பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் சினிமா

-யமுனா ராஜேந்திரன்

எலியா சுலலைமானின் காட்சிரூபம் தரும் அனுபவத்தை எழுத்தில் விளக்குவது சாத்தியமில்லை. கண்களுக்கு மட்டும் துளைகள்விட்டு மூகமூடியணிந்த காட்டிக் கொடுப்பவன் போராளி பவுத் சுலைமானை துப்பாக்கி செய்பவன் என இஸ்ரேலிய படைத்தளபதிக்குக் காட்டிக் கொடுக்கிறான். அடர்ந்த மரங்கள் நிறைந்த வெளிக்கு பவுத் கொண்டு செல்லப்படுகிறான். அவனது கண்களைக் கட்டக் காவலன் முயல்கிறான். காவலன் குள்ளம். கண்கள் அவனுக்கு எட்டவில்லை. மரத்தின் அருகிலிருக்கும் கருங்கல்லை எடுத்து வந்து அதன்மேல் நின்று கண்களைக் கட்டிவிட்டுச் செல்கிறான். சுற்றிலும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலைகள் குனிந்த நிலையில் சிதறிக் கிடக்கும் பாலஸ்தீன மனிதர்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் பவுத் அசையும் மரங்களிலிருந்து வரும் ஆக்கிரமிக்கப்பட்ட அவனது சொந்த நிலத்தின் காற்றின் மணத்தை முழுமையாக இதயத்தை முழுமையாக விரித்து உள்ளே இழுக்கிறான். இலைகளின் அசைவை உணர்கிறான்…..

படைத்தளபதி நெற்றியின் பக்கவாட்டில் துப்பாக்கி முiனையை அழுத்திச் சொல்கிறான் : ஒன்று முதல் பத்து எண்ணிக் கொண்டு வா, பத்து வருவற்குள் தயாரித்த துப்பாக்கிகளை எங்கே வைத்திருக்கிறாய் என்று சொல்லிவிடு என்கிறான். புவுத் எண்ணத் துவங்குகிறார். 1, 2, 3, 4, 5 என்கிறார். கொஞ்சம் இடைவெளி விடுகிறார். தொடர்ந்து பத்து எனத்தெளிவாக அழுத்தமாகச் சொல்கிறார். புவத்தின் முகத்தில் ஓங்கிக் குத்திவிட்டு கோபத்துடன் அருகிலிருக்கும் ராணவத்தினருக்குக் கையசைத்துவிட்டுச் செல்கிறான் ராணுவத் தளபதி. இரண்டு ராணுவச் சிப்பாய்கள் புவத்தைக் கீழே தள்ளி உதைக்கத் துவங்குகிறார்கள். அடித்து முடித்து பவுத்தின் அசைவற்ற உடலை அருகிலிருக்கும் பள்ளத்தாக்கில் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறார்கள்.
 

இருப்பு என்பது நிலமும் நினைவுகளும் சார்ந்தது. பாலஸ்தீன மனிதனின் இருப்பு, தாய்வீடு, நாடு திரும்புதல் போன்றவற்றுக்கு என்னதான் அர்த்தம்? பாலஸ்தீனத்தை எனது மொழிக்குள் கொண்டு திரிகிறேன் என்றான் மஹ்முத் தர்வீஸ். கடைசி வானத்தின் பின் எங்கே செல்வது என்றான் எட்வர்ட் சைத். மீதமிருக்கும் நேரம் மரணபயத்திற்கும் அபத்தச்சிரிப்பிற்கும் விட்டுவைக்கப்பட்டிருக்கிறாக அச்சம் தெரிவிக்கிறான் பாலஸ்தீன சினிமாக் கலைஞன் எலியா சுலைமான். 1960 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிறந்த எலியா சுலைமான் தனது வாலிப வயதில் இஸ்ரேலியக் கொடியை எரித்தார் என்பதன் பின்னான நெருக்கடியின் பின் இங்கிலாந்துக்கும், பாரிசுக்கும் பிற்பாடு நியூயார்க் நகருக்கும் இடையில் பத்தாண்டுகள் அலைந்து திரிகிறார். இந்த அலைதல் வசதியான, படித்த மத்தியதரவர்க்கக் கனவானின் அலைதல் அல்ல, பாலஸ்தீன அரசியல் அகதியொருவனின் அலைதல்.

1982 முதல் 1993 வரை நியூயார்க் நகரில் அடையாளமற்ற மனிதனாக வாழ்ந்த சுலைமானுக்கு அங்கு ஏற்பட்ட அனுபவமே அவரை ஒரு திரைக்கலைஞனாக உருவாக்கியது. பாலஸ்தீன மக்களின் இழப்பையும் கையறுநிலையையும் துயரையும், அது இடையற்றுத் தொடர்வதையும் ஒரு மரணதருணமாக அவர் அனுபவம் கொண்டார். இஸ்லாமியரதும், கிறித்தவர்களதும், யூதர்களதும் கூட்டுநிலமாக முன்னொருபோது இருந்த பாலஸ்தீனம் எனும் நிலப்பரப்பு, அமெரிக்க மேற்கத்திய காலனியவாதிகளின் ஆசியுடன் இஸ்ரேல் எனும் ஏக யூதநாடாக இப்போது யூதர்களால் நிரந்தரமாகத் திருடப்பட்டவிட்டது என்பதனையும், பாசிச காலகட்டத்தில் இட்லரால் யூதமக்களுக்கு நேர்ந்த மிகப்பெரும் துயரை இப்போது அவர்கள் பாலஸ்தீன மக்களின் மீது சுமத்தியிருக்கிறார்கள் என்பதையும், இதனை தனது ஆதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்க, மேற்கத்திய அரசுகளும், குறிப்பாக அதனது ஊடகங்களும் பயன்படுத்துகின்றன என்பதையும் அவர் புரிந்து கொண்டார்.

ரண்டாம் உலகப் போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலியக் கொலைவெறியாட்டம், பாசிச் காலகட்ட யூதப்படுகொலைகள் என்பதை சமகால அமெரிக்க,யூத ஆதிக்கத் திரைஅழகியலாக முன்வைக்கும் ஸ்டீபன் ஸ்பீல்பர்க், யூத ஆதிக்க நிலைபாட்டில் இருந்து கொண்டு சமத்துவமும் ஜனநாயகமும் போதிக்கும் அமோஸ் கித்தாய் போன்றவர்களின் பிரச்சாரத் திரைமொழிக்கு மாற்றாக பாலஸ்தீன மக்களின் பாடுகளை ஒத்ததாக இனம் கண்டு உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களதும் விமோசன அழகியலாக மாற்றிய கலைஞன் எலியா சுலைமான்.

ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் ஷின்டலர்ஸ் லிஸ்ட், சேவிங் பிரைவேட் ரயான், மியூனிக் போன்ற, கடந்த காலத்தை மகோன்னப்படுத்துவதன் மூலம் நிகழ்கால அமெரிக்க யூத ஆதிக்க அரசியலைப் புனிதப்படுத்தும் திரைப்படங்களுடன், எலியா சுலைமானின் தி குரோனிக்கல் ஆப் எ டிஸ்ஸப்பியரன்ஸ்(1999), டிவைன் இன்டர்வென்சன் (2002)இ மற்றும் த டைம் தட் ரிமைன்ஸ் (2009) போன்ற படங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
எலியா சுலைமானின் இந்த மூன்று திரைப்படங்களும் அவரது சுயவாழ்வு அனுபவங்களும், அவரது தாய் தந்தையரின் டைரிக்குறிப்புகள் மற்றும் கடிதங்களின் அடிப்படையில், அவரது பெற்றோரின் நண்பர்களின் அனுபவங்களின் அடிப்படையிலான படங்கள்.
சுலைமானின் படங்கள் பிற பாலஸ்தீனத் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் வேறான அனுபவங்களைத் தருவது. பாலஸ்தீன தேசியம் அல்லது விடுதலை பற்றிய சைத், தர்வீஷ் போன்றவர்களின் பார்வையை ஒத்தது சுலைமானின் பார்வை. ஓடுக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீனக் கொடியை உயர்த்தும் நான், பாலஸ்தீனம் ஒரு அரசாக ஆகியபின்னால் அரசுகளுக்கே உரிய ஒடுக்குமுறையின் தன்மையைக் கொஞ்சமாகவேனும் அது கொண்டிருக்குமானால் அந்தக் கொடியைக் கிழே இறக்க நான் போராடுவேன் என்கிறார். பாலஸ்தீன நிலத்தின் விடுதலைக்காகப் போராடும் நான் பாலஸ்தீனம் விடுதலை பெற்றவுடன் அங்கிருந்து நீங்கவிரும்பும் நாடோடி நான் என்கிறார் தர்வீஷ்.
இந்த விடுதலைத் தேட்டமும் அலைவும் கலைஞனது இயல்பு மட்டுமல்ல, உலகவயமாதல் உலகில் நிலத்தைiயும் ஜீவாதாரங்களையும் கார்ப்பரேட்டுகளிடம் இழக்கும், சதா இடம்பெயரும் அனைத்து மனிதர்களுக்கும் உரியது என்கிறார் எலியா சுலைமான். இந்த வகையில்தான் குறிப்பான பாலஸ்தீன இருப்பற்ற அலைவு பற்றி நான் எடுக்கும் படங்கள் உலகில் எங்கிருக்கும் மனிதனோடும் பிரபஞ்சமயமான உறவைக் கொண்டிருக்கிறது என்கிறார் எலியா சுலைமான்.
எலியா சுலைமான் இப்போது இஸ்ரேல் நிலம் எனக் கோரப்படும் நாசரத் நகரத்தில் பிறந்தவர். இஸ்ரேலிய அரபு நகரம் என்று இன்றும் சொல்லப்படும் நகரம் நாசரத். 69 சதவீத இஸ்லாமியர், 29 சதவீத கிறித்தவர், வெறும் 2 சதவீத இஸ்ரேலியர் வாழும் நகராக அது 1948 ஆம் ஆண்டுகளில் இருந்தது. இன்று மேற்குக்கரை பாலஸ்தீனத்தின் தலைநகராக இருப்பது ரமல்லா நகரம். யாசர் அரபாத்தின் பதா விடுதலை அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நகரம். பல்கலைக் கழகங்களும், நாடகத் திரைப்பட அரங்குகளும், திறந்தவெளித் தேநீர்க் கடைகளும், இரவு விடுதிகளும் நிறைந்த நகரம். ஹமாசின் கட்டுப்பாட்டிலிருக்கும் காஸா பிரதேசத்துடன் ஒப்பிட பெண்ணிலைவாதிகள் நிறைந்த நகரம் ரமல்லா.
இஸ்ரேல் அரசு, ரமல்லா நகரம் இருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பிரசேத்தின் பகுதிகளையும் இணைத்துக் கொண்டு, 25 அடி உயரம் கொண்ட 445 மைல்கள் நீளம் கொண்ட மதில்சுவற்றை இஸ்ரேலுக்கும் மேற்குக் கரைப் பிரதேசத்திற்கும் இடையில் எழுப்பியிருக்கிறது. பெர்லின் சுவரின் உயரம் 11 அடிகள் நீளம் 92 மைல்கள். இதனைப் போன்ற நான்கு மடங்கு உயரமும் நீளமும் கொண்டது இஸ்ரேலின் மதிற்சுவர். இனஒதுக்கல் மதிற்சுவர் என இதனை சர்வதேசிய மன்னிப்புச் சபை குறிப்பிடுகிறது. பாலஸ்தீனப் பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாத்துக் கொள்ள இது தேவைப்படுகிறது என்கிறது இஸ்ரேலிய அரசு. 

தமது பாதுகாப்பை முன்வைத்து தனது அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் யூதவாதம் தோல்வியுற்ற ஒரு கருத்துநிலை என்கிறார் அரபு அறிஞரான ஹமி தபாசி. இட்லர் காலத்தில் யூத மக்களுக்கு நடந்தது மிகப்பெரும் கொடுமை எனும் தபாசி இது போல் உலகில் எந்தவொரு இனக்குழுவுக்கும் அதற்கு முன்பாக இவ்வளவு பெரிய கொடுமை இழைக்கப்படவில்லை எனவும் சொல்கிறார். அதற்காக அவர்களை உலகெங்கும் இருந்து ஏன் பாலஸ்தீன நிலப்பரப்பிற்குள் குடியேற்றவேண்டும், பூர்வீகமாக அங்கிருக்கும் மக்களது நிலங்களைத் திருடிவிட்டு அங்கிருந்து அம்மக்களை வெளியேற்றி அகதிகளாக அலையச் செய்ய வேண்டும் என்கிறார் தபாசி. இட்லர் யூதர்களுக்குச் செய்த கொடுமைக்கு பாலஸ்தீனர்களை ஏன் பழிவாங்க வேண்டும் என்கிறார் அவர். பாலஸ்தீன நிலம் பாரம்பர்யமாக இஸ்லாமியர், கிறித்தவர், யூதர் என பல்லின மக்களுக்கு உரியது. அதனை ஏன் யூதர்களுக்கென ஆக்கவேண்டும் எனக் கேட்கிறார் தபாசி.

பாலஸ்தீன மக்களின் பிரச்சினை இதுதான் : அவர்களது நிலம் திருடப்பட்டது. அவர்களது பயிர்கள், மரங்கள், கனிகள், காற்றின் மணம், நீர்நிலைகள், மலைகள், அவர்களது மொழி, புதைகுழிகள், வழிபாட்டிடங்கள், நினைவுகள் என அனைத்தும் திருடப்பட்டுவிட்டது. எழுபது ஆண்டுகளாக அவர்கள் அலைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது உறவுகள், கிராமங்கள், வேலை இடங்கள், பாடசாலைகள், நுhலகங்கள் என அனைத்தும் 25 அடி உயரச் சுவரினால் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்நியர்களால் வன்முறையினால் திருடப்பட்ட தமது நிலத்தில் விலங்குகளால் பிணைக்கப்பட்ட அடிமை மனிதர்களாக பாலஸ்தீன மக்கள் இருக்கிறர்கள். தமது சொந்த நிலத்துக்கு அந்நியர்கள் பாலஸ்தீனர்கள். வாழ்தலும் மரணமும் சமநொடியில் அனுபவமாக இருக்கும் நிலை இது. இந்த நொடி யுகம்போன்றது. மயான அமைதி கொண்டது. கைத்த மனநிலையில் உதடுகளின் இடையில் அபத்தப் புன்னகையை வரவழைப்பது. பாலஸ்தீன மக்களின் இந்தக் கூட்டு மனநிலை, கோபம், கையறுநிலை, மரணபயம், இடைவெளியில் உயிர்ப்புக்கான வேட்கையுடன் வெடிக்கும் அபத்தக் கெக்கலி என்பதாகவே எலியா சுலைமானின் படங்கள் இருக்கின்றன.

நிரந்தரமான இடமற்றவனாக இருக்கும் பாலஸ்தீன மனிதன், நியூயார்க்கிலிருந்து இஸ்ரேலின் பகுதியாக இருக்கும் தனது பூர்வீக நிலமான நாசரேத்திற்குத் திரும்புவதும், நாசரேத்திலிருந்து பாலஸ்தீனம் என இன்று அழைக்கப்படும் மேற்குக் கரைப் பிரதேசமான ரமல்லாவுக்குத் திரும்புவதும் குறித்ததுதான் எலியா சுலைமானின் மூன்று படங்கள். இந்தப் பிளவுபட்டிருக்கும் இரு நகரங்களும் ஒரு போது பிளவுபடாத பாலஸ்தீன நிலத்தின் ஒன்றிணைந்த நினைவுகள். நினைவுகளின் தகர்வும், ஒன்றிணைந்த நினைவுகளைத் தேடி இஸ்ரேலிய அரசின் ராணுவச் சாவடிகளையும் மதில்களையும் கடந்து செல்லுவதுமான எலியா சுலைமானின் வன்மையான யாத்திரையாகவே மூன்று படங்களும் உருவாகியிருக்கிறது.

இந்த மூன்று படங்களிலும் மிக அதிகமான உலகக் கவனிப்பையும் விவாதங்களையும் தூண்டிய படமாக இருப்பது டைம் தட் ரிமைன்ஸ். பாலஸ்தீன மக்களுக்கு முன்னிருப்பது இன்று முழு அழிவுக்கும் முன்பான மீதிமிருக்கும் காலமோ எனத் தான் அஞ்சுவதாக எலியா சுலைமான் குறிப்பிடுகிறார். என்றாலும், எதேச்சாதிகார அரசுகளை வீழ்த்திய அரபுப் புரட்சி அந்தக் காலத்தை நகர்த்திச் செல்வதாக தனக்கு நம்பிக்கை வந்திருப்பதாகப் பிற்பாடான தனது நேர்காணல்களில் சொல்கிறார்.

தடைம் தட் ரிமைன்ஸ் படம் 1948 ஆம் ஆண்டு சூலை மாதம் இஸ்ரேலிய ஆயுதப் படைகள் நாசரேத் நகரைக் கைப்பற்றும் 16 ஆம் திகதி சம்பவங்களுடன் துவங்குகிறது. படம் எந்தக் காலத்தைத் தனது கதைகூறு களமாகக் கொண்டிருக்கிறது என்பதனை எகிப்து அதிபர் நாசரின் மரணம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிச் செய்தி, இஸ்ரேலியக் காவலரின் கிழக்கு ஆசிய மருத்துவத் தாதியான மனைவி பாடும் டைடானிக் படப்பாடல் என்பதாகக் குறித்துச் செல்கிறது படம். டைட்டானிக் படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது. எலியா சுலைமானின் பெற்றோரின் வாழ்வு குறித்த இந்தப்படம் அவரது அன்னை மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருக்கும் காட்சியுடன் முடிவு பெறுகிறது. தனதும் தனது பெற்றோருடையதும் ஐம்பதாண்டு வாழ்வு குறித்ததாக டைம் தட் ரிமைன்ஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார் எலியா சுலைமான்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து துப்பாக்கி ஏந்திப்போராடும் புவாத் சுலைமான், போராளிகளுக்கு துப்பாக்கி தயாரிக்கும் கடைசல் எந்திரத் தொழிலாளி சுலைமான், சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்கும் இதய கிசிச்சை செய்யப்பட்ட மத்தியதர வயது சுலைமான், நாசரேத் கடற்கரையில் நண்பருடன் இரவில் மீன் பிடிக்க, லெபனானிலிருந்து ஆயுதம் கடத்தியாகக் கைது செய்யப்படும் சுலைமான், உடல்தளர்ந்த நிலையில் இன்னொரு தலைமுனையரின் இஸ்ரேலிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வேடிக்கை பார்க்க மட்டுமே செய்யும் சுலைமான், சதா கெரசின் கேனுடன் தற்கொலை செய்துகொள்ள முனையும் அண்டை வீட்டு முதியவரைக் காப்பாற்றும் சுலைமான் என அவரது தந்தையின் வாலிப நாட்களும் அந்திம நாட்களும் பற்றியது கதையின் ஒரு தாரை. தந்தையின் அனைத்து நகர்வுகளிலும் ஒன்றித்து இயங்கி அவரது மரணத்தின் பின் முழுமையாக மௌனியாகி உன்மத்த மனநிலையில் மரணிக்கும் சர்க்கரை வியாதி பாதித்த அன்னை பிறிதொரு தாரை. பெற்றோரின் நினைவுகளான இந்த இரண்டு கதைத் தாரைகளையும் இணைத்தபடி கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் வாழ்வு மற்றும் அரசியலின் சாட்சியமாக வாழ்கிறார் எலியா சுலைமான். பள்ளிச் சிறுவனாக, வாலிபனாக, தந்தையின் மரணத்தின் பின்பான தனையனாக, வயோதிகத் தாயைப் பராமரிக்கும் நரைத்த மத்தியதரவர்க்க மனிதனாக வாழ்ந்திருக்கிறார் எலியா சுலைமான்.
இன்னும் இரண்டு காட்சிகளைச் சொல்ல வேண்டும். ஒரு இளைஞன் குப்பையைப் போடுவற்காக தெருவின் மறுமுனையிலிருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கி வருகிறான். அவனது வீட்டின் முன்பாக இஸ்ரேலிய டாங்கி நிற்கிறது. டாங்கியின் குழல் இளைஞனைக் குறிவைத்து முன்னும் பின்னும் நகர்கிறது. இளைஞன் அது குறித்துக் கண்டு கொள்வதே இல்லை. குப்பையைப் போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பும்முன்பு அவனது கைத்தொலைபேசி அடிக்கிறது. அது அவனது காதலியாகவோ நண்பனாகவோ இருக்கலாம். தொலைபேசிக்குப் பதில் சொல்லிக் கொண்டு தெருவில் ஒரு முனைக்கும் மறுமுனைக்கும் நடக்கிறான். இன்று இரவு ஒரு நடன விருந்து இருப்பதாகவும், பல பாடல்கள் வந்திருப்பாகவும் தொலைபேசியில் பதிலளிக்கிறான் இளைஞன். இந்த உரையாடல் முழுவதிலும் டாங்கியின் குழல் இளைஞனைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்தக் காட்சியின் அழகு அந்த இளைஞனின் கண்டுகொள்ளாத ஆன்மபலத்திலும் அலட்சியத்திலும் இருக்கிறது.

பிறிதொரு காட்சியில் இளைஞர்களும் யுவதிகளும் பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள். அந்தவழியில் கறுப்புக் கண்ணாடி அணிந்த பெண் தள்ளுவண்டியில் தனது குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு வருகிறாள். ராணுவத்தினன் அப்பெண்ணைப் பார்த்து சீக்கிரம் வீட்டுக்குப் போ என்கிறான். தள்ளுவண்டியை நிறுத்தும் பெண், தனது கறுப்புக் கண்ணாடியை முன் தலைக்கு ஏற்றிவிட்டுவிட்டு, என்னையா வீடு போகச் சொல்கிறாய்? முதலில் நீ உன் வீட்டுக்குப்போ என்று சொல்லிவிட்டு, தள்ளுவண்டியை நகர்த்தத் துவங்குகிறாள்.
கிரேக்கத்தின் தியோ ஆஞ்சலபெலொஸ், அமெரிக்காவின் பஸ்டர் கீட்டன், ஜப்பானின் ஓசு, சீனாவின் சிகோ சியன் போன்றோர் தமது திரை ஆதர்சங்கள் என்கிறார் சுலைமான். ஓவியரும் கலை விமர்சகருமான ஜான் பெர்ஜர், தத்துவவாதிகளான பெனான், வால்ட்டர் பெஞ்ஜமின், கவிஞரான பிரைமோ லெவி போன்றோர் தனது அறிவாதர்ஷங்கள் என்கிறார் எலியா சுலைமான். கலை மனித விமோசனத்திற்கானது என்று கருதுகிற எவரும் ஆரத்தழுவிக் கொள்ளக் கூடிய திரைக் கலைஞன் எலியா சுலைமான். சம்பவங்களும் காட்சிகளும் கலைத்துப்போட்டபடி கிடக்கின்றன. அதிகமும் படத்தொகுப்புக்கு ஆட்படாத மிக நீளமான காட்சிகள். மௌனம் மட்டுமே மொழியாகும் நீண்ட காட்சிகள். அந்தந்தக் காலத்தில் குறித்த தலைமுறை உன்னத மனநிலையில் வைத்திருந்த பாடகர்களின் குரல்கள், இசைத் தட்டுகள். திரும்பத் திரும்ப கொஞ்சமே மாறுதலுடன் நிகழும் நிகழ்வுகள். நடன அசைவுகள் போன்ற ஒத்திசைவும் லயமும் கொண்ட மனிதர்களின் நடவடிக்கைகள். ஒரு நொடிக்கும் மறு நொடிக்கும் இடையிலான காலம், ஒரு அடிக்கும் மறு அடிக்கும் இடையிலான இடம் போன்றவற்றை இசைவாக்கும் திட்டமிட்டபடியிலான காமெராவின் நிலைத்த பார்வை என ஒரு இசைக்கோர்வை போன்றது எலியா சுலைமானின் திரைமொழி.


பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் டிவைன் இன்டர்வென்சன் அல்லது கடவுளரின் தலையீடு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான கேன் திரைப்பட விழா நடுவர்களின் விருதுபெற்ற திரைப்படம். குரோனிக்கல் ஆப் த டிஸ்ஸப்பியரன்ஸ் எனும் அவருடைய முதல் படத்தினையடுத்து குரோனிக்கல் ஆப் லவ் அண்ட் பெய்ன் எனும் துணைத்தலைப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் டிவைன் இன்டர்வென்சன். அவருடைய முதல் படத்தில் பாலஸ்தீன நிலப்பரப்பினுள் பாலஸ்தீன மனிதனின் இருப்பு காணாமல் போகிறது. அவரது இரண்டாவது படத்தில் அந்த காணாமல்போன பாலஸ்தீன மனிதனினது இருப்பின் வலியும் காதலும் சொல்லப்படுகிறது. இந்த வலியும் காதலும் கூட பாலஸ்தீன மனிதனால் புலன்வழி உணரப்படுவதற்கு கடவுளரின் தலையீட்டின் மூலமே சாத்தியமாகும் என்பதைக் காட்சிக்கனவுகளாக இழைத்திருக்கிறார் சுலைமான். ஆண்பெண் உறவில் நிறைவேறத்தக்க மிகச் சாதாரண ஆசைகள் கூட பாலஸ்தீன நிலைமையில் புனித ஆவிக்காகக் காத்திருக்க வேண்டிய அதிசயங்களாக இருக்கின்றன. டிவைன் இன்டர்வென்சன்ஸ் படத்தை எந்த வழமையான கதை கூறு திரைமரபுடனும் ஒப்பிட முடியாது. வசனமே அநேகமாக படத்தில் இல்லை. படத்தில் வசனம் பேசுகின்றவர்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேலியக் குடியேறிகள், சோதனைச் சாவடியில் காவலிருக்கிற இஸ்ரேலிய ராணவத்தினர் போன்றவர்கள்தான். பிரதான கதை மாந்தர் என எவரும் படத்தில் இல்லை. சில காட்சித் தொடர்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரு குறிப்பிட்ட காலத்தில், சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு என்ன நேர்கிறது எனக் காண்பிக்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் அதே குறிப்பிட்ட மனிதர்களுக்கு, அதே குறிப்பிட்ட காலத்தில் என்ன நேர்கிறது என்பதைப் படம் தேடிப் பதிவு செய்கிறது. தன் வீட்டிலிருந்து காரில் தனது வெல்டிங் பட்டறைக்குக் கிளம்பும் சுலைமானின் தகப்பனார் வழியில் தனக்கு வணக்கம் சொல்கிற அத்தனை பேரையும் தனக்குள் ஆளுக்கொரு கெட்டவார்த்தை சொல்லி, வெளியில் கையசைத்து பதில் வணக்கம் சொல்லிக் கொண்டே செல்கிறார். இறுதிக் காட்சியில் அவர் மரணமுற்ற பின்னால் மகனான சுலைமானும் அவனது அன்னையும் சோபாவில் அமரந்து கொண்டு விசிலடிக்கும் குக்கர் எப்போது சப்தத்தை நிறுத்தும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலமும் நிலம் சார்ந்த உடமையும் அடையாளங்களும் பூர்வீக நினைவுகளும் இங்கு பலமனிதர்களைப் பிரிப்பதாக உள்ளார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. நாசரேத், ரமல்லா,ஜெருசலேம் என மூன்று நகர்களை இணைத்து காட்சிகள் நகர்கிறது. நாசரேத் நகரத்திலிருந்து அடர்ந்த மரங்களினிடையில் துரத்திச் செல்லப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுப் பொருட்கள் அவரது முதுகுப் பையிலிருந்து சிதற அவரை சில சிறுவர்கள் துரத்துகிறார்கள். அவரது நெஞ்சில் கத்தி பாய்ந்திருக்கிறது. இது ஒரு காட்சி. படத்தின் தலைப்பும் கலைஞர்களின் பெயரும் தோன்றும்போது, படத்தின் துவக்கத்தின் முன் வரும் காட்சி இது. நாசரேத் நகரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா கொல்லப்படுகிறார்.ந
ம் குறித்த சில காட்சிகள் இவ்வாறு இருக்கின்றன : அன்றாடம் தனது வீட்டில் குப்பைப் பையுடன் வெளியே வரும் ஒரு யூதர் தனது குப்பையை தனது அண்டைவீட்டினுள் வீசுகிறார். இது மறுபடி மறுபடி தொடர்கிறது. ஒரு நாள் அண்டை வீட்டுப் பெண்மணி அந்தத் தொகையான குப்பைப் பைகளை எடுத்து யூதரின் வீட்டு வாயிலில் திரும்ப எறிகிறார். அவர் பாலஸ்தீனப் பெண்மணி. யூதர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து இப்படிச் செய்யலாமா என்கிறார். இது நீங்கள் எனது வீட்டுக்குள் முன்பே எறிந்த குப்பைகள் என்கிறார் பெண்மணி. என்றாலும் அண்டை வீட்டாரிடம் இப்படியா நடந்து கொள்வது? இதற்குத்தானா கடவுள் நமக்கு மொழியைக் கொடுத்திருக்கிறார் என்கிறார் யூதர். இது நாசரேத் நகரம்.
மூன்று பாதைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு காவல்துறை வாகனம் நிற்கிறது. ஓட்டுனர் இருக்கையில் இஸ்ரேலியக் காவலர் அமர்ந்திருக்கிறார். வாகனத்தின் பின்னால் கண்கள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்ட நிலையில் பாலஸ்தீனர் ஒருவர் பூட்டப்பட்டிருக்கிறார். அது ஜெருசலேம் நகரம். அங்கு வரும் பெண் உல்லாசப் பயணியொருவர் ஒரு இடத்தின் அடையாளத்தை இஸ்ரேலியக் காவலரிடம் கேட்கிறார். அவருக்கு அந்த இடம் தெரியவில்லை. கண்கள் கட்டப்பட்ட நிலையிலுள்ள கைதியை அழைத்துவந்து இடத்தின் அடையாளம் சொல்லக் கேட்க, கண்கள் கட்டப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல மூன்று வேறுவேறு பாதைகளைக் காட்டுகிறார் அவர். அதே இடம். அதே வாகனம். அதே பெண். இடம் கேட்கிறார். காவலன் இறங்கி வாகனத்தின் பின்னால் போய் கதவைத் திறக்கிறான்.உள்ளே கைதி இல்லை. பறந்துவிட்டான். காவலன் பதறிக் கொண்டு வாகனத்தை வேகமாகத் திருப்புகிறான். இஸ்ரேலியர், பாலஸ்தீனர் என குடியிருப்புகளுக்கிடையில் கால் பந்து விளையாடுவது, பாம்பை அடிப்பது, கார் நிறுத்துவது எனும் இயல்பான அன்றாடச் செயல்கள் அனைத்துமே வெறுப்பும் வன்முறையும் நிறைந்ததாக இருக்கிறது.

கைவிடப்பட்ட பேருந்து தரிப்பிடம். பாழடைந்து கிடக்கிறது. அங்கு தினமும் ஒரு இளைஞன் கண்களுக்குக் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு அழகாக உடுத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறான். பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து வெளியே வரும் ஒரு ஆண் அவன் அருகில் வந்து இங்கு பஸ் நிற்பதில்லை என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறான். மறுபடி அதே பேருந்து நிறுத்தம். பிறிதொரு நாள். அதே நிலையில் இளைஞன். வீட்டிலிருந்து வெளியே வரும் ஆள் மறுபடி இங்கே பஸ் நிற்பதில்லை என்கிறான். கொஞ்சம் நிதானித்துவிட்டு வீட்டுக்குள் சென்று விடுகிறான். பிறிதொரு நாள். அதே பேருந்து நிறத்தம். அதே இளைஞன். வீட்டுக்குள் இருந்து வெளியே வரும் ஆள் பஸ் நிற்காது என்கிறான். இளைஞன் இப்போது தனக்குத் தெரியும் என்கிறான். வீட்டிலிருந்து வெளியே வந்தவன் சுற்றிலும் பார்த்துவிட்டு வீட்டுக்குள் செல்கிறான். இப்போது பஸ் நிறுத்தத்திற்கு எதிர்வீட்டு மாடியைக் காண்பிக்கிறது காமெரா. பால்கனியில் உலர்ந்து கொண்டிருக்கும் ஆடைகளை எடுக்க வெளியே வருகிறாள் ஒரு இளம்பெண். ஆடைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் திரும்புகிறவள் திரும்பி நின்று இளைஞன் இருக்கும் திசையில் பார்க்கிறாள். அரபுக் காதல் பாடலொன்று எழுகிறது.

இனி, இரண்டு நகர்களில் வாழும் காதல் ஜோடி பற்றிய நிகழ்வுகள். ஆண் நாசரேத்தில் வாழ்கிறான். பெண் ரமல்லாவில் வாழ்கிறாள். நாசரேத் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரம். ரமல்லா பாலஸ்தீனர் நிர்வாகத்தில் இருக்கும் நகரம். இரண்டு நகர்களையும் பிரிக்கும் சோதனைச் சாவடி ஒன்று இருக்கிறது. காதலர்கள் இருவரும் அந்தச் சோதனைச் சாவடியில் இருந்து கொஞ்சதூரத்திலுள்ள கட்டுமானப் பணிநடக்கும் ஒரு மைதானத்தில் தினமும் தனித்தனிக் காரில் வந்து சந்தித்துவிட்டு, இரவு வீழ்ந்த பின் தத்தமது நகர்களுக்காகப் பிரிகிறார்கள். இவர்களது சந்திப்பை முன்வைத்து இரண்டு அன்றாட நடப்புகள் காண்பிக்கப்படுகிறது. அந்தச் சோதனைச் சாவடியைக் கடந்து சொல்கிறவர்கள் அடையாள அட்டையை இஸ்ரேலிய ராணுவத்தினரிடம் காண்பித்துவிட்டே செல்ல வேண்டும். இஸ்ரேலிய ராணுவத்தினர் எவருக்கும் அனுமதி மறுக்கலாம். எவரையும் அவமானப்படுத்தலாம். வன்முறைக்கு உட்படுத்தலாம். அவர்கள் நினைத்தால் என்னவும் செய்யலாம். அப்படி பாலஸ்தீனர்களை அவர்களது மண்ணிலேயே அவமானப்படுத்தி அடிமைகளைப்போல நடத்துகிறார்கள். இவை அனைத்தையும் காதலர் இருவரும் சாட்சியமாக இருந்து பார்க்கிறார்கள்.

இன்னொரு அன்றாட நிகழ்வு உடலுறவு விழைவுக்கான அவர்களது வேட்கை வெளிப்படுவது. இருவரும் மூடிய வாகனத்தினுள் அமர்ந்தபடி மோகம் ததும்ப முகங்களைப் பார்த்தபடி கைவிரல்களைப் பிணைத்து பிசைந்து மேலும் கீழுமாக நிரவி, உக்கிரமான கலவிக்கான மறுதலை அக்காட்சிகள். தமது மக்கள் தம்முன் படும் உளவேதனையும் தாம் அனுபவிக்கும் விரகவேதனையும் அவர்களிடம் பழிவாங்கும் உணர்வாகவும், கடவுளரின் தலையீடாகும் கற்பனைகளாகவும் உருவாகிறது. நிஜத்தில் இருவரும் சந்திக்கும் தருணமொன்றில் ஆண் ஒரு பலூனைக் கொண்டு வந்து அதற்குக் காற்றடிக்கிறான். ஊதப்பட்ட பலூனில் யாசர் அரபாத்தின் புன்னகை முகம். காரின் மேல் ஜன்னலைத் திறந்து பலூனை மெதுவாகப் பறக்கவிட்டுவிடுகிறார்கள். பலூன் சோதனைச் சாவடி மீது பறக்கிறது. ராணுவத்தினர் அதனைச் சுட்டு வீழத்தலாம் என்கிறார்கள். ராணவத் தலமையகத்துக்குச் செய்தி பறக்கிறது. ஆய்வு செய்கிறோம் பொருத்திருங்கள் எனச் செய்தி வருகிறது. சோதனைச் சாவடியில் ஒரு களேபரம். புலூன் பறந்து சென்று இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றின் உச்சியில் அமர்கிறது. இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு சோதனைச் சாவடியைக் கடந்து இரண்டு கார்களில் ஆணும் பெண்ணும் ஜெருசெலேம் பறந்து ஒரே அறையில் இரவைக் கழிக்கிறார்கள்.

காதலர்கள் இருவரும் பல அற்புதங்களைப் புரிகிறார்கள். தங்களால் இயலாததை அவர்கள் கடவுளரின் தலையீடுகளில் அதிசயங்களாகக் கனவாக ஆக்குகிறார்கள். படத்தின் அதி அற்புதமான காட்சிகள் இவைகள்தான். படத்தில் வரும் ஆண், படத்தின் இயக்குனர் சுலைமான். பட்டறையை விற்றுவிட்டு நோயுறும் தந்தையை மருத்துவமனையில் பார்ப்பற்காக அவர் நாசரேத் வருகிறார். வரும் பாதையில் கார் செலுத்தியபடி கையடக்கமான பழமொன்றைச் சாப்பிட்டுக் கொண்டே வருகிறார். கொட்டை மிஞ்சுகிறது. அந்தக் கொட்டையை எடுத்து கார் ஜன்னலுக்கு வெளியே எறிகிறார். பாதையின் பக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேலிய டாங்கியொன்றின் மீதும் விழும் அந்தக் கொட்டை வெடித்து டாங்கி சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறுகிறது. பிறிதொரு காட்சி இது : ரமல்லா, நாசரேத் என இரண்டு நகர்களை இணைக்கும் சாவடியை மூடி வாகனங்களைத் திருப்பி அனுப்புகிறார்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர். அனைவரும் வாகனங்களைத் திருப்பிக் கொண்ட போக அங்கு வரும் பெண் காரிலிருந்து இறங்கி ராணுவத்தினரைப் பொருட்படுத்தாமல் சாவடியைக் கடக்கிறாள். அவளைச் சுடுவதற்காக ராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளைக் குறிபார்க்கிறார்கள். தினவெடுத்த குதிரையைப் போல தொடைகள் குலுங்க நிமிர்ந்து நடக்கும் பெண் தனது கறுப்புக் கண்ணாடியைச் சாவகாசமாகத் தனது தலைக்கு ஏற்றிவிட்டு, அவர்களது கண்களுக்குள் பார்த்தபடி நடக்கிறாள். துப்பாக்கிகள் தாழ்கின்றன. அவள் சோதனைச் சாவடியை நடந்து கடக்கையில் சோதனைச் சாவடியின் காவற்கோபுரம் சரிகிறது.

இன்னொரு காட்சி : எதிரில் பாலஸ்தீனப் பெண்ணின் படம் தீட்டப்பட்ட கட்அவுட்கள் வரிசையாக நிற்கின்றன. இஸ்ரேலிய வீரர்களுக்கு அதனைச் சுட்டுச் சாய்க்க பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார் அதிகாரி. ஒரேயொரு கட்அவுட்டைச் சாய்க்க அவர்களால் முடியவில்லை. அந்தக் கட்அவுட்டின் மறைவிலிருந்து காதலுற்ற பெண் நிஞ்ஜா வடிவத்தில் வருகிறாள். சரமாரியாக அவளைச் சுடத் துவங்குகிறார்கள். அவள் வானுக்கு உயர்கிறாள். இயேசுநாதரின் தலையைச் சுற்றிய முள்முடிபோல அவளது தலையைச் சுற்றிய துப்பாக்கி ரவைகள் பொலபொலவென கீழே விழுகிறது. பிறைபொறித்த கத்திகளை ஏவி இஸ்ரேலிய ராணுவத்தினரைச் சாய்க்கிறாள். எஞ்சிய ஒருவனை கவன் கற்களால் வீழ்த்துகிறாள். அதிகாரி மிஞ்சி நிற்கிறான். அவன் அவளைச் சுடத் தொடங்குகிறான். இருமுனைக் கூர் கொண்ட கோடலி போன்ற உலோகத்தினால் அதனைத் தடுக்கும் அவள் அதனைச் சுழலவிட்டு அது அவனைச் சுற்றிவிட்டு அவளிடம் மீளவர, அவளை நோக்கி மலைக்குப் பின்புறமிருந்து எழும் ஹெலிகாப்டரில் அது மோதி ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறுகிறது. கைத்த மனநிலையில் வெளிப்படும் நகைச்சுவை படமெங்கிலும் நிரவியிருக்கிறது.

சுலைமானின் முதல் இரண்டு படங்களில் தொடரும் பெற்றோருக்கும் மகனுக்குமான அற்புதமான உறவு அவரது மூன்றாவது படமான த டைம் தட் ரிமைன்ஸ் படத்தில் உச்சத்தை அடைகிறது. இரண்ட படங்களிலும் இடம்பெறும் இரண்டு காட்சிகளைச் சுட்டவிரும்புகிறேன். த டைம் தட் ரிமைன்ஸ் படத்தில் அவரது தந்தை இறந்த பின் அவரது தாய் உன்மத்த நிலையை அடைந்துவிடுகிறாள். அவள் சதா வெறித்த பார்வையடன் பால்கனியில் சலனமற்று அமர்ந்து கொண்டேயிருக்கிறாள். இரண்டு ஸ்பீக்கர்களை எடுத்துவரும் மகன் அதனைத் தாயின் கால்களின் அடியில் வைக்கிறான். அவளுக்கும் அவளது கணவனுக்கும் பிடித்த இசைத்தட்டு ஒன்றினைப் போடுகிறான். தாயின் கால்கள் தானே அசையத் துவங்குகின்றன. அவளது உதடுகள் மெதுவாகப் புன்னகைக்கிறது. டிவைன் இன்டர்வென்சன்ஸ் படத்தில் வரும் காட்சி இது : தந்தை மருத்துவமனையில் அசைவின்றிப் படுத்திருக்கிறார். மகன் சந்தேகத்துடன் தந்தையின் மார்பில் காதுவைத்து அவர் சுவாசிக்கிறாரா? என உறுதிப்படுத்திக் கொள்கிறான். வெளியே சென்று திரும்பி வரும் அவன் இயர்போனைக் கொண்டுவந்து தந்தையின் இரு காதுகளிலும் பொருத்திவிட்டு டேப்ரிகாடரை டுயூன் செய்துவிட்டுப் போகிறான். கண்கள் மூடிய நிலையில் தந்தையின் முகம் பூக்கத் துவங்குகிறது. சுலைமானின் திரைப்படங்கள் கதைகள் கொண்டதல்ல ஒவ்வொரு காட்சியும் வலியும் காதலும் கொண்ட கவிதைகள். திரைமொழியின் மஹ்முத் தர்வீஷ் எலியா சுலைமான்.