குற்றவுணர்வின் பின்னே சுடர்விடும் மனிதம்

(Amrutham Gamaya & No Date, No Signature திரைப்படங்களை முன்வைத்து)

பொதுவாக நாம் தவறுகளை (குற்றங்களை) இரண்டு விதமாக பிரித்து வைத்திருக்கிறோம். ஒன்று தவறு என தெரிந்தே அதை செய்வது. இது பெரும்பாலும் நம் சுயநலத்திற்காக செய்வதாக இருக்கலாம். மற்றொன்று தெரியாமல் செய்வது. விவரம் தெரியாத வயதிலோ அல்லது தன்னையும் மீறி எதிர்பாராமல் நடந்துவிடும் தவறுகளுக்கு சூழல்தான் பிரதான காரணமாக இருந்தாலும் இங்கு வினையாகவும் அதற்கான எதிர்வினையாகவும் மனிதனே இருக்கிறான். தவறுகளின் விளைவுகளைப் பொறுத்து அதன் வீரியம் வெளிப்படுகிறது. ஆக குற்றம் குற்றம்தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. தெரியாமல் செய்துவிட்ட தவறினை மன்னித்து விடுதல் சரியானதாக சொல்லப்பட்டாலும் அந்த மன்னிப்பை சரியான அதாவது பாதிக்கப்பட்ட நபரே மனதொத்து தர வேண்டும் தவிர நாமே நம் பலத்தினை பயன்படுத்தி அதனை எடுத்துக் கொள்ளுதல் கூடாது. அது பெரும் அநீதி.

யாரும் அறியாமல் அந்தத் தவறு (குற்றம்) நடந்து விடுகிறது. அல்லது செய்துவிடுகிறான். அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சிக்கலாகி அதிலிருந்து மீள முடியாமல் நிற்கிறது. தவறிழைத்தவன் அதனை பார்க்கிறான். என்ன செய்ய வேண்டும் அவன்? கிட்டத்தட்ட நீதிபதிக்கு நிகரான இடத்தில் நிற்கிறான். அவனது மனசாட்சிதான் நீதிமன்றமாக இருக்கிறது. நீதி தேவதை அவன் கைகளில் நியாயத் தராசை தந்துவிட்டு என்ன செய்யப் போகிறான் என பார்த்தபடி நிற்கிறது. இதுவொரு வகை. இல்லை யாரோ எப்படியோ போனால் நமக்கென்ன? நாம் நன்றாக இருந்தால் போதும் என கண்டும் காணாமல் போய்விடுவது வேறொரு வகை.

இன்னொன்றையும் பார்க்க வேண்டியுள்ளது. தவறு செய்தவனோ அல்லது அப்படியான ஒன்றினை செய்துவிடும் படியான சூழலுக்கு எதிர்பாராமல் தள்ளப்பட்டவனோ சமூகத்தில் மிகப்பெரிய மனிதனாகவும், நல்ல அந்தஸ்து உள்ளவனாகவும், பணவசதி படைத்தவனாகவும், நல்ல நம்பகமான வேலையில் இருப்பவனாகவும், குடும்ப ஆதரவு உள்ளவனாகவும், ஆள் பலமும், அரசியல் பலமும் கொண்டவனாகவும் இருக்கிறான். முக்கியமாக அவன் நல்லவனாகவும் நேர்மையாளனாகவும் இருக்கிறான். சரி இங்கு நல்லவன் என்கிற மதிப்பீடு எவ்வாறு ஒருவனுக்கு தரப்படுகிறது? என்கிற கேள்வி எழுகிறது. இதைப்பற்றி நாம் பின்னர் விவாதிப்போம். ஆக இப்படியிருக்கும் சூழலில் சராசரியான மனிதன் அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளவே நினைப்பான்.

செய்த செயலுக்கு சாட்சியில்லை; அப்படியே இருந்தாலும் அது எப்படியோ நமக்கு சாதகமாகி விட்டது. அல்லது சாதகமாக்கி விட்டோம். இப்போதைய சூழ்நிலையில் இதிலிருந்து நம்மால் நிச்சயமாக வெளியேறிவிட முடியும் என்றாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளாமல் பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து அதனை பார்த்து நடந்த தவறுக்கு மூல காரணியான தன்னை அதற்கான தண்டனைக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறானே அவன்தான் உண்மையான மனிதன். செய்துவிட்ட தவறிற்காக தன் நலனை பற்றி சிறிதும் யோசிக்காமல் அதற்கான சரியான பிராயச்சித்தம் தேடுகிறானே அவன் மனிதன். சரி எது அவனை அவ்வாறு செய்ய வைக்கிறது? மனதில் இருந்து ஓயாமல் கேள்வியெழுப்பும் மனசாட்சியும், தன்னால் தான் இப்படியானது என்று சதா மனதை முள்ளாய் உருத்தும் குற்றவுணர்வுமே காரணம். இந்த இரண்டும் அவனை உண்மையை நோக்கி நகர்த்துகிறது. இப்படி செய்துவிடுவது சுலபமா? வாழ்க்கை எல்லோருக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்கிவிடுகிறதா? சூழ்நிலைக் கைதியான மனிதன் பெரும்பாலும் சுயநலத்தின் பிடியில் சிக்குண்டு தன்வீடு, தனி மக்கள், தன் நலம் என்று கூண்டில் அடைபட்ட வேட்டை வெறிகொண்ட மிருகமாய் சுற்றி வருகையில் இது சாத்தியம் தானா?

இந்தப் பிண்ணனியில் நாம் இரண்டு படங்களை பற்றி இக்கட்டுரையில் அலச இருக்கிறோம். ஒன்று 1987ல் எம்.டி. வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் புகழ்பெற்ற மலையாள சினிமா இயக்குநர் ஹரிஹரனின் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘அம்ருதம் கமயா (Amrutham Gamaya)' என்கிற மலையாளத் திரைப்படம். மற்றொன்று சரியாக முப்பது ஆண்டுகளுக்கு பிறகு 2017ல் ‘Vahid Jalilvand, Ali Zarangar' திரைக்கதையெழுதி ‘Vahid Jalilvand' இயக்கத்தில் வெளியான ஈரானியத் திரைப்படமான ‘நோ டேட், நோ சிக்னேட்சர் (No Date, No Signature). இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. படத்தின் கதாநாயகர்கள் இருவரும் ஒரு உயிரின் உண்மையான மதிப்பினையறிந்த உயிர்காக்கும் மருத்துவர்கள். இரண்டு மருத்துவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களையும் அதற்கான எதிர்வினைகளையும் இரண்டு படங்களுமே தீர்க்கமாக பேசுகின்றன.


நாம் ‘அம்ருதம் கமயா’வை எடுத்துக்கொண்டால் ஒரு இளம் மருத்துவனின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. மருத்துவ படிப்பினை முடித்துவிட்டு தன் தாயாருடன் அவரது சொந்த கிராமத்திற்கு ஒரு பழைய அம்பாசிடர் காரில் வருகிறான். அவன் பெயர் ஹரிதாஸ். ஆற்றங்கரையோர இயற்கை எழில் சூழ்ந்த சிறிய ஊர் அது. அந்த கிராமத்தில் இருக்கும் அரசாங்க மருத்துவமனையில் அவனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அதே ஊரில் தனியான கிளினிக் ஒன்றினை துவங்கி மக்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது அவனது எண்ணம். அதற்கு அவனது குடும்பம் நல்ல ஒத்துழைப்பு தருகிறது. குடும்பமென்றால் அவனுக்கு தந்தை கிடையாது. தன் அம்மாவின் சகோதரர் அரவணைப்பிலும் ஆதரவிலும் படித்து வளர்ந்தவன். அவனது மாமா அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய வசதி படைத்தவர். ஆள் பலத்திற்கோ அரசியல் பலத்திற்கோ பணத்திற்கோ பஞ்சமில்லை. மூன்று நல்ல திடகாத்திரமான அடாவடியான மகன்களும், ஒரு அழகான மகளும் உண்டு. அந்த கிராமத்திலேயே மிகப்பெரிய வீடு அவர்களுடையது. சாதிய ஆதிக்கத்திலும் பணக்காரத் தோரணையிலும் மூழ்கித் திளைப்பவர் அவர். கிட்டத்தட்ட பண்ணையார் போன்றவர். தன் மூத்த மகனுக்கு தன் அக்காவின் பெண்ணையே திருமணமும் முடித்திருக்கிறார்.
ஹரிதாஸின் மீது அந்த வீட்டில் உள்ள அனைவருக்குமே அன்பும் அக்கறையுமே இருந்தாலும் அவனை தங்களின் கைப்பிடிக்குள்ளே வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஹரிதாஸூக்கும் தன் மாமாவின் மீதும் அவர்களது மகன்களின் மீதும் அன்பும் மரியாதையும் நிறையவே இருக்கிறது. தனது மாமா மகன்களுடன் வீட்டிலேயே ஜாலியாக உட்கார்ந்து மது அருந்தும் அளவுக்கு நல்ல நெருக்கமாக இருக்கிறான். அவர்களை பொறுத்தவரை ஹரிதாஸ் வேறல்ல; அவர்கள் வேறல்ல. அவன் மருத்துவராக இருப்பதை பெருமையாக சொல்லிக் கொள்பவர்களும் கூட. தங்களது பணத்தினால் படித்து வளர்ந்தவன்; இதோ இப்போது இந்த ஊரிலேயே கிளினிக்கும் வைத்துக் கொடுத்தாகி விட்டது. நல்ல வருமானம் வரும். மாமாவின் அழகான இளம்பெண் ஹரிதாஸை காதலிக்கிறாள். அவனுக்கும் அவள்மீது அளவுகடந்த காதலுண்டு. ஆக இரண்டு பேருக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டால் ஹரிதாஸ் தங்களது பிடிக்குள்ளே இருப்பான் என்கிற எண்ணமிருக்கிறது.


ஹரிதாஸ் தான் கற்ற மருத்துவத்தின் மீது மிகுந்த மரியாதையும் காதலும் அர்ப்பணிப்பும் கொண்டவன். இதையெல்லாம் அவனது செயல்கள் மூலமாக படம் நமக்கு காட்டுகிறது. மருத்துவத்தை காசாக்க விரும்பாத இளம் மருத்துவன் அவன். வேலை பார்க்கும் அரசாங்க ஆஸ்பத்திரியிலோ மருத்துவர்கள் பஞ்சம், பிரசவங்களை பார்ப்பதற்கான பெண் மருத்துவர் இடம் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது. பணியில் இருக்கும் சீனியர் மருத்துவர் ஒருவரோ மேம்போக்கான ஆளாக இருக்கிறார். சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. வரும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்வதும் கிடையாது. ஹரிதாஸூம், அந்த மூத்த மருத்துவரும் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே தான் சீனியர், “தன் வேலையை நீ பார்க்கக் கூடாது. அப்படியிருந்தால் நமக்குள் எந்தவித பிரச்சனை இருக்காது” என்கிறார். இரண்டே மருத்துவர்கள்; சிறிய கிராமத்து அரசாங்க மருத்துவமனை; சேர்ந்து மக்களுக்கு பணி செய்ய துடிப்பும் ஆர்வமும் மிக்க இளம் மருத்துவன் ஒருவன் தயாராக இருந்தாலும் அவனுக்கு எந்தவித ஒத்துழைப்பும் கிடைப்பதில்லை. இருந்தாலும் ஹரிதாஸ் அவனது வேலையில் கச்சிதமாக இருக்கிறான்.

தன் மாமாவின் வீட்டின் அருகிலேயே அவர் வைத்துக்கொடுத்திருக்கும் மருத்துவமனையிலும் மாலை நேரங்களில் வைத்தியம் பார்க்கிறான். வரும் நோயாளிகளிடம் அன்பும் கனிவும் காட்டுகிறான். கிராமத்து ஏழை மக்களின் வாழ்க்கையை அறிந்தவன். மருந்துகள் கூட வாங்க முடியாமல் சிரமப்படும் மக்களை பார்க்கிறான். சிகிச்சைக்கான பணத்தினைக் கூட அவர்களால் தர முடிந்ததை வாங்கிக் கொள்கிறான். மருந்துகள் கூட எழுதித் தருவதை முடிந்தவரை தவிர்த்து குணமாக ஆலோசனை சொல்பவனாக இருக்கிறான். இதெல்லாம் அவனது மாமாவிற்கு கோபத்தை தருகிறது. இப்படியெல்லாம் இருந்தால் சம்பாதிக்க முடியாது என்று தன் வீட்டில் உள்ளவர்களிடம் கடிந்து கொள்கிறார். ஹரிதாஸ் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. என்னமோ சொல்லிக் கொள்ளட்டும். தனது பணிக்கு இடையூறு நிகழாமல் இருந்தால் போதும் என்பதே அவனது எண்ணமாக இருக்கிறது. நோயாளிகள் கிளினிக்கிற்கு வரமுடியாத சூழலில் இருந்தாலும் கூட அவர்கள் வீடு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அங்கேயே சென்று வைத்தியம் பார்ப்பவனாக இருக்கிறார் ஹரிதாஸ்.

அப்படித்தான் ஒரு நாள் வயதான பெண்மணி ஒருவருக்கு மருத்துவம் பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறான். மிகவும் ஏழ்மையான பிராமணக் குடும்பம் அது. சிறிய ஓடு வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டின் பிராம்மணர் அந்த ஊரில் புரோகிதராய் இருக்கிறார். ஆற்றங்கரையோரத்தில் அமாவாசை பித்ரு தர்ப்பணம் செய்து வருபவர். குறைந்த வருமானம் தான் வருகிறது. குடும்பத்தை எப்படியோ ஓட்டி வருகிறார். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் இளம் பெண்ணும் அந்த வீட்டில் உண்டு. அவருடைய மனைவிக்கு தான் சிகிச்சை. சிகிச்சை முடிந்து ஹரிதாஸ் கிளம்பும் போது அந்த மனிதர் தனது மகனும் மருத்துவ படிப்பிற்கு சென்றதையும் இருதய நோயால் நிகழ்ந்துபோன அவனது துயர மரணத்தை பற்றியும் கண்கள் கலங்கியபடி சொல்கிறார். ஹரிதாஸ் அதிர்ச்சி அடைகிறான். தான் மருத்துவ படிப்பினை முடித்த அதே கல்லூரியின் பெயரை அல்லவா இந்த மனிதர் சொல்லுகிறார்? அவரது மகனின் பெயரை கேட்கிறான். அவர் சொல்ல ஹரிதாஸின் முகம் இருளடைகிறது. ஏதோ தன்னை பலமாகத் தாக்கியவாறு அந்த நிமிடங்களில் கலங்கியபடி நிற்கிறான். தானும் அவர் மகன் படித்த கல்லூரியில் படித்தவன்; உங்கள் மகன் எனக்கு ஜூனியர் என்று மட்டும் சொல்லிவிட்டு சிகிச்சைக்கு அவர் தரும் பணத்தினைக்கூட பெற்றுக்கொள்ளாமல் மோட்டார் சைக்கிளில் அவசரமாக கிளம்பிப் போகிறான். அவனது மனம் பெரும் பாரமாகிக் கனக்கிறது. தனது மனதுக்குள் மட்டுமே ஆறாத ரணமாக கிடக்கும் அந்த நினைவுகள் மீண்டும் கிளறப்பட்டதை உணர்கிறான். மீளவே முடியாத குற்றவுணர்வுக்குள் விழுகிறான். ஏன்? அவனுக்கும் அந்த குடும்பத்தின் இருதய நோயால் இறந்துபோன அந்த மகனுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்குள் என்ன நடந்தது?


இப்போது நாம் ‘No Date No Signature' திரைப்படத்திற்கு வருவோம். இப்படத்தின் நாயகன் ‘காவேத் நரிமென்’ அந்த பெரிய நகரின் புகழ்பெற்ற மருத்துவமனையான ‘லீகல் மெடிசனில்’ உயர்நிலை மருத்துவராக வேலை பார்ப்பவர். குறிப்பாக பிரேத பரிசோதனை துறையின் மிக முக்கியமான நிபுணர்; மருத்துவர். பணியில் நேர்மையானவர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கிடையே அவருக்கென்று எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. சிலசமயங்களில் பிரேத பரிசோதனை சரியான முறையில் நடக்காத போது (செல்வாக்கினை பயன்படுத்தி தவறான அறிக்கையை மருத்துவர்களே தர முயலுதல்) அதை வன்மையாக கண்டிப்பவர். எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். நாற்பதை நெருங்கும் மனிதர். வீட்டில் உடல்நிலை சரியில்லாமல் கோமாவில் இருக்கும் தாயாரும் உண்டு. தன்னுடைய வேலை நேரங்களில் அம்மாவை கவனித்துக்கொள்ள செவிலிப் பெண்களை நியமித்திருக்கிறார். மருத்துவமனையில் ‘சையேத்’ என்கிற ஆத்மார்த்தமான தோழி அவருக்கு இருக்கிறாள். அவளும் மருத்துவரே. இப்படி தானுண்டு தன் வேலையுண்டு என போய் கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையை ஒரு எதிர்பாராத சம்பவம் புரட்டிப் போடுகிறது. அந்த சம்பவம் நிகழ்ந்தபோது கூட அதன் வீரியம் உடனே வெளிப்பட்டு விடவில்லை. அனைத்துமே சுமூகமாக முடிந்து போனது அப்போது. ஆனால் அந்த இரவும் அந்த சம்பவமும் தன்னை இப்படியான மீளவே முடியாத குற்றவுணர்வில் தள்ளும் என்பதை அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.



அன்றைய நாள் பணியை முடித்துவிட்டு இரவில் தனது காரில் வீட்டுக்கு கிளம்புகிறார் நரிமென். இரவு நேரம் சாலை காலியாகக் கிடக்கிறது. வாகனங்கள் சுதந்திரமாக வேகமாக வெளிச்சத்தை சாலையில் கொட்டியபடி பயணிக்கின்றன. இவரை பின்தொடர்ந்து வருபவன் மோசமான முறையில் தனது காரை ஓட்டி வருவதை கவனித்து விடுகிறார். முன்னால் சில வாகனங்கள் செல்வதை நரிமென் பார்க்கிறார். பின்னால் வருபவன் இவரின் காரை உரசுவது போல வருகிறான். முதல்முறை சுதாரித்தவர் இரண்டாம் முறை சுதாரிக்க முடியாதபடி இவரது காரை உரசியபடி வேகமாக முந்திச் செல்கிறது அந்தக் கார். சற்றே நிலை தடுமாறிய நரிமென் தன் முன்னால் ஓரமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது தட்டி விடுகிறார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே நிலைதடுமாறி விழுகிறார்கள். நரிமென் பதறிப்போய் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வருகிறார்.


அந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் தன் மனைவியுடன் வந்திருக்கிறார். அவளது கையில் சிறிய பெண் குழந்தை. கூடவே பத்து வயதினை நெருங்கும் சிறுவனொருவனும் இருக்கிறான். எல்லோருமே கீழே விழுந்து எழுகிறார்கள். யாருக்கும் பலமாக அடியில்லை. வண்டி கொஞ்சம் சேதாரமாகியிருக்கிறது. வண்டியை ஓட்டி வந்த நபர் நரிமென்னை திட்டுகிறார். நரிமென் தன்மேல் தவறில்லாததை சொல்லுகிறார். போலீசை அழைக்க வேண்டாம் எனவும், உங்கள் அனைவரையும் மருத்துவமனையில் விட்டுவிடுகிறேன். உடைந்து போன வண்டியின் செலவுக்கு பணம் கூட தருகிறேன் என்கிறார். அந்த நபர் முதலில் பணம் வாங்கிக்கொள்ள தயங்கி பின்னர் வாங்கிக் கொள்கிறார். நரிமென் சிறுவனை சிறிதுநேரம் காரில் உட்கார வைத்தபடி சிறிய உரையாடலுக்கு பின் அவனை பரிசோதிக்கிறார். அவன் நலமாக இருப்பதாக உணர்கிறார். மோட்டார் சைக்கிள் ரெடியானதும் அவர்கள் முன்னே செல்ல நரிமென் காரில் பின்தொடர்கிறார். மருத்துவமனை அருகில் வரவே உள்ளே போகும்படி சிக்னல் செய்கிறார். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் தங்கள் பாதையில் பயணிக்கிறார்கள். இப்படியாகத்தான் அந்த சம்பவம் நடந்தது. சிறிய விபத்துடன் அன்றைய இரவு முடிந்து போகிறது.

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு அவரது உதவியாளர் அன்று பிரேத பரிசோதனைக்கு தயாராக இருக்கும் உடல்களின் விவரங்களை ஒவ்வொன்றாக வாசிக்க அதில் ‘ஆமிர்’ என்கிற சிறுவனின் பெயரும் வருகிறது. அதிர்ச்சி அடைகிறார் நரிமென். அந்த உடலை பார்க்க விரைகிறார். அன்றைய இரவு தன்னுடைய விபத்தில் சிக்கிய அதே குடும்பத்தின் சிறுவன்; உடலில் சிறு காயம் கூட எங்குமில்லை. ஆனால் இறந்து போயிருக்கிறான். அந்தக் கணத்திலேயே அவருள் ஏதோ ஒன்று அவரை அழுத்துகிறது. தன் தோழி ‘சையேத்’ தான் அந்தச் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்யப் போகிறாள் என்பதை அறிந்து அவளிடம் பேசுகிறார். சிறுவனின் குடும்பத்தை தனக்கு தெரியும் என்கிறார். பிரேத பரிசோதனை முடிவு வருகிறது. சிறுவன் சாப்பிட்ட உணவு கடுமையான விஷமாகிப் போனதாகவும் அதனால் அவன் இறந்து போனதாகவும் அறிக்கை அதிகார்வபூர்வமாக தரப்படுகிறது. ரசாயண ஆய்விலும் முக்கியமான காரணமாக அது நிரூபிக்கப்படுகிறது.

ஏழ்மையான இஸ்லாமிய குடும்பம். மகனை பறிகொடுத்தபடி நிற்கிறது. நீங்கள் அவனுக்கு கொடுத்த உணவுதான் அவனை கொன்றிருக்கிறது என்று மருத்துவமனை அவர்களிடம் சொல்லுகிறது. இதைவிட பெற்றோர்களுக்கு பெரிய தண்டனை இருக்க முடியுமா? தங்கள் மகனை தாங்களே கொன்று விட்டதாக கேட்பதை விட? சிறுவனின் அப்பா (மூசா) குறைந்த விலைக்கு நீண்ட நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்ட இறைச்சியை எதுவும் தெரியாமல் வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். அதை சாப்பிட்ட மகன் அது விஷமாகி இறந்துவிட்டான். இதுதான் நடந்திருக்கிறது. தன் மகனை தானே கொன்றுவிட்டதாக குற்றவுணர்ச்சியில் விழுகிறான் தந்தை. மனைவியோ “குடும்பத்தில் அக்கறை இல்லாமல் என் மகனை கொன்று விட்டாய். இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். என் மகளைத் தூக்கிக்கொண்டு ஊருக்கு போய்விடுகிறேன்” என்கிறாள். தனக்கு இறைச்சி விற்பனை செய்த அந்த கடைக்காரனை கோபத்தில் திட்டி அடித்துவிடுகிறான் மூசா. கடைக்காரன் கோமா நிலையில் மருத்துவமனையில் கிடக்க அடித்த மூசாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். அந்தக் குடும்பத்தின் எளிமையான மகிழ்ச்சியான வாழ்க்கை காணாமல் போகிறது.

நரிமென்னுக்கு மனதில் அந்த பிரேத பரிசோதனை அறிக்கை உருத்திக்கொண்டே இருக்கிறது. அது சரியாக செய்யப்பட்டவில்லை என நினைக்கிறார். தன்னால் அன்று நடந்த விபத்தினால் சிறுவன் இறந்து போயிருப்பானோ என்கிற எண்ணம் அவரது மனதை வதைக்கிறது. கண் முன்னாலேயே அந்த சிறுவனது குடும்பம் சிதைந்து போயிருப்பதை பார்க்கிறார். அன்று நடந்த விபத்தில் கழுத்தில் கொஞ்சம் வலியிருப்பதாக சொன்னதை தான் அப்படியே சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டதை எண்ணி வருந்துகிறார். தன் தோழியிடம் நடந்த அத்தனை விஷயங்களையும் சொல்லுகிறார். விபத்தில் சிறுவனது கழுத்தெழும்பு உடைந்து அவன் மரணமடைந்திருக்க வாய்ப்பிருப்பதாக அவர் சொல்லுகிறார். பிரேத பரிசோதனை சாதாரணமாக நடந்ததாகவும், விபத்தில் சிக்கிய உடலை பரிசோதனை செய்வது போல செய்யப்படவில்லை என்றும் கூறுகிறார். தோழி அது விபத்து கேஸ் என்று தனக்கு தெரியாது எனவும், அதுமட்டுமின்றி கழுத்தில் கூட சிறிய காயமில்லை; உணவு விஷமானது நிரூபணம் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை என மறுத்து வாதிடுகிறாள். தன் நண்பனைப் பற்றி நன்கு அறிந்தவள் அவள். அவன் மனதிலிருப்பதை உணர்கிறாள். அந்த சிறுவன் தன் விபத்தினால் தான் இறந்துவிட்டான். இப்போது அந்தக் குடும்பம் சின்னாபின்னமாகி நிற்பதற்கும் நான் தான் காரணம் என சொல்லுகிறார் நரிமென். சையேத் அதற்கு அப்படியே இருந்தாலும் இப்போது நம்மால் எதுவுமே பண்ண முடியாது என்கிறாள். காரணம், மூசாவை சிறையிலிருந்து காப்பாற்ற ‘அவன் வாங்கி வந்த இறைச்சி தான் சிறுவனின் சாவுக்கு காரணம்’ என அறிக்கை தரும்படி அவனது மனைவி கேட்டிருப்பதை சொல்லுகிறாள். நரிமென் என்ன செய்திருப்பார்? என்ன செய்ய முடியும் அவரால்? பார்க்கலாம். அதற்கு முன்னர் நாம் ஹரிதாஸின் கதையை பார்க்க வேண்டியிருக்கிறது.

அந்த ஏழை பிராம்மணரின் வீட்டுக்கு போய்விட்டு வந்த பிறகு ஹரிதாஸின் மனமும் உடலும் சோர்ந்து போகிறது. இதற்கிடையில் வீட்டில் நடக்கும் சில சம்பவங்களால் அவன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகிறது. இப்போது தனியாகிறான். தனது கிளினிக்கையும் வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளும் படி ஆகிறது. புதிய இடத்தில் நோயாளிகள் வருவது அதிகரிக்கிறது. ஓரளவுக்கு வருமானமும் வருகிறது. வீட்டில் உள்ள யாருக்கும் ஹரிதாஸ் அங்கிருந்து போவது பிடிக்கவில்லை. ஆனால் இனிமேலும் தனது தன்மானத்தை விட்டுவிட்டு தனது மருத்துவ தொழிலில் மாமா மகன்களின் இடையூறு ஏற்படும் போது அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மேலும் அது மனவருத்தத்தை தந்து விரிசலை ஏற்படுத்திவிட வேண்டாமே என நினைத்து தான் தனியாக செல்கிறான் ஹரிதாஸ். வயதான அந்த பெண்மணிக்கு மருத்துவ செலவுக்கு உதவுகிறான். அவர்களின் பெண் ஶ்ரீதேவியின் படிப்புக்கு உதவுவதாக நம்பிக்கை தருகிறான். அவர்கள் வீட்டின் மீது வாங்கியிருந்த கடனை அடைத்து பத்திரத்தினை மீட்டுத் தருகிறான். அந்தக் குடும்பம் இதற்கெல்லாம் என்ன கைம்மாறு செய்ய முடியும் என நினைக்கிறது. எதுவுமே சொல்லாமல் அவர்களது வீட்டில் ஒருவனைப் போல உதவுகிறான் ஹரிதாஸ். கிளினிக்கில் ஹரிதாஸிற்கு உதவியாக ஶ்ரீதேவி இருக்கிறாள். செவிலி ஆக வேண்டும் என்பது அவளது ஆசையாக இருக்கிறது. தன் அண்ணன் உன்னி கிருஷ்ணனை பற்றி அவளும் அவளது குடும்பமும் நிறைய விஷயங்களை கண்ணீரூடன் ஹரிதாஸூடன் பகிர்ந்து கொள்கையில் அவன்குற்றவுணர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.

மாமா கோபத்தில் அவரது பெண்ணிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறார். ஹரிதாஸை தேடிவந்து அழுகிறாள் அவள். யாரிடமும் எதுவும் சொல்வதில்லை. சொல்லவும் முடிவதில்லை அவனால். அந்தக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கிருப்பதாக மட்டும் காதலியிடம் சொல்லுகிறான். அதுதான் அந்தக் குடும்பத்திற்கு செய்யும் உண்மையான பிராயச்சித்தம் என்கிறான். குடும்பத்தை துணிச்சலாய் மீறி வருகிறேன். திருமணம் செய்து கொள்ளலாம் என்று தேடி வரும் ஆத்மார்த்தமான காதலியை திருப்பியனுப்புகிறான். காதலும் அதன் வழியே கடந்து போகிறது. அவளது திருமண ஊர்வலம் கோலாகலமாக நடக்கிறது. தனிமையிலும் காதலின் பிரிவிலும் மனதிலிருப்பதை வெளியே கொட்டி அழுவதற்கு கூட யாருமின்றி போதை மருந்துக்கு அடிமையாகி நல்ல மருத்துவன் என்கிற பெயரையும் தொலைத்துவிட்டு நிற்கிறான் ஹரிதாஸ்.


எதுவுமே பண்ண இயலாத சூழலில் தான் அறியாத வயதில் விளையாட்டாக செய்துவிட்ட கொடூரத்தை அந்த பிராம்மண தந்தையின் கால்களை அழுதபடியே பிடித்து ஹரிதாஸ் அழும் காட்சி மனதை உலுக்கிவிடக் கூடியது. அம்மனிதரின் கண்களிலிருந்தும் கண்ணீர் வழிகிறது. ஆனாலும் அந்தக் குடும்பம் தன்னை கொலைகாரனாக பார்ப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரையே போக்கிக்கொள்ள முடிவெடுக்கும் சூழலில் அவன் வாழ்வதற்கான அர்த்தம் அங்கு பிடிபடுகிறது. வருடங்கள் ஓடுகின்றன. இறுதியில் ஶ்ரீதேவியை மருத்துவராக்கிய பிறகு அவள் தன் அம்மாவின் சம்மதத்துடன் தன்னையே அவனுக்கு தர விரும்புகிறாள். அதை மறுக்கும் ஹரிதாஸ் உயர்ந்த மனிதனாகிறான். அவள் வீட்டில் முகப்பில் C. P. ஶ்ரீதேவி (எம். பி.பி.எஸ்) என்று எழுதப்பட்ட பலகையை புன்னகையுடன் பார்க்கிறான் ஹரிதாஸ். அருகிலுள்ள கோவில் வாசலில் வரிசையாய் எரியும் அகல்விளக்கொளியில் அவனது மனிதம் மிளிர்கிறது.

எளிதாக தப்பித்துக்கொள்ள அத்தனை வழிகளிலிருந்தும் தன் மனதில் ஓயாமல் கேட்கும் குற்றவுணர்வின் குரலிலிருந்து மீள முடியாமல் தன் வாழ்க்கையின் இளமைக்காலங்களை, காதலியை, குடும்பத்தை, வசதியை என அனைத்தையும் துறந்து அதிலிருந்து நியாயமாக மீளும் வழியை கண்டடைந்து கொண்ட ஹரிதாஸூக்கு கொஞ்சமும் சளைத்தவரல்ல ‘நோ டேட், நோ சிக்னேட்சர்’ படத்தின் நரிமென். தன்னால் தான் அந்த சிறுவனின் மரணம் நிகழ்ந்திருக்குமோ என்கிற சந்தேகம் வலுக்க, அவரே மறு பிணக்கூராய்வுக்கு அரசிடம் அனுமதி வாங்குகிறார். தோழியின் கோபத்துக்கு ஆளாகிறார். இதற்கு முன்பாக சிறுவனின் தந்தையை நரிமென் மருத்துவமனையில் சந்தித்து பேசும் காட்சியொன்று வரும். படத்தின் அபாரமான காட்சிகளில் ஒன்று அது. தானே மறு பிரேத பரிசோதனையும் செய்கிறார். உண்மையை கண்டு பிடிக்கிறார். நீதி தேவதையின் முன்பு தன்னை ஒப்புக்கொடுத்து நின்று அவரும் மனிதனாகிறார். சிறுவனின் தந்தையாகட்டும், தோழியாகட்டும், நீதிமன்றமாகட்டும் எல்லாருமே ஏன்? என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஹரிதாஸை போல நரிமென்னும் தெரியவில்லை என்றே சொல்லுகிறார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி குற்றத்திலிருந்து இருவருமே தப்பியோட நினைக்கவில்லை. இருவருக்கும் இழப்பு ஒன்று தான்.

இந்த இரண்டு படங்களின் திரைக்கதையும் அபாரமானது. 1987ல் வெளிவந்த ‘அம்ருதம் கயா’ வில் மோகன்லால் ஹரிதாஸாக தனது அற்புதமான நடிப்பால் நெகிழ வைத்திருப்பார். படத்தில் பாடல்களே கிடையாது. ஆனால் படத்தின் ஜூவனை தக்கவைக்கும் எம். சீனிவாசனின் இசை படத்தில் பிரமாதமாக இருக்கிறது. எம்.டி வாசுதேவன் நாயரின் திரைக்கதையின் அடர்த்தியும், ஓவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும் (உதாரணமாக ‘அம்ருதம் கமயா’வில் வரும் ஹரிதாஸின் கல்லூரி டீன், நோ டேட் , நோ சிக்னேட்சரில் வரும் தோழி சையேத் கதாபாத்திரம்) நேர்த்தியான நடிப்பும் ஹரிஹரனின் அற்புதமான யதார்த்தமான இயக்கமும் படத்தினை இன்னுமே நூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது உறுதி. ஈரானியத் திரைப்படங்களுக்கென இருக்கும் அதே உயிர்ப்பும் நெருக்கமும் ‘நோ டேட், நோ சிக்னேட்சர்’ திரைப்படத்தில் துளியும் குறையவில்லை. இந்த இரண்டு படங்களுமே குற்றவுணர்வின் பின்னே சுடர்விடும் உயர்வான மனிதத்தை அப்படியே நம் கண் முன்னே நிறுத்துகிறது.
laknaren.prasanna@gmail.com