அதிகாரத்தின் தனிமை - The Two popes

-தினேஷ்

தி டூ போப்ஸ் (The two popes) திரைப்படம், மதம் சார்ந்த அரசியலைப் பேசுகிறது. மதத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் அதிகாரம் எத்தகையது? என்று பேசுகிற அதேவேளையில், வசதியான பங்களாவிற்குள், வண்ணமயமான கட்டிடங்களுக்குள் இருக்கும் அவர்களின் தனிமை வாழ்க்கையையும் காட்சிப்படுத்துகிறது.
சிட்டி ஆஃப் காட் (city of god, 2002) எடுத்த இயக்குனர், ஃபெர்னாண்டோ மெரில்லஸ் (Fernando Meirelles) இயக்கத்தில் 2019-ல் வெளியான திரைப்படம் தி டூ போப்ஸ் (The two popes).


மனிதர்களில் சிலர் அதி உயரமான புனித பிம்ப உருக்களுக்குள் வைத்து மதிக்கப்படுகின்றனர். அவர்களை இறைத்தூதர்களெனவும், போப்பாண்டவர்கள் எனவும் பெயர் வைத்து அழைக்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் சிதறுண்டு போயிருக்கிற சாமான்யர்கள், தான் செய்கிற தவறுகளுக்கு இந்த இதைத்தூதர்களிடமிருந்து மன்னிப்பு கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், எத்தகைய போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரியவர்களாயினும் போப்பாண்டவர்களும் ஒரு வகையில் மனிதர்கள்தான். அவர்களுக்கும் சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதுபோல, உணர்வுகள் இருக்கும். தவறுகள் செய்திருப்பார்கள். போப்பாண்டவர்களுக்கும் நம்மைப்போல இயல்பானதொரு வாழ்க்கை இருக்கிறதென்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

புனித பிம்பங்களுக்குச் உரியவர்களான போப்பாண்டவர்கள், அவர்களுக்கும் குற்றவுணர்விலிருந்து வெளிவரமுடியாத கஷ்டங்கள், அவர்கள் செய்த குற்றங்களை யாரிடம் முறையிடுவது போன்ற சிக்கல்களில் குழம்பித் தவிப்பார்கள். புனித பிம்பத்தோடு இணைந்த தனிமை வாழ்க்கை, அதே நேரத்தில் அவர்களுக்கு பால் புதுமையினர் தொடர்பான பார்வை என்னவாகயிருக்கிறது? சமூக மாற்றங்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்கிறார்களா? என்பதைப் பற்றியும் இந்த தி டூ போப்ஸ் படம் விவாதிக்கிறது. மேலும், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பின்புலத்திலுள்ள லத்தீன் அமெரிக்க, அர்ஜெண்டீனிய, ஜெர்மனிய நாஜி அரசியல் பார்வையையும், வாடிகன் மற்றும் கத்தோலிக்க நிறுவனமயத்தின் செயல்பாடுகளையும் குறித்து தோழர். யமுனா ராஜேந்திரன் அவர்களுடன் உரையாடலைத் துவங்கலாம்.

வாடிகன் மற்றும் கத்தோலிக்க நிறுவனம், போப்பாண்டவர்களின் நிறுவன மயம், பகாசுரமான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. அரசுகளுக்கு இணையான, மிகப்பெரும் பொருளாதார வளம் கொண்ட, உலகத்தினுடைய பல்வேறுவிதமான அரசியல் அதிகாரங்களைத் தீர்மானிக்கக்கூடியதாக, அந்த கத்தோலிக்க நிறுவனம், அதன் மைய்யமான வாடிகன் இருக்கிறது. அதனுடைய தலைவராக போப்பாண்டவர் இருக்கிறார். இதற்கு அப்பால், இவர்கள் (போப்பாண்டவர்கள்) மனிதர்களாக எவ்வளவு தனிமையுணர்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இவ்வளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், தனிமனிதர்களாக அவர்களைப் பார்க்கையில், எவ்வளவு இரக்கத்திற்குரியவர்களாக, ஒரு சாதாரண மனிதனிக்குரிய வேட்கைகளையும், ஆசைகளையும் கொண்டிருப்பவர்களாக, இருக்கிறார்கள் என இந்த இருவிஷயங்களையும் இந்தப் படம் காண்பிக்கிறது.

இத்தாலியின் ரோம் நகரில் இருக்கிற வாடிகன், அது ஒரு தனி நாடாக, தனி அரசாகச் செயல்படுகிறது. அங்கு இத்தாலியின் அரசியல் சட்டங்கள் செல்லுபடியாகாது. அதற்கென தனியான வங்கிகள் இருக்கின்றன, அவற்றைப் பாதுகாக்க தனி பாதுகாப்பு அலுவலர்கள், நிர்வாகங்கள் இயங்குகின்றன. உண்மையிலேயே பல்வேறு அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய, ஒரு நிறுவன அமைப்பாகத்தான் வாடிகனும், போப்பாண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு.

ஆகவேதான், ஒவ்வொரு முறையும், போப்பாண்டவர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும்போது, அவர்கள் உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்களையும், அதிர்வுகளையும் உருவாக்குகிறார்கள். லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு போப்பாண்டவர் வந்தாரென்றால், மூன்றாம் உலக நாடு என்றளவில் அவர்கள் தங்களுடைய அனுபவங்களை அந்தக் கட்டிற்குள் கொண்டுவந்து, அதற்குத் தகுந்தாற்போல கத்தோலிக்க அணுகுமுறைகளை மாற்றுகிறார்கள். அதுபோலவே, போலந்தில் இருந்து போப்பாண்டவர் வருகிறபோது, கம்யூனிசத்தின் கீழிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து அந்தக் கொள்கைகளை எடுத்துக்கொண்டு கத்தோலிக்கம், உலகம் சார்ந்த விஷயங்களைச் சீர்திருத்துகிறார்கள். அதுவே, ஜெர்மனியிலிருந்து வந்த போப்பாண்டவர் என்றால், நாஜிக்கள் காலம், ஹிட்லர் அதற்குப் பிற்பாடாக இரண்டாம் உலகப்போர், அதன் விளைவுகளை உட்கொண்டுதான் அவர்கள் வருகிறார்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அனுபவங்களுக்குத் தகுந்தாற்போல, கத்தோலிக்கக் கொள்கைகளையும், போப்பாண்டவரின் அதிகாரங்களையும் மாற்றுகிறார்கள். இந்த அரசியலை தி டூ போப்ஸ் முன்வைக்கிறது.

ஜெர்மனியிலிருந்து வருகிற ராட்ஸிங்கருக்கும் (Joseph Ratzinger) அர்ஜெண்டினாவிலிருந்து வருகிற பெர்கோக்லியோவிற்கும் (Cardinal Jorge Mario Bergoglio) இருவிதமான அரசியல் பிரச்சினைகள், வரலாறுகள் இருக்கின்றன. இரு பரிமாணங்கள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இந்த இரு மனிதர்களுக்குமே, தன் கடந்த காலத்தின் மீதான குற்றவுணர்வு இருக்கிறது. ’தான் பாவம் செய்துவிட்டோம்’ என்ற உறுத்தல் இருக்கிறது. ”அந்தப் பாவத்திலிருந்து மன்னிப்பு பெறவேண்டும், அதற்கு இந்த கத்தோலிக்க நிறுவனத்திலிருந்து தாங்கள் வெளியேற வேண்டும்” என்று நினைக்கிறார்கள். அர்ஜெண்டினாவிலிருந்து வந்த பெர்கோக்லியோ, தன்னுடைய கார்டினல் பதவியை ராஜினாமா செய்ய முயற்சிக்கிறார். அதுபோலவே ஜெர்மனியிலிருந்து வந்த போப்பாண்டவரான, பதினாறாம் பெனடிக்டும் (ராட்ஸிங்கர்) தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நினைக்கிறார். இருவருக்கும் தான் செய்த செயலின் விளைவான குற்றவுணர்வு இருக்கிறது, அதிலிருந்து விடுபட நினைக்கிறார்கள். ஆகவே, கிறித்துவத்தில் இருக்கிற இந்த குற்றவுணர்வு, பாவம், பாவ மன்னிப்பு, போன்ற விஷயங்களெல்லாம் எவ்வாறாக, இரண்டு போப்பாண்டவர்களுடைய அரசியல் உணர்வாகவும் இருக்கிறது என்பதையும் இந்தப் படம் கதைக்களனாக எடுத்துக்கொள்கிறது.
அர்ஜெண்டினாவை எடுத்துக்கொள்வோம். பெர்கோக்லியோவிற்கு, கடந்தகால அர்ஜெண்டினாவில் நிகழ்ந்த பிரச்சினை என்னவென்றால், எழுபதுகளில் அர்ஜெண்டினாவில் ராணுவ அதிகார ஆட்சி வந்தபோது, பெர்கோக்லியோ ராணுவ ஆட்சியதிகாரத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டார், அதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தார், ஆயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்தார், மக்கள் காணாமலாக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்தார், இராணுவ அதிகாரத்தோடு சேர்ந்து செயல்படக்கூடியவராக இருந்தார், என்ற குற்றவுணர்வு அவருக்கு இருப்பதனால், அந்தப் பாவத்திலிருந்து வெளியேற, தான் இந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நினைக்கிறார். இதைத் தெரியப்படுத்தத்தான் அவர் வாடிகன் நகரத்திற்கு வருகிறார், ஆனால், போப்பாண்டவர் (பதினாறாம் பெனடிக்ட்) அந்த ராஜினாமா கடிதத்தை ஒப்புக்கொள்வதில்லை.

ஜெர்மனிலிருந்து வந்த, அந்த போப்பாண்டவருக்கு (பதினாறாம் பெனடிக்ட்) இருப்பது, வேறு விதமான குற்றவுணர்வு. கத்தோலிக்க தேவாலயத்தில் பன்னிரண்டு சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அது தொடர்பான பிரச்சினைகள் உலக நாடுகளின் பத்திரிக்கைகளில் முழுமையாக வெளிவந்தபிறகும், அங்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாக இவருக்குத் தெரிந்தபிறகும், அந்தப் பிரச்சினையை போப்பாண்டவர் மறைக்கப்பார்க்கிறார், அந்தப் பிரச்சினை சார்ந்து பேசுவதைத் தவிர்த்து மெளனம் காக்கிறார். அந்தக் குற்றவுணர்வு, அவர் போப்பாண்டவர் ஆனபிறகும், அவரைத் துரத்துகிறது. ஆகவேதான், அவர் இவ்வாறு சொல்கிறார், “நான் இந்தப் பதவியை ஏற்றபோது, கடவுள் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார், கடவுளோடு நான் உரையாடிக்கொண்டிருந்தேன், அவருடைய சொற்கள் என் காதுகளில் விழுந்தன, இப்போது என்னால் கடவுளுடன் உரையாட முடியவில்லை, அவர்களுடைய சொற்களை என்னால் செவிமடுக்கமுடியவில்லை” என்கிறார். இந்தப் பாவத்திலிருந்து விடுபடுவதற்காகத்தான், அவர் தன் பதவியை ராஜினாமா செய்யவேண்டுமென நினைக்கிறார். ஒரே நேரத்தில் கிறித்துவ அறம் என்று சொல்லப்படுகிற அந்தப் பாவம், அந்தப் பாவத்திலிருந்து மீள்வதற்காகத் தங்களை உலக லெளகீக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிக்கொள்வது என்ற விஷயத்தை இந்தப் படம் முன்வைக்கிறது. அதேசமயத்தில், ஒரு காலத்தில் அர்ஜெண்டினாவில் நடந்த அந்த ராணுவ ஆட்சியதிகாரம் நிகழ்த்திய வன்முறைகள் குறித்தான கேள்விகள் வருகிறது. 


அர்ஜெண்டினாவில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன, தேவாலயங்கள் இராணுவத்தோடு சேர்ந்து நின்றன, ’வேர் வாஸ் க்றைஸ்ட் இன் திஸ் (Where was christ in this)’ என்று அவர் கேட்கிறார்.

அதேபோலத்தான் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்டும், தனக்கான பாவ மன்னிப்பைக் கோருகிறபோது, அர்ஜென்டிய கார்டினலின் காதுக்கு அருகில் சென்று, ”பன்னிரண்டு சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டார்கள், அப்போது நான் அமைதியாக இருந்தேன், அதுதான் என்னுடைய பாவம்” என்று சொல்கிறார். ஆகவேதான், ”இந்தப் படம் ஒரே நேரத்தில், இரு தனி மனிதர்களின் குற்றவுணர்வு தொடர்பானதும், மிகப்பெரிய வரலாற்றுத் துயர்களின் சம்பந்தமானதாகவும் இருக்கிறது” என்கிறேன்.

இந்தப் படத்தில் உரையாடல்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பால்புதுமையினர் தொடர்பான இரு போப்களுக்கு இடையே நடக்கிற உரையாடல். அதேபோல, ஆவணப்பட பாணியிலான காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. போப்பாண்டவர் தேர்வு செய்யப்படும் முறை, மக்கள் கூடுகிற இடங்களில் போப்பாண்டவர் நடந்துவருகிற காட்சி, காட்சியைப் படமாக்க இயக்குனர் / ஒளிப்பதிவாளர் தேர்ந்தெடுத்திருக்கிற ஒளிப்பதிவுக் கோணம் என, இவை ஆவணப்படப் பாணியில் இயல்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பின்னர் படத்தில் வண்ணங்களைப் பயன்படுத்தியிருக்கிற விதம் குறித்தும் சொல்லவேண்டும். சிட்டி ஆஃப் காட் எடுத்த ஃபெர்னாண்டோ மெரில்லஸ், காட்சிக் களத்திற்கேற்ற காட்சிமொழியை இந்த டூ போப்ஸ் படத்தில் தேர்வுசெய்திருக்கிறார்.

சிட்டி ஆஃப் காட் படத்தையும் தி டூ போப்ஸ் படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. சிட்டி ஆஃப் காட் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படம். நெருக்கமாக வாழ்கிற சேரி மக்கள் வாழ்க்கை தொடர்பானது. அங்கு வாழ்பவர்களுக்கிடையே ஊடாடுகிற வன்முறை தொடர்பானது. ஃபேன்ஸி நகரம் தொடர்பானது. எனவே, அப்படத்தின் காட்சிமொழியில், அப்பகுதியின் வன்முறையும், அழுக்கும், வேகமும், கதைசொல்லலின், காட்சிக் கோணத்தின் ஒரு அம்சமாக இருக்கும். தி டூ போப்ஸ் எடுத்துக்கொள்கிற களம், அதற்கு மாறானது. மிகப்பிரம்மாண்டமான கட்டிடங்களில் வாழ்கிற, வசதியாக வாழ்கிற, மிகக் குறைவான மனிதர்களே நடமாடுகிற அந்த உயர்ந்த கட்டிடங்களுக்குள் அடைபட்டிருக்கிற புனிதமனிதர்களீன் வாழ்க்கையைச் சொல்வதுதான் தி டூ போப்ஸ்.

இந்த இரு படங்களின் கதை சொல்லல்முறையைப் பார்த்தீர்களேயானால், அந்தக் கதை என்ன கோருகிறதோ, அந்தச் சூழல் என்ன கோருகிறதோ, அதற்குத் தகுந்தாற்போலத்தான் காட்சிமொழியும் உருவாகிவரும். சிட்டி ஆஃப் காட்டில் நிறைய ஆக்‌ஷன் இருக்கும். ஆனால், இந்த டூ போப்ஸ் படத்தில் உடல் அசைவுகளுக்கே அதிக முக்கியத்துவம் இல்லை. இருவருமே வயதானவர்கள். மிக மெல்ல நடப்பவர்கள். முதல்முறை, போப்பின் இல்லத்திற்கு, பெர்க்கோக்லியோ வருகிறார். இருவரும் இரவில் உரையாடுகின்றனர். உரையாடல் விவாதமாக மாறுகிறது. இருவருமே ஒரு சமரசப் புள்ளிக்கு வரமுடியவில்லை. அந்நேரத்தில், ’எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது, நான் செல்கிறேன்’ என்று போப் சென்றுவிடுவார். தளர்ந்த நடையில் அவர் செல்வார். அதற்கேற்ப குறைவான வெளிச்சம் அங்கு அமைக்கப்பட்டிருக்கும். கைகளை அப்படியே தளர்வாக வைத்து, முன்னோக்கி குனிந்து மெல்ல மெல்ல அடியெடுத்து நடந்து செல்வார் போப். இந்தப் படத்தில், அந்த தளர்ச்சி, தனிமை, குற்றவுணர்வு போன்றவைகள்தான் இவர்களிருவரையுமே செலுத்துகிற விஷயங்களாக இருக்கின்றன. அதுவே, காட்சிமொழியையும் தேர்ந்தெடுக்கிறது. இளம் வயதினரின் கதையைச் சொல்கிற சிட்டி ஆஃப் காட், முதிய மனிதர்களின் கதையைச் சொல்கிற தி டூ போப்ஸ். கதை சொல்லலில், சாண்டி நகரத்திற்கும், ஒரு மிகப்பெரிய மாளிகையில் நடக்கிற கதைக்களத்திற்கும் இடையேயான வித்தியாசங்களை நாம் புரிந்துகொண்டால், இளம் வயதினரின் கதையைச் சொல்ல அதற்குத் தேர்வுசெய்யப்பட்ட வேகமான எடிட்டிங்கும், தளர்ந்த முதியவர்கள் இருவரின் குற்றவுணர்வு  தொடர்பான கதையைச் சொல்வதற்கேற்ப தேர்வுசெய்யப்பட்ட மெதுவான கதைநகர்வின் பின்னணியையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
கதைகளுக்குத் தகுந்தாற்போலத்தான், காட்சிமொழியும் இருக்கிறது. அதே நேரத்தில் அரசியல் என்ற ரீதியில் பார்த்தோமானால், ஃபெர்னாண்டோ மெரில்லஸிற்கென்று நேர்மையும், கடப்பாடும் இருக்கிறது. சிட்டி ஆஃப் காட் படம் தொடர்பாக எழுதப்படுகிற பல்வேறு விமர்சனங்களில் ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவதைக் காணலாம். அது என்னவென்றால், சிட்டி ஆஃப் காட், படத்தை அது மூன்றாம் உலக சினிமாவின் பாதிப்பில், அதன் பல்வேறு தாக்கங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பார்கள். ஏனென்றால், ‘வன்முறையின் அழகியல்’ என்பது மூன்றாம் உலக சினிமாவின் மிக முக்கியமான கோட்பாடு.


வன்முறை ஏன் நிகழ்கிறது? என்பதையும், வன்முறைக்கான குற்றவாளிகளாக, அந்த வன்முறைக்கு ஆட்பட்டவர்களையும், உட்பட்டவர்களையும் சினிமா காண்பிக்காது. வன்முறைக்கு உள்ளான மனிதர்களுடைய வன்முறை என்பது, அது அழகியல் வன்முறை. வன்முறையினுடைய அழகியல், ஒடுக்கப்பட்ட வன்முறையின் அழகியல் என்று மூன்றாம் சினிமா கோட்பாடினை உருவாக்கியது. நீங்கள் சிட்டி ஆஃப் காட் படத்தினைப் பார்க்கும்பொழுது, அந்தச் சிறுவர்கள் வன்முறையின் சூழலில் வாழ்கிறார்கள். அவர்கள், வன்முறைக்கு ஆட்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதற்கு எதிரான, நிலையிலிருந்து பீறிட்ட, அடக்குமுறைக்கு எதிரான வன்முறையாகத்தான் சிட்டி ஆஃப் காட் படத்தின் வன்முறை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதுதான், முக்கியமாக மூன்றாம் உலக சினிமா பேசுகிற வன்முறையினுடைய அழகியல்.
மார்க்சிய சித்தாந்தவாதிகள் இந்த முறையை உருவாக்கினர். இந்த டூ போப்ஸ் படத்தில் பார்த்தீர்களென்றால், கார்ல் மார்க்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட், அந்தோனியோ க்ராம்ஸி போன்றவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற உரையாடல்கள் இடம்பெறுகிறது. போப்பாண்டவர், பெர்கோக்லியோவைப் பார்த்து, “நீங்கள்தானே, சாண்டி நகரத்திலிலுள்ள, மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் உள்ள மார்க்சிய புத்தகங்களை நீக்கச் சொன்னது” என்று கேட்பார். அதற்கு பெர்கோக்லியோ, “ஆம், மார்க்சிய புத்தகங்கள் மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸ், அந்தோனியோ க்ராம்ஸி, ப்ரெக்ட் இப்படி பல்வேறு நபர்கள் எழுதிய முக்கியமான புத்தகங்களை நாங்கள்தான், வெளியே எடுத்து எரித்தோம்.” என்ற விஷயத்தைச் சொல்கிறார். ஆகவே, கதை சொல்லல் தொடர்பான விஷயங்கள், எப்படி மாறினாலும், அந்த அரசியல் விழிப்புணர்வு, அரசியல் நேர்மை என்ற விஷயத்தில், சிட்டி ஆஃப் காட் படத்தில் இருந்தது, இன்னும் துல்லியமாகவும், அழுத்தமாகவும் டூ போப்ஸ் படத்தின் உரையாடல்களில் வருவதை நாம் பார்க்க முடியும்.


நீங்கள் குறிப்பிடுகிற மார்க்சிய புத்தகங்கள் எரிப்பு காட்சியானது, பெர்கோக்லியோவின் ப்ளாஸ்பேக் காட்சியில் நிகழ்கிற ஒன்று. தன்னை யாரோ உளவு பார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன், பெர்கோக்லியோ, பல்வேறுபட்ட புத்தகங்களிலிருந்து குறிப்பிட்ட ஐந்து புத்தகத்தை மட்டும் எடுத்து, மறைத்துவைப்பார். அதே புத்தகங்களைத்தான் எல்லா கத்தோலிக்கத் தேவாலயங்களிலும் மறைத்து வைக்கச் சொல்வார். போராட்டத்தின்போது, அடக்குமுறை நிகழ்கிறபோது, புத்தகங்களும் அதற்குப்
இந்தப் புத்தகம் சார்ந்த குறிப்புகளை நாம் புரிந்துகொள்வதற்கு முதலில் லத்தீன் அமெரிக்காவில் நடந்த மாற்றத்தை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். கத்தோலிக்க நிறுவனங்களுக்குள்தான் இந்த மாற்றங்கள் வந்தன. ஒன்று, லத்தீன் அமெரிக்காவில் பெரும்பாலான நாடுகள் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிற நாடுகள்தான். லத்தீன் அமெரிக்காவில் சேகுவேரா, அவருக்குப் பின்பு நடந்த ஆயுத விடுதலைப் போராட்டம், அது அர்ஜெண்டீனா, பராகுவே, நிகரகுவா, க்யூபா இதுபோல எல்லா நாடுகளிலும் இதன் தாக்கம் பரவியது. சேகுவேரா பிறந்தது அர்ஜெண்டீனாதான். இந்த நாடுகளில் எல்லாமே, கத்தோலிக்க மதகுருமார்கள் விடுதலை இறையியல் (Liberation theology) என்ற கோட்பாட்டை உருவாக்கினார்கள். ”இயேசு என்றுமே தனிமனிதர்களுக்காக இருந்ததில்லை, இயேசு என்றைக்குமே தன்னுடைய உணவை தனியாக உண்டதில்லை, அவர் அப்பங்களை பகிர்ந்துகொண்டார், எப்போதுமே அவர் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கமும், ஏழைகளின் பக்கமும்தான் இருந்தார். யார் துன்பப்படுகிறார்களோ, அந்த மக்களுடன் நின்றார்” என்று பெர்கோக்லியோ குறிப்பிடுகிறார். இதைத்தான் இயேசு என்பவர் ’வைதீகமான இயேசு அல்ல (Non traditional Christ)’ என்கிறார். ”இவர் வறிய மக்களின் விடுதலைக்காகப் போராடுகிற, வறிய மனிதர்களுக்கான இயேசு. சாதாரண மக்களின் குரலுக்குச் செவிமடுக்கிற இயேசு”, என்றுதான் பெர்கோக்லியோ சொல்கிறார். அதேபோல, இந்தப் போக்கு, லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியல் என்ற பெயரில் வந்தது. அங்கு படித்த பெரும்பாலான இளைஞர்கள், கத்தோலிக்க குருமார்கள், இயேசுநாதரை மட்டும் படிக்கவில்லை. அவர்கள் அந்தோனியோ கிராம்சியைப் படித்தார்கள், மார்க்ஸைப் படித்தார்கள், சேகுவேராவைப் படித்தார்கள், அப்படித்தான் அவர்கள் விடுதலை இறையியலை முன்வைத்தார்கள்.


இந்த விடுதலை இறையியல் என்பது, இயேசு நாதருக்கும் மார்க்ஸிற்கும் இடையிலான கருத்தியல். ஆக, இந்தக் கருத்தியலை, அதிகாரம் சார்ந்த வாடிகன் ஒத்துக்கொள்ளவில்லை. அதிகார வாடிகன் நிறுவனம் என்பது எப்போதுமே, அங்கிருக்கிற ராணுவ சர்வாதிகாரிகளோடும், அங்கிருக்கிற ஆட்சியதிகாரங்களோடும் உடன்பட்டு இருந்ததுதானேயொழிய, வறிய மக்களினுடைய நிறுவனமாக இருக்கிற, விடுதலை இறையியல் பேசுகிற, அந்த கத்தோலிக்க நிறுவனங்களின் பக்கம் நிற்கவில்லை. அதனால்தான், ராணுவத்திற்கு ஆதரவாக இருப்பவர்கள், கத்தோலிக்கப் பள்ளிகளில் இருக்கிற எல்லாவிதமான புத்தகங்களையும் எரித்தார்கள்.

இப்படி புத்தகங்களை எரிக்கிற விஷயம் இன்றைக்குத் துவங்கியதில்லை. ஹிட்லரின் காலத்திலும் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. எங்கெங்கெல்லாம் ஆட்சியதிகாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்களைத் தடைசெய்வது. பத்திரிக்கையாளர்களைத் தடை செய்வது, பத்திரிக்கையாளர்களைக் கொலைசெய்வது, எழுத்தாளர்களைக் கொலை செய்வது, இதெல்லாமே ஒரு கலாச்சாரமாகவே தொடர்ந்தது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிக்கள் காலத்திலிருந்து, லத்தீன் அமெரிக்காவிலிருந்த புரட்சிகர காலகட்டத்திலிருந்து, இன்றைக்கு எழுத்தாளர்களும், கலைஞர்களும், பத்திரிக்கையாளர்களும் வேட்டையாடப்படுகிற சூழலை இந்தியாவில் கூட பார்க்கமுடிகிறது என்பது யதார்த்தமான உண்மை. ஒடுக்குமுறையாளர்களுக்கு மிக ஆபத்தான விஷயமாக இருப்பது, புத்தகங்கள்தான்.

ஏனெனில், புத்தகங்கள்தான் மிகவும் சுதந்திரமாக கருத்துக்களை முன்வைக்கக் கூடிய ஊடகமாக இருக்கிறது. ஆகவேதான், புத்தகங்களைக் கண்டு ஆட்சியில் இருப்பவர்கள் அச்சப்படுகிறார்கள்.

படத்தின் நடிகர் தேர்வு (Casting) பற்றிக் குறிப்பிட வேண்டும். சைலன்ஸ் ஆஃப் லேம்ப்ஸ் (The Silence of the Lambs), ஹானிபல் (Hannibal), லெஜண்ட்ஸ் ஆஃப் தி ஃபால் (Legends of the fall, 1994), போன்ற படங்களில் நடித்த அந்தோனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins) போப்பாண்டவராக (பதினாறாம் பெனடிக்ட்) வருகிறார். ஜோனதான் ப்ரைஸ் (Jonathan Pryce), அர்ஜெண்டீனியாவிலிருந்து வருகிற பெர்கோக்லியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்த முதிய, தளர்ந்த வயதிற்குரிய உடல்வாகு இயல்பாகவே அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. தூய உடை அணிந்து போப்பாண்டவராக வருவது, கால்பந்து ரசிப்பது, எளிய மனிதர்களுடன் எவ்வித தயக்கமும் இல்லாமல் பேசுவது, பீட்சா சாப்பிடுவது, குற்றவுணர்வின் முகம் என நடிப்பில் குறிப்பிட்டுக் காட்ட நிறைய தருணங்கள் இருக்கின்றன.

 
 மிக அற்புதமான நடிகர் தேர்வு. அர்ஜெண்டினாவிலிருந்து வருகிற போப்பின் தோற்றம், ஜோனதான் ப்ரைஸ் தானா இது? என்று கேட்கத்தோன்றுமளவிற்கு பொருந்தியிருக்கிறார். ஜோனதான் ப்ரைஸ் பண்பட்ட நடிகர். அந்தோனி ஹாப்கின்ஸ் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்டின் பாத்திரத்திற்குப் பொருத்தமானவர். ஹானிபல், சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் என அந்தோனி ஹாப்கின்ஸ் நடித்த எந்தப் படத்தை எடுத்துக்கொண்டாலும், அவர் மிகவும் நிதானமாகப் பேசுவார். அவருடைய உடல் மொழி, குரல் எல்லாமே நிதானமாக வெளிப்படும். மற்றது, ஒரு தளர்ந்த, வயதான மனிதனுடைய தெளிவான பேச்சாகவும் அது இருக்கும். ஜெர்மனிலிருந்து வந்த, நிதானமாகப் பேசக்கூடிய போப்பாக நடித்திருக்கிற அந்தோனி ஹாப்கின்ஸின் நடிப்பு, அவரது முந்தைய படங்களின் நடிப்பின் தொடர்ச்சி என்றே கூறலாம். ஜோனதான் ப்ரைஸ் இந்த பெர்கோக்லியோ கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவரது தோற்றமும் மிக முக்கியக் காரணம். சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் என இவ்விருவருக்கும் நிறைய திரைப்பட விருது விழாக்களில் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. ஆஸ்கருக்கும் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த நடிகர் எனும் பிரிவில் ஜோனதான் ப்ரைஸ் இடம்பெறுகிறார், சிறந்த துணை நடிகர்தான் அந்தோனி ஹாப்கின்ஸ் என்று சொல்கிறார்கள்.


அம்சவள்ளி: இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஜெர்மனியிலிருந்து வந்த ராட்ஸிங்கர், போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறபோது, தொலைக்காட்சியில் ஒரு செய்தி ஒளிபரப்பாகும். ’அவர் ஒரு நாஜி, அவரைத் தேர்ந்தெடுக்கக்கூடாது’ என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆவணப்படக் காட்சிகள்போல, இந்தப் படத்தின் இடையே சில காட்சிகள் இடம்பெறுகின்றன. எந்தளவிற்கு இப்படம் அந்த இரு போப்களின் வாழ்க்கைச் சூழலுக்குள், உண்மைச் சம்பவங்களுக்குள் நெருங்கி வந்திருக்கின்றன?

உண்மையான சம்பவம் என்றளவில், அடிப்படையான விஷயங்களில் இந்தப் படம் எந்தவிதமான மாறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக, அந்தோனி ஹாப்கின்ஸ் ஏற்றிருக்கிற கதாபாத்திரம், போப் பதினாறாம் பெனடிக்ட், அவர் பதவிக்கு வந்தவுடன், அவரைப் பற்றி உலகமெங்கிலும் இருந்து பலவிதமான எதிர்வினைகள் வருகின்றன. அவரை ’நாஜி’ என்று சொல்கிறார்கள். காரணம், அவர் தனது பதினான்கு வயதில், எஸ்.எஸ் என்று சொல்லப்படுகிற, ஹிட்லர் படையில் சிறுவர்கள் பிரிவில், ராட்ஸிங்கர் இருந்திருக்கிறார். ஆனால், இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெர்மனில் பதினான்கு வயதிற்குள் இருக்கிற எந்தப் பள்ளிச் சிறுவனும் அந்த அமைப்புக்குள் போயே தீரவேண்டும் என்பது ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. ராட்ஸிங்கர் விரும்பி அந்த அமைப்பிற்குள் இணையவில்லை. நிர்ப்பந்திப்படுத்தி உள்ளிழுக்கப்பட்டார். அவருக்கு வேறு வழியில்லை.

ஜெர்மன் எழுத்தாளர், கவிஞர்  குண்டர் க்ராஸ் கூட அப்படித்தான் இருந்தார். குண்டர் க்ராஸ், தான் இப்படி ஹிட்லரின் சிறுவர் படையில் இருந்தேன் என்று சொன்னபோது, மிகப்பெரிய கண்டனம் அவர் மீது எழுந்தது. இன்றைக்கு வரைக்கும் அந்தக் கண்டனம் இருக்கிறது. அதேபோலத்தான் போப், ஹிட்லரின் படையில் இருந்ததால், நாஜி என்ற எதிர்வினை அவர்மீது வருகிறது. ஆனால், இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இது தொடர்பான ஆய்வுகளை நிறைய யூதர்கள் செய்திருக்கிறார்கள். அந்த ஆய்விலிருந்து வருகிற உண்மை முடிவு என்னவென்றால், அவர்கள் (ராட்ஸிங்கர்) குடும்பம் நாஜி எதிர்ப்புணர்வு கொண்ட குடும்பமாகத்தான் இருந்திருக்கிறார்கள். நாஜி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், வெளிப்படையாக ஹிட்லருக்கு எதிராக இயக்கம் நடத்துவது என்பது அந்தக் காலத்தில் சாத்தியமில்லை. எனவே, அவரை நாஜி என்று குற்றம் சுமத்துவது அபத்தமான குற்றச்சாட்டு, எனும் நிலைப்பாட்டினை ஆய்வின் முடிவின் வழி அறிய நேர்கிறது.

இன்னொரு விஷயம். இந்தக் கத்தோலிக்க சபை, போப்பாண்டவரின் பதவி இது தொடர்பான தொடர் விமர்சனங்கள் யூதர்கள் மத்தியில் உண்டு. ஹிட்லர் இவ்வளவு பெரிய இனக்கொலை செய்தபோது, ஒவ்வொரு நாளும் ஆஸ்ட்விச்சில் பதினைந்தாயிரம் யூதர்களை விஷவாயு செலுத்திக் கொலை செய்தது, தொடர்பாக, அறுபதுகள் வரை, கத்தோலிக்க சபை மற்றும் வாடிகன் எந்த கண்டனத்தையும் முறைப்படி தெரிவிக்கவில்லை. எந்த ஆவணங்களையும் அவர்கள் வெளியிடவில்லை. இவ்வளவு பெரிய இனக்கொலையை அந்த நிறுவனம் மெளனமாக பார்த்துக்கொண்டுதான் இருந்தது, அதன் ஒரு பகுதியாக இவரும் இருந்தார், என்ற விஷயமும் சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்தான், இந்த விஷயத்தை நாங்கள் பழங்காலம் என்று கருதி, கடந்த காலம் என்று கருதி, ஹிட்லர் இந்த மக்கள் மீது இழைத்த பெரும் கொடுமையை நான் கண்டிக்கிறேன் என்று, அவர் சொல்கிறார். இதுதான், அதிலிருக்கிற அரசியல் உண்மை. இதை அப்படியே இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார்கள்.

அதேபோல, பன்னிரண்டு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் பற்றிச் சொல்கிற காட்சி, மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், அவர் போப்பாண்டவர் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணமே அதுதான், அந்தக் குற்றவுணர்விலிருந்து வெளிவரமுடியாமைதான் அவர் பதவி விலகுவதற்கான காரணம். இது அப்போது மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்தது. பிரபலமான பத்திரிக்கைகளிலெல்லாம் வெளியானது, இந்நிகழ்விற்கான ஆதாரங்களும் அந்தப் பத்திரிக்கைகளில் பிரசுரமாயின, அதில் சம்பந்தப்பட்ட பாதிரியார்களெல்லாம் தங்களுடைய வாக்குமூலத்தை முன்வைத்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போப்பாண்டவர் மெளனம் காத்தார். இதுவும் ஒரு வரலாற்று உண்மைதான். அதேபோல, அர்ஜெண்டினாவை எடுத்துக்கொண்டால், அந்தக் காலகட்டத்தில், கத்தோலிக்க மதம், கத்தோலிக்க நிறுவனம் என்பது ராணுவ ஆட்சியாளர்களோடுதான் சேர்ந்து இயங்கியது. அந்தக் கொலைகளையும், சித்திரவதைகளையும், காணாமல் போதல்களையும் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்து செய்த இடத்தில் கத்தோலிக்க நிறுவனங்கள் இருந்தன. இதுவும் வரலாற்று உண்மை. ஆகவே, பெர்கோக்லியோ, தன் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணம் என்னவென்றால், அவருக்கு மக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது. ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகப் பூர்வமான ஆட்சி அர்ஜெண்டினாவில் வருகிறது. பெர்கோக்லியோ கிறித்துவ சபைகளில் பாவ மன்னிப்பைப் பற்றியும், மனிதர்கள் துன்பப்படுவதைப் பற்றியும் பேசுகிறபோது, “நீ துன்பப்படுவதைப் பற்றிப் பேசாதே! நீ பல்வேறு மனிதர்கள் துன்புறுவதற்குக் காரணமானவனாக இருந்தாய். சித்திரவதைகளுக்கு ஆதரவாளனாக நீ இருந்தாய், எனவே, நீ சித்திரவதைகளைப் பற்றி பேசாதே!” என்ற குற்றச்சாட்டுகள் அவரை நோக்கி வருகின்றன. இந்த குற்றவுணர்வும் அந்த பெர்கோக்லியோ எனும் போப்பிற்கு உள்ளது.

எனவே, இந்தப் படம் எடுத்துக்கொள்கிற உண்மை வரலாறு, முழுக்க முழுக்க அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது திரைப்படம் என்ற அளவில் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உண்மையாக, நான் அந்த இறுதிக் காட்சியில் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டேன். கடைசி சில காட்சிகள், மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தது. பொதுவாக, நிறைய அதிகாரத்தை வைத்துக்கொண்டிருக்கிற ஆட்கள், மிகவும் தனிமையான மனிதர்கள், யாரையும் நம்பமாட்டார்கள், யாரையும் உடன் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், தனியாக சாப்பிடுவார்கள், தனியாக நடப்பார்கள், தனிமையிலேயே வாழ்வார்கள். இந்த தனிமை ஹிட்லருக்கும் உண்டு. எந்த ஆட்சியாளருக்கும், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கும், உச்சபட்ச அதிகாரத்தைக் கைகளில் வைத்திருப்பவர்களுக்கும் இந்த தனிமை இருக்கும். அதேபோல மிகப்பெரிய அதிகாரத்தைக் கொண்டிருக்கிற வாடிகன் நிறுவனத்தில் இருக்கிற, வாடிகனை தலைமை தாங்குகிற போப்பாண்டவருக்கும் இந்த தனிமையுணர்வு உண்டுதான். தனிமையுணர்வு இந்தப் படத்தில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், மனிதர்கள். அவர்கள் மனிதர்கள்.


ஆசைகள், மனிதனுடைய அன்றாட ஆசைகள், மகிழ்ச்சிகள், சிறு சிறு இன்பங்கள், இவற்றையெல்லாம் மறுக்கிற மதமாகத்தான் கிறித்துவம் இருக்கிறது. கிறித்துவம் மட்டுமல்ல, பெரும்பாலான மதங்கள், இன்பங்களை, ஆசைகளை வெறுக்கிற, மறுதலிக்கிற மதங்களாகத்தான் இருக்கின்றன. பால்புதுமை தொடர்பான விஷயங்களானாலும், பல்வேறு விதமான அடிப்படை உண்மைகள், கற்பத்தடை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை, விதவைகளுக்கு அவர்கள் ஞானஸ்தானம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். விவகாரத்து ஆனவர்களுக்கும் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இப்படி பலவிதமான சிறு சிறு ஆசைகளை, உரிமைகளை மறுக்கின்றனர். அடுத்து, பியர் குடிக்கக்கூடாது, கால்பந்து பார்க்கக்கூடாது, இசையில் ஆழ்ந்த ஈடுபாடு காட்டக்கூடாது, இப்படியெல்லாம் பல்வேறு மதங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை முன்வைக்கின்றன.

உதாரணத்திற்கு, முதன் முதலில் போப் பதினாறாம் பெனடிக்டும், பெர்கோக்லியோவும் தோட்டத்தில் சந்திக்கிறபோது நடக்கிற உரையாடலைப் பார்த்தீர்களேயானால், இருவருமே சமரசப்புள்ளியில் உடன்படவே மாட்டார்கள். பெர்கோக்லியோ, ஹோமோசெக்ஸுவல் தொடர்பான விஷயங்களைப் பேசுகிறார். அதேபோல, விதவைகளுக்கும், விவகாரத்தானவர்களுக்கும் கம்யூனியன்செய்துவைப்பது தொடர்பான உரிமைகளைப் பேசுவார். பெண்கள் மத நிறுவனங்களின் அதிகாரத்திற்கு வருவது தொடர்பாகப் பேசுவார். ஏழை மக்களைப் பற்றியும் அவர்களுக்கான உரிமைகளைப் பற்றியும் பேசுவார்.   பொருளாதார ரீதியான சுரண்டலுக்கு எதிராக, நிற பேதத்திற்கு எதிராக நாம் இருக்கவேண்டும் என்ற விஷயத்தையெல்லாம் பெர்கோக்லியோ பேசுவார். இது எதையுமே, போப் பதினாறாம் பெனடிக்ட் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், இறுதிக்காட்சியில், அவர்கள் தனியாக இருந்து பேசி, தங்களுடைய சுய விமர்சனத்திற்குள், குற்றவுணர்விற்குள் போகும்போது, அவர்கள் உன்னத மனிதர்களாக மாறுகிறார்கள். அதன்பிறகு, வைன் குடிப்பதைப் பற்றிப் பேசுகிறார்கள், வைன் நன்றாகயிருக்கும் என்று அது பற்றிப் பேசுகிறார்கள், அதன்பிறகு, பீட்டில்ஸ் இசையமைத்த ஆல்பம் தொடர்பாகவும் பேசுகிறார்கள், போப் பதினாறாம் பெனடிக்ட் பியானோ வாசிக்கிறார், பியானோ வாசிக்கையில் அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார், ஜெர்மனுக்கும், அர்ஜெண்டினாவிற்கும் இடையே கால்பந்து போட்டி நடக்கிறபோது, அர்ஜெண்டினா கால்பந்து வீரர்கள் மிகவும் வன்முறையானவர்கள் என்று போப் பெனடிக்ட் சொல்கிறார். சிறுசிறு ஊடல்கள் அவர்களுக்கிடையே நடக்கிறது. இறுதிக் காட்சியில் வைனுக்கு மாற்றாக பியர் குடிக்கிறார்கள். அதேபோல, வைதீகமாகப் பேசுகிற, எல்லாவிதமான சீர்திருத்தங்களையும் மறுக்கிற ஜெர்மனிலிருந்து வந்த போப் பெனடிக்ட், ’வி நீட் ஸ்மால் ப்ளஷர்ஸ் (We need small pleasures)’ என்று சொல்கிறார். சிற்றின்பங்களுக்கும், பேரின்பங்களுக்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன. படத்தின் பெயர் டூ போப்ஸ். இது இரு தனிமனிதர்களைக் குறிப்பதில்லை. இரு அனுபவங்களைத்தான் அது குறிக்கிறது. இரண்டு அரசியல் நிலைப்பாடு, இரண்டு சித்தாந்த நிலைப்பாடுகள், Two moral and Ethical நிலைப்பாடுகள், அதுதான் இந்தப் படத்தின் தலைப்பு ’டூ போப்ஸ்’ என்பது குறிக்கிறது. பிற்பாடு, அர்ஜெண்டினியன் போப் பெர்கோக்லியோ தேர்ந்தெடுக்கப்படுகிறபோது, பக்கத்திலிருந்த ஒரு தோழர் சொல்வார், ”***வறிய மக்களை ஒருபோதும் மறந்துவிடாதே (Dont forget poor peoples)” என்பார். அவர், ரேஸியன் இன்ஈக்வாலிட்டி பற்றிப் பேசுகிறார். இறுதிக் காட்சிகளில் அவர் பேசும்போது, அகதிகள் படகில் வருகிறார்கள், கடலில் மூழ்கி சாகிறார்கள், கறுப்பின மக்கள், வெள்ளையின மக்கள், வியட்நாமிய மக்கள் என எல்லோரையும் அவர்கள் காண்பிக்கிறார்கள், ரேஸியன் இன்ஈக்வாலிட்டி பற்றி அவர் பேசுகிறார், அகதிகள் பிரச்சினைகள் பற்றி அவர் பேசுகிறார். அதைப்போலவே, பொருளாதார சமத்துவமின்மை (economic inequality) பற்றியும் அவர் பேசுகிறார், அதாவது கேபிட்டலிசம். காட்டுமிராண்டித்தனமான கேப்பிட்டலிசம் தொடர்பான விஷயங்களை அவர் பேசுகிறார். உண்மையாக, போலந்திலிருந்து வந்த போப், அர்ஜெண்டினாவிலிருந்து வந்த போப் என இந்த இருவர் மட்டும்தான், முதலாளித்துவம் காட்டுமிராண்டித்தனமானது என்ற விஷயத்தைப் பேசுகிறார்கள். வறிய மக்களுக்கான உரிமைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள், ராணுவ அடக்குமுறைக்கு எதிரான உரிமைகளைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

போலந்திலிருந்து வந்தவர், கம்யூனிச அதிகாரத்தின் கீழிருந்து வந்தவர். அர்ஜெண்டினாவிலிருந்து வந்தவர், ராணுவ ஆட்சியதிகாரத்தின் கீழிருந்து வந்தவர். இந்த இருவரும் தன்னுடைய அனுபவங்களை முன்வைக்கிறார்கள். ஆனால், ஜெர்மனியிலிருந்து வந்தவருக்கு, ’நாஜி’ என்ற கடந்தகாலம் இருக்கிறது, ஐரோப்பியாவில் இருக்கிற பெரும்பான்மையானவர்களுக்கு ஜெர்மானியர்கள் தொடர்பான ஒரு ஒவ்வாமை உணர்வு இருக்கும். காரணம் என்னவென்றால், அவர்கள் பெருந்தனக்காரர்கள் போல, பிற எல்லா நாட்டவர்கள் மீதும் நடந்துகொள்வார்கள். இப்போதுகூட, ஐரோப்பியன் யூனியனை, ஐரோப்பியன் யூனியனை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கட்டுப்படுத்தக்கூடியவர்களாக ஜெர்மனியர்கள்தான் இருப்பார்கள். ஆக, இந்த அரசியல் பின்னணியிலிருந்துதான், ஜெர்மனைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுபோல, ராட்ஸிங்கர் (அந்தோனி ஹாப்கின்ஸ்) வருகிறார். இதற்கு மாறாக, மூன்றாம் உலக நாடுகளின் அனுபவங்களிலிருந்தும், உணர்விலிருந்தும் பெர்கோக்லியோ (ஜோனதான் ப்ரைஸ்) வருகிறார். ஆகவே, இந்தப் படம் ஒரே சமயத்தில் அரசியலையும், இரு போப்களின் தனிமையான, குற்றவுணர்வின் வாழ்க்கையையும் சொல்கிறது.


மிகப்பிடித்தமான காட்சி, அவர்கள் இருவரும் பீட்சா சாப்பிடுவது. ஒருவருக்கொருவர் அதிகம் மனம் விட்டுப் பேசிக்கொள்ளாமலிருந்த நிலையிலிருந்து, குற்றவுணர்வினை வெளிப்படுத்தியதும், மனம் விட்டுப் பேசியதும், இருவரும் நட்புணர்வாக மாறுகிற அந்த மாற்றம் அவ்வளவு அழகாக வருகிறது.

அர்ஜெண்டியனின் போப்பிடம் (பெர்கோக்லியோ), ஜெர்மன் போப் (பதினாறாம் பெனடிக்ட்), பாவ மன்னிப்பு வாங்கிவிடுகிறார். பன்னிரு குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தெரிந்தும் தான் மெளனம் காத்தது தொடர்பான பாவ மன்னிப்பை அவர் வாங்கிவிட்ட பிறகு, நீங்கள் சொன்ன மாற்றங்கள் நிகழ்கின்றன. அதுவரைக்கும் நூற்றுக் கணக்கான அடி உயரத்திலிருந்து மக்களைப் பார்த்துக் கையசைத்து வந்த போப்பாண்டவர், முதன்முறையாக, கதவைத் திறந்துவிட்ட பிறகு, பொதுமக்களினூடே நடந்து செல்கிறார். அப்போது அந்த அதிகாரி, ‘இல்லையில்லை, வேண்டாமென்று தடுக்கிறார்.” அப்போது பெர்கோக்லியோ, “அவர் போகட்டும், தடுக்காதீர்கள்” என்பதுபோலச் சொல்வார்.
மதங்கள், உண்மையில் அதியற்புதமான விஷயங்களைத்தான் பேசுகின்றன. அன்பைப் பேசுகிறது. வறிய மக்களோடு அவர்கள் உரிமைகளுக்காகத் துணை நிற்க வேண்டும் என்பது பற்றிப் பேசுகிறது. அதேபோல, கருணை என்பதைப் பற்றியும் அது பேசுகிறது. எனவே, இந்த கருணை, அன்பு போன்றவற்றை யாருக்காகப் பேசுகிறீர்களோ, அவர்களிடம், அவர்களுக்குச் சமமான நிலையிலிருந்து பழக வேண்டும் என்பதை உணர்த்துகிறது. மகிழ்ச்சி, அன்பு, சந்தோஷம் என்றளவில் அந்தப் பெரிய கூட்டத்தினிடையே போப்பாண்டவர் மகிழ்ச்சியாக நடந்து செல்வார். சுற்றியிருக்கிற மக்கள் போப்பாண்டவருடன் செல்ஃபி எடுப்பார்கள், இது ஒரு மகோன்னதமான காட்சி.
இன்னொரு காட்சி. முதன்முதலாக பெர்கோக்லியோ போப்பாண்டவர் ஆனவுடன், பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக அந்த அலுவலகத்திற்கு போன் செய்கிறார். அவர் பெயர் சொல்கிறார், முகவரி சொல்கிறார், அந்தப் பெண் நம்புவதில்லை, எனவே, இவரால் டிக்கெட்டை புக் செய்ய முடியவில்லை. அவர் வெளியே வருகிறார். அதுவரை அறைக்கு முன்பு தூங்கி வழிந்துகொண்டிருந்த காவலாளி, போப்பாண்டவர் வந்ததும் எழுந்துவிடுகிறார். போப் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. காவலாளியிடம், டிக்கெட் புக் பண்ணத் தெரியுமா? என்று கேட்கிறார். காவலாளி டிக்கெட் புக் செய்து தருகிறார். அதிகாரம், செல்வாக்கு என எல்லா விஷயங்களையும் உதறிவிட்டு, அவர் சாதாரண மனிதனராக இருக்கிறார் என்பது இந்தக் காட்சியின் மூலம் தெளிவாகிறது. அதேபோல, அவர் போப் ஆனவுடன், அவர் மக்களுக்குத் தரிசனம் தருவதற்காக வருகிறபோது, அவருக்குக் கொடுக்கப்படுகிற எல்லாவிதமான, உடை மற்றும் ஆடம்பரமான, விஷயங்களை நிராகரிக்கிறார். ஒரு எளிய மனிதராக, பாவங்களிலிருந்து நீங்கிய ஒரு மனிதராக, சாதாரண மனிதர்களிடம் உரையாடக்கூடிய ஒரு மனிதராக அவர் தோன்றுகிறார். ஆனால், இதுவெல்லாம், நிகழ்காலத்தில் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது, சிறு சிறு விஷயங்கள் இப்போதும் ஆங்காங்கே நடக்கின்றன.

போப்பாண்டவருக்கும், ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் மிகப்பெரிய உரையாடல் நடந்திருக்கிறது. அதுவொரு புத்தகமாகவே வெளிவந்திருக்கிறது. போப்பாண்டவர் கம்யூனிச நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறார், எளிய மக்கள் வாழ்கிற நாடுகளுக்கு விஜயம் செய்கிறார், இந்த மாற்றங்கள் எல்லாமே, அந்த மேற்கு ஐரோப்பிய போப்களிடமிருந்த, வாடிகனிலிருந்த மேற்கு ஐரோப்பிய அதிகாரங்கள், எப்போது மூன்றாம் உலக போப்களின் கைகளுக்கு வருகிறதோ, அல்லது கிழக்கத்திய நாடுகளின் போப்களின் கைகளுக்கு அதிகாரம் வருகிறதோ, அப்போது இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மாற்றம், ஜெர்மன் போப் எவற்றையெல்லாம் பிரதிநிதித்துவப்படுத்தினாரோ, அதுவெல்லாம் இன்றைக்கு மாறியிருக்கிறது. உதாரணத்திற்கு, இன்றைக்கு ஹோமோசெக்ஸுவல் அனுமதிக்கப்பட்டுவிட்டது, பெண் மதகுருமார்கள் அனுமதிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், இன்றைக்கும் கற்பத்தடை போன்ற விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் மத நிறுவனங்கள் அங்கீகரிக்க மறுக்கின்றன. எனினும், பல்வேறு கத்தோலிக்க நாடுகளில், மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின்னர், கற்பத்தடை அங்கீகரிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர், அர்ஜெண்டினாவில், லட்சக்கணக்கான பெண்கள், இதற்கான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள். அர்ஜெண்டினாவின் யாப்பில் முதன்முதலாக கருத்தடை என்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டிருக்கிறது.  

அதேபோல, ஐரோப்பிய நாடுகளில் கருத்தடை சட்டப்பூர்வமாகாத நாடு, ‘அயர்லாந்து’, கத்தோலிக்க நாடு. தீவிர வைதீக மரபினைக் கொண்டிருப்பவர்கள். ஆனால், அங்கும், சில மாதங்களுக்கு முன்பாக, கருத்தடை சட்டப்பூர்வமாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், அந்த கத்தோலிக்க நிறுவனங்கள் கருத்தடையை எல்லா மட்டங்களிலும் அங்கீகரித்துவிட்டதா? என்றால், இல்லை. ஆனால், மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

ஜெர்மன் போப் என்ன சொல்கிறார், ”இப்படிச் செய்வது சமரசம், இது கூடாது” என்று சொல்கிறார். ஆனால், அர்ஜெண்டினா போப், ”இது மாற்றம், கால மாற்றம் நடக்கிறது, மக்களோடு நீங்கள், வாடிகன் நிறுவனம் தொடர்புகொள்ளாமல் இருக்கிறது. மக்களோடு உறவில்லாமல் இருக்கிறது. மக்களின் வறுமையைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது, அந்த மக்களுடைய துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறது, ஆகவே, இதைப் பற்றி வாடிகன் நிறுவனம் கவலைப்பட வேண்டும்” என்ற விஷயத்தைக் குறிப்பிடுகிறார். இதை நடைமுறையில் உண்மையாக ஜெர்மன் போப்பும் ஒப்புக்கொள்கிறார். ஆகவேதான், பதவியை ராஜினாமா செய்கிறார். ஆகவே, இந்தப் படம் ஒரே சமயத்தில் அரசியல், அதே நேரத்தில் இறுகிப்போன நிறுவன அமைப்புக்குள் ஒரு தனிநபர் எவ்வளவு தனிமையாக இருக்கிறார் என்பது தொடர்பான இரங்கலைப் பதிவுசெய்கிறது என்கிறோம்.


இந்த இறுகிப்போன, அச்சாரமாக இருக்கிற நிறுவன அமைப்புகளுக்குள்கூட, மனிதர்கள் என்று வருகிறபோது, அவர்கள் எவ்வளவு ஆசைகளுக்கும், வேட்கைகளுக்கும், உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை இந்தப்படம் மிக அற்புதமாகச் சொல்கிறது.

பார்வையாளனை இந்தப் படம் எப்படித் தொடர்புபடுத்துகிறது என்று பாருங்கள். கால்பந்து. ஒரு அர்ஜெண்டினியன் என்பவன் கால்பந்தும், டாங்கோ நடனமும் இல்லாமல் இருக்கமுடியாது. இறுதியில் போப்பிற்கு டாங்கோ நடனமும் சொல்லிக்கொடுக்கிறார் பெர்கோக்லியோ.

இந்த கால்பந்து என்பது உலகத்திலேயே, எல்லா மனிதர்களையும் தொடர்புபடுத்துகிற விஷயம். இறுதிக் காட்சியைப் பாருங்கள். இருவரும் இணைந்து கால்பந்து போட்டியைப் பார்க்கிறார்கள். அதோடுதான் இந்தப் படம் முடிகிறது. ஆகவே, இந்தப் படம், ஒரே சமயத்தில் அரசியல், இன்னொரு சமயத்தில், தத்துவம், இன்னொரு கோணத்தில், அதிகாரம் சம்பந்தமான பாடம். பின்னர் மனித இருத்தல் என்றளவில் தனிமை தொடர்பான துயரமான பாடம், அதேசமயத்தில் பார்வையாளர்களோடு தொடர்புபடுத்துகிற விஷயம் என்றளவில் கால்பந்து, இசை, போன்றவற்றையெல்லாம் கொண்டுவந்து, பார்வையாளர்களைத் தொடர்புபடுத்துகிறது. இது ஒரு முதன்மையான திரைப்படம் என்றுதான் பெரும்பாலான திரைப்பட விமர்சகர்கள் எழுதுகிறார்கள். நானும் பலமுறை இந்தப் படத்தை பார்த்திருக்கிறேன். இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், ஜோனதான் ப்ரைஸும், எனக்குப் பிடிக்கும். அவரது சிரித்த முகம். அற்புதமான சிரித்த முகம் என்பது, ஒரு கனிந்த, முதிய மனிதர்க்குரிய சிரித்த முகம். அவருக்குரிய கச்சிதமான கதாபாத்திரத்தில், அவர் இந்தப் படத்தில் இருக்கிறார். அந்தோனி ஹாப்கின்ஸ் எனக்கு எப்போதுமே பிடிக்கும். காரணம், ரொம்ப அநாயசமாக தன்னுடைய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு போவார். இரண்டு சிறந்த ஹெவி வெய்ட் சாம்பியன்களும் இந்த இரு கதாபாத்திரங்களிலும் சரியாகப் பொருந்தி வந்த காரணத்தினால், இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமானது.


மிகப்பெரிய அதிகாரம் செலுத்துகிற நிறுவனத்தில்கூட, எப்படி சித்தாந்தரீதியாக, தனிப்பட்ட இடர்ப்பாடுகள் நடக்கின்றன, மனிதர்கள் எவ்வளவு தனிமையுணர்வுள்ளவர்களாக இருக்கிறார்கள், மதம் எந்தளவிற்குத் தேவையானதாக இருக்கிறது, மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறது, மதத்தின் உண்மையான பணி என்ன? என்பதையும் இப்படம் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. இன்றைக்குப் பார்த்தோமானால், இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான சோசலிசம் என்பதில் வெனிசுலாவினுடைய சேவாஸ் பேசும்போது சொல்வார், ”மதம் தொடர்பான வெறுப்பு எங்களுக்குத் தேவையில்லை. மதம் தொடர்பான விமர்சனம் மட்டுமே எங்களுக்கு வேண்டும். மதம் தேவையானதாகத்தான் இருக்கிறது. ஆகவே, மதம் சம்பந்தமாக, கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல, ‘ஆன்மாவற்ற உலகின் ஆன்மாவாக, இதயமற்ற உலகின் இதயமாக’ மதம் இருக்கிறது. இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மதத்தை நாங்கள் விமர்சனம் செய்யவேண்டுமேயொழிய, மதத்தை வெறுக்கவோ, நிராகரிக்கவோ வேண்டிய அவசியமில்லை” என்று சொல்கிறார். சேவாஸ், தங்களுடைய இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கான சோசலிசம் என்று சொல்கிறபோது, இதே விஷயத்தைத்தான் முன்வைக்கிறார். இதே நீட்சியில் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும், போப்பிற்கும் இடையே நடந்த உரையாடலையும் நாம் பார்க்க வேண்டும். ஆகவே, ஜீசஸ் பற்றிய இந்தப் படத்திலும், பல்வேறு உரிமைகள் சம்பந்தமான இந்தப் படத்திலும் கார்ல் மார்க்ஸும், அந்தோனியோ கிராம்ஸியும், ஃபிடல் காஸ்ட்ரோவும், பெர்டோல்ட் ப்ரெக்டும் தவிர்க்கமுடியாமல் உரையாடல்களில் இடம்பெறுகிறார்கள், என்பதுதான் இந்தப் படத்தினுடைய மிக முக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்.


உரையாடல் மூலமாக அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டையும், அதுமட்டுமல்லாமல், காட்சி மொழியில், பியானோ இசைப்பதாகட்டும், டாங்கோ நடனம், இப்போது ”நான் கடவுளின் குரலைக் கேட்கமுடியவில்லை, இது உங்களுக்குப் புரியாது” என ஜெர்மன் போப் சொல்வது, இப்படி நிறைய காட்சிகள் நுட்பமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றன. கத்தோலிக்க நிறுவனம் தொடர்பான விமர்சனங்களையும் கொண்டிருக்கிற இப்படம் வெளியாகிறபோது, அந்த கத்தோலிக்க, வாடிகன் மையத்திலிருந்து இதற்கான எதிர்வினையிருந்தது?

கத்தோலிக்க நிறுவனங்களிலிருந்து எதிர்ப்பு வருவதற்கான காரணங்களே இல்லை. இந்தப் படத்தில் அதற்கான சாத்தியங்களே இல்லை. வரலாற்று உண்மையிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை யாரும் நிராகரிக்க முடியாது. மற்றது, இன்றைக்குப் பெரும்பாலும், கத்தோலிக்கத்தை வழிபடுகிற நாடுகள், தொடர்கிற நாடுகள், கத்தோலிக்க சிந்தனையாளர்கள், தேவாலயங்கள் எல்லாம், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள், அந்த நிறுவனம், அந்த நிறுவனத்தின் தலைவர்கள் மூலமாகவே வரும்போது, அது தொடர்பான விஷயங்களை அவர்கள் கட்டாயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையாகவே, அர்ஜெண்டினாவிலிருந்து வந்த பெர்கோக்லியோ போப்பின் பிரச்சினையாகவே என்ன இருக்கிறது என்று பார்த்தோமானால், ”நீங்கள் சாதாரண மக்களின் கடவுள்தான் இயேசு, வறிய மக்களின் கடவுள்தான் இயேசு என்று சொல்கிறீர்கள். அந்த மக்களுடைய துயர்களுக்கான விடியல் இயேசு என்று சொல்கிறீர்கள். ஆனால், நீங்கள் அந்தக் குறிப்பிட்ட மக்களோடு தொடர்புடையவர்களாக இருக்கிறீர்களா? அந்தக் குறிப்பிட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நீங்கள் செவிசாய்ப்பதில்லையே!” என்பதுதான் சிக்கலாக இருக்கிறது. அந்த மாற்றங்கள் எல்லாம் தொடர்ந்து கத்தோலிக்க நிறுவனங்களுக்குள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்றைக்கு, எந்த போப் வந்தாலும், ’பொருளாதார சமத்துவமின்மை’ பற்றிப் பேசுகிறார்கள். இதே வார்த்தையில், அதாவது, “காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம்” என்ற வார்த்தையை, போலந்திலிருந்து வந்த போப்பும், அர்ஜெண்டினாவிலிருந்து வந்த போப்பும், தங்களுடைய உரையில் பாவிக்கிறார்கள். ’காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவம்’ என்பது என்னுடைய பார்வை இல்லை, போப்பாண்டவரின் பார்வை. அதேபோல, பொருளாதார சமத்துவமின்மை என்பதையும் அவர்களே சொல்கிறார்கள். ”ராணுவ சர்வாதிகரிகளுக்கு எதிராக நாங்கள் நிற்க வேண்டும், அதிகாரங்களுக்கு எதிராக நாங்கள் இருக்க வேண்டும், நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட யூத மக்களுக்கு பணிவோடு இருக்கவேண்டும்” என்பதெல்லாம் அவர்கள் வார்த்தை. இந்த மாற்றங்களெல்லாம் உருவாகியிருக்கிறது. எனவே, இந்தப் படத்திற்கான ஆட்சேபனை வருவதற்கான சாத்தியமேயில்லை.

எந்தவிதமான எதிர்ப்பும் இந்தப் படத்திற்கு வரவேயில்லை. ஏனென்றால், இந்தப் படமும், இயேசுவை, பாவப்பட்ட மக்களுக்கான தலைவனாக, கடவுளாகவே முன்வைக்கிறது. இந்தப் படம் இயேசுவை ஒடுக்கப்பட்ட மக்கள், துயருற்ற மக்களுக்கான கடவுளாக முன்வைக்கிறது. இதில் எந்தவிதமான மாறுபாட்டையும் அவர்கள் செய்யவில்லை. ஒரே பிரச்சினை என்னவென்றால், வைதீக கத்தோலிசசம், மாற்றத்தை ஒப்புக்கொள்கிற கத்தோலிசசம், இந்த இரண்டு போக்கையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். அதேபோல, நாஜி காலம், சிறுவர்கள் மீதான வல்லுறவு, இதை உரையாடலில் கொண்டுவருகிறார்கள். இன்னொரு பக்கத்தில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, ராணுவ ஆட்சியாளர்களோடு கத்தோலிக்க நிறுவனங்கள் துணை நின்றன என்பதையும் உரையாடலில் குறிப்பிடுகிறார்கள். இந்த இரு விஷயங்களும் வரலாற்றில் நடந்தவையே. இன்றைக்கு, மார்க்சியர்களும் புரட்சிகர சிந்தனைவாதிகளும், இடதுசாரிகளும் லத்தீன் அமெரிக்காவைப் பொறுத்தளவு, கடவுள் நம்பிக்கையை அவர்கள் ஒப்புகிறார்கள், கடவுள் ஆறுதலாக இருக்கிறார் என்ற விஷயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள், இது லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளிடம் நிகழ்ந்த மாற்றம். இன்னொரு பக்கம் இயேசுநாதர் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, வறிய மக்களுடைய, துயருற்ற மக்களுடைய கடவுள், அவர்களோடு பேசியவர், அவர்களோடு நடந்தவர், அவர்களோடு இருந்தவர், வாழ்ந்தவர், என்ற விஷயத்தை இயக்குனர் முன்வைக்கிறார். எனவே, வரலாற்று ரீதியிலும் சரியான, கால மாற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயத்திலும், உண்மையாகவே கத்தோலிக்கத்தை நேசிப்பவர்கள், நிராகரிக்கவோ, விமர்சிக்கவோ எந்தவித தவறான அம்சமும் இந்தப் படத்தில் இல்லை.