சுதந்திரத்தை நாம் எப்படிக் கொண்டாடுகிறோம்?

-அலி சஃபுதீன்

இணையத்தில் பார்க்கமுடிந்த காஷ்மீர் பற்றிய 8 ஆவணப்படங்கள்

பெரிய வணிகத் திரைப்படங்களைப் போல ஆவணப்படங்கள் பரவலாகத் திரையிடப்படுவதில்லை, மேலும் அது அதிகமான பார்வையாளர்களைச் சென்றடைகிற சூழ்நிலையும் இங்கு இல்லை. வணிக மதிப்பினை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களும், வினியோகஸ்தர்களும் ஆவணப்படங்களின் பக்கம் செல்வதில்லை. எனில், இதற்குமுன்பு வரை, குறிப்பிட்ட தலைப்புகளின் அடிப்படையிலோ, குறிப்பிட்ட பிரச்சினைகளைச் சார்ந்து அலசுகிற ஆவணப்படங்களையோ அவ்வளவு எளிதாக நம்மால் பார்த்துவிட முடியாது. ஆனால், இந்நிலையில் இன்று ஆவணப்படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய ஊடகமாக யூடியூப் மாறிவிட்டது, அரசுக்கு எதிரான செயல்பாடுகள், கலை சார்ந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்பட்டும், இணையத்திலிருந்தே நீக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிற வேளையில், இத்தகைய ஆவணப்படங்களை கூடியமட்டும் விரைவில் பார்த்துவிடத் தோன்றுகிறது.

சமீபத்தில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஆர்டிகள் 370 மற்றும் 35ஏ-வை ரத்து செய்ததால், இந்தியக் குடிமக்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர் காஷ்மீர் குறித்ததாக மாறிப்போனது. ஆனால், பல ஆண்டுகளாகவே, காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலையும், அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பலதரப்பட்ட மோசமான சம்பவங்களும், அத்துமீறல்களும் நடந்தவண்ணமே இருந்தன. இந்திய சுதந்திரத்திற்குப் பின்பான ஆண்டுகளில், காஷ்மீர் பிரச்சினை பற்றி உருவாக்கப்பட்ட பல ஆவணப்படங்கள் உள்ளன. பிரதான ஊடகங்கள் புறக்கணித்த முக்கியமான கதைகளையும், அனுபவங்களையும் முன்வைக்கும் இத்தகைய படங்கள், ஒரு பிரச்சினை சார்ந்த பார்வை பரவலாக பலதரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளன.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக உருவாக்கப்பட்ட பல படங்களிலிருந்து, இணையத்தில் எளிதாகக் கிடைக்கிற அதே வேளையில் முக்கியமான எட்டு ஆவணப்படங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நீங்கள் இலவசமாகவே யூடியூபில் காணலாம்.

ஜஷ்ன் இ அசாதி (Jashn e Azadi)

இந்த ஆவணப்படம் இரண்டு மணிநேர கால – அளவு கொண்டது, எனவே இது இந்தப் பட்டியலில் மிக நீண்ட ஆவணப்படமாக அமைகிறது. சஞ்சய் காக் இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், இரண்டு பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தலா ஒரு மணி நேரத்தைக் கால அளவாகக் கொண்டுள்ளன.

1990-களில் காஷ்மீர் பிரச்சினையின்பொழுது, பதிவு செய்யப்பட்ட காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் பரவலாகப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த ஆவணப்படம், காஷ்மீர் மோதலின் விவரிப்புகளுடன், தொண்ணூறுகளில் இருந்து பதிவுசெய்யப்பட்டு சேமிக்கப்பட்ட காட்சிகளை விரிவாகப் பயன்படுத்துவதோடு, மோதலில் பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளையும், வேதனையான சம்பவங்களின் தொகுப்புகளையும் கொண்டுள்ளது.


காஷ்மீர் 1990

செவ்வியல் ஆவணப்படப் பாணியில் இது செய்தியறிக்கைத் தொகுப்புகளைக் கணிசமாக உள்ளடக்கியிருக்கிறது. ஆவணப்படத்தில் காண்பிக்கப்படுகிற காட்சிகளுக்கு ஏற்ற கதைசொல்லல் வர்ணனைகளை நாம் மனோஜ் ரகவன்ஷியின் குரலிலிருந்து கேட்கிறோம். டி.வி டுடேவில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் மிருத்யுஞ்சோய் குமார் ஜா, 32 நிமிட கால அளவு கொண்ட, இந்த ஆவணப்படத்தை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
ஆவணப்படங்களைத் தெளிவான பார்வையுடன் பார்க்க வேண்டியது அவசியம். இது நிச்சயமாக ஒரு சார்புடைய கதைகளின் மேலோட்டங்களைக் கொண்டுள்ளது, இந்த உத்தியைப் பயன்படுத்தத்தான், இப்போதுள்ள இந்திய ஊடகங்கள் தீவிரமாக முனைப்பு காட்டுகின்றன. இருப்பினும் இது அவசியம் பார்க்கவேண்டிய ஆவணப்படங்களின் பட்டியலில் உள்ளது.

ஆயுதத் தீவிரவாதத்தின் வருகையின்போது, காஷ்மீரின் பிரபலமான தலைவர்கள் கொடுத்த பல சுவாரஸ்யமான பேட்டிகள் மற்றும் காணொளித் தொகுப்புகள் இப்படத்தில் உள்ளன.


இழந்த சொர்க்கம் (Paradise Lost)

பத்திரிக்கையாளர் மார்க் டல்லி எழுதி மற்றும் கதைசொல்லியாக விவரித்து உருவாக்கப்பட்ட இந்த பிபிசி (BBC) ஆவணப்படம், காஷ்மீர் குறித்த புறநிலை அறிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக காஷ்மீரைப் பற்றியும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் விவகாரங்கள் பள்ளத்தாக்கில் வாழும் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறித்தும் பேசுகிறது. ”காஷ்மீர் பிரச்சினை என்றால் என்ன?” என்ற கேள்வி உங்களைத் தொந்தரவு செய்தால், இந்த ஆவணப்படம் நிச்சயமாக உங்களுக்குச் சில பதில்களை வழங்கும்.


காஷ்மீர் – கண்ணீர் பள்ளத்தாக்கு

ஆஸ்திரேலிய தயாரிப்பு நிறுவனமான ஜர்னிமேன் பிக்சர்ஸால், ஏப்ரல் 2002இல் படமாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் தொண்ணூறுகளுக்குப் பிந்தைய மந்தநிலை, முழுச்சோர்வு மற்றும் பள்ளத்தாக்கில் நிகழும் வெறுக்கத்தக்க சூழ்நிலையைப் பார்க்கமுடிகிறது.

இந்த ஆவணப்படத்தில் பொதுவான ஹவுஸ் படகு உரிமையாளர் ஹமீத் காங்காஷியின் பேட்டி, படம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் இருந்த ஒரு பொதுவான காஷ்மீரியின் விரக்தியைச் சித்தரிக்கிறது.


இன்ஷால்லா காஷ்மீர் (Inshallah Kashmir)

காஷ்மீரிகள் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்? என்று இப்படம் காட்ட முற்படுகிறது. அரசுக்கும் அதன் படைகளுக்கும் எதிராக, மக்களிடம் ஏன் கருத்து வேறுபாடும், ஆத்திரமும் இருக்கிறது? என இப்படம் அலசுகிறது.
இந்த ஆவணப்படத்தைப் பாருங்கள், நிச்சயம் நீங்கள் சில பதில்களைப் பெறுவீர்கள். அஸ்வின் குமார் இயக்கிய இந்த ஆவணப்படம், கொடூரமான சித்திரவதை, கடுமையான மனித உரிமை மீறல்களின் சான்றுகள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த பயங்கரவாதக் கதைகளையும் உள்ளடக்கியிருக்கிறது.


காஷ்மீர் எழுச்சி 2010, புகைப்பட ஜர்னலிஸ்டுகள் சாட்சியாக (Kashmir Uprising 2010, as witnessed by photojournalists)

பிரச்னைகள் நடக்கிறபொழுதெல்லாம் அது வெளியுலகத்திற்குத் தெரியவருவது ஊடகங்களின் மூலமாகத்தான். ஆண்டுகள் பல கடந்தும், அத்தகைய இக்கட்டான சூழலில் எடுக்கப்பட்ட அப்புகைப்படங்களே, பல புரிதல்களுக்குச் சாட்சியாக விளங்குகின்றன. தலைமுறைகள் கடந்தபிறகும் கூட, காஷ்மீரில் ஒரு காலகட்டத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்களின் கோரங்களை எவரும் புரிந்துகொள்ள இப்புகைப்படங்களே ஆதாரங்கள். அப்படியாக, காஷ்மீர் பிரச்சினையில் போட்டோ ஜர்னலிஸ்டுகள் எவ்விதம் தங்கள் பங்கைச் சரிவரச் செய்தனர் என்பதை இந்த ஆவணப்படத்தின் வாயிலாகக் காண்கிறோம்.

காஷ்மீரில் ஒரு முக்கியமான சம்பவம் நிகழும்பொழுதெல்லாம், புகைப்பட ஜர்னலிஸ்டுகள் அந்த இடத்திற்கு விரைகிறார்கள், நிகழ்வை ஆவணப்படுத்தக் கூட்டாக வேலை செய்கிறார்கள். ஒரு குழுவாக வேலைசெய்யும் புகைப்படப் பத்திரிக்கையாளர்களின் இந்தப் போக்கு, மற்றும் ஆவணங்களின் ஒருங்கிணைந்த கூட்டுப்பிரிவாக வேலை செய்வது 2010 இல் துவங்கியது.

இந்த ஆவணப்படம், பத்திரிக்கையாளர்கள் பிரச்சினைகளையும், மோதல்களையும் எவ்வாறு படம்பிடிக்கிறார்கள் மற்றும் அதிலிருந்து எவ்விதம் தப்பித்து தொடர்ந்து இதே வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மேலும், அப்புகைப்படக் கலைஞர்களே பலமுறை பலியாகிறவர்களாகவும் இருக்கின்றனர், அதையும் இப்படத்தில் காணமுடிகிறது.

வாய்ஸ் ஓவர் இந்த ஆவணப்படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. 2010 எழுச்சியின் மூலக் காட்சிகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறது. இந்த ஆவணப்படம் உள்ளூர் புகைப்பட ஜர்னலிஸ்டுகள் தங்கள் தொழில்முறை கடமைகளைச் செய்வதற்கான முயற்சிகளைக் காட்டுகிறது. இந்த ஆவணப்படத்தை கலீல் மீடியா நான்கு பிரிவுகளாகப் பிரித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளது.


காஷ்மீர் – வெள்ளிக்கிழமை எதிர்ப்பின் உள்ளே

ஸ்கூப்ஹூப் உருவாக்கிய இந்த ஆவணப்படம், நகர்ப்புறத்தில் உள்ள ஜாமியா மசூதியில் நிகழ்ந்த வெள்ளிக்கிழமை பிரார்த்தனை ஆர்ப்பாட்டங்களை உச்சத்திற்கு அழைத்துச்செல்கிறது.

நீண்டகால சர்ச்சையால் விளிம்புக்குத் தள்ளப்படும், கோபமடைந்துக் கல்வீசும் காஷ்மீரிகளின் ஆன்மாவை இது படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை எந்தளவிற்கு இழந்திருக்கிறார்கள், அதனால், அரசுக்கு எதிராக தங்கள் கருத்து வேறுபாட்டைக் காட்டுகிறார்கள். சமீபத்தில் வெளியாகியிருக்கிற இந்த ஆவணப்படத்தைக்
கீழ்க்காணும் இணைப்பில் பாருங்கள்.


விழுந்த சினார் நிழலில்

காஷ்மீரில் தொண்ணூறுகளின் பொழுது, அங்குள்ள இயக்கங்கள் தங்களைக் கலையுடன் திறம்பட ஒருங்கிணைக்கமுடியவில்லை. துப்பாக்கி ஏந்துவதற்குப் பதிலாக, கிட்டாரை ஏந்தியவாறு, அதிகார வர்க்கத்திற்கு எதிராக தங்களது பாடல்களின் வழி, கடுமையான எதிர்வாதத்தையும், தங்கள் நிலைப்பாட்டையும் முன்வைப்பது கலையின் வழியே சாத்தியப்படுகிறது. எனவே, கடந்த இரண்டு தசாப்தங்களாக எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு இடத்தைக் கலையின் வழியே கண்டுபிடிக்க முயன்றது.

தொண்ணூறுகளில் பிறந்த சில குழந்தைகள் தங்களை வெளிப்படுத்த வெவ்வேறு கலை வடிவங்களைத் தேர்ந்தெடுக்கிறது. மோதல் அவர்களின் கலை பற்றிய பார்வையை எவ்வாறு பாதித்தது என்பது இந்தப் படத்தில் அற்புதமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.