மை டியர் லுமும்பா: யமுனா ராஜேந்திரன், அம்சவள்ளி உரையாடல்

-அம்சவள்ளி

புரட்சியாளர் பட்ரிசியா லுமும்பாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ராவுல் பெக் இயக்கத்தில் 2000-ஆவது ஆண்டில் வெளியானது.

உலகமெங்கிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரல், அவர்கள் சார்பாக ஒலிக்கவேண்டிய தேவையிருக்கிறது. அவர்களது புரட்சி, அடங்கமறுக்கும் எதிர்க்குரல், போராட்டங்கள், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கலகங்களை வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டியது கலைஞனின் கடமை. இங்கு, இந்தியாவில் சாதியின் பெயரால் ஒடுக்குமுறைகள் நிகழ்வது போலவே, உலகமெங்கும் நிறத்தின் பெயரால் ஒடுக்குதல்கள் நிகழ்கின்றன. நிறவெறிக்கு அதிகம் பலியான கறுப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டது முதல் அவர்களது சொந்த நிலத்தின் செல்வங்கள் யாவும் அந்நியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது வரை, அவர்களது துயரவாழ்வு பற்றி பதிவு செய்ய இன்னும் எத்தனையோ சம்பவங்கள் உள்ளன. முன்சொன்னதுபோல அதிகம் ஒடுக்கப்படுபவர்களிடமிருந்தே ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான கலகக்குரலும் தோன்றும். அப்படியே நெல்சன் மண்டேலா, மால்கம் எக்ஸ், மார்டின் லூதர் கிங் போன்றோர் தன் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மக்களின் விடுதலைக்காகவும் களப்பணியாற்றியுள்ளனர். இவற்றில் மிக முக்கியமானவரும், அதிகம் தமிழ்ச்சூழலுக்கு அறிமுகமல்லாதவரும்தான் பட்ரிசியா லுமும்பா.

காங்கோ பழங்குடி மக்களை ஒன்று திரட்டி, பெல்ஜியத்தின் காலனியாதிக்கத்திற்கு எதிராகவும், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதை எதிர்த்தும் மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தின் வாயிலாக, ஆட்சியையும் பிடித்தவர். அந்நாட்டின் பிரதம மந்திரியாகவும் ஆனார். ஆனால், அமெரிக்கா அந்த விடுதலையுணர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லை. பதிலுக்கு வன்முறையின் மூலம், லுமும்பாவைக் கொலைசெய்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த கொலைச் செயல், அந்த ஒரு நாட்டிற்கு மட்டுமின்றி, இதுபோல அடிமைத்தனத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போராடுகிற மற்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கை விடுப்பதுபோல அமைந்தது. எதேச்சதிகார சதியால் முப்பத்தைந்து வயதிற்குள் இறந்துபோன லுமும்பாவின் இறந்த உடலைக் கூட வெளியிலெடுத்து சிதைத்தனர். வரலாற்றில் ரோஸா லக்ஸம்பெர்க், சே குவேரா போன்றே லுமும்பாவின் உடலும் சிதைக்கப்பட்டது.

கலையை அதற்குரிய நயத்தோடு வெளிப்படுத்துகிறவர்களில் கறுப்பின மக்களுக்கு பெரும்பங்குண்டு. வாழ்க்கையை வாழும் விதத்திலிருந்து அவர்கள் வெளிப்படுத்துகிற இசைக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல, சினிமாவையும் நேர்த்தியாகக் கையாளக்கூடியவர்கள் என்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், தன் இன மீட்சிக்காகப் போராடிய வரலாற்று நாயகர்களையும் அடையாளப்படுத்தும் பொருட்டே இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து எடுத்துவருகிறார் ராவுல் பெக் (Raoul Peck). இவரது அண்மைய படம்தான் தி யங் கார்ல் மார்க்ஸ் (The young karl marx – 2017). இந்த இயக்குனருக்கு இருக்கும் சினிமாவின் மீதான பார்வை, மற்றும் கறுப்பின மக்கள், அவர்களது சுதந்திர வேட்கை, அமெரிக்கா போன்ற நாடுகள் இவர்கள் மீது நடத்திய கொடுமைகள், முக்கியமாக புரட்சியாளர் லுமும்பா பற்றியும் இந்த அரசியல் சினிமா தொடரின் வாயிலாக, தோழர்.யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் உரையாடியதிலிருந்து…


அம்சவள்ளி: பெல்ஜியம் காலனியாதிக்கத்திலிருக்கிற காங்கோ, காங்கோ மக்களின் விடுதலை, இதில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்னவாகயிருக்கிறது என்றும், அந்நிலப்பரப்பில் நடந்த பிரச்சினைகளின் வரலாறு பற்றியும்  தெரிந்துகொள்வது, படத்தை மேலும் புரிந்துகொள்ள உதவியாகயிருக்கும். எனவே, முதலில் அதுபற்றி பேசிவிடுவோம்.

யமுனா ராஜேந்திரன்: பெல்ஜிய அரசு, தன்னுடைய சொந்த சொத்து என்பதன் அடிப்படையில்தான், காங்கோவை ஆட்சியதிகாரம் செய்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் பெல்ஜியம், காங்கோவை தனது ஆட்சியதிகாரத்திற்குள், கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. பெல்ஜியத்தின் ராணுவம் காங்கோவில் இருந்தது. பெல்ஜியத்தின் நிர்வாகம்தான் காங்கோவில் செயல்பட்டு வந்தது. இதற்கு எதிராகவும், அங்கிருக்கிற மக்கள் தொடர்ந்து விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டேயிருந்தார்கள். இதில் காங்கோவிலிருந்த ’கட்டாங்கா’ என்ற பிரதேசத்தைப் பெரிய சுரங்க முதலாளிகள் ஆதிக்கம் செய்துகொண்டிருந்தார்கள். கனிம வளங்கள் அந்தப் பிரதேசத்தில் அதிகமாகயிருந்தது. அதில் பிரிட்டிஷ் சுரங்கங்கள் இருந்தன. அமெரிக்காவினுடைய சுரங்கங்கள் இருந்தன. ஜெர்மன், பெல்ஜியன் போன்றவற்றின் சுரங்கங்களும் அங்கு இருந்தன. இவர்களோடு தொடர்புகொண்ட கறுப்பின முதலாளிகள் சிலரும் அங்கு இருந்தார்கள். ஆகவே, இதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்பதை மையமாகக்கொண்டுதான் அவர்கள் முழு காங்கோவின் மீதும் ஆட்சியதிகாரம் செய்துகொண்டிருந்தார்கள்.

இதுவல்லாமல், அந்த நாட்டில் பெரிய தொழிற்சாலையாக இயங்குவது, பீர் தயாரிக்கக்கூடிய தொழிற்சாலை. இந்தச் சூழலில்தான் 1959ஆம் ஆண்டு பட்ரிசியா லுமும்பா காலனியாதிக்கத்திற்கு எதிரான ஆப்பிரிக்க மக்களினுடைய காங்கிரஸில், நெக்ருமாவின் அழைப்பின்பேரில் கலந்துகொண்டுவிட்டு, அவர் காங்கோவிற்குள் வருகிறார். காலனியாதிக்கத்திற்கு எதிரான தேச விடுதலைப் போராட்ட உணர்வு என்பது, நெக்ருமாவின் காலனியாதிக்க எதிர்ப்பு மாநாட்டிற்குப் பிறகுதான் லுமும்பாவிற்கு உருவாகிறது. அதற்குப் பிறகுதான், அமைப்பு ரீதியில் இதை உருவாக்கவேண்டுமென்று பெரிய தெருக்கிளர்ச்சிகளை நடத்துகின்றார். அரசாங்கம் இவரைக் கைது செய்கிறது. இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கிறது.

அதற்குப் பிறகு, 1960களின் இறுதியில் அவருடைய கட்சி போட்டியிட்டு, தேர்வாகி, அவர் பதவிக்கு வருகிறார். இதோடு சேர்ந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், காங்கோ, மிகச் சிறுசிறு இனக்குழுக்கள் நிறைந்த நாடு. அந்த இனக்குழுக்களுக்கு இடையிலான வன்முறையான, சண்டைகளும் முரண்பாடுகளும், போட்டிகளும் நிறைந்ததுதான் காங்கோவின் வரலாறு. பெரும்பாலாக அவர்களது அரசியல் தலைவர்கள், இனக்குழு தலைவர்களாக, இனக்குழுவில் மையமாகக்கொண்டு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொண்டவர்களாக இருந்தார்களேயொழிய, காலனியாதிக்கத்திற்கு எதிரான, இந்த இனக்குழுக்களை ஒற்றுமைப்படுத்திய, ஓருணர்வு கொண்ட, தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுகொண்ட தலைவராக, பட்ரிசியா லுமும்பாவிற்கு முன்புவரை, எவரும் உருவாகவில்லை. பட்ரிசியா லுமும்பா ஒருவர்தான், இந்த இன வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றுபட்ட தேசிய இன காங்கோ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுகிறார்.



பெல்ஜியம், இந்த மக்களின் மிகப்பெரும் தெருக்கிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், கொலைகள், இதற்குப் பிறகுதான் சுதந்திரம் வழங்க ஒப்புக்கொள்கிறது. அப்படி ஒப்புக்கொள்கிற போதும் சில நிபந்தனைகளை விதிக்கிறது. அது என்னவென்றால், பெல்ஜியத்தின் இராணுவம் காங்கோவில் இருக்கும். பெல்ஜியத்தின் அதிகாரவர்க்கம் அங்கேயிருக்கும். பெல்ஜியத்திடமிருக்கும் சுரங்க வளங்கள் திருப்பித்தர மாட்டாது. எனில், காலமாற்றத்தில்தான் இந்த அதிகாரம் என்பது, ஆப்பிரிக்க மக்களிடம், காங்கோ சார்ந்த மக்களிடமும் கைமாற்றித் தரப்படும் என்கிறவிதமான தந்திரங்களைத்தான் அந்த நிபந்தனைகள் கொண்டிருந்தன. இந்தச் சூழலில் பெல்ஜியத்திற்கு ஆதரவான, ஒரு பகுதி இனக்குழுத் தலைவர்களும், கறுப்பினத் தலைவர்களும் அங்குயிருந்தார்கள். அவர்களுக்கு காலனியாதிக்க எதிர்ப்பு என்ற உணர்வு கிடையாது. நிர்வாகம், இராணுவம் போன்றவை ஆப்பிரிக்க மக்களின் தலைமைக்கு வரவேண்டும் என்ற கண்ணோட்டமும் அவர்களிடம் கிடையாது. ஆனால், லுமும்பாவிற்கு காலனியாதிக்க எதிர்ப்புணர்வு இருந்தது. உண்மையில், பெல்ஜியம் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வந்தபோது, ”இராணுவம், நிர்வாகம், பொருளாதாரம் போன்றவை தங்கள்வசம் இருக்க வேண்டும், பெல்ஜியத்தின் மன்னர் மனம் கனிந்து, நாகரீகத்தை உங்களிடம் பரப்பவேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த அதிகாரத்தை உங்களிடம் பெரிய மனது வைத்துக் கொடுக்கிறார்” என்பதுபோலத்தான் அவர்கள் திட்டம் இருந்தது. அதிகாரத்தைக் கையளிக்கிற அந்த நாளில் கூட, பெல்ஜியத்தின் அதிகாரிகள் இதைத்தான் சொன்னார்கள்.

அம்சவள்ளி: லுமும்பாவின் பேச்சுகள் மிக முக்கியமானது. படத்தில்கூட லுமும்பா சிறைசெல்வதற்குமுன்பு, அவர் தேர்தலில் பேசியதன் அறிக்கைகளை / காகிதங்களை அவர் வாயில் திணித்துச் சித்திரவதை செய்கின்றனர். லுமும்பாவின் பேச்சுகள் அந்தளவிற்கு, அதிகார வர்க்கத்திற்கு நெருக்கடியாக இருந்திருக்கின்றன என்பதையே இக்காட்சி உணர்த்துகிறது.

யமுனா ராஜேந்திரன்: ஆம், லுமும்பாவின் பேச்சுகள் மிக மிக முக்கியமானவை. அவர் என்ன சொல்கிறாரென்றால், “இந்தச் சுதந்திரம் என்பது யாருடைய கருணையாலும் எங்களுக்குத் தரப்பட்டதல்ல, எங்கள் மக்களின் எண்ணிக்கையற்ற உயிர்ப்பலிகளின் பின்னால், எங்கள் மக்கள் நிகழ்த்திய தெருக்கிளர்ச்சிகளின் பின்னால், போராட்டம், தியாகங்களின் பின்னால், எங்களுடைய இரத்தமும் சதையும் இந்நாடெங்கும் சிதறடிக்கப்பட்ட பின்னால்தான், சுதந்திரம் எங்களுக்குக் கிடைத்தது. காலனியாதிக்கத்திற்கு எதிரான மக்களின் எழுச்சிக்குப் பின்னால்தான் இந்த விடுதலை எங்களுக்குக் கிடைத்தது. ஆகவே, அதிகாரம் எங்கள் கைகளுக்கு வரவேண்டும். இராணுவம் எங்கள் கைகளில் இருக்கவேண்டும். பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவர்கள் ஆப்பிரிக்க மக்களாக இருக்கவேண்டும். ஆப்பிரிக்க மக்களின் கல்வியானது சுதந்திரமானதாக இருக்கவேண்டும். ஆப்பிரிக்க மக்களின் நிர்வாகமும், வாழ்முறையும் சுதந்திரமாக அமைய வேண்டும். ஆகவே, காலனியாதிக்கம் நீங்கிய, முழுமையாக விடுதலைபெற்ற, கலாச்சார ரீதியிலான, பொருளாதார ரீதியிலான நாடுதான் எங்களுக்குத் தேவை” என்ற கருத்தை முன்வைத்தார். இந்தப் பேச்சு, பெல்ஜியத்தின் மன்னருக்கு மிகப்பெரும் கோபத்தைத் தூண்டியது. லுமும்பாவை இந்தப் பதவியிலிருந்து அகற்றவேண்டுமென்று, அவர்கள் அப்போதே முடிவுகட்டுகின்றனர். அதேகாலகட்டத்தில் பிரிட்டனில் எம்16 என்பது, அவர்களின் உளவுத்துறை அமைப்பு. அந்த உளவுத்துறை அமைப்பின் தலைவர், அங்கிருக்கிற பிரிட்டிஷ் தூதரகத்திற்கு, ஒரு குறிப்பு எழுதுகிறார்,லுமும்பாவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். ஐஸினோவர் (அக்காலத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதி) தலைமையில் ஒரு கூட்டம் நடக்கிறது. அதில் ஐஸினோவர் பேசியது, இன்று ஆவணமாகவும் இருக்கிறது. அதேபோல, பெல்ஜியத்தின் ஆட்சியாளர்கள் என்ன சொன்னார்கள், என்ன எழுதினார்கள் என்பதற்கான ஆவணங்களும் வெளிவந்துவிட்டன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆவணங்களும் வந்துவிட்டன. இந்த மூன்று பேரும், ஒருங்கிணைந்து சொன்ன ஒரு விஷயம், ‘லுமும்பாவை அகற்ற வேண்டும்’ என்பதுதான். அவர்கள் மொழியில், அகற்றவேண்டும் என்ற வார்த்தைக்கு ’கொலை செய்ய வேண்டும்’ என்று அர்த்தம். இந்த மூவரின் ஒப்புதலோடும்தான், இந்தத் திட்டத்தைச் செயற்படுத்தத் துவங்குகிறார்கள். இந்தக் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலைத்தான், ’லுமும்பா’ திரைப்படம் தன் பின்புலமாகக் கொண்டிருக்கிறது. இதுதான், காங்கோ மற்றும் லுமும்பாவிற்குப் பின்பிருக்கிற அரசியல் சூழல்.

அம்சவள்ளி: கறுப்பின மக்களுக்காகப் போராடிய மற்ற தலைவர்கள் வெளியே தெரிவதுபோல, லுமும்பா அதிகம் தெரியவில்லை. அவரது வாழ்காலம் சொற்பமானது என்பதே இதற்கு முக்கியக் காரணமா? ஏன், அவர் பெயர் புரட்சியாளர்களின் பெயர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்படுவதில்லை.

யமுனா ராஜேந்திரன்: லுமும்பா பதவியிலிருந்த காலம் என்பது வெறும் அறுபத்தைந்து நாட்கள். இந்த இரண்டு மாத காலத்திற்குள் என்னவெல்லாம் நடந்தது என்று பாருங்கள். அங்கு மூன்றுவிதமான அரசியல் சக்திகள் இருந்தன. ஒன்று காலனியாதிக்கத்திற்கு எதிரான, தன்னிறைவான, அரசியல் பொருளாதார இராணுவ ரீதியிலான விஷயங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்த சுதந்திரம் பெற்ற காங்கோ. இந்த சுதந்திரம் பெற்ற காங்கோவில் பெல்ஜியத்தைச் சார்ந்த மக்கள் இருக்கலாம், ஆனால், அவர்கள் அமைந்த புதிய காங்கோ அரசின் சட்டதிட்டங்களுக்குத் தகுந்தாற்போல இருக்கவேண்டும். அதற்கு மாறாக, காலனியாதிக்கக் காலத்திலிருந்த அதிகாரத்தை, இப்போதும் தங்கள் மேல் செலுத்துவார்களேயானால், அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். இது லுமும்பாவின் பார்வை. இன்னொரு பார்வை கஸாவோவினுடையது. கஸோவா, அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிற இன்னொருவர். லுமும்பா பிரதம மந்திரி என்றால், கஸோவா குடியரசுத் தலைவர். இதற்கடுத்து இருப்பவர் இராணுவத்தின் தலைவராகயிருக்கிற அதிகாரி மொபட்டோ. இவரைப் பொறுத்தவரை, அரசியல் எல்லாம் ஒரு பிரச்சினையில்லை. இராணுவம் பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டும். இராணுவத்தைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். இராணுவம் எந்தவிதமான கருணையும் இல்லாமல், செயல்பட வேண்டும். இதுதான் மொபட்டோவின் பார்வை. கஸாவோ எல்லாவற்றையும் அனுசரித்து, சமரசமாகச் செல்லக்கூடியவர். பெல்ஜியத்துடன் இணக்கமாக இருப்பார். அதே நேரத்தில் லுமும்பாவிடமும் நட்புடன் இருப்பார். நடுநிலைவாதியாக, நிலையான பார்வைகொண்டவராக கஸாவோ இருந்தார். இவ்விதமாக, மூன்று அரசியல்வாதிகளின் போக்குகள், அந்த நிர்வாக இயந்திரத்திற்குள் இருக்கிறது.

இங்கு, மொபட்டோ தலைமையிலான இராணுவத்திலிருக்கிற, ஆப்பிரிக்க இராணுவ வீரர்கள் கட்டுப்பாடுகளின்றி நடந்துகொள்கிறார்கள். அதாவது, பதவியில் அமர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகியிருக்கின்றன. இதில், பெல்ஜியம் ராணுவம் வெளியேற வேண்டும் என்பது லுமும்பாவின் கோரிக்கை. இதை ஐக்கிய நாடுகள் சபையில் லுமும்பா முன்வைக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையும் ஒரு சமாதானப் படையை அனுப்புகிறது. ஆனாலும், அவர்கள் பெல்ஜிய இராணுவத்தை வெளியேற்றவில்லை. இந்நேரத்தில், ஆப்பிரிக்கர்களுக்கும், இராணுவத்திற்கும் புதிதாகக் கிடைத்த அந்தச் சுதந்திரத்தின் அடிப்படையில், இனி பெல்ஜிய வெள்ளை இராணுவத்திற்குக் கீழே இயங்கமுடியாது என்பது மாதிரியான, ஒரு கலகம் கறுப்பர்கள் மத்தியில் தோன்றுகிறது. இதன் தொடர்ச்சியாக, பெல்ஜிய வெள்ளையின மக்கள், ஆண்கள் பெண்கள் எல்லோரையும் வீடுகளுக்குள் புகுந்து கொலை செய்கிறார்கள். பெல்ஜியத்தைச் சார்ந்த பல்வேறு வெள்ளையின பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகிறார்கள். தெருக்களிலேயே அவர்களைக் கொலை செய்கிறார்கள். மிகப்பெரிய வன்முறையை, பெல்ஜிய வெள்ளையின மக்கள் மீது, இராணுவத்திலிருப்பவர்கள் செய்கிறார்கள், இதை மொபட்டோ ஆதரிக்கிறார்.

மறுபுறத்தில் பார்த்தீர்களென்றால், இராணுவத்திலிருக்கிற பெல்ஜிய இராணுவ அதிகாரிகள் என்ன சொல்கிறார்களென்றால், ”நீங்கள் சுதந்திரம் அடைவதற்கு முன்பு வரை நாங்கள் இங்கிருந்தோம். சுதந்திரம் அடைந்தபிறகு, நாங்கள் இங்கிருந்து போய்விடவேண்டும் என்று கருதாதீர்கள். சுதந்திரத்திற்கு முன்பு நாங்கள் என்னவிதமான அதிகாரம் கொண்டிருந்தோமோ, அதேபோன்ற அதிகாரத்தைத்தான் சுதந்திரத்திற்குப் பின்பும் கொண்டிருப்போம். காரணம் என்னவென்றால், நீங்கள் வெள்ளையின பெண்களை பாலியல் வல்லுறவு செய்கிறீர்கள். வன்முறைக்கு இரையாக்குகிறீர்கள். ஆகவே, நாங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.” என்றனர். இராணுவத்திற்குள்ளேயே இதுபோன்ற பிரச்சினைகள் எழுகின்றன. இராணுவம் பட்ரிசியா லுமும்பாவின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போகிறது. இது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையில் முறையீடு செய்தும்கூட, ஐக்கிய நாடுகள் சபையும், அதனுடைய ஆதிக்கத்திலிருக்கிற அமெரிக்காவும், பிரிட்டனும், காங்கோவில் பெல்ஜிய இராணுவத்தின் இருப்பை ஆதரிக்கிறது.
ஆகவே, பட்ரிசியா லுமும்பாவிற்கு எதிராக, ஐ.நா.வும் இருக்கிறது. லுமும்பாவிற்கு எதிராக பெல்ஜிய இராணுவம் இருக்கிறது. லுமும்பாவிற்கு எதிராக, இராணுவத்திலிருக்கிற ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும் லுமும்பாவிற்கு எதிராகத்தான் உள்ளன. இவர்கள் அனைவருமே, லுமும்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றனர். இதுதான் அன்றைக்கு நிலவிய சூழல்.

இந்தச் சூழலில், அவர் என்ன முடிவெடுக்கிறாரென்று பாருங்கள். இந்த பெல்ஜிய வெள்ளையின பெண்கள் வல்லுறவு செய்யப்படுவதற்குக் காரணமான இராணுவ அதிகாரி மொபட்டோவை அழைத்துக் கண்டிக்கிறார். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். ”நான் கட்டுப்படுத்த முடியாது. வார் இஸ் எ வார்.” என்கிறார் மொபட்டோ. பெல்ஜிய இராணுவ அதிகாரியும், இச்செயலைக் கட்டுப்படுத்த முடியாது என்கின்றனர். இதில் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள் என்ன நிலைப்பாடு எடுக்கிறதென்றால், அமெரிக்காவின் பிரதிநிதி சென்று மொபட்டோவிடம் பேசுகிறார். ”நீங்கள் லுமும்பாவைக் கொன்றுவிட்டு, அதிகாரத்திற்கு வாருங்கள்.” என்கிறார். அப்படியெனில் எனக்கு என்ன கிடைக்கும்? என்று மொபட்டோ கேட்கையில், ”மொத்த நாடும் உனக்குத்தான்” என்கின்றனர்.

மொபட்டோதான் பெல்ஜிய வெள்ளையர்களுக்கு எதிராகக் கலகம் செய்கிறார். பாலியல் வல்லுறவுகளுக்குக் காரணமாக இருக்கிறார். ஆனால், அவர் லுமும்பாவிற்கு எதிராகயிருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, அமெரிக்கத் தூதரகம் மொபட்டோவிடம் பேசி, லுமும்பாவிற்கு எதிராகத் திருப்புகிறார்கள். லுமும்பா இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முடிவெடுக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை தனக்கெதிராக இருக்கிறது. பெல்ஜியம், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் தனக்கு எதிராகயிருக்கின்றன. இந்தச் சூழலில் காலனியாதிக்கத்திற்கு எதிரான ஒரு அரசைக் கட்டமைக்க வேண்டுமென்றால், சோவியன் யூனியனின் ஆதரவு தனக்கு வேண்டுமென்று கருதுகிறார். சோவியத் யூனியனிடம் ஆயுதங்களும், கப்பல்களும், விமானங்களும் இருக்கின்றன. அந்த ஆதரவுகளைக் கேட்க நினைக்கிறார். இந்த விஷயத்தை லுமும்பா, கஸாவோவிடம் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், கஸாவோ, லுமும்பா பேசிச்சென்ற மறுநிமிடமே, அமெரிக்கத் தூதரகத்திடம் செல்கிறார். இந்த ரகசியத்தை, கஸாவோ, அமெரிக்கத் தூதரகத்திடம் சொல்லிவிடுகிறார். ”லுமும்பாவை இனியும் விட்டுவைத்தால் மிகப்பெரிய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும், அவரை உடனே கொலை செய்யுங்கள்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அப்போதுதான் பிரிட்டிஷ் தூதரகமும், அமெரிக்காவின் ஐஸோனவரும், பெல்ஜியம் அரசரும், உள்நாட்டிலிருக்கிற லுமும்பா எதிர்ப்பாளர்களும் ஒன்று கூடுகிறார்கள். படத்தில்கூட, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிற காட்சி காட்டப்படும். அதில் இரண்டு வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் அமெரிக்கர், இன்னொருவர் பெல்ஜியத்தைச் சார்ந்தவர். மொபட்டோவும், கஸாவோவும் அங்கு இருக்கின்றனர். ’லுமும்பாவைக் கொல்ல வேண்டுமென்று யார் யாரெல்லாம் நினைக்கிறீர்கள், கையை உயர்த்துங்கள்’ என்று சொன்னவுடன், முதலில் வெள்ளையர்கள்தான் கையை உயர்த்துகின்றனர். பின்பு, அனைவரும் கையை உயர்த்தி, லுமும்பாவைக் கொலைசெய்வதற்கான தன் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். திட்டம் நிறைவேறுகிறது.

இதற்குள் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். 1959ஆம் ஆண்டு, அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்த க்யூபா. புரட்சியின் மூலமும், ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலமும் விடுதலையடைகிறது. காலனியாதிக்க விடுதலைப் போராட்டம் என்பது, ஆசியாவில் வியட்னாமிலும், லத்தீன் அமெரிக்காவில் க்யூபாவிலும், ஆப்பிரிக்காவில் காங்கோவிலும் வீறுகொண்டு எழுகிறது. இதில், காங்கோ, சோவியத் யூனியனுடைய, சோஷியலிசத்தினுடைய ஆதரவைக் கோருகிறது, அவர்கள் இந்த நாடுகளுக்குள் வருவார்கள். ஆகவே, கம்யூனிசத்தை முறியடிப்பது, சோஷியலிசத்தை முறியடிப்பது, சோவியத் யூனியனின் திட்டத்தை அழிப்பது என்பதன் ஒரு பகுதியாகத்தான், பட்ரிசியா லுமும்பாவைக் கொலை செய்யவேண்டும் என்ற திட்டத்தை அவர்கள் கையிலெடுக்கிறார்கள். இதுதான், லுமும்பாவின் அரசியல் முக்கியத்துவம், ஏன் அவரைக் கொலைசெய்ய வேண்டுமென்று, பெல்ஜியமும், மேற்கத்திய நாடுகளும் முடிவெடுத்தார்கள், என்பதற்கான காரணம் இதுதான்.


லுமும்பாவின் வரலாற்றை நீங்கள் பார்த்தீர்களென்றால், 1959லிருந்து 1961 சனவரி 17இல் அவர் கொலைசெய்யப்படுவது வரை இருப்பதுதான், அவரது அரசியல் வரலாறு. இந்த இரண்டு வருடங்கள்தான் அவரது அரசியல் வாழ்க்கை. அதற்கு முன்புவரை, போஸ்ட்மேனாகப் பணியாற்றுகிறார். பிற்பாடு பியர் கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார். நெக்ரூமாவின் அழைப்பின்பேரில், காலனியாதிக்க எதிர்ப்பில், ஆப்பிரிக்க காங்கிரஸ் அமர்வில் கலந்துகொண்டதிலிருந்து அவரது பொதுவாழ்க்கை துவங்குகிறது. அதற்குப் பிற்பாடாக, காங்கோவில் உள்நாட்டுப் போராட்டங்களைத் துவங்குவது. அந்தக் காலகட்டத்திலும், அவரைப் பிடித்து இரண்டு வருடங்கள் சிறையிலடைத்துவிடுகின்றனர். சிறையிலிருந்துதான் பேச்சுவார்த்தைக்காக பெல்ஜியத்திற்குச் செல்கிறார். சிறையில் லுமும்பாவை வசைச்சொற்களால் திட்டியபடி கடுமையாக அடிக்கிறார்கள். அப்போதுதான், ஒரு சிறை அதிகாரி வந்து, ‘உனக்கு பெல்ஜியத்திலிருந்து அழைப்பு வந்திருக்கிறது, நீ பேச்சுவார்த்தைக்குச் செல்’ என்று அனுப்பிவைக்கிறார். 1960 ஜூன் மாதம், அவருக்கு விடுதலை கொடுப்பது என்று முடிவாகிறது. 1960 நவம்பர் மாத இறுதியில்தான் பதவியில் அமர்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் கொலைசெய்யப்படுகிறார். அவரது அரசியல் காலம், என்பது மிகக் குறுகிய காலம். உலகெங்கிலும் அதிக மக்களைச் சென்று சேராததற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அடுத்து, அவர் அதிகம் எழுதியவராகவும் இல்லை. ரோஸா லக்ஸம்பெர்க் நிறைய எழுதியிருக்கிறார். சேகுவேராவிற்கு, கியூபப் புரட்சிகர அனுபவம் இருக்கிறது, பொலிவிய புரட்சி அனுபவம் இருக்கிறது, உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் அவர் பயணம் செய்திருக்கிறார், இந்தியாவில் டெல்லிக்கு வந்திருக்கிறார், நேருவைப் பார்த்திருக்கிறார், அப்போது அவரைப் பேட்டி கண்டது ஒரு தமிழ்ப்பெண்மணி. இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இப்படியாக, சேகுவேரா, உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார். கியூபா, பொலிவியா கடந்து காங்கோ புரட்சியில்கூட பிற்காலத்தில் பங்கெடுத்திருக்கிறார். பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால், லுமும்பாவின் காலம், அவர் அரசியல் போராட்டத்திற்கு வந்தபிறகு, அவர் சிறையிலடைக்கப்பட்டார். ஆட்சியதிகாரத்திற்கு வந்தபிறகு, இரண்டே மாதங்களில் கொல்லப்பட்டார். காங்கோவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட பிறகு, லுமும்பா ஆற்றிய சுதந்திர தின உரையென்பது, மிக முக்கியமானது. அதுவல்லாமல், வேறு வேறு சந்தர்ப்பங்களில் அவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அவரைப் பற்றித் தேடியதில், நான் கண்டடைந்த விஷயம், அவர் எழுதிய கவிதைகளும் கிடைத்திருக்கின்றன.

புரட்சியாளர்கள் என்றால் சேகுவேராவைப் பிரதானமாகத் தெரியும், ஃபிடல் காஸ்ட்ரோவைத் தெரியும், ரோஸா லக்ஸம்பெர்க்கைத் தெரியும், ஆனால், ஆப்பிரிக்கப் புரட்சியாளர்களைப் பற்றி அதிகமாகத் தெரியாது. ஆனால், ஒரு நல்ல விஷயமாகப் பார்த்தீர்களென்றால், 1970களிலேயே ஆப்பிரிக்கப் புரட்சியாளர்களைப் பற்றிய ஒரு நூல், தமிழில் வெளியாகியிருக்கிறது. சோவியத் யூனியனின் முன்னேற்றப் பதிப்பகம், அந்தப் புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறது. 120 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில் லுமும்பா உட்பட, பல்வேறு ஆப்பிரிக்கப் புரட்சியாளர்கள் பற்றிய கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால், இன்று உலகப் புரட்சியாளர்களை, உலகக் கலைஞர்களை, தத்துவவாதிகளை மிகவும் ஆகர்ஷித்த மூன்று புரட்சியாளர்களில் ஒருவர் ரோஸா லக்ஸம்பெர்க், இன்னொருவர் சேகுவேரா, மூன்றாமவர் லுமும்பா. அதிலும், லுமும்பாவும், சேகுவேராவும் ஓவியத்திலும், சிற்பம் போன்ற கலைகளிலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தொடர்பாக இரண்டு தனித்தனி நூல்களே வெளியாகியிருக்கின்றன. சேகுவேரா பிம்பம், லுமும்பா பிம்பம் என்ற இரண்டு தனிப் புத்தகங்கள் உள்ளன. மூன்று பேருடைய வாழ்க்கையும் திரைப்படங்களாகியிருக்கின்றன. மிகப் புகழ்வாய்ந்த இயக்குனர்கள், இப்படங்களை இயக்கியிருக்கின்றனர். மார்க்ரெட் வான் ட்ரோட்டா, ரோஸா லக்ஸெம்பர்க் பற்றியும், ஸ்டீவன் சோடர்பெர்க் சேகுவேரா பற்றியும், ராவுல் பெக், லுமும்பா பற்றி எடுத்திருக்கிறார். இன்று, உலகில் பரவலாக அறியப்பட்ட புரட்சியாளர்களாக, பெருமைக்குரிய புரட்சியாளர்களாக லுமும்பாவும் உருவாகியிருக்கிறார். இதுதான் கலைஞர்களை லுமும்பா பாதித்த விஷயம்.

அம்சவள்ளி: ராவுல் பெக், இதற்கு முன்பே 1999இல் லுமும்பா பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். சமீபத்தில் இளம் கார்ல் மார்க்ஸ் பற்றிய படம். ராவுல் பெக்கின் அரசியல் கடப்பாட்டுணர்வு, அவர் எடுக்கிற படங்களின் தன்மைகளிலிருந்தே தெரிகிறது.

யமுனா ராஜேந்திரன்: ஜேம்ஸ் பால்ட்வின் பற்றியும் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். ஐ எம் நீக்ரோ என்ற ஆவணப்படமும் எடுத்திருக்கிறார். ஆப்பிரிக்கச் செயற்பாட்டாளர் பற்றிய வாழ்க்கை வரலாறாக இன்னொரு முழுநீளத் திரைப்படமும் அவர் எடுத்திருக்கிறார். ராவுல் பெக்கின் திரைக்கதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமே வந்திருக்கிறது. அவர் ஒரு மார்க்சிஸ்ட். அவர் படங்கள் முழுக்க, அந்தத் தன்மை வெளிப்படும்.

ராவுல் பெக், லுமும்பா பற்றி ஆவணப்படம் எடுப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், பெல்ஜியம் அரசாங்கம், லுமும்பாவைக் கொலைசெய்ய முடிவெடுத்தது என்ற விஷயம், பெல்ஜியம் பாராளுமன்றத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. அதேபோல, பெல்ஜியத்தைச் சார்ந்த ஒரு ஊடகவியலாளர் சில ஆவணங்களை முன்வைத்தார். அதில் ஒரு முக்கியமான ஆவணம் என்னவென்றால், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட பெல்ஜியம் காவல் அதிகாரி நேர்காணல் ஒன்று தந்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிற விஷயம், “நான் லுமும்பாவை அறுத்து, எரிப்பதற்கு முன்னால், அவரது இரண்டு விரல்களை வெட்டி, நினைவுப்பரிசாக எடுத்துக்கொண்டேன். அதேபோல, அவரது இரண்டு பற்களை உடைத்து, அதையும் நான் வைத்துக்கொண்டேன்.” என்கிறார். இது வெளியில் தெரிந்தபிறகு, ஐரோப்பிய பத்திரிக்கைகளில் வெளியான பிறகு, பெல்ஜிய பாராளுமன்றத்தில் இது தொடர்பாக பெரிய விவாதம் எழுகிறது. இந்த நெருக்கடியால், பெல்ஜியம் பாராளுமன்றம் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்று தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. பெல்ஜியம் அரசாங்கம் அப்போதுதான் முறைப்படி, ”நாங்கள் லுமும்பாவைக் கொல்வதற்கான ஆணையைக் கொடுத்தோம். அதற்காக மிகவும் வருந்துகிறோம். லுமும்பாவின் குடும்பத்திடமும் நாங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பகிரங்கமாக வெளியே சொல்கின்றனர்.

புதிதாக வந்த இந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான், ராவுல் பெக்கின் ‘லுமும்பா’ பற்றிய ஆவணப்படம் உருவாகிறது. அதற்குப் பிற்பாடு, 2014ஆம் வருடம், லுமும்பாவின் ஒரேயொரு பல், பெரிய நீதிமன்ற வழக்குகளுக்குப் பிற்பாடு, லுமும்பாவின் மகளுக்கு அனுப்பப்படுகிறது. அது தற்போது காங்கோவில் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரும் துயரமான விஷயம். சேகுவேராவின் எலும்புக் கூடுகள், முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு, கியூபாவிற்குச் சென்றதைப் போல, லுமும்பாவின் மரணத்தில் மிஞ்சியிருந்த ஒரேயொரு பல், பெல்ஜியம் அரசாங்கத்தால், காங்கோவிற்கு, அவரின் நினைவாகக் கையளிக்கப்பட்டிருக்கிறது.

ராவுல் பெக் உருவாக்கிய ஆவணப்படங்கள், திரைப்படங்கள் பெரும்பாலும், கறுப்பின மக்கள் தொடர்பானது. கார்ல் மார்க்ஸைப் பற்றிக் குறுப்பிடுகையில் ’மூர்’ என்று சொல்வார்கள். ’மூர்’ என்றால் குரங்கு. கார்ல் மார்க்ஸை பல்வேறு வெள்ளையர்களுடன் ஒப்பிடுகிறபோது, தாடியெல்லாம் வைத்திருப்பதைப் பார்க்கையில், ஒரு கறுப்பரைப் போலத் தோற்றமளிப்பதாகச் சொல்வார்களாம். ஆகவே, ராவுல் பெக்கிற்கு கார்ல் மார்க்ஸ் மேல் ஒரு பிரேமை உருவாவதற்கான காரணம், இதுவாகவும் இருக்கலாம்.

பெல்ஜியம் அரசாங்கம் தந்த ஒப்புதல், பத்திரிக்கையாளர் தந்த ஆவணங்களை ஆதாரங்களாக வைத்துக்கொண்டு, தன் ஆய்வினை மேற்கொண்டு, அதற்குப் பிற்பாடாக ’லுமும்பா’ படத்தை எடுத்தது போலவே, பிரான்சிஸ் வீன் என்று கார்ல் மார்க்ஸ் தொடர்பாக எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில்தான், யங் கார்ல் மார்க்ஸ் என்ற படத்தை எடுத்தார். ராவுல் பெக் சிறந்த ஆய்வாளர். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ராவுல் பெக் எப்படி ஆய்வுப் பூர்வமான தகவல்களை, காட்சிகளாகக் கொண்டுவருகிறார் என்ற விஷயம். லுமும்பா கொல்லப்பட்ட விதம் சம்பந்தமானதுதான், இந்தப் படத்தினுடைய கதை சொல்லல். முதல் காட்சியில் கார்கள் மெல்ல அப்படியே ஊர்ந்து வரும். இதுபோன்ற காட்சியமைப்பு, மிஸ்ஸிஸிப்பி பர்னிங் திரைப்படத்திலும் இருக்கும். மூன்று மனித உரிமையாளர்கள், கொல்லப்பட்ட ஆப்பிரிக்க மக்களைப்பற்றி ஆய்வு செய்வதற்காகப் போவார்கள். அவர்களும் கொல்லப்படுவார்கள். இதில் முதல் காட்சியில், அந்த இருளில், புழுதியைக் கிளப்பியபடி மூன்று கார்கள் வரும். அதேபோன்ற காட்சி உருவாக்கத்தை, நீங்கள் ‘லுமும்பா’விலும் பார்க்கலாம். ஆர்மி ட்ரெக்கில் லுமும்பாவின் இறந்த உடலும், அவரை எரிப்பதற்கான அமிலக் கலவையும் கொண்டுவரப்படும். உண்மையிலேயே சுரங்கத்திலிருந்த அமிலத்தைத்தான் அவர்கள் பாவித்திருக்கிறார்கள். ’அஸாஸினேஷன் ஆஃப் லுமும்பா’ என்ற புத்தகம் வந்திருக்கிறது. பெல்ஜியம் பத்திரிக்கையாளர் எழுதிய அந்தப் புத்தகத்தை, வெர்ஸோ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவரது கடைசி காலத்தில் என்ன நடந்தன? என்பது பற்றி விலாவாரியாக எழுதிய நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன.

அந்தப் புத்தகங்களிலிருந்து எங்களுக்குத் தெரியவருகிற விஷயம் என்னவென்றால், லுமும்பாவை வீட்டுக்காவலில் வைக்கிறார்கள். அங்கிருந்த ஒரு டிப்ளோமேட்டிக்காரர் ஒருவரது உதவியோடு, காரிலிருந்து தப்பித்துச் செல்கிறார்கள். பிறகு படகிலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுகிறார்கள். அந்த இடம் என்னவென்றால், லுமும்பாவிற்கு ஆதரவாக ஒரு இண்டரிங் அரசாங்கத்தை, தனியே ஒரு பிரதேசத்தில் அமைக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கத்தான், லுமும்பா செல்கிறார். அப்போது, மொபட்டோவின் படை அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது. இன்னொரு இடத்திற்குக் கொண்டுசெல்கிறது. அங்கு பலவிதமான சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். பிற்பாடுதான், அவர் கட்டங்கா என்ற பிரதேசத்திற்குக் கொண்டுவரப்படுகிறார். அங்குதான் முழுக்க முழுக்க சுரங்க முதலாளிகள் இருக்கின்றனர். அது தனிப்பட்ட பிரிந்த பிரதேசமாகவும் மாறுகிறது. ஸாம்போ என்ற அதன் தலைவருடைய பார்வையின்கீழ்தான் அவர் கொலைசெய்யப்படுகிறார்.

அவரைக் கொலை செய்து, பட்டறையில் கொண்டுசென்று புதைக்கிறார்கள். அதற்குப் பிறகு, ”புதைத்தால் மட்டும் போதாது, அவர் இந்த உலகில் இருந்ததற்கான தடயமே இல்லாமலாக்க வேண்டும், லுமும்பாவிற்கான சுவடுகளே இருக்கக்கூடாது” என்று பெல்ஜியத்திலிருந்து ஒரு செய்தி வருகிறது. பிறகு, லுமும்பாவின் இறந்த உடலை மூன்று நாட்கள் கழித்துத் தோண்டியெடுத்து, ரம்பத்தால் அறுக்கிறார்கள். கோடாரியால் துண்டு துண்டாக வெட்டுகின்றனர். அவற்றை முடிந்தவரை அமிலத்தில் கரைக்கின்றனர். மீதியை தீயிட்டு எரிக்கின்றனர். எந்தெந்த வழிகளெல்லாம் முடியுமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் அவர் உடலை இல்லாமலாக்குகின்றனர். எரிக்கும்போது, அங்கிருக்கிற ஒருவன், லுமும்பாவின் இரு விரல்களை வெட்டியெடுக்கிறான். பல்லை உடைத்தெடுத்து தன்னுடன் வைத்துக்கொள்கிறான். அந்தப் பல் தான், பிற்பாடு, லுமும்பாவின் மகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இப்படத்தின் கதைசொல்லலே, லுமும்பாவின் உடல் சிதைக்கப்படுவதிலிருந்துதான் துவங்கும். படத்தின் ஆரம்பக் காட்சியில் மூன்று கார்களுக்குப் பின்னால், ஒரு ஆர்மி ட்ரக் லுமும்பாவின் உடலைச் சுமந்து வரும். இறுதிக் காட்சி, லுமும்பாவின் உடல் கொழுந்துவிட்டு எரிவதோடு படம் முடியும். இந்த இறப்பிற்கு மத்தியில், லுமும்பாவின் புரட்சிகர வாழ்வு சொல்லப்படுகிறது.

அம்சவள்ளி: ஒரு நுண் அடுக்காக, லுமும்பா, தன் மனைவி பாவ்லெனுக்கு எழுதுகிற கடிதத்தின் வரிகளிலிருந்தும் கதை ஆரம்பிக்கிறது. லுமும்பாவின் மனைவி பாவ்லென், கணவரின் இறப்பை எதிர்க்கும் விதமாக, காதலர் தினத்தன்று, நூறு பெண்களுடன் மேலாடையில்லாமல், யுஎன் தூதரகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறார். ஆனால், படத்தில் பாவ்லென் கதாபாத்திரத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை. அடுத்து, படத்தின் இறுதியில், லுமும்பா ஆட்சிக்கு வந்தபிறகு, மொபட்டோ பதவியேற்கிறார். போலியாக, லுமும்பாவின் இறப்பிற்கு மெளன அஞ்சலி தெரிவிக்கின்றனர். அப்போது, அந்தக் கூட்டத்திலிருந்த இளவயது ஆண் மற்றும் பெண், இருவர் மட்டும், மொபட்டோவை முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பர். அந்த இருவர் மட்டும், மொபட்டோவின் வெற்றியில் பங்கெடுத்துக்கொள்ளமாட்டார்கள், அவருக்காகக் கைதட்ட மாட்டார்கள். அதைக் காண்பிக்கும் வகையில், அவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வைக்கப்பட்டிருக்கும். லுமும்பாவிற்கு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உண்டு. இது, லுமும்பாவின் குழந்தைகள் என்பதை இயக்குனர் அர்த்தப்படுத்துகிறாரா?

o

யமுனா ராஜேந்திரன்: லுமும்பாவிற்கு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உண்டு. இன்றைக்கு அவர்கள், லுமும்பா தொடர்பான விஷயங்கள் குறித்தெல்லாம் பேசுகிறார்கள். அதேபோல, பாவ்லென் சமீபத்தில் இறந்துவிட்டார். ஆனால், இந்தப் படத்திற்குள் ஏன் அவருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றால், படத்தின் பிரதான கதைசொல்லலே லுமும்பாவின் மரணம் பற்றியதுதான்.

லுமும்பா, பாவ்லெனுக்கு எழுதுகிற கடிதத்தில், ”தான் எப்படி வாழ்ந்தேன், எப்படிப் போராடினேன், என்ற விஷயங்கள் நமது குழந்தைகளிடம் சொல்லவேண்டும். அப்போதுதான், அவர்களுக்கும் இந்த உண்மைகள் தெரியும். அவர்கள், இன்னொரு சமூகத்தில், இன்னொரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பர்கள். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம், அதற்குப் பிறகு அமையப்போகிற சமூகம் எப்படியிருக்க வேண்டும் என்ற விஷயத்தை, அவர்களிடம் சொல்லவேண்டும்.” என்றுதான் லுமும்பா கடிதத்தில் குறிப்பிடுகிறார். கொல்லப்படுவதற்கு முன்புதான், லுமும்பா அந்தக் கடிதத்தை எழுதுகிறார். குழந்தைகள் தங்களது முந்தைய வரலாறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ஆரோக்கியமான வருங்கால சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற ரீதியில்தான் அவருடைய இறுதிக் கடிதம் அமைந்திருக்கும். சேகுவேரா கூட தன் மனைவிக்குக் கடிதங்கள் எழுதுவார். அதில், ”தங்களுடைய குழந்தைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டும், எப்படி அவர்களை நடத்த வேண்டும், நல்ல ஒளிமயமான சமூகம் இருக்கும், கியூபாவின் சிறந்த பிரஜைகளாக நீங்கள் இருப்பீர்கள்” என்ற குறிப்புகள் அதில் இருக்கும். அதேபோல, தன் போராட்டங்களையும், அந்தக் கடிதங்களில் பகிர்ந்துகொள்வார்.

அடுத்து, பாவ்லென், யுஎன் தூதரகத்திற்கு முன்பாக, போராட்டம் நடத்திய விஷயங்களெல்லாம், படத்தின் உள்ளடக்கத்திற்குள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. லுமும்பாவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்ததாக, இந்தப் படத்தில் குறிப்பிடப்படுகிற ஒரேயொரு காட்சி, கொலைசெய்வதற்குக் காரணமாகயிருந்த மொபட்டோவே, லுமும்பாவிற்கு நினைவஞ்சலி செலுத்துவதுபோலயிருக்கிற அந்தக் காட்சி. அந்தக் காட்சியில், மொபட்டோவை முறைத்துப் பார்க்கிறவர்கள், லுமும்பாவின் மகன், மகளாக இல்லாவிட்டாலும் கூட, ஒரு புதிய தலைமுறை, வரலாற்றைப் படிக்கிற தலைமுறை, ”நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நீ நடிக்கிறாய். நாங்கள் உன் மீது பயங்கரமான கோபத்திலும், வெஞ்சினத்திலும் இருக்கிறோம்.” என்பதை நுட்பமாக வெளிப்படுத்துவதாகவும் இக்காட்சியை எடுத்துக்கொள்ளலாம்.

அம்சவள்ளி: லுமும்பாவின் இறப்பிற்குப் பிற்பாடு நடந்த அரசியல் மாற்றங்கள்

யமுனா: காங்கோவின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், 1965இல் சேகுவேரா, காங்கோவிற்குச் செல்கிறார். காங்கோவில் இருக்கிற புரட்சியாளர்களையெல்லாம் ஒன்று திரட்டுகிறார். அங்கு நடக்கிற பல்வேறு தாக்குதல்களில் பங்குபெறுகிறார். அதற்குப் பிறகு, சிற்சில அரசியல் மாறுபாடுகள், மற்ற விஷயங்களால் அவர் காங்கோவிலிருந்து வெளியேறுகிறார். லுமும்பாவிற்குப் பிற்பாடு, லுமும்பாவின் லெகசி எப்படி காங்கோவிற்குள் வந்தது என்று பார்த்தோமானால், லுமும்பாவின் மரணத்திற்குப் பிற்பாடுதான், காலனியாதிக்க எதிர்ப்பென்பது உக்கிரம் பெற்றது. ஆயுத விடுதலைப் போராட்டமாக அது பரிமாணம் பெற்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, கடுமையான போராட்டங்களை அகஸ்தினோ – நெட்டோ தலைமையில், அவர்கள் அங்கே நடத்தினார்கள். காங்கோ, முழுமையாக மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெறக்கூடிய ஒரு வாய்ப்பு பிற்பாடுதான் உருவானது. ஆகவே, லுமும்பாவின் லெகசியை இப்படித்தான் நாம் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.  

அம்சவள்ளி: இராணுவத்தின் கோரமுகம், மிக ஆழமாகவே இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. லுமும்பாவின் கீழிருந்த இராணுவம், லுமும்பாவையே கைது செய்கிறது. “இதற்காக ஒருநாள் வருத்தப்படுவீர்கள்” என்கிறார் லுமும்பா. அவரை, இராணுவத்தினர் விமானத்திலிருந்து அடிக்கிற காட்சிகள்கூட வருகின்றன. பெல்ஜியத்தின் ஆணைகளுக்குட்பட்டு, அமெரிக்காவின் கட்டளைகளுக்கு அடிபணிந்துபோகிற இராணுவத்தின் செயல்பாட்டைக் காட்சிகளாக வைத்திருக்கின்றனர். இது குறித்து.

யமுனா: காலனியாதிக்கத்தை நாம் வரையறுக்கும்போதே பார்த்தீர்களென்றால், காலனியாதிக்கம், போஸ்ட் காலனியம், நியோ காலனியம் என்றெல்லாம் நாம் விரித்துக்கொண்டே போகிறோம். காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை என்று நாம் சொல்கிறோம். இங்கு ‘விடுதலை’ என்பது என்ன? அடக்குமுறை நிர்வாகத்திலிருந்து விடுதலை, பொருளாதார ரீதியிலான ஆதிக்கத்திலிருந்து விடுதலை, இராணுவ ரீதியில் தங்கள் நாட்டை, தாங்களே கட்டுப்படுத்துக்கொள்வது, இதெல்லாம்தான் விடுதலை. ஆனால், காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை என்று சொல்லப்பட்டாலும், இராணுவத் தலைவர்கள், தளபதிகள் எல்லாம் அவர்களாகவே இருக்கிறார்கள். பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிற சுரங்க முதலாளிகள் அத்தனை பேரும் அவர்களாகவே இருக்கின்றனர். நிர்வாகம் முழுவதிலும் அவர்களே இருக்கிறார்கள். இதுதான் நடக்கிறது.

லுமும்பா கைது செய்யப்பட்டு, கட்டாங்காவில் அடித்துக் கொலை செய்யபடுகிற செயலில், ஆறு பேர் பங்கெடுக்கின்றர். அதில் மூன்று பேர் பெல்ஜியம் அதிகாரிகள். லுமும்பாவைச் சுட்டுக்கொல்லும்போது இரண்டு வெள்ளைக்காரர்கள் அங்கு இருக்கிறார்கள். அதில் ஒருவர் பெல்ஜியத் தூதரகத்தைச் சார்ந்தவர். இன்னொருவர் அமெரிக்கத் தூதரகத்தைச் சார்ந்தவர். எனவே, விடுதலைபெற்ற பிறகும்கூட, அந்நாட்டைக் கட்டுப்படுத்துபவனாக, இராணுவத்தைக் கட்டுப்படுத்துபவனாக, அமெரிக்காவும், பெல்ஜியமும், பிரிட்டனும்தான் இருந்திருக்கிறது. ஆகவே, நாம் என்னதான் விடுதலை பெற்றுவிட்டோம் என்று சொன்னாலும், இன்றைக்கு நிறுவனங்கள், ஆட்சியதிகாரம், நீதியமைப்பு போன்ற விஷயங்களில் காலனியம் ஆதிக்கம் செய்கிறது. இன்னைக்கும் காலனியம் தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராகயில்லை. அமெரிக்கா, ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களுடைய இராணுவத் தளத்தை வைத்திருக்கிறது. பிரிட்டன், காலனியம் போலவே, நாற்பத்திரண்டு நாடுகளில் தங்களுடைய இராணுவத்தை வைத்திருக்கிறது. இந்தியாவில் எடுத்துக்கொண்டால், இன்றைக்கும் சினிமா தணிக்கைத் துறையின் சட்டங்கள், அதேபோல தேசத்துரோகம் (ஏண்டி நேஷனல்) என்று சொல்லப்படுகிற சட்டங்கள், இவையெல்லாம் காலனியாதிக்கக் காலத்தில் போடப்பட்ட சட்டங்கள். ஆகவே, காலனியம் என்பதை நாம் சாதாரணமாக வரையறுத்துவிடக் கூடாது. காலனியம் அங்கிருந்து நீங்கிவிட்டால்கூட, தொடர்ந்து தனது படைகளை அங்கு நிறுத்திவைத்திருப்பதன்மூலம், தங்களது கோட்பாட்டு வடிவங்களை அமைப்பு வடிவில் வைத்திருப்பதன் மூலம், இன்னும் அந்த நாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதனது ஒரு அம்சமாகத்தான், இப்படத்தையும் பார்க்க வேண்டும். காலனியாதிக்க நாடுகளின் வழிகாட்டுதலில்தான் மொபட்டோவின் இராணுவம் செயல்பட்டது. அமெரிக்க ஜனாதிபதிகள் கூட பிற்பாடு, மொபட்டோவிற்குக் கைகொடுக்கிற காட்சிகளெல்லாம் வருகின்றன. எனவே, முழுக்கவும் மேற்கத்திய நாடுகளினுடைய கையாட்களாகத்தான் அந்தக் காலத்திலிருந்த இராணுவ அதிகாரிகளும், இராணுவமும் இருந்ததென்பதையே லுமும்பா படத்திலும் காண்பிக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை, அரசாங்கம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், இராணுவம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கான நெறிமுறைகளை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கும் பாருங்கள், அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்கிற நாடுகளிலெல்லாம், அமெரிக்க இராணுவம் செய்கிற அட்டூழியங்களை நீங்கள் விசாரிக்க முடியாது. சர்வதேச அமைப்புகள், இதை விசாரிப்பதற்கு அனுமதி கிடையாது. இம்யூனிசைசேஷன். பிரிட்டனில் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அது என்னவென்றால், காவல்துறை, வேறு அமைப்புகள் தொடர்பாகச் செய்கிற மனித உரிமை மீறல்களை விசாரிக்கக்கூடாது, விமர்சிக்கக் கூடாது, அவர்களுக்கு இம்யூனிசேஷன் என்ற சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இருபத்தொறாம் நூற்றாண்டின் துவக்கத்தில், மனித உரிமை மீறல்களைச் செய்யக்கூடிய இராணுவத்திற்கும், காவல்துறைக்கும் இம்யூனிசைசேஷன் தரப்படுமென்றால், 1960களின் நிலைமையைச் சற்று யோசித்துப்பாருங்கள். ”மனிதர்களே செய்யக்கூடாத, மிருகங்களும் செய்யத் தயங்குகிற விஷயங்களை நாங்கள் செய்தோம்” என்றுதான், லுமும்பாவின் இறந்த உடலைச் சிதைத்த ஒருவர், பிற்பாடு பேட்டியளித்திருக்கிறார். 
 
படத்தில் ‘ஆந்த்ரோ பேகன்’ என்ற சொல் இடம்பெறும். ஆந்த்ரோ பேகன் என்றால், மாமிசத்தைப் புசிப்பவர்கள், காட்டுமிராண்டிகள். மேற்கத்தியர்கள், ஆப்பிரிக்க மக்களை இச்சொற்களைப் பயன்படுத்தித்தான் குறிப்பிடுகிறார்கள். லுமும்பா சித்திரவதை செய்யப்படுகிறபோது, அதைத்தாங்கிக்கொண்டு, தன்னைச் சித்தரவதை செய்பவர்களைக் குறித்து, ‘இவர்கள்தான் ஆந்த்ரோ பேகன்’ என்று சொல்வார். ”நீங்கள் எங்களை காட்டுமிராண்டிகள் என்று சொல்கிறீர்கள், ஆனால் உண்மையில் நீங்கள்தான் காட்டுமிராண்டிகள், மாமிசத்தைப் புசிக்கக்கூடியவர்களாக இருக்கிறீர்கள். மிருகங்களும் செய்யத்தயங்குகிற கீழான செயல்களையெல்லாம், அரசியல் அதிகாரத்தின்பேரில், நாகரீகத்தை ஏற்றுமதி செய்கிறோம் என்பதன் பெயரில் செய்திருக்கிறீர்கள்” என்பதையும் படம் உணர்த்துகிறது.

அம்சவள்ளி: இது உண்மைக் கதை என்பதால், கஸாவோ, மொபட்டோ என்று அந்த அதிகாரிகளின் பெயர்களை அப்படியே குறிப்பிடுகிறார்கள். இன்னும் பலரது பெயர்களும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படம் வெளியாகிறபோது, அரசியல் தரப்பிலிருந்து, ஏதேனும் எதிர்வினைகள், தடைகள் வந்தனவா?
யமுனா: இல்லை, ஒரு பிரச்சினைகளும் வரவில்லை. தடைகள் வருவதாகயிருந்தால், ஒருவேளை லுமும்பா தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பின், லுமும்பாவின் குடும்பத்திலிருந்து இப்படத்திற்கு ஏதேனும் எதிர்வினைகள் வந்திருக்க வேண்டும். அல்லது பெல்ஜியம் அரசாங்கம், பிரிட்டிஷ் அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்கலாம். இப்படியேதும் எந்த எதிர்வினைகளும் வரவில்லை.

அம்சவள்ளி: நான் ஒரு கட்டுரையில் படிக்கும்போது, லுமும்பா பதவியிலிருக்கும்போதே கொலை செய்யவேண்டும் என்று அப்போது சொன்ன, அமெரிக்கத் தூதரகத்தின் முகமாகயிருந்த ப்ரான்ஸ் காலிக், படம் வெளிவரும்போது, தன்னுடைய பெயர் அடிபடக்கூடாது என்பதில் தெளிவாகயிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

யமுனா: தனிப்பட்ட சில நபர்கள் இதுபோன்று ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கலாம். ஏனெனில், படக்குழுவினர் உண்மையில் வரலாற்றில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்கிறார்கள். படத்தில் கூட, உண்மைச் சம்பவத்திற்கேற்ப அதற்கான ஆதாரங்களை, இடையிடையே பத்திரிக்கைச் செய்திகள், புகைப்படங்கள் வாயிலாகக் காண்பிக்கவும் கூடும். இதில் ஏதேனும் தன் பெயர் வந்துவிடுமோ என்று அவர்கள் பயந்திருக்கலாம்.

பெல்ஜியம் தூதரகத்தில் வேலை செய்பவர்கள் இருப்பார்கள். அதேபோல, அமெரிக்கத் தூதரகம், பிரிட்டிஷ் தூதரகத்திலும் வேலை செய்பவர்கள் இருப்பார்கள். இந்தத் தூதரகத்திலிருப்பவர்கள், நாங்கள்தான் கொலை செய்யக் காரணமாக இருந்தோம் என்ற விடயங்களை சில நேரம் தெரிவிப்பார்கள். ஏனெனில், அவர்கள் முடிவுகள் எடுக்க முடியாது. அவர்களுக்கான ஆணைகள், மேல்மட்டத்திலிருந்து வரவேண்டும். லுமும்பா கொலைசெய்யப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஐஸனோவர். அதேபோல, எம்16 சார்பில் குறிப்பெழுதியவர் அங்கோலாவிற்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய, இங்கிருக்கிற அந்த அமைப்பினுடைய தலைவர். காங்கோ தனிப்பட்ட முறையில், பெல்ஜிய அரசரின் சொத்து. இதில், லுமும்பாவைக் கொல்லவேண்டும் என்பதை, அரசரின் நிர்வாகத்திற்குள் இருப்பவரும்தான் முடிவெடுக்கிறார். எனவே, தூதரகத்திலிருக்கிற ஆட்களைக் குறிப்பிடுகிறபோது, சிலர் அதை மறுக்கத்தான் செய்வார்கள்.

லுமும்பாவின் கொலை சம்பந்தமாக, இந்த மூன்று அரசாங்கங்களும் என்னென்ன முடிவுகள் எடுத்தன என்பது, இன்றைக்கு எழுத்துப்பூர்வ ஆவணமாகவே கிடைக்கிறது. அதேபோல, அவர் கொலைசெய்யப்பட்ட முறை, அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், லுமும்பாவின் உடலை அமிலத்தில் கரைத்தவன் காணொளி பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறான். இப்படியாக, ஒலி, ஒளி, எழுத்து ஆவணங்கள் எல்லாம் இருக்கின்றன. இந்த ஆவணங்களை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், அப்படியில்லாமல், பேச்சுவாக்கில் ஒருவரின் பெயரைக் குறிப்பிடுகிறபோது, அதை மறுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்த மறுப்புகளுக்கெல்லாம் எந்தவிதமான அர்த்தங்களும் இருக்காது. ஏனெனில், உண்மை எப்போதும் உண்மைதான்.

ஒரு சம்பவம் நடந்துமுடிந்து பதினைந்து, இருபது வருடங்களுக்குப் பிறகு, ’தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்’ கீழ், நீங்கள் அந்த ஆவணங்களைப் பெறமுடியும். சேகுவேராவின் கொலை சம்பந்தமான, சி.ஐ.ஏ கோப்புகள், தனியாக ஒரு புத்தகமாகவே வந்திருக்கின்றன. சி.ஐ.ஏ எப்படி சேகுவேராவைப் பின்தொடர்ந்தது என்று அதில் விலாவாரியான குறிப்புகள் இருக்கின்றன. சி.ஐ.ஏ ஒவ்வொருவருக்கும் தனியான கோப்புகள் வைத்திருக்கின்றன. ஐசன்ஸ்டைன் கோப்புகள், ஐன்ஸ்டீனுக்கான கோப்புகள், மேற்கத்திய பிரெஞ்சு தத்துவவாதிகளுக்குக் கூட சி.ஐ.ஏவிடம் தனியான கோப்புகள் உள்ளன. இதெல்லாம் இன்றைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து பெறமுடியும்.



லுமும்பா சார்ந்த ஆதாரங்களை, ராவுல் பெக் இப்படித்தான் திரட்டுகிறார். எம்16 தொடர்பான ஆதாரங்கள், சி.ஐ.ஏ தொடர்பான ஆதாரங்கள், பெல்ஜியம் அரசினுடைய ஆதாரங்கள் போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, ஆவணங்களாகப் பெறுகின்றனர். இதில் தொடர்புடைய, உயிரோடிருக்கிற ஆட்களை, நேரடியாகச் சந்திக்கிறார்கள். அவர்களைப் பேட்டியெடுக்கின்றனர்.

சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய லீ ஆண்டர்சன், சேகுவேராவுடன் பழகியவர்களை, சேகுவேரா கொலைக்குக் காரணமாக இருந்தவர்களையெல்லாம் இப்படித்தான் தேடிச்சென்று பேட்டியெடுக்கிறார். சேகுவேராவைச் சுட்டுக்கொன்றவன், சுட்டுக் கொல்வதற்கான ஆணையைப் பிறப்பித்தவன், சேகுவேராவின் உடலைப் புதைத்தவன், சேகுவேராவின் உடலை ரொட்டி சுடுகிற இயந்திரத்தில் வைத்து எரித்தவன், இத்தனைபேரையும் பேட்டியெடுக்கிறார். அந்த ஆவணங்களைப் புத்தகமாக்குகிறார். பிற்பாடுதான், சோடர்பெர்க் அவற்றைத் திரைப்படமாக்குவதற்கான ஆதாரங்களாகக் கொண்டு படமெடுக்கிறார். சோடர்பெர்க்கின் சேகுவேரா படத்திற்கு ஆதாரமாக இருந்தது மூன்று புத்தகங்கள். ஒன்று பொலிவியன் டைரி இரண்டாம் பாகம். கொரில்லா வார் ஃப்ரே முதல் பாகம். மூன்றாவது இந்த பொலிவியன் யுத்தம் தொடர்பான ஜான் லீ ஆண்டர்சனினுடைய சேகுவேரா பயோகிராஃபி புத்தகம். அதேபோல, வெர்ஸோ பதிப்பகம் வெளியிட்ட, அஸாசினேஷன் ஆஃப் சேகுவேரா, என்ற புத்தகத்தை, பெல்ஜியம் ரிப்போர்டர் ஒருவர் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். ஒரு படைப்பிற்குப் பின்னால், இத்தனை ஆய்வுகள் நடக்கின்றன. ஆகவே, ஒரு படத்திற்கு உதிரியாக வருகிற ஆட்சேபணைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இப்படம் முன்வைக்கிற அரசாங்கம் தொடர்பான விமர்சனங்களை மறுக்கக்கூடிய எந்தவிதமான திண்மையும் அந்தந்த அரசுகளுக்குக் கிடையாது. ஏனெனில் அதெல்லாம் உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை, அரசால் மறுக்கமுடியாது. அதனால்தான் இந்தப் படம் உலகெங்கும் பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.

லத்தீனமெரிக்க புரட்சி பற்றிச் சொல்லும்போது, கவிதையின் புரட்சி (ரெவல்யூசன் ஆஃப் பொயட்ரி) என்று சொல்வார்கள். ஏனெனில், அதில் பெரும்பாலான புரட்சிக்காரர்கள் எல்லோருமே கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். அதேபோல, இங்கு ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாக லுமும்பா, அகஸ்தியா லிட்டோ, அவெல்கா கேப்ரல், தமோரார் விட்டால் இருந்திருக்கிறார்கள்.

அம்சவள்ளி: காங்கோ, இப்போது காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டதா?

யமுனா: காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்டுவிட்டது. ஆனால், முன்பே சொன்னதுபோல, அந்த காலனியாதிக்க எச்சங்கள் இப்போதும் அங்கிருக்கின்றன. அதனால்தான், கல்வித்துறை சார்ந்தவர்கள், நியோகி தாகோ தியாகோ போன்ற படைப்பாளிகள், ‘ நமது சிந்தனையிலிருந்து காலனிய நீக்கம் நிகழவேண்டும்’ என்று சொல்கிறார்கள். மொழியில் காலனிய நீக்கம் நிகழவேண்டும். எங்களது நிர்வாகத்தில் காலனிய நீக்கம் நிகழவேண்டும். எங்களது சட்ட அமைப்புகளில் காலனிய நீக்கம் நிகழவேண்டும். ஆகவேதான், காலனிய நீக்கம் என்பது கல்வித்துறை ஆய்வுகளிலும், இலக்கியத்திலும் மிக முக்கியமாகயிருக்கிறது. இந்தத் திரைப்பட தணிக்கை விதிமுறைகளை மாற்றவேண்டும், தேசவிரோதச் சட்டம் என்பதே, காலனியாதிக்கம் கொண்டுவந்தது, அதையும் மாற்றவேண்டும் என்பதற்கான போராட்டங்கள் இந்தியாவிலும் நடக்கின்றன. நடைமுறையில் சொல்லவேண்டுமென்றால், காலனியம் என்பது ஏதோவொரு வகையில், பல்வேறு விஷயங்களில், பாதிப்பு செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது.


இந்தியா அரசியல் ரீதியில் விடுதலை பெற்றுவிட்டது என்று சொன்னால், ஆப்பிரிக்காவிலும் பெரும்பாலான நாடுகள் விடுதலை பெற்றுவிட்டன. ஆனால், காலனியாதிக்கத்தின் சுமைகளை அந்நாடுகள் இன்றளவும் கொண்டிருக்கின்றன.

அம்சவள்ளி: படத்தின் கதைசொல்லல் பாணி எப்படி அமைந்திருக்கிறது?

யமுனா: ஒரு பார்வையாளனுக்கு, அவரோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு, லுமும்பா பற்றி அறிந்தவர்களுக்கு, கேள்விப்பட்டவர்களுக்கு, இப்படத்தின் காட்சிப் பிம்பங்கள் எவ்வளவு கொந்தளிப்பான சீற்றத்தை, ஒரு தார்மீக ஆவேசத்தை, லுமும்பாவின் கொலை உருவாக்கியிருக்கிறது. லுமும்பாவின் கொலை, அவர் சடலம் தோண்டியெடுத்து, துண்டு துண்டாக்கி எரியூட்டப்பட்டது, என இத்தனையும் இந்த வெளியுலகத்திற்குத் தெரியாமல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய நினைவின் சாட்சியமாக, ஒரேயொரு பல் மட்டும்தான், கிடைத்திருக்கிறது. இந்த உணர்வுக் கொந்தளிப்பை, ஒரு கவிதை வடிவில் காகிதத்தில் எழுதினால், என்ன உணர்வு கிடைக்குமோ, அதுதான், இந்தப் படத்தின் கதை சொல்லல் பாணியாகவும் அமைந்திருக்கிறது. இந்த மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொண்டுவருவதும், அதைத் தேடிச்செல்வதும்தான் இப்படத்தின் கதைசொல்லல்முறை. இது ஒரு துப்பறிவாளனுக்கான கதைசொல்லல் பாணி. களச்செயற்பாட்டாளருக்கான, தார்மீக உணர்வு, தார்மீக நீதி பற்றிப் பேசுகிற, மனித குலத்திற்கான கதை சொல்லல். இந்த அழுத்தமான கதை சொல்லல் பாணியை இறுதிவரை தக்கவைத்திருக்கிறார்.

பொலிடிகல் த்ரில்லர் வகைமையில் தோற்றமளிக்கிறது இப்படம். பொலிடிக்கல் த்ரில்லர் என்றால் குறிப்பிட்டு இரண்டு படங்களைச் சொல்லமுடியும். கென்லோச்சின், ஐரிஷ் புரட்சி தொடர்பான ஹிட்டன் அஜெண்டா திரைப்படம். உருகுவேயின் தி ட்வல்வ் இயர் நைட். இண்டக்ரிட்டி உள்ள கலைஞனால், இந்த உலகத்தின் மகத்தான புரட்சியாளர் பற்றிய படமாக, இந்த லுமும்பா படம் வந்திருக்கிறது.