நத்தை போல் வாழப் பழகு!

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட அன்று மும்பையில் பணிபுரியும் சகோதரன் அலைபேசியில் பேசினான். பேக்கரி வாசலில் நீண்ட வரிசையில் நின்று ஒரு ரொட்டிப் பொட்டலத்தை வாங்கியது குறித்து குரலில் அச்சம் மேலிடப் பகிர்ந்து கொண்டான். வரிசையில் தனக்கு முன்பு நின்ற நடுத்தர வயது மனிதர், கடையில் இருந்த தின்பண்டங்களில் பாதியைத் தன் கைகளில் கொண்டு சென்ற காட்சியிலிருந்து அவனுடைய நாள் உறைந்து கிடப்பதாக வருத்தபட்டான்.

மளிகைக் கடைகளில் அலமாரிகளைத் துடைத்து வைக்க ஏதுவாக அத்தனை பொருட்களையும் தங்கள் கைகளில் கொண்டு செல்ல முயன்ற கதைகள் உலகெங்கும் நடந்த ஒன்றானது.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் விரவத் தொடங்கி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒரு நள்ளிரவில் "த ப்ளாட்ஃபார்ம்" (The Platform) படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்த்தேன்.

உலகமே தனிமைக்காலத்துக்குள் தன் உடலைப் பொறுத்திக்கொள்ளப் போராடும் ஒரு காலகட்டத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது என்பது மிகவும் பொருத்தமானது.


மிட் நைட் த்ரில்லர்:

அறிவியல் புனைவு- த்ரில்லர் வகைமையில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்படத்தின் இயக்குநர் கால்டர் கேஸ்டெலு-உருட்டியாவுக்கு இதுமுதல் படம். கதையை டேவிட் டெசோலோ எழுதியுள்ளார். டோரோண்டோ ஃபிலிம் திருவிழாவில் விருதுகளைப் பெற்றுள்ள இப்படம் பெற்ற ஒரு விருது எவ்வளவு எனது மனதுக்குப் பொருத்தமான ஒரு அனுபவத்தைக் கிளர்த்துகிறது என நான் வியந்து போனேன். பார்வையாளர்கள் சார்பில் நள்ளிரவில் பார்க்கப்படும் படம் என்ற பிரிவில் இந்தப் படம் ஒரு விருதைப் பெற்றுள்ளதாக அறிந்தேன்.

நானும் ப்ளாட்ஃபார்ம் திரைப்படத்தை நள்ளிரவில்தான் பார்த்திருந்தேன். தொடங்கிய சில நிமிடங்களில் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது திரைப்படம். பின்னணி இசை, காட்சி அமைப்பு எல்லாம் அந்த நள்ளிரவு அனுபவத்தை அலாதியானதாக மாற்றியது.

மூன்று வகை மனிதர்களும் நகரும் உணவு மேடையும்:

செங்குத்து கோபுரக் கட்டடம் ஒன்று, அதன் நடுவில் பெரிய துளை. அந்தத் துளை வழி மேலிருந்து கீழாக நகரும் ஒரு மேடை. துளை தவிர நான்கு பக்கத் தரைப்பகுதியில் தளத்திற்கு இருவர் என அடைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கட்டிடத்தில் எத்தனை தளங்கள், எத்தனை நபர்கள் என்ற கணக்கு யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களது மனக்கணக்கில் எண்ணிக்கையைச் சொல்கின்றனர்.

குற்றம் செய்தவர்கள் என்பதைத் தாண்டி சிலர் வேறு காரணங்களுக்காகவும் அந்தக் கட்டிடத்துக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். அதனை மேலாண்மை செய்யும் நிர்வாகம் குறித்து விவரமாகக் காட்டப்படவில்லை. சிலர் விரும்பியே அந்தக் கட்டிடத்துக்கு வந்ததாகவும் கூறுகின்றனர்.

6 மாதங்கள் என்பது தண்டனைக்காலம். சிலருக்கு இரண்டு தண்டனைக்காலங்கள், ஆக ஒரு வருடம். ஒரு தளத்திற்கு இரு நபர்கள்.
கதைக்குள் வந்து போகும் பாத்திரங்களின் வடிவமைப்பு நேர்த்தியானது. கோரங் என்று அழைக்கப்படும் முப்பதுகளில் நிற்கும் அல்லது அதைத் தாண்டிய மனிதன், ட்ரிமாகசி என்று அவனுடன் தளத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு வயதான நபர்.

கோரங்க், ட்ரிமாகசி, மிஹாரு, இமோகிரி என வரும் இந்தப் பாத்திரங்களோடு கடைசிக் கட்டத்தில் இணைந்து கொள்பவராக பகரத் வருவார். ஆனால் அந்தத் தளத்தைப் பொறுத்தவரை மூன்றே வகை மனிதர்கள்தான். மேல்தளத்தில் இருப்பவர், கீழ்தளத்தில் இருப்பவர், இவர்களோடு மேலிருந்து விழுபவர் என்பது மூன்றாவது வகை.

மேலிருந்து கீழாக நகரும் மேடையில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு தரப்படுகிறது. மேடை ஒவ்வொரு தளமாக நிரப்பப்பட்ட உணவோடு வரும். சில நிமிடங்கள் நிற்கும், அதற்குள் தேவையான உணவை சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். மேடை நகரத் தொடங்கியதும் கையில் உணவை இருப்பு வைக்கக் கூடாது. மீறி வைத்திருந்தால் தளம் தானாக சூடேற அல்லது குளிரத் தொடங்கிவிடும். ஒவ்வொரு மாதமும் நபர்கள் தளங்களுக்குள் மாற்றி வைக்கப்படுவர். இந்த தண்டனைக்காலத்தைத் தாக்குப்பிடித்து எத்தனை பேர் உயிர்பிழைத்துக் கிடக்கின்றனர் என்பதுதான் கதை.

சமூக அடுக்குகளில் இழையோடும் அரசியல்:

உயிர் பிழைக்கப் போராடும் கதையில் அதை முன்வைத்துப் படம் பேசும் உணவு சார்ந்த சமூக அரசியல் காத்திரமானது. படம் தொடங்கும்போது ஒரு உணவுக்கூடம் காட்டப்படும்.படுசுத்தமான ஊழியர்கள் தரமான உணவைத் தயாரிப்பார்கள். மேலாளர் ஒருவர் மிகுந்த கண்டிப்புடன் அந்த வேலைகளைக் கண்காணித்துக்கொண்டே வருவார். அந்த உணவுக்கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுதான் கைதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. வகை வகையான உணவுகள், இறைச்சி, பழங்கள், கேக்குகள், ஒயின்பாட்டில்கள் என்று உணவு மேடை நிரப்பப்படுகிறது.

உணவு மேடை சில தளங்களைக் கடப்பதற்குள் நபர்களின் மோசமான வழிமுறைகளால் சீரழிவுக்குள்ளாகிறது. கட்டிடத்தின் அமைப்பு முறை, அங்கு கடைபிடிக்கப்படும் வித்தியாசமான விதிமுறைகள் ஆகிவற்றின் வழியே குறியீடாக பார்வையாளர்களோடு பல்வேறு உரையாடல்களைத் திரைப்படம் நிகழ்த்துகிறது.
பார்வையாளர் திரைப்படக் காட்சிகளின்மூலம் தனக்குத்தானே உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. பல்வேறு திறப்புகளை சாத்தியப்படுத்தும் கலையின் ஆகச்சிறந்த விளைவு இது.

பின்னணிக் கதைகள்:

கோரங் கண்விழிக்கும்போது தண்டனையின் முதல் நாள் துவங்குகிறது.

தண்டனைக்குரிய நபர்களாகக் கட்டிடத்துக்குள் வருபவர்கள், தங்களோடு ஏதேனுமொன்று எடுத்து வர அனுமதிக்கப்படுவர். காரங் தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ஒன்றை எடுத்து வருவான். அந்தப் புத்தகத்தை வாசிப்பது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது, டிப்ளமோ சான்றிதழ் பெறுவது என்று ஆறுமாத காலத் திட்டங்கள் அவனுக்கு நிறைய இருக்கும்.

ட்ரிமாகசி கத்தியொன்றை எடுத்து வந்திருப்பார். அவர் இந்தக் கட்டிடத்துக்குள் வந்த காரணமும், இந்தக் கத்தி குறித்து அவர் விவரிப்பதும் அத்தனை சுவாரஸ்யம். தனது வீட்டில் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் ட்ரிமா கஷி. விளம்பரத்தில் வரும் ஒருவனும், சில குடும்பத்தலைவிகளும், கத்தியைக் கூர்மைப்படுத்தும் கருவியொன்றைக் காட்டி அதன் சிறப்புகளை விவரிக்கிறார்கள். அந்தக் கருவியைக் கொண்டு கூர்மைப்படுத்தப்படும் ஒரு கத்தியால் செங்கலைக் கூட எளிதில் நறுக்கலாம் என்கின்றனர். அந்தக் கத்திக்குப் பெயர் சாமுராய். அதே நடிகர்கள், இன்னொரு விளம்பரம். இந்த முறை கூர்மைப்படுத்தவே தேவையில்லாத ஒரு கத்தியை விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் பெயர் சாமுராய் ப்ளஸ் என்று அறிவிக்கிறார்கள். இந்த விளம்பரங்களின் தொடர் அபத்தங்களப் பார்த்து வெறுப்பாகும் ட்ரிமாகசி கோபத்தில் தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கி மாடியில் இருக்கும் தனது குடியிருப்புச் சன்னலில் இருந்து எறிகிறார். அந்தச் சாலையில் செல்லும் மனிதர் அதனை வாங்கிக் கொண்டு இறக்கிறார். இப்படி அவர் தன் கதையோடு அந்த சாமுராய் ப்ளஸ் கத்தியையும் எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்கு வந்து சேர்கிறார்.

இந்தக் கோபுரத்தில் மிஹாரூ என்ற தாயொருத்தி தனது குழந்தையைத் தேடி மேலும் கீழுமாகப் போய் வருவாள். சில நாட்கள் கழித்து கோபுரத்திற்குள் வரும் இமோகிரி என்ற பெண் இதே கோபுர நிர்வாகத்தின் முன்னாள் பணியாளர்.

கோரங் கைதியாக நுழையும் முன் அவன் விவரங்களை சேகரிக்கும் மேசையில் இமோகிரிதான் அமர்ந்திருப்பாள்.

இமோகிரி தன்னோடு வளர்ப்பு நாயை எடுத்து வந்திருப்பாள். இது ஆபத்தான விளையாட்டு என்பான் கோரங். தானும் வளர்ப்பு நாயும் ஒவ்வொரு நாளாக முறைவைத்து உணவை எடுத்துக்கொள்வோம் என்பாள் இமோகிரி.வளர்ப்பு பிராணிக்காக ஒரு நாள் உணவை ஒருத்தி தியாகம் செய்ய முன்வருவது குறிப்பிடத்தக்கது.

பசி என்பது ஒருவகை நெருப்பு:

வாழ்வு பசியை மையப்படுத்தியது. பசிக்காக நடைபெறும் போராட்டத்தில் மனித மாண்புகள் எவ்வாறெல்லாம் குலைகிறது?! உயிரோடு இருப்பதற்காக மனிதன் எந்த கட்டத்திற்கும் துணிவான்.

ஊரடங்கு காலத்தில் ஒருபக்கம் வீடுகளில் அடுப்பு நெருப்பு தணிவதே இல்லை.மூன்றுக்கு நான்கு வேலை சமையல் நடைபெறுகிறது.பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் பணிச்சுமை.

மறுபக்கம் பசியால் வாடும் மனிதர்கள்.சாலையில் கிடக்கும் பாலை அள்ளும்,தானியங்களைப் பொறுக்கும் அவலம்.அரசமைப்புச் தரும் சொற்ப தானியம் தீர்ந்து போக உணவுப் பொட்டலங்களுக்காக நீண்ட வரிசையில் மக்கள் கால்கடுக்க சமூக இடைவெளி மறந்து நிற்கின்றனர்.

மக்களிடம் சேர்க்க முடியாமல் கிட்டங்கிகளில் சேகரமாகும் தானியங்களை மதுபானத் தொழிற்சாலைகளுக்கு மடைமாற்றும் அரசியலும் நடைபெறுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அவலமான சூழலில் படம் பேசும் உணவு அரசியல் முக்கியமானது.

ஒவ்வொரு நபரும் உள்நுழைவதற்கு முன் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவின் பெயர் கேட்டுப் பதிவு செய்து கொள்ளப்படும். அந்த உணவு, அந்த மேடையில் இடம்பெறச் செய்யப்படும்.  

அந்தத் தளத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் பிடித்த உணவுகள் சமைக்கப்பட்டுத் தேவையான அளவு நிரப்பப்பட்டுதான் உணவு மேடை அனுப்பப்படும். ஆனால் ஒன்றிரண்டு தளம் தாண்டியதும் மனிதர்கள் அதனுள் குதித்து உணவு மேடையை மிக மோசமாகக் கையாண்டு வீணாக்கிவிடுவர்.

உணவுப் பகிர்வு என்பது மனித வாழ்வில் எவ்வளவு மோசமாகக் கடைபிடிக்கப்படுகிறது. தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்து தரும் குணம் போதிக்கப்படவேண்டிய தேவை குறித்து உணர முடியும்.

மேலே இருப்பவர்கள், கீழே இருப்பவர்கள் உணவுக்காகக் காத்திருப்பது குறித்து கொஞ்சமும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. கீழே இருப்பவர்களின் குரலை மேல்தளத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்கள். கீழே இருப்பவர்கள்தான் மேலே செல்வார்கள். தளம் சுழற்சி முறையில் மாதந்தோறும் மாற்றப்படுகிறது. ஆனால் தளம் மாறியதும் மனிதர்களின் தன்மையும் மாறிவிடுகிறது.

பசியின் கொடூரமான விளைவு, நபர்கள் தங்களுக்குள் கொன்று சதைகளை உண்ணத் தொடங்கும் இடங்களெல்லாம் பார்வையாளர்களைப் பல்வேறு எண்ண அலைகளுக்கு உள்ளாக்குகிறது.


இருப்பின் சூட்சுமங்கள்

ஆழ்ந்து பயணப்படுவதற்குப் பார்வையாளர்களுக்குப் பல்வேறு பாதைகள் படத்தில் இருக்கிறது. அதில் நத்தை படம் தோறும் குறியீடாக காட்டப்படுகிறது.கோபுரத்திற்குள் வருவதற்கு முன் கோரங் தனக்குப் பிடித்த உணவாக நத்தையைத் தெரிவித்திருப்பான். ஒவ்வொரு நாளும் அவ்வளவு பக்குவமாக நத்தை தயாரிக்கப்பட்டு உணவு மேடையில் வைத்து அனுப்பப்படும். நத்தை உணவு கோரங்கின் கைகளுக்கு ஒரே ஒரு நாள்தான் வந்து சேர்ந்திருக்கும்.ட்ரிமாகசி கூட காரங்கை 'சிறு நத்தையே' என்று செல்லப் பெயர் வைத்து அழைப்பார்.ஒரு கட்டத்தில் கோரங்கையே உணவாக்கிக் கொள்ள அவர் எத்தனிப்பார்.

பொதுவாக நத்தை ஆபத்து வரும் போது தன் உடலைக் கூட்டுக்குள் பொதித்துக் கொண்டு தப்பித்துக் கொள்ளும்.சூழலோடு பொருந்தி வாழ நத்தை சிறந்த உதாரணம்.கோரங் நத்தை போன்றவன்.தளத்தில் கூட வசிக்கும் நண்பர்களோடு பொருத்திக் கொள்பவன்.அதே நேரம் சூழலுக்குள் பொருந்தி கிடைக்கிற உணவை அனைவரும் பகிர்ந்து வாழும் வழிகளையும் அவன்தான் கண்டறிய முயற்சி செய்கிறான், அவன் கவலையுறுவதைக் கண்டு ட்ரிமாகசி அவனிடம் "நீ கம்யூனிஸ்டா" என்பார்.

காட்சி வழி தத்துவ விசாரணைகள்:

ட்ரிமாகசி இறந்த பிறகும் அவர் அரூவமாகக் கோரங்கோடு பேசிக்கொண்டே இருப்பார்.அந்தக் காட்சிகளும் வசனங்களும் கவித்துவமானவை. வாழ்வைத் தத்துவ விசாரணைக்கு உள்ளாக்குபவை.

மிஹாரூ தன் குழந்தையைத் தேடித் திரிவதாகக் கேள்விப்படும் இமோகிரி, அந்தக் கட்டிடத்தில் பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பாள். அப்படியானால் மிஹாரூ தன் குழந்தையைத் தேடித் திரிவது ஏன் என்ற கேள்வியும் பார்வையாளர்களைத் தொடரும்.

இமோகிரி, உணவுப் பகிர்வுக்காக தினமும் தனக்குக் கீழ் தளத்தில் உள்ளவர்களோடு பேசி மாற்றத்தை உண்டாக்க முயலும் காட்சிகள், மேல்-கீழ் அதிகார இடைவெளி என திரைப்படம் பல்வேறு சமூக அடுக்குகள் குறித்துப் பேசிக்கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் கோரங்கும் பகரத்தும் உணவுப் பகிர்தலை சரி செய்யத் தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்குவர். அந்தக் களப்பயணம் மீஹாரூவின் குழந்தையையும் தேடித் தந்ததா? மொத்தம் எத்தனை தளங்கள் அந்தக் கட்டிடத்தில் இருந்தது? என்றெல்லாம் திரைப்படம் முடிவை நோக்கி நகரத் தொடங்கும்.

ஒளியும் இசையும்:

ஒளிப்பதிவில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இருளுக்கும் ஒளிக்குமான நுண்மையான விளையாட்டு, பின்னணி இசை தரும் அதிர்வலைகள் ஆகியவை படத்துக்குப் பெரும் பலம்.
உணவு மேடை நகரும்போது வரும் இசை பல்லைக் கூசச் செய்கிறது. படம் பார்த்து பல நாட்கள் இந்த இசை தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இப்போது மீண்டும் அது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தபடி மூளைக்குள் ஏறத் தொடங்கிவிட்டது, தலைக்குள் நகர்கிறது ஒரு உணவு மேடை.


கற்குவியலிலிருந்து தலைகாட்டும் சிறு மலர்:

'டான் குவிக்சாட்' நூலைதான் காரங் கைகளில் வைத்திருப்பான்.அதில் உள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் கொண்டு இருக்கும்.சமூகசூழலையும் மனித நடத்தைகளையும் இணைத்து பேசும் நூலைப் போலவே படமும் அமைந்துள்ளது

நுகர்வு அரசியல் உலகத்தைத் துண்டாடி இருப்பதை, உணவுப் பகிர்தலை நெருக்கடி காலத்தில்கூட பின்பற்ற முடியாத மனித மனங்களின் சுயநலத்தை, தனிமைக் காலத்தைக் கடந்து வருவதற்கு மனித இனம் எத்தனிப்பதை பல்வேறு கோணங்களில் முன்வைக்கிறது படம்.

 எல்லாம் தாண்டி, எல்லா உயிர்களையும் போலவே எது நிகழ்ந்தாலும் மனித உயிரும் பிழைத்திருக்கத்தான் போராடுகிறது என்பதை அழுத்தமாகப் பேசியிருக்கிற திரைப்படம் இது.
மனிதன், தன்னோடு சக உயிரிகளையும் சேர்த்துக்கொண்டு பிழைத்திருக்கப் போராடும் அவலத்தை ரத்தமும் சதையுமாகப் பேசுகிறது படம்.

மன அழுத்தம், அதனைத் தொடரும் தற்கொலைகள், கொலைகள், உணவுக்கான போராட்டம் என்று இடர்மிகு காலத்தை நகலெடுத்தாற்போல நிழலென வரும் வாழ்வு, பார்வையாளர்களுக்குள் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.

வர்க்க வேறுபாடுகள், மனித நடத்தைகள் போன்ற காத்திரமான பாடுபொருட்களை அரசியல் பிரக்ஞையோடு தந்துள்ளார் இயக்குநர்.
ஆகவே நண்பர்களே,

நிணநீர் வடியும் சதைத் துண்டுகள் பரப்பப்பட்ட தட்டுகளும், சுடச்சுட ரத்தம் நிரப்பப்பட்ட கோப்பைகளும்தான் உங்களுக்கான உணவென்று ஆகிவிடும் காலத்திலும் பகிர்ந்து உண்ணுதலே அறத்தின் மிச்சம் என்பதை மறக்காதீர்கள்.