைத்தது?

எனக்கு நல்ல வாசிப்புப் பழக்கம் இருந்தது. எனவே, நான் சிறுவயதிலிருந்தே, கிட்டத்தட்ட நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து என்று நினைக்கிறேன், அப்போதிருந்தே அருகிலிருந்த நூலகத்தின் உறுப்பினராகச் சேர்ந்துகொண்டேன். அந்நூலகத்திலிருந்து தினமும் ஒரு புத்தகம் எடுப்பேன். நான் நல்லதொரு வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். மலையாளத்தில் பாண்டித்யம் பெற்ற பல சமகால எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள், நாவல்கள் மற்றும் இன்னபிற இலக்கியங்களையும் படிப்பேன். நான் பன்னிரண்டாம் வகுப்பிற்குச் செல்லும்வரை இது தொடர்ந்தது. அது ஒரு சிறிய நூலகம், எனவே ஆறு மாதங்களுக்காகவே அங்கு இருந்த எல்லா புத்தகங்களையும் வாசித்து முடித்து விடுவேன். பிறகு, அங்கிருந்து மாறி, அருகிலிருந்த கிராமத்திலுள்ள மற்றொரு நூலகத்திற்குச் செல்ல ஆரம்பிப்பேன். நான் அந்த நூலகத்திலும் என்னை ஒரு உறுப்பினராக இணைத்துக்கொள்வேன். அந்த நேரத்தில் நான் ஆறு கிராம நூலகங்களின் உறுப்பினராக இருந்தேன். எனவே, என்னைச் சுற்றியுள்ள உலகத்தை, நான் இதன் வழிதான் அறிந்துகொண்டேன் என்று நினைக்கிறேன். புத்தகங்கள் என் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. 

எந்த நேரத்திலிருந்து நீங்கள் உலகம் முழுவதும் எடுக்கப்படுகிற திரைப்படங்களுக்கு அறிமுகமானீர்கள்?

திரைப்படங்களைப் பொறுத்தவரை, உண்மையில் நான் இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் வரையில், மலையாள வணிக சினிமாக்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திரைப்படங்களையும் நான் பார்த்ததில்லை. பின்னர், நான் உயர் படிப்பிற்காக தலைநகரமான திருவனந்தபுரத்திற்குச் சென்றேன். அந்நேரத்தில்தான் கேரள சர்வதேச திரைப்பட விழா நடந்துகொண்டிருந்தது. அங்குதான், நான் திரைப்படங்களைப் பார்த்தேன். முதலில் நான் சில ஈரானிய திரைப்படங்களையும், சில துருக்கியத் திரைப்படங்களையும்தான் பார்த்தேன். அப்போதுதான், இந்த உலகில் மலையாள சினிமாக்களைத் தவிர, அரசியல் ரீதியாகவும், கவிதாபூர்வமாகவும், சமூகக் கண்ணோட்டத்துடனும் எடுக்கப்படுகிற திரைப்படங்கள் நிறைய உள்ளன என்பதை அறிந்துகொண்டேன். எனது முதல் ஈரானிய திரைப்படத்தைப் பார்த்தபொழுது, மிகவும் பாதிக்கப்பட்டேன்.

உங்கள் பெற்றோரைப் பற்றி…?

என் தந்தை அரசு ஊழியர். அது ஒரு எழுத்தர் வேலை. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் ஒரு சிறிய கிராமத்தில், மிகவும் அமைதியான கிராமத்தில், அமைதியான மக்கள் சூழ வாழ்ந்தார். மிகச் சிறிய அளவிலான அந்தக் கிராமத்தில், போடப்படுகிற சில நாடகங்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் அவருக்கு வாசிக்கும் பழக்கமும் இருந்தது, அது என்னை ஈர்த்தது. அவர் மிகவும் நேர்மையான மனிதர், மிக மிக அடக்கமானவர், தன் குடும்பத்திற்கும், தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் எப்போதும் உதவும் மனப்பான்மை கொண்டவர். எங்கள் முழு குடும்பத்திலும், அரசாங்க வேலையில் இருந்த ஒரே மனிதர் அவராகத்தான் இருந்தார். நாங்கள் பணம் படைத்தவர்களாக இருக்கவில்லை. நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்துதான் வந்தோம், ஆனால் அவரது சிறிய வருவாயிலிருந்துதான் குடும்பத்தை நடத்தினோம். தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களின் மீதும் அக்கறை கொண்டிருந்தார். எனது குழந்தைப் பருவமும், பள்ளிப் பருவமும், வாழ்க்கையும் மற்ற எல்லா சாதாரண குழந்தைகளையும் போலவேதான் இருந்தது. செல்வத்தின் அடிப்படையில் பார்த்தால், நாங்கள் ஒரு சராசரி குடும்பத்திற்கும் குறைவானவர்களாகவே இருந்தோம், அதுதான் என்னை மற்றவர்கள் மீது இரக்கப்படுபவனாகவும், கவனித்துக்கொள்பவனாகவும் என்னை மாற்றியது. என் பெற்றோருக்கு சினிமாவுடன் எந்த உறவும் இல்லை, ஆனாலும், அவர்கள் நான் திரைப்படம் எடுப்பது குறித்துச் சொன்னபொழுது, அவர்கள் என்னை ஆதரிக்கவே செய்தனர். திரைப்பட உருவாக்கம் தொடர்பாக அவர்களுக்கு எதுவும் தெரியாது, அதன் எதிர்காலம் எப்படியிருக்குமென்றும் தெரியாது, ஆனால் அவர்கள் என்னை ஒருபோதும் நம்பிக்கையிழப்பது போல பேசியதில்லை. அவர்கள் எனக்கு நிறையவே ஒத்துழைப்பு தந்தனர். 

உங்கள் அம்மா…?

அவரும் மிக அன்பான மனிதர். இல்லத்தரசி. என் தாத்தா மீது எனக்கு மிகுந்த பாசம் உண்டு. நான் திரைப்படத்துறைக்குள் வருவதற்கு முன்பே என் தந்தை இறந்துவிட்டார்.

உங்கள் முதல் திரைப்படத்தை, உங்கள் பெற்றோர்கள் பார்த்தார்களா?

என் அம்மா மட்டும் பார்த்தார், அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் என்னுடன்தான் வசிக்கிறார். ஆனால், என் தந்தை, நான் திரைப்படங்கள் இயக்குவதற்கு முன்பே இறந்துவிட்டார். 

உங்கள் கனவு நனவாகும்பொழுது, அதைப் பார்க்க அங்கு அவர் இல்லை என்பது எவ்வளவு மோசமான உணர்வு?

ஆம், இது மிகவும் மோசமாக இருந்தது. நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவர் இறந்துவிட்டார். அந்நேரத்தில் நான் சிறு - சிறு ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தேன். பொருளாதர ரீதியாகவும் நாங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. என் தந்தை அப்போது ஓய்வு பெற்றிருந்தார், அவருடைய ஓய்வூதியத்தில்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தோம். அந்நேரத்தில்தான் அவர் இறந்துபோனார். அதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான், நான் எனது முதல் படத்தை எடுத்து முடித்தேன். ஆனால், அவர் என் படத்தைப் பார்க்கவில்லையென்பது வருத்தமளிக்கிறது. 

படிப்பை முடித்த பிறகு?

நான் எனது படிப்பை முடித்தபிறகு, ஹோமியோபதி பயிற்சியைத் துவங்கினேன், ஆனால் அது சரியாக அமையவில்லை. எனக்கு வேறு வேலையும் கிடைக்காததால், நான் எப்போதாவது சிறு சிறு ஆவணப்படங்களை எடுக்கத் துவங்கினேன். பின்னர் என் திருமணம் நடந்தது. பின்னர் என் திருமணம் நடந்தது. என் தந்தை உடல்நிலை சரியில்லாமல், படுக்கையில் கிடந்தார், மேலும் அவர் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தார். அவர், நான் திருமணம் செய்துகொள்வதைப் பார்க்க விரும்பினார், அதனால் நான் திருமணம் செய்துகொண்டேன். ஒரு வருடம் கழித்து அவர் இறந்துவிட்டார். 

Bijukumar Damodaran, popularly known as Dr. Biju is all set to direct his  next big project which is being made in t… | Streaming movies free, Top  movies, New movies

மலையாளம், தமிழ், தெலுங்கு, பாலிவுட் அல்லது ஹாலிவுட்டில் உள்ள பெரும்பாலான வணிகத் திரைப்பட இயக்குனர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் சமத்துவத்தை எவ்வாறு சித்தரிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதைவைத்துப் பார்க்கையில், உங்கள் திரைப்படங்கள் உண்மையிலேயே திருப்தி அளிக்கின்றன. உங்கள் முதல் திரைப்படத்திலேயே கூட ஒரு நல்ல பெண் பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் இருக்கிறது, அத்தோடு பயங்கரவாதம், சிறுபான்மை மற்றும் அதன் சொந்த மக்களுக்கு எதிரான அரசின் அதிகாரம் பற்றிய கருத்துகள் பதிவாகின்றன. இந்தப் பார்வையை நீங்கள் எவ்வாறு பெற்றீர்கள்? மேலும், இன்று நீங்கள் இருக்கும் நபராக உங்களை உருவாக்கியது எது?

ஆம்! இறுதியில் அது மூன்று விஷயங்களால்தான் நிகழ்கிறது. ஒன்று எனது வாசிப்புப் பழக்கம், இரண்டாவது நான் நிறைய பயணம் செய்தேன். இந்தப் பயணத்தின் காரணமாக நான் பலதரப்பட்ட மக்களைப் பார்க்கிறேன், சந்திக்கிறேன், பல விளிம்புநிலை மக்களோடு உரையாடுகிற வாய்ப்பு கிடைத்தது. மற்றும் மூன்றாவது எனது சித்தாந்தம். இன்றும் சாலையோரத் தெருக்களில் வசிக்கிற மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறபொழுது, நாம் இங்கு முந்நூறு கோடி ரூபாய் பொருட்செலவில் திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்! என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கும். இது எப்படி நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! மக்கள் எப்போதும் துன்பப்படுகிறார்கள், மற்றும் எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு எந்த அரசாங்க ஆதரவும் இல்லை. இந்த மையநீரோட்ட ஊடகங்கள் இந்த வகையான எளிய மக்களின் சிக்கல்களைப் பொருட்படுத்துவதில்லை. இந்த விஷயங்கள் அனைத்துமே குப்பை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு கலைஞன் என்று அழைக்கப்படுபவன், எப்பொழுதுமே சமூகத்தோடு நிற்க வேண்டும் என நினைக்கிறேன். சமூக அநீதிகளில் கவனம் செலுத்துவதே அவர்களது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையிலேயே எனது சித்தாந்தம். 

உங்கள் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலிருந்து ஃப்லிம்மேக்கிங்கின் மீது ஆர்வம் காட்டினீர்கள்? நீங்கள் ஹோமியோபதி மருத்துவராக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபொழுதா அல்லது அதற்கு முன்பே கூடவா?

இல்லை, முதலில் நான் ஒரு மருத்துவரானேன். பின்னர் எனது உயர் படிப்பின்பொழுது இந்தச் சினிமாத்துறைக்கு வந்தேன். ஃப்லிம்மேக்கிங் துறை என்பது வருமானம் ஈட்டுவதற்காக அல்ல என்று நான் நம்புகிறேன். அது ஒரு வேட்கை/ உணர்வு. ஒருமுறை இதை நான் பணம் சம்பாதிப்பதற்கான தொழில் என்று நினைத்துவிட்டால், உடனடியாக எனது சித்தாந்தத்தையும் சமூக அர்ப்பணிப்பையும் கூடவே இழந்துவிடுவேன். பின்னர் நான் பொழுதுபோக்கிற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் மட்டுமே படங்கள் எடுத்துக்கொண்டிருப்பேன். ஆனால், இன்னும் எனக்கு வேறொரு தொழில் இருப்பதால், அதிலிருந்து வருகிற வருமானத்தில் திருப்தி அடைகிறேன், எனவே, நான் திரைப்படங்களின் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. இப்போது நான் எந்தவொரு சமூக விஷயத்தையும், சிக்கலையும் என் கதைக்களமாகத் தேர்வுசெய்யலாம். மேலும் அதுதான் என் திரைப்பட உருவாக்கத்தின் சுதந்திரம் என்றும் கருதுகிறேன். 

நீங்கள் நிரந்தரமான ஒரு அரசாங்க வேலையில் இருக்கிறீர்கள், அதில் நீங்கள் தினசரி வருகைதர வேண்டிய தேவையிருக்கும். எனில், நீங்கள் திரைப்படம் எடுப்பதற்கான நேரம் எப்போது கிடைக்கிறது?

நான் அரசாங்க வேலையில் இருந்துகொண்டேதான் எழுதுகிறேன். நான் என் வீட்டில் எழுதுகிறேன். இயற்கையாகவே ஒரு திரைக்கதையை எழுதி முடிக்க ஆறு அல்லது ஏழு மாதங்கள் ஆகும். எனக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் கிடைக்கிறதோ, அப்போதுதான் நான் எழுதுகிறேன், எனது இது தொடர்ச்சியான செயல்முறையாக நிகழ்வது அல்ல. படப்பிடிப்பு மற்றும் பின் – தயாரிப்புக் காலங்களில் நான் விடுப்பு எடுத்துக்கொள்கிறேன். சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு நான் விடுப்பு எடுக்கவேண்டியுள்ளது. எனினும், இதை நான் சமாளித்துக்கொள்ள முடியும். இப்போதெல்லாம் இது கொஞ்சம் கடினமாக உள்ளது, ஏனெனில் நான் நிறைய திரைப்பட விழாக்களுக்குப் பயணம் செய்யவேண்டி இருப்பதாலும், அல்லது திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கிற நடுவர் குழுவில் ஒருவராக இருக்கவேண்டியிருப்பதாலும், அல்லது திரைப்படங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதாலும், நான் நிறையவே பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. 

உலகத்திரைப்படங்களுக்கு உங்களை எப்போது வெளிப்படுத்திக்கொண்டீர்கள்?

கடந்த ஐந்து – ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற சினிமாக்கள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனது திரைப்படங்களுடன் அல்லது நடுவர் குழுவில் ஒரு நபராக சுமார் பத்து திரைப்பட விழாக்களுக்குச் சென்றுவருகிறேன். மேலும் அங்கு ஒவ்வொரு திரைப்பட விழக்களிலும் நான் குறைந்தது பத்து திரைப்படங்களையாவது பார்க்கிறேன். எனவே, நான் ஒரு வருடத்தில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் நூறு திரைப்படங்களைப் பார்க்கமுடிகிறது. உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குனர்களுடன் நான் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முடிகிறது. 

எந்தத் திரைப்படங்களெல்லாம் உங்களை அதிகம் பாதித்துள்ளன அல்லது உலுக்கியுள்ளன?

அது என்னென்ன படங்கள் என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை, ஆனால், நான் பல உலக சினிமா இயக்குனர்களின் மிகப்பெரிய ரசிகன், மேலும் அவர்களின் பெயர்களையும் என்னால் சொல்லமுடியும். அவர்களில் ஒருவர் தென்கொரிய திரைப்பட இயக்குனரான கிம்-கி-தக். அவர் எனக்கு விருப்பமான இயக்குனர். மேலும் ஈரானிய திரைப்பட இயக்குனர்களான மஜித் மஜிதி மற்றும் மொஹ்ஸீன் மக்மல்பஃப், ரோமன் பொலான்ஸ்கி மற்றும் அலெஜாண்ட்ரோ கோன்சலஸ் இனாரித்து, ஆகியோரும் எனக்கு விருப்பமான இயக்குனர்களே. இப்போதும் கிம் மற்றும் இனாரித்து அவர்களுடன் எனக்கு நட்பார்ந்த உறவு இருக்கிறது. 

கிம் மிகவும் தைரியமான திரைப்பட இயக்குனர், அவரது திரைப்படங்கள் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டாலும், சொந்த நாட்டில் அவருக்குரிய மதிப்பு அவ்வளவு கிடைக்கவில்லை என்பது முரணல்லவா?

ஆம், உண்மை! ஆனால், கேரளாவிலும் இதேதான் நடக்கிறது. எனது திரைப்படங்கள் கேரளாவில் நிறைய பார்வையாளர்களால் பார்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாட்டிலும், அங்கு வசிக்கிற ஒவ்வொரு திரைப்பட இயக்குனர்களுக்கும் இதுபோன்று நடந்துள்ளது. 

உள்ளூர் மக்களே உங்கள் திரைப்படங்களைப் பார்த்து, உங்களை ஊக்குவிக்காதபொழுது வேறு என்ன வழி?

எனது திரைப்படங்களைக் கேரளாவில் பலர் பார்த்ததில்லை. இங்கு நடக்கிற திரைப்பட விழாக்களில் கலந்துகொள்கிற நிறைய விமர்சகர்கள் கூட எனது திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதில்லை. எனது திரைப்படங்களை கேரள மாநிலம் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும், எனக்கும் என் படங்களுக்கும் உலகம் முழுவதிலுமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பல திரைப்பட விழாக்கள் எனது திரைப்படங்களைத் திரையிடுகின்றன, மேலும் அத்திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துவருகிறது. கேரளாவுக்கு வெளியே, இந்தி, பெங்காலி அல்லது மராத்தி விமர்சகர்கள் பலரும் இந்தத் திரைப்படங்களைப் பார்த்து பாராட்டுகிறார்கள். கேரளாவுக்கு வெளியே எனது திரைப்படங்களைத் திரையிடும் பல திரைப்பட விழாக்கள் உள்ளன. எனவே கேரளாவிற்கு வெளியிலிருந்தும், இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்தும் எனக்கு நல்ல உத்வேகம் கிடைக்கிறது. அதுவே நான் அடுத்த திரைப்படத்தை எடுக்க எனக்கான தூண்டுதலாக அமைகிறது. 

I make movies for me, says award-winning filmmaker Dr Biju - The Week

உங்கள் திரைப்படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளபோதும், உங்கள் மாநிலம் உங்களுக்கான சரியான அங்கீகாரத்தை வழங்கவில்லை என்பது விந்தையானதல்லவா?

நான் ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ளேன், தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளேன், ஆனால் என் மாநிலத்திற்குள் எதுவும் பெறவில்லை. (அவரது படங்களுக்கு தொழில்நுட்ப பிரிவுகளில் மட்டுமே கேரள மாநில விருதுகள் கிடைத்தன., ஆனால் ஒருபோதும் முக்கிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவில்லை, சிறந்த இயக்குனருக்கான விருதும் இல்லை. அவரது “பெயரரிதாவர்” திரைப்படம் ரஷ்யா, ஈரான் மற்றும் இந்தியாவில் கூட இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது, ஆனால் கேரளாவிலிருந்து ஒரு விருதுகூட கிடைக்கவில்லை.)

ஆனால், 93 சதவீதத்திற்கும் விகிதத்தைக் கொண்ட கேரளா, இந்தியாவில் மிகவும் கல்வியறிவு பெற்ற மாநிலமாகும், மேலும் அரசாங்கங்கள் சமூக அக்கறையுடன் செயல்படுகின்றன என்றும் கருதப்படுகிறது!

ஆனால், அது ஒரு தவறான கருத்து. கேரள அரசாங்கமும், இங்குள்ள திரையரங்குகளும் இதுபோன்ற திரைப்படங்களைக் காட்ட விரும்பவில்லை (சமீபத்திய ஒரு நிகழ்வு, இயக்குனர் ஜெயன் செரியனின் ‘Ka Bodyscapes’ திரைப்படம், பிராந்திய தணிக்கை அலுவலகத்தால் சான்றிதழ் தர மறுக்கப்பட்டிருக்கிறது.)

எங்கள் மாநிலத்தில், கேரள சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறுகிறது, ஆனால் எனது திரைப்படங்கள் எதுவும் அங்குள்ள போட்டி பிரிவில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 
உண்மையாகவா?

எனது ஆறு திரைப்படங்களும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்பட விழாக்களில்தான் திரையிடப்பட்டன என்று நினைக்கிறேன். எனது திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் நுழைந்துள்ளன. ஆனால், கேரள சர்வதேச திரைப்பட விழாக்களில் அவர்கள் எனது திரைப்படங்களை ஓரங்கட்டுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் அத்திரைப்படங்களைப் போட்டிப் பிரிவில் அனுமதிக்கவில்லை. அவர்கள் இதை புதிய மலையாள சினிமா எனும் பிரிவில் பல படங்களோடு சேர்த்து இதையும் ஒன்றாகத் திரையிடுகிறார்கள். இது ஒரு போட்டி பிரிவு அல்ல. 

திரைப்பட உருவாக்கத்திற்கான கலை நுட்பத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்? ஏதேனும் திரைப்படக் கல்லூரியில் படித்தீர்களா?

இல்லை, இல்லை! நான் எந்த திரைப்படக் கல்லூரிக்கும் செல்லவில்லை, யாரிடமும் உதவியாளராகவும் பணியாற்றியதில்லை. சினிமாவை எனக்கு நானே கற்றுக்கொண்டேன். திரைப்படங்களைப் பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாக அதை உணருவதன் வழி கற்றுக்கொண்டேன். எனது திரைப்படங்கள் குறித்து, தெளிவான பார்வை எப்போதுமே இருக்கிறது. மாறாக எனக்கு எந்தக் கல்விப் பயிற்சியும் இல்லை. நான் முதல்முறையாக ஒரு சினிமா கேமராவைப் பார்த்தானென்றால், அது எனது முதல் திரைப்படப் படப்பிடிப்பின்பொழுதுதான். நான் அதற்கு முன்பு வரை, ஒரு சினிமா கேமராவைப் பார்த்ததில்லை.

உங்கள் முதல் படமான, ’சாய்ரா’ படப்பிடிப்பின் பொழுதா?

ஆம்! ‘சாய்ரா’. அதற்குமுன்பு வரை, ஆவணப்படங்களை எடுத்துக்கொண்டிருக்கும்பொழுது, வீடியோ கேமராக்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். 
தொடரும்…

நன்றி: filamcinema (ஆகஸ்ட் 30, 2016இல் வெளியான பேட்டி)