முழுமையான, சிறந்த மற்றும் அற்புத உண்மையைப்பற்றி: வெர்னெர் ஹெர்ஸாக்

(மொழிபெயர்ப்பு: மோய்ரா வெய்கெல்)

தமிழில்: என்.சொக்கன்

[குவைத் தீவிபத்துகளைப்பற்றிய வெர்னெர் ஹெர்ஜாகின் "Lessons of Darkness" என்ற படம் இத்தாலியில் உள்ள மிலானோவில் திரையிடப்பட்டபோது இந்தக் கட்டுரையை அவர் வாசித்தார். ஆரம்பத்தில் அவர் முழுமையான உண்மையைப்பற்றிப் பேசவேண்டும் என்றுதான் எண்ணியிருந்தார், ஆனால், அந்தப் பேச்சு தானே சிறந்த உண்மைக்குத் தாவியது. ஆகவே, இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி, முன்கூட்டியே எழுதப்பட்டதாக அன்றி, அப்போதைய சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.]

இந்தப் பிரபஞ்சத்தின் உருவாக்கத்தைப்போலவே, அதன் அழிவும் ஆரவாரமான கோலாகலமாக நிகழும்.

-ப்ளைஸ் பாஸ்கல்

என்னுடைய "Lessons of Darkness" படத்துக்குமுன்னால் வருகிற பொன்மொழி இது. ப்ளைஸ் பாஸ்கல் இதனைச் சொன்னதாக அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில், இந்த வாக்கியத்தை எழுதியது நான்தான். இந்த வாசகத்தைக் கேள்விப்பட்டால், பாஸ்கலும் அதனை ஒப்புக்கொண்டிருப்பார்.


ஒருவிதத்தில் இது பொய்யான சித்திரிப்புதான், ஆனால், இன்னொருவிதத்தில் இது பொய்யல்ல. இதைப்பற்றி நாம் பின்னர் விளக்கமாகப் பேசுவோம்.

இந்தப் பொன்மொழியைப்பற்றிய உண்மையைக் கேட்டதும், நான் இன்றைக்கு என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒரு போலித்தனத்தைப் போலித்தனம் என்று ஒப்புக்கொள்வது, வெறுமனே கணக்காளர்களின் வெற்றியாகதான் இருக்கும்.

Movie Review: Werner Herzog's 'Nomad: in the Footsteps of Bruce Chatwin' |  National Review

நான் ஏன் இப்படிச் செய்யவேண்டும் என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கான காரணம் எளிமையானது. அதனைச் சொற்களால் விளக்க இயலாது, எதார்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டும். இப்படி ஒரு பொன்மொழியை ஒரு படத்தின் தொடக்கத்தில் காட்டுவதன்மூலம், பார்வையாளர் அந்தப் படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்குமுன்பாகவே, நான் அவரை ஓர் உயர்ந்த தளத்துக்கு நகர்த்திவிடுகிறேன், அங்கிருந்துதான் இந்தப் படத்துக்குள் நுழையவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன், அதன்பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளன் என்கிறமுறையில் நான் அவரை அந்த உயரத்திலிருந்து இறங்கவிடமாட்டேன், இப்படிப்பட்ட சிறந்த நிலையில்தான் சில ஆழமான விஷயங்கள் சாத்தியமாகின்றன. இந்த உண்மை, வெறும் தகவல் அடிப்படையிலான உண்மை அல்ல, அதற்கு நேர் எதிர், நான் அதை 'அற்புத உண்மை' என்று அழைக்கிறேன்.

ஈராக்கில் முதன்முறையாகப் போர் நடைபெற்றபிறகு, குவைத்தில் எண்ணெய்க்கிணறுகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன. அப்போது, ஊடகத்துறையைச்சேர்ந்தவர்கள், குறிப்பாக, தொலைக்காட்சித்துறையைச்சேர்ந்தவர்களால் அந்த நிகழ்வை முழுமையாகப் பதிவு செய்ய இயலவில்லை. அது வெறும் போர்க்குற்றம்மட்டுமல்ல, அதைவிடப்பெரியது, பிரபஞ்சப் பரிமாணம் கொண்ட ஒரு நிகழ்வு அது, உருவாக்கத்துக்கே எதிரான ஒரு குற்றம்.

"Lessons of Darkness" படத்தில் ஒரு காட்சியில்கூட நீங்கள் நம் பூமியை அடையாளம் காண இயலாது. அதனால், இந்தப் படத்தை "அறிவியல் புனைகதை" என்கிறார்கள். அதாவது, இந்தப் படத்தை நான் எங்கோ ஒரு தொலைதூர மண்டலத்தில், மனித உயிர்கள் இல்லாத ஓர் இடத்தில்தான் எடுத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பெர்லின் திரைப்படவிழாவில் இந்தப் படம் முதன்முறையாகக் காட்டப்பட்டபோது, எல்லாரும் இதன்மீது வெறுப்பை உமிழ்ந்தார்கள். மக்களுடைய தீவிர வெறுப்புக்குரல்களில் எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் புரிந்தது: அவர்கள் இந்தப் படத்தை "அழகியலோடு காட்டப்பட்ட கொடூரம்" என்கிறார்கள்.

இந்தப் படத்தை எடுத்ததற்காக அவர்கள் என்னை மிரட்டினார்கள், மேடையேற்றி அவமானப்படுத்தினார்கள், அப்போது, நான் ஒரே ஒரு நேரடியான பதிலைதான் சொன்னேன், 'முட்டாள்களே, இன்ஃபெர்னோவில் டான்டெ செய்தது இதைத்தானே? கோயா செய்ததும் இதைத்தானே? ஹைரானிமஸ் பாஷ் செய்ததும் இதைத்தானே?'

ஆக, எனக்குத் தேவை ஏற்பட்டபோது, நான் கொஞ்சமும் சிந்திக்காமல் முழுமையான மற்றும் சிறந்தவற்றைக் காக்கும் தேவதைகளை அழைத்துவிட்டேன்.

முழுமை, சிறப்பு, உண்மை... இந்தச் சொற்களின் பொருள் என்ன?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், என்னுடைய வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முறையாக என்னுடைய படைப்புகளுக்கு வெளியே இப்படிப்பட்ட கேள்விகளைப்பற்றி யோசிக்கிறேன், அவற்றை எதார்த்தமாகப் புரிந்துகொள்கிறேன்.

ஒரு விஷயம், இப்போது நான் இங்கே பேசப்போகும் எல்லா விஷயங்களிலும் முழுமை என்கிற கொள்கையின் தாக்கம் இருக்கும். ஆனால், அந்த 'முழுமை'யை வரையறுக்க நான் முயற்சி செய்யப்போவதில்லை.

முழுமை என்பது, தத்துவம், மதம் மற்றும் கணிதம்சார்ந்து முடிவில்லாத பல குழப்பங்களைத் தோற்றுவித்திருக்கிறது. இவற்றில் கணிதம்மட்டும் அநேகமாக 'முழுமை'யை ஓரளவு நெருங்கித் தொட்டுவிடக்கூடும், ஆனால், அதற்கு யாராவது ஒரு கணிதவியலாளர் ரீமனின் தேற்றத்தை நிரூபிக்கவேண்டியிருக்கும்.

அந்தத் தேற்றம், பகா எண்களின் பரவலைப்பற்றிப் பேசுகிறது; பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை யாரும் அதற்குப் பதில் கண்டறியவில்லை. ஒருவேளை நீங்கள் இதற்கு விடைகாண விரும்பினால், கணிதச் சிந்தனையின் ஆழங்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். இந்தப் பிரச்னையை யார் தீர்த்துவைத்தாலும் அவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஸ்டனில் இருக்கும் ஒரு கணிதக் கழகம், 'இதை நிரூபிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்' என்கிறது.

அந்த ஒரு மில்லியன் டாலர், இப்போதும் உங்களுக்காகக் காத்திருக்கிறது. சாகாவரம்போலதான் அந்தப் பணமும்.

Werner Herzog on the future of film school, critical connectivity, and  Pokémon Go | The Verge

யுக்லிட் காலத்தில் தொடங்கி, 2500 ஆண்டுகளாக, பல கணித நிபுணர்கள் இந்தக் கேள்வியை மனத்தில் போட்டுக்கொண்டு குழம்பியிருக்கிறார்கள். ஒருவேளை ரீமனும் அவருடைய தேற்றமும் தவறு என்றாகிவிட்டால், கணிதம் மற்றும் இயற்கை அறிவியல் துறைகளில் நாம் கற்பனைகூடச் செய்ய இயலாத அளவுக்கு அதிர்ச்சி அலைகள் பரவும்.

ஆகவே, முழுமை என்பதைப்பற்றி நான் ஓரளவு மேலோட்டமாகதான் சிந்திக்க இயலும். அதை வரையறுக்கிற நிலையில் நான் இல்லை.

பெருங்கடல் என்கிற உண்மை

ஆகவே, இப்போதைக்கு நாம் நமக்குத்தெரிந்த எதார்த்தக்களத்தில் உரையாடுவோம்.

"Fitzcarraldo" படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, உண்மையைப்பற்றிய ஒரு மறக்கமுடியாத சம்பவம், அதைப்பற்றி நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

அப்போது நாங்கள் அண்டெஸுக்குக் கிழக்கே, கமிசியா, உருபம்பா ஆறுகளுக்கு இடையிலிருந்த பெருவியக் காடுகளில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்தோம். பின்னர் அந்த இடத்தில்தான் நான் ஒரு பெரிய நீராவிக்கப்பலை ஒரு மலையின்மீது திணித்துப் படமெடுத்தேன்.

Machiguengas என்போர், அந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர். அங்கே படமெடுப்பதற்கு அவர்களிடம் நாங்கள் அனுமதி பெற்றோம், அந்தப் படத்தின் பெரும்பாலான துணைநடிகர்கள், இந்தப் பழங்குடியினர்தான்.

இதற்காக, அவர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டார்கள், அதோடு, சில கூடுதல் சவுகர்யங்களையும் கேட்டார்கள்: அவர்களுடைய உள்ளூர் மருத்துவருக்குப் பயிற்சி தரவேண்டும், ஒரு படகு தரவேண்டும்.

அந்தப் படகை வைத்து அவர்கள் தங்களுடைய பயிர்களைச் சில நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சந்தைக்குக் கொண்டுசென்று விற்பார்கள். இதன்மூலம், அவர்கள் இடைத்தரகர்களிடம் பொருள்களை விற்றுப் பணத்தை இழக்கவேண்டியிருக்காது.

இரண்டு நதிகளுக்கு இடையிலிருந்த அந்தப் பகுதியின்மீது, பல நிறுவனங்களுக்கு ஒரு கண். அவர்கள் மாறி மாறி அந்தப் பகுதியைக் கைப்பற்றி அங்கிருந்த மரங்களை வெட்டிவீழ்த்த முயன்றார்கள். சமீபகாலமாக, எண்ணெய் நிறுவனங்களும் அந்தப் பகுதியைப் பேராசையுடன் பார்த்துக்கொண்டிருந்தன.

ஆகவே, தங்களுடைய நிலத்தைச் சட்டப்படி தங்களுக்கே உரிமையாக்கிக்கொள்ள அந்தப் பழங்குடியினர் போராடிவந்தார்கள். அந்தப் போராட்டத்தில் நாங்கள் அவர்களுக்கு உதவவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

இதற்காக, நாங்கள் எத்தனையோ விண்ணப்பங்கள் போட்டுப்பார்த்தோம். ஆனால், அவை எல்லாம் உள்ளூர் அரசாங்கத்தின் காதுகளை எட்டவில்லை. சரி, லஞ்சம் கொடுத்தாவது சாதித்துவிடலாம் என்று நினைத்தோம், அதுவும் நடக்கவில்லை. 

நிறைவாக, நான் லிமாவின் தலைநகரத்துக்குச் சென்றேன், அங்கே இதுபோன்ற விஷயங்களைக் கவனித்துக்கொள்ளூம் அமைச்சகத்திடம் பேசினேன். அவர்கள் என்னிடம், 'வரலாறு மற்றும் கலாசார அடிப்படையில் இந்த நிலம் சட்டபூர்வமாக அந்தப் பழங்குடியினருக்குதான் சொந்தம் என்று நீங்கள் வாதாடலாம். ஆனால், அதற்கு இரண்டு தடைகள் இருக்கின்றன' என்றார்கள்.

முதலில், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பதற்குச் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்கள் எவையும் இல்லை, எல்லாம் செவிவழிச்செய்தியாகச் சொல்லப்பட்டவைதான்.

அடுத்து, இந்த நிலத்தை இதுவரை யாரும் அளந்துபார்க்கவில்லை, அதன் எல்லைகள் என்ன என்பதை வரையறுக்கவில்லை.

Werner Herzog Pays Tribute To Kindred Spirit In 'Nomad' | KPBS

இதற்காக, நான் ஒரு சர்வேயரை நியமித்தேன். அவர் அந்த நிலத்தை அளந்து ஒரு வரைபடத்தை உருவாக்கினார், இதன்மூலம் Machiguengas தங்களுடைய சொந்த நிலத்துக்கான ஒரு வரைபடத்தைப் பெற்றார்கள்.

ஆக, அவர்களுடைய உண்மையை வெளிக்கொண்டுவருவதில் என்னுடைய பங்கு இது: அவர்களுடைய நிலத்தை நான் விரித்துரைத்தேன், வரையறுத்தேன். 

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், நான் அந்த சர்வேயருடன் சண்டைபோட்டேன். காரணம், தான் உருவாக்கிய நில வரைபடம் சில விதங்களில் பிழையானது என்று அவர் குறிப்பிட்டார். 'இந்தப் படம் பூமியின் வளைவைக் கருத்தில் கொள்ளவில்லை. ஆகவே, இது மொத்தமும் உண்மை என்று சொல்ல இயலாது' என்றார்.

'இந்தச் சின்ன நிலத்திலா இத்தனை குழப்பங்கள்?' என்று நான் பொறுமையில்லாமல் கேட்டேன்.

'ஆமாம்' என்று கோபமாகச் சொன்னார் அவர். 'நிலத்தின் அளவு முக்கியமல்ல' என்றபடி தன்னுடைய தண்ணீர் தம்ளரை என்பக்கம் நகர்த்தினார், 'இதோ, இந்தத் தண்ணீரை அளப்பதென்றால்கூட, நாம் சமதளமான ஒரு பரப்பை அளப்பதில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.'

'ஒரு பெருங்கடலையோ, ஏரியையோ பார்க்கும்போது, நீங்கள் பூமியின் வளைவையும் பார்க்கவேண்டும். அது எப்படி இருக்கிறதோ அதேபோல் அதனை உணரவேண்டும். ஆனால், நம்முடைய மனம் மிகவும் எளிமையானது, அதைக் கடந்துசென்றால், நாம் பூமியின் வளைவைப் பார்க்கலாம்.'

அவர் சொல்லித்தந்த இந்தக் கடுமையான பாடத்தை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்!

அடுத்த பிரச்னை, வெறும் செவிவழிச்செய்திகளை வைத்து இந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதை எப்படி நிரூபிப்பது? அதற்கு எப்படி உரிமை பெறுவது? இவை மிகவும் ஆழமான பரிமாணங்களைக் கொண்ட கேள்விகளாக இருந்தன, முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆய்வை நாங்கள் நிகழ்த்தவேண்டியிருந்தது.

  பழங்குடியினரைக் கேட்டால், 'நாங்கள் எப்போதும் இங்கேதான் வாழ்ந்துவந்திருக்கிறோம்' என்றுதான் சொல்வார்கள். அவர்களுடைய தாத்தா, பாட்டிகள் இதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சட்டபூர்வமாகப் பார்க்கும்போது, இதைமட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?

இந்தப் பிரச்னை தீரும் என்கிற நம்பிக்கை எனக்குப் போய்விட்ட நேரம். அதிபர் [ஃபெர்னாண்டோ] பெலவுண்டெயைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

என்னோடு ஷிவன்கொரெனியைச் சேர்ந்த Machiguengas பிரதிநிதிகள் இருவர் வந்தார்கள். நாங்கள் லிமாவின் அதிபர் அலுவலகத்துக்குச் சென்றோம்.

  ஆனால், நாங்கள் எவ்வளவோ பேசியும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. அப்போது நான் இந்த வாதத்தை முன்வைத்தேன்:

'அதிபர் அவர்களே, பொதுவாக, ஆங்கில-சாக்ஸன் சட்டங்களின்படி, வெறும் செவிவழிச்செய்திகளைச் சாட்சியாக எடுத்துக்கொள்ள அனுமதி இல்லைதான். ஆனால், அதற்கு முழுமையாக அனுமதியே இல்லை என்று சொல்லிவிட இயலாது.'
  
   '1916ம் ஆண்டிலேயே, அங்கு Vs அட்டா என்ற வழக்கில், தங்கக் கடற்கரையில் (இன்றைய கானா) இருந்த ஒரு காலனிய நீதிமன்றம் செவிவழிச்செய்திகளைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ளலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.'

Werner Herzog Has Never Thought a Dog Was Cute - The New York Times

அந்த வழக்கு இந்த வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கே உள்ளூர் ஆளுநரின் மாளிகையை யார் பயன்படுத்துவது என்பதுதான் பிரச்னை. அதற்கும் ஆவணங்கள் இல்லை, அதிகாரப்பூர்வமான எந்தச் சாட்சியும் இல்லை.

ஆனால், நீதிமன்றம் செவிவழிச்செய்தியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது. எண்ணற்ற பழங்குடியினர் திரும்பத்திரும்பச் சொல்லிவந்த விஷயத்தை நீதிமன்றம் எந்தத் தடைகளும் இல்லாமல் ஒப்புக்கொண்டது. அதனை உண்மை என ஏற்றுக்கொண்டது.

இதைக் கேட்ட பெலவுண்டெ அமைதியாகிவிட்டார். அவர் பல ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தவர். ஆகவே, இந்த வாதம் அவருக்கு முக்கியமாகத் தோன்றியிருக்கவேண்டும்.

பிறகு அவர், 'எனக்கு ஒரு க்ளாஸ் ஆரஞ்சுப் பழச்சாறு வேண்டும்' என்றார். 'நீங்கள் என்னை வென்றுவிட்டீர்கள், அது கடவுளுக்கும் உங்களுக்கும்தான் தெரியும்' என்று குறிப்பிட்டார்.

 இன்று, Machiguengas நிலம் சட்டப்படி அவர்களுக்கே சொந்தமாகிவிட்டது. [உலகிலேயே] மிகவும் அதிக இயற்கை வாயுவைக் கொண்ட நிலங்களில் ஒன்று தங்களுக்கு மிக அருகே இருப்பதைக் கண்டறிந்த எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புகூட, அந்தச் சட்ட உரிமையை மதிக்கிறது.

அதிபரைச் சந்திக்கச்சென்றபோது, உண்மையின் சாரத்தைப் புரிந்துகொள்வதற்கான இன்னொரு வித்தியாசமான வாய்ப்பும் கிடைத்தது.

ஷிவகொரெனி கிராமத்தில் வாழ்ந்தவர்கள் கடலைப் பார்த்தது கிடையாது. ஆகவே, அண்டெஸுக்கு மற்பக்கத்தில் ஒரு மிகப் பெரிய நீர்நிலை இருக்கிறது, அதில் உப்புத்தண்ணீர் நிரம்பியுள்ளது என்பதையெல்லாம் கேள்விப்பட்டு அவர்கள் குழம்பினார்கள், அது உண்மையா, பொய்யா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அதிபரைச் சந்தித்துவிட்டுத் திரும்பியபோது, நாங்கள் லிமாவுக்குத் தென்பக்கத்திலிருந்த ஒரு கடற்கரை உணவகத்தில் சாப்பிடுவதற்காக நின்றோம். எங்களுடன் வந்த பழங்குடியினர் இருவரும் எதையும் சாப்பிடவில்லை. அவர்கள் அமைதியாகக் கடலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 ஆனால், அவர்கள் நீரை நெருங்கவில்லை, அதை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
  
 பிறகு, அவர்களில் ஒருவர் பேசினார், 'எனக்கு ஒரு பாட்டில் வேண்டும்!'

நான் என்னிடமிருந்த காலி பீர் பாட்டிலை அவரிடம் கொடுத்தேன், 'இது போதுமா?'

'இல்லை, நன்றாக மூடக்கூடிய ஒரு பாட்டில் வேண்டும்!' என்றார் அவர். 
  
ஆகவே, சிலியிலிருந்து வந்த ஒரு மலிவான சிவப்பு வொயின் பாட்டிலை நான் வாங்கினேன். அதைத் திறந்து, அதிலிருந்த வொயினைக் கீழே மண்ணில் ஊற்றினேன். பிறகு, அந்த பாட்டிலைச் சமையலறைக்கு அனுப்பி, மிகவும் கவனமாகச் சுத்தப்படுத்தச்சொன்னேன்.
  
  அவர்கள் இருவரும் அந்த பாட்டிலை வாங்கிக்கொண்டார்கள். எதுவும் பேசாமல் கடலை நெருங்கினார்கள்.
  
   
அப்போது அந்தப் பழங்குடியினர் புதிய ஆடைகளை அணிந்திருந்தார்கள். நாங்கள்தான் சந்தையில் நீல ஜீன்ஸ், ஸ்னீக்கர்ஸ், டி-ஷர்ட்களை அவர்களுக்கு வாங்கித்தந்திருந்தோம். அந்த ஆடைகளைக் கழற்றாமலே அவர்கள் அலைகடலுக்குள் சென்றார்கள். 
   
    அவர்கள் பசிபிக் பெருங்கடலின் அகன்ற பரப்பைக் கவனித்தபடி தொடர்ந்து தண்ணீருக்குள் நடந்தார்கள். கொஞ்சம்கொஞ்சமாக, அவர்களுடைய கைவரை தண்ணீர் வந்துவிட்டது.

இப்போது, அவர்கள் குனிந்து, கொஞ்சம் நீரைக் குடித்தார்கள், அதைப் பாட்டிலில் நிரப்பிக்கொண்டார்கள், கார்க்கினால் பாட்டிலைக் கவனமாக மூடினார்கள்.

நீர்நிரம்பிய அந்த பாட்டில்தான், கடல் என்று ஒன்று இருப்பதற்கான சாட்சி. அதை அவர்கள் தங்களுடைய கிராமத்தினரிடம் காட்டி, கடல் இருப்பதை நிரூபிப்பார்கள்.

Werner Herzog sur le tournage de Fitzcarraldo (1982) | Fitzcarraldo, Herzog,  Filmmaking

நான் கேட்டேன், 'உங்களிடம் இருப்பது முழு உண்மை இல்லையே, அதில் ஒரு பகுதிதானே?'

'இல்லை' என்றார்கள் அவர்கள், 'கடல்தண்ணீர் ஒரு பாட்டில் இருப்பது உண்மை என்றால், முழுக்கடலும் உண்மையாகதான் இருக்கவேண்டும்!'

மெய்நிகர் எதார்த்தத்தின் தாக்குதல்

அப்போது தொடங்கி, உண்மையை உண்டாக்குவது என்ன, இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால், எதார்த்தத்தை உண்டாக்குவது என்ன என்பது எனக்கு ஒரு பெரிய மர்மமாகிவிட்டது. எதார்த்தம் என்பதை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பதையே இந்த இரண்டு பத்தாண்டுகள் மாற்றிவிட்டன, இதற்குமுன் எப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கிவிட்டன.

நாம் புரிந்துவைத்திருக்கும் எதார்த்தத்தின்மீதான தாக்குதல் என்று நான் சொல்வது, புதிய தொழில்நுட்பங்களைதான். முந்தைய இருபது ஆண்டுகளில் இந்தத் தொழில்நுட்பங்கள் தினசரிப் பயன்பாட்டுப் பொருள்களாகிவிட்டன: திரைப்படங்களில் புதிய மற்றும் கற்பனையான எதார்த்தங்களை உருவாக்கும் டிஜிட்டல் சிறப்புத் தோற்றங்கள் இவை.

அதற்காக, தொழில்நுட்பம் தவறு என்று நான் சொல்லவில்லை. மனிதனுடைய கற்பனை மிகப்பெரிய விஷயங்களைச் சாதிப்பதற்கு இவை உதவியிருக்கின்றன. உதாரணமாக, இந்தத் தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி, இப்போது இல்லாத டைனோசர்களைத் திரையில் எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் காண்பிக்க இயன்றிருக்கிறது!

ஆனால், நமது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட பல்வேறு மெய்நிகர் எதார்த்த வடிவங்கள் அனைத்தையும் கருத்தில் கொள்ளும்போது, உதாரணமாக, இணையத்தில், வீடியோகேம்களில், ரியாலிட்டி தொலைக்காட்சியில், இவை அனைத்தின் தொகுப்பாக நாம் காணும் எதார்த்தங்களெல்லாம் நமக்கு ஒரு பழைய கேள்வியை மீண்டும் புதிதாக எழுப்புகின்றன: "உண்மையான" எதார்த்தம் என்பது என்ன?

உதாரணமாக, Survivor என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியை எடுத்துக்கொள்வோம், அங்கே என்ன நடக்கிறது? எந்த ஒரு புகைப்படத்தையும் ஃபோட்டோஷாப் கொண்டு மாற்றிவிடலாம் என்பது நமக்குப் புரிந்தபிறகு, இனிமேல் நம்மால் எந்தப் புகைப்படத்தையாவது நம்ப இயலுமா? நம் கணினிக்கு ஏதாவது ஒரு மின்னஞ்சல் வந்தால், அதை நம்மால் நம்ப இயலுகிறதா? ஒருவேளை, அந்த மின்னஞ்சல் நம்முடைய அடையாளத்தைத் திருடும் ஒரு முயற்சியாக இருக்குமோ, அல்லது, அதில் ஒரு வைரஸ் இருக்குமோ? அது நம்முடைய கணினியைக் கெடுத்துவிடுமோ? அது நிஜம்போல் தோற்றமளிக்கிற ஒரு பொய்யாக இருக்குமோ? ஒருவேளை எனக்கும் தெரியாமல் என்னை யாரோ பிரதியெடுத்திருப்பார்களோ? எதைதான் நம்புவது?

இதுபற்றி யோசித்தால், சரித்திரத்தில் இதுபோல் ஓர் உதாரணம் இருக்கிறது. இதன்மூலம் நாம் சந்திக்கிற இன்னோர் உலகமான மெய்நிகர் உலகத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

பல நூற்றாண்டுகளாக, போர் என்பது ஒரேமாதிரிதான் நடந்துகொண்டிருந்தது. இரு ராணுவங்களைச் சேர்ந்த வீரர்கள் கையில் வாள், கேடயங்களுடன் ஒருவரோடு ஒருவர் மோதுவார்கள்.

திடீரென்று ஒருநாள், இந்த வீரர்கள் நேருக்குநேர் மோதுவதை நிறுத்திவிட்டார்கள். இப்போது அவர்கள் பீரங்கிகளையும் மற்ற ஆயுதங்களையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இதனால், போர்கள் முற்றிலும் மாறிவிட்டன. ராணுவத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் இதுபோன்ற முன்னேற்றங்களையும் புதுமைச் சிந்தனைகளையும் திரும்பப்பெறவே இயலாது. அதாவது, நாம் பழைய நிலைக்குச் செல்ல வாய்ப்பே இல்லை.

இதற்குச் சாட்சியாக, ஒரு சரித்திர நிகழ்வு. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜப்பானின் சில பகுதிகளில் துப்பாக்கிகளையெல்லாம் தூர வைத்துவிட்டு சாமுராய்கள் ஒருவரோடு ஒருவர் நேரடியாக மோத முயன்றார்கள், கைகளாலும் வாள்களாலும் போரிட முயன்றார்கள். ஆனால், இந்த முயற்சி அதிகநாள் தொடரவில்லை; யாராலும் இதனைத் தொடர்ந்து பின்பற்ற இயலவில்லை.

சில ஆண்டுகளுக்குமுன்னால், லாஸ் ஏஞ்சலஸிலிருந்த வெனிஸ் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சி, எதார்த்தம் என்பது எந்த அளவு குழப்பமான ஒரு விஷயமாகிவிட்டது என்பதை எனக்கு விநோதமானமுறையில் புரியவைத்தது.


அங்கே என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்பக்கத்தில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் எல்லாரும் பார்பெக்யூ செய்யப்பட்ட இறைச்சியைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.

மாலை நேரம், இருட்டத்தொடங்கியிருந்தது. சற்றுத்தொலைவில் யாரோ துப்பாக்கியால் சுடுகிற சத்தம் கேட்டது. ஆனால், நாங்கள் அதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து, சில காவல்துறை ஹெலிகாப்டர்கள் வானில் தோன்றின. அவற்றில் தேடும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அங்கிருந்தபடி அவர்கள் ஒலிபெருக்கியில் எங்களை வீட்டுக்குள் செல்லுமாறு ஆணையிட்டார்கள்.

அன்றைக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அதன்பிறகுதான் தெரிந்துகொண்டோம்: ஒரு பையன், அவனை நேரில் பார்த்தவர்கள் அவனுக்குப் பதின்மூன்று அல்லது பதினான்கு வயது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள், நாங்கள் இருந்த பகுதியிலிருந்து சற்றுத்தொலைவில் ஓர் உணவகத்தில் அவன் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறான், அங்கே சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த ஒரு தம்பதியைப்பார்த்து ஏதோ கத்தியிருக்கிறான், ஒரு செமி-ஆட்டோமேட்டிக் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டுவிட்டு, ஸ்கேட்போர்டில் தப்பிவிட்டான். அவனை யாராலும் பிடிக்க இயலவில்லை.

ஆனால், அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பையன் சொன்ன செய்தி இதுதான்: இது வீடியோகேம் அல்ல, அந்தத் துப்பாக்கிச்சூடுகள் நிஜம், இதுதான் எதார்த்தம்.

உணர்வின் அடிக்கோள்

எதார்த்தத்தைப்பற்றி நாம் சில கேள்விகளைக் கேட்கவேண்டியிருக்கிறது: உண்மையில் அது எந்த அளவு முக்கியம்? உண்மைத் தகவல்கள் என்பவை எந்த அளவு முக்கியம்?

உண்மைத் தகவல்களை நாம் புறக்கணிக்க இயலாது. அதற்கு ஓர் இயல்பான சக்தி உண்டு. ஆனால், அதனால் ஒரு பிரகாசமான அற்புதப் பொறியை எப்போதும் தர இயலாது, அந்த அற்புதப் பொறியிலிருந்துதான் உண்மை வெளிப்படுகிறது.

ஒருவேளை, திரைப்படங்களில் வழங்கப்படும் உண்மைத் தகவல்கள்தான் முக்கியமானவை என்றால், உண்மையின் மிகவும் செறிவான வடிவம் தொலைபேசி டைரக்டரியில்தான் இருக்கவேண்டும் என்று நாம் வாதிடலாம். அங்கேதான் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எண்களும் பெயர்களும் உண்மைத் தகவல்களாக இருக்கின்றன, அவைதான் எதார்த்தமா?

  ஒரு தொலைபேசி டைரக்டரியில் "Schmidt" என்ற பெயரில் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள். அவர்களையெல்லாம் நாம் அழைத்து, "உங்கள் பெயர் Schmidtதானே?" என்று கேட்டால், அவர்கள் "ஆமாம்" என்பார்கள். உண்மையிலேயே, அவர்களுடைய பெயர் Schmidtதான்.

என்னுடைய "Fitzcarraldo" படத்தில் இந்தக் கேள்வியை எழுப்பும் ஓர் உரையாடல் இருக்கிறது. Fitzcarraldo என்பவன்இதற்குமுன் யாரும் பார்த்திராத ஓர் இடத்துக்குத்  தன்னுடைய கப்பலுடன் செல்கிறான். அப்போது, மனித நாகரிகத்தின் கடைசிப் புள்ளிகளில் ஒன்றில் அவன் நிற்கிறான், அது ஒரு மதப்பரப்பு நிலையம்.


Fitzcarraldo: மூத்த பழங்குடியினர் என்ன சொல்கிறார்கள்?

மதப்பிரசாரகர்: அவர்களுடைய எண்ணங்களை எங்களால் திருத்த இயலவில்லை. அவர்கள் சாதாரண வாழ்க்கை என்பது வெறும் மாயை என்கிறார்கள், அதற்குப்பின்னால் கனவுமயமான எதார்த்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

இந்தப் படத்தில், மழைக்காட்டுக்குள் ஓர் ஓபரா நடக்கிறது. இதற்காக, நான் நிஜமாக ஓர் ஓபராவை உருவாக்கினேன், அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அந்த ஓபராவை உருவாக்கியபோது, ஒரு கோட்பாடு எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது: ஒட்டுமொத்த உலகமும் இசையாக மாறவேண்டும், அது இசையாகவே ஆகிவிடவேண்டும்; அப்போதுதான் நாம் ஓபராவை உருவாக்கியதாக அர்த்தம்.

ஓபராவைப்பற்றிய ஓர் அழகான விஷயம், அதில் எதார்த்தத்துக்கு இடமே இல்லை. இயற்கையை விஞ்சிச்செல்வதுதான் ஓபராவின் இயல்பே.

லிப்ரெட்டியை நாம் ஓபராக்களில் காணும்போது (இதற்கு ஒரு நல்ல உதாரணம், வெர்டியின் "Force of Destiny"), நமக்கு உடனடியாகப் புரியக்கூடிய விஷயம், இது நடைமுறைக்குப் பொருந்தாத ஒரு கதை, நாம் உண்மையில் அனுபவிக்கக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் இது விலகியிருக்கிறது, கணிதத்தின் நிகழ்தகவு விதிகளெல்லாம் இதற்குப் பொருந்துவதில்லை.

இந்தக் கதையில் நிகழ்பவை உண்மையில் நிகழச் சாத்தியமே இல்லை. ஆனால், இசையின் சக்தியால், பார்ப்பவர்கள் அதை உண்மையாகவே உணர்கிறார்கள்.

ஓபராவின் உணர்வுபூர்வமான உலகத்திலும் இதேதான் நடக்கிறது. அங்குள்ள உணர்வுகள் மிகவும் அருவமானவை; அவற்றைச் சாதாரண மனிதனின் இயற்கையுடன் பொருத்திப்பார்க்க இயலாது, காரணம், அவை மிகவும் செறிவாக்கப்பட்டு, மிகவும் தீவிர நிலைக்கு உயர்த்தப்பட்டு, அவற்றின் மிகத் தூய்மையான வடிவில் தோன்றுகின்றன; ஆனால், இவை அனைத்தையும் கடந்து, ஓபராக்களில் நாம் அவற்றை இயற்கையாகக் கருதுகிறோம்.

ஓபராவில் உள்ள உணர்வுகளை, கணிதத்தில் வரும் அடிக்கோள்களுக்கு இணையாகச் சொல்லலாம். இவை மிகவும் செறிவுபடுத்தப்பட்டவையாக உள்ளன, இதற்குமேல் இவற்றை விளக்குவது சாத்தியமில்லை. அதேசமயம், ஓபராவில் உள்ள உணர்வின் அடிக்கோள்கள், மிகவும் ரகசியமான வழிகளில் நம்மைச் சிறப்பிற்கான நேரடிப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றன. இதற்கு பெல்லினியின் ஓபரா நார்மாவான "Casta Diva"வை உதாரணமாகச் சொல்லலாம்.

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்: இருபதாம் நூற்றாண்டில், மற்ற கலை வடிவங்கள் புதுமைச்சிந்தனையோடு வளர்ந்து தங்களுடைய இடங்களைப் பெற்றதுபோல, ஓபரா எந்த அவசியமான வழியிலும் புதுமையை வளர்க்கவில்லையே, அப்படியிருக்கும்போது, இருக்கிற இத்தனை கலைவடிவங்களில் ஓபராவில்தான் நம்மால் சிறப்பை அனுபவிக்க இயலுகிறது என்று நான் ஏன் சொல்கிறேன்?

இது ஒரு முரண்பாடாகவே தோன்றுகிறது: ஓபராவில் நாம் நேரடியாக அனுபவிக்க இயலும் சிறப்பானது, அதன் கூடுதல் முன்னேற்றங்கள் அல்லது புதிய முன்னேற்றங்களைச் சார்ந்திருக்கவில்லை. ஓபராவின் சிறப்புதான் அதனைக் காப்பாற்றியிருக்கிறது.

அற்புத உண்மை

எதார்த்தம்பற்றிய நமது ஒட்டுமொத்த உணர்வும் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், நான் இதைப்பற்றி இதற்குமேலும் பேசிக்கொண்டிருக்க விரும்பவில்லை. காரணம், எனக்கு எப்போதும் முக்கியமாகத் தோன்றுவது, எதார்த்தம் அல்ல, அதைத் தாண்டி நிற்கிற ஒரு கேள்வி: உண்மையின் கேள்வி.

  சில சமயங்களில், உண்மைகள் நமது எதிர்பார்ப்புகளை மிகவும் கடந்துசெல்பவையாக அமைந்துவிடுகின்றன, அவற்றுக்கு ஓர் அசாதாரணமான, விநோதமான ஆற்றல் கிடைத்துவிடுகிறது, அவை நம்பமுடியாதவையாகத் தோன்றுகின்றன.

ஆனால், நுண்கலைகளில், இசையில், இலக்கியத்தில், மற்றும் திரைப்படங்களில், உண்மையின் இன்னும் ஆழமான ஓர் அடுக்கை எட்டுவது சாத்தியம், அது ஒரு கவித்துவமான, அற்புதமான உண்மையாக இருக்கும். அது மிகவும் மர்மமானது, அதனை முயற்சிசெய்துமட்டுமே உணர இயலும்; பார்வை, பாணி மற்றும் கைவினைத்திறனால் ஒருவர் அதனை எட்டலாம்.

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ப்ளைஸ் பாஸ்கல் பிரபஞ்சத்தின் அழிவைப்பற்றிச் சொன்ன மேற்கோளை நான் போலியாக நினைக்கவில்லை. உள்ளார்ந்த, ஆழமான உண்மையின் ஓர் அற்புத அனுபவத்தை உண்டாக்கும் ஒரு வழியாகவே கருதுகிறேன்.

மைக்கேல் ஆஞ்சலோவின் "Pietà"வில் யேசு 33 வயதானவராகத் தோன்றுவதும் அவருடைய தாய், 17 வயதானவராகத் தோன்றுவதும் போலித்தனம் இல்லையல்லவா? அதைப்போல்தான் இதுவும்.

அதேசமயம், நாம் உண்மையின் அற்புத அனுபவங்களைப் பெறும் நமது திறனை, சிறப்பின்வழியாகவே பெறுகிறோம். அதன்மூலம்தான் நாம் நம்மை இயற்கைக்கு மேலே உயர்த்திக்கொள்ள இயலுகிறது. கான்ட் சொல்கிறார்: இயற்கையின் ஆற்றல்கள் தவிர்க்கமுடியாதவையாக இருக்கின்றன, இது, இயற்கையான உயிரினங்களான நாம் நமது உடல்சார்ந்த இயலாமைகளை அடையாளம் கண்டுகொள்ளச்செய்கிறது. அதேசமயம், இயற்கையிலிருந்து சுதந்தரமானவர்களாகவும், இயற்கையைவிடச் சிறந்தவர்களாகவும் நம்மை எடைபோடும் நமது திறனை வெளிப்படுத்துகிறது...

On location with Werner Herzog | BFI

இங்கே எளிமைப்படுத்துவதற்காக நான் சில விஷயங்களைத் தவிர்த்துள்ளேன். கான்ட் தொடர்ந்து சொல்கிறார்: இந்தவகையில், நாம் நமது அழகியல் எடைபோடலில் இயற்கையைச் சிறந்ததாக எண்ணாமலிருக்கக் காரணம், அது பயத்தை உண்டாக்குவதால் அல்ல, அது நமது ஆற்றலைத் தொகுப்பதால்தான் (அது இயற்கையானது அல்ல)...

நான் கான்டைக் கொஞ்சம் எச்சரிக்கையோடு கையாளவேண்டியிருக்கிறது. காரணம், சிறப்புபற்றிய அவரது விளக்கங்கள் மிகவும் அருவமானவையாக இருக்கின்றன. என்னுடைய எதார்த்தமான தினசரிப் பணியில் அவை எனக்கு எப்போதும் அந்நியமாகவே இருந்திருக்கின்றன.

ஆனால், டயனிசஸ் லாங்கினஸ் அப்படியில்லை. இந்தத் தலைப்புகளைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபோதுதான் அவரை நான் முதலில் தெரிந்துகொண்டேன். இப்போது, அவர் என் மனத்துக்கு மிகவும் நெருங்கியவராகிவிட்டார். காரணம், அவர் எப்போதும் எதார்த்தமான சொற்களால் பேசுகிறார், உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்.

லாங்கினஸ்பற்றி நமக்கு எந்த விவரமும் தெரியவில்லை. அவருடைய பெயர் அதுதானா என்பதுகூட நிபுணர்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அவர் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்றுமட்டும் நாம் ஊகிக்கலாம்.

துரதிருஷ்டவசமாக, சிறப்புபற்றிய அவருடைய கட்டுரையும் துண்டுகளாகவே நமக்குக் கிடைத்திருக்கிறது. பத்தாம் நூற்றாண்டின் ஆரம்பகால எழுத்துகளாக நமக்குக் கிடைத்துள்ள Codex Parisinus 2036ல் பல பக்கங்கள் விடுபட்டிருக்கின்றன, சில நேரங்களில் பக்கங்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போயிருக்கின்றன.

லாங்கினஸ் ஓர் ஒழுங்கான வரிசையில் சிந்திக்கிறார். இப்போது இங்கே நான் அவருடைய உரையின் கட்டமைப்பைப்பற்றிப் பேசுவது சாத்தியமில்லை. ஆனால், அவர் எப்போதும் இலக்கியத்திலிருந்து சில மிக நல்ல உதாரணங்களை மேற்கோள் காட்டுகிறார். இப்போது நான் எந்த ஓர் ஒழுங்கான வரிசையையும் பின்பற்றாமல், இதில் எனக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றுவனவற்றைப்பற்றிப் பேசப்போகிறேன்.

அருமையான விஷயம், லாங்கினஸ் தனது உரையின் தொடக்கத்திலேயே அற்புதம் என்கிற கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். ஆனால், நான் "அற்புத உண்மை" என்று அடையாளம் கண்டிருக்கிற பின்னணியை அவர் பயன்படுத்தவில்லை, வேறொரு பின்னணியில் பேசுகிறார்.

சொல்லாட்சியைப்பற்றிப் பேசும் லாங்கினஸ் சொல்கிறார்: சிறப்பான ஒன்று கேட்பவர்களைத் தூண்டுவதில்லை, ஆனால், ஓர் அற்புத நிலைக்குக் கொண்டுசெல்கிறது; ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொருவகையிலும், கவர்ச்சிகரமான பேச்சு என்பது நம்மீது ஒரு மாயத்தை விரிக்கிறது, தூண்டுதல் மற்றும் மனநிறைவை மையமாகக் கொண்ட பேச்சைவிட மேம்பட்டதாக அமைகிறது. பொதுவாக நம்முடைய தூண்டல்களை நம்மால் கட்டுப்படுத்த இயலும், ஆனால், சிறப்பின் தாக்கங்கள் தாங்க இயலாத அளவுக்கு ஆற்றலையும் தவிர்க்கமுடியாத வலிமையையும் கொண்டுவருகின்றன, கேட்கிற ஒவ்வொருவரையும் ஆட்சிசெய்கின்றன...

Werner Herzog & Klaus Kinski on the set of 'Fitzcarraldo'. : movies

இங்கே அவர் அற்புதம் என்ற கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அதாவது, ஒருவர் தானே தன் நிலையிலிருந்து வெளிவந்து ஓர் உயர்ந்த நிலைக்குச் செல்லுதல், அங்கே நாம் நம்முடைய இயற்கைநிலைக்கு மேலே நம்மை நாமே உயர்த்திக்கொள்ளலாம். இந்த நிலையைச் சிறப்பானது "உடனே, ஒரு மின்னல்போல்”1 வெளிப்படுத்துகிறது. லாங்கினஸுக்குமுன் யாரும் ஒளிவீசும் அறிவுநிலை அனுபவத்தைப்பற்றி இத்தனை தெளிவாகப் பேசியது கிடையாது; இங்கே, நான் அந்தக் கருத்தைத் திரைப்படத்தின் அபூர்வமான மற்றும் விரைவான கணங்களில் பயன்படுத்தும் சுதந்தரத்தை எடுத்துக்கொள்கிறேன்.

காட்சிகளின் சிறப்பு மற்றும் அவற்றின் ஒளிதரும் தாக்கத்தைக் காண்பிப்பதற்கு, அவர் ஹோமரை மேற்கோள் காட்டுகிறார். "The Battle Of The Gods"லிருந்து அவர் காண்பிக்கும் உதாரணம் இது:

ஐடோனெஸ் நிழல்களின் தெய்வம். அவர் தன்னுடைய ஆசனத்திலிருந்து பயத்துடன் துள்ளியெழுந்து சத்தமாகக் கத்தினார். காரணம், அவருக்கு மேலே, நிலத்தை உலுக்கும் போசிடென் பூமியை இரண்டு துண்டாகப் பிளந்தார். மனிதர்களும் தேவர்களும் நிழல்களின் உலகத்தைத் தெளிவாகப் பார்க்க இயன்றது, எங்கும் பயம் கசிந்தது, தெய்வங்கள் ஒருவரையொருவர் வெறுப்போடு பார்த்தனர்: தெய்வங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டபோது எழுந்த கூச்சல் மிகப் பெரியதாக இருந்தது.

லாங்கினஸ் அசாதாரணமான வாசகர், நிறையவும் நன்றாகவும் படித்தவர், துல்லியமாக மேற்கோள் காட்டக்கூடியவர். இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், இலியாடின் இரண்டு வெவ்வேறு பகுதிகளை இணைத்து மேற்கோள் காட்டும் சுதந்தரத்தை அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இது அவருடைய தவறாக இருக்க வாய்ப்பில்லை. லாங்கினஸ் பொய் சொல்லவில்லை, ஏமாற்றவில்லை, மாறாக, அவர் ஒரு புதிய, ஆழமான உண்மையை உருவாக்குகிறார். உண்மையும், ஆன்மாவின் உன்னதமும் இல்லாமல் சிறப்பானவை ஏற்பட இயலாது என்று அவர் உறுதியாகச் சொல்கிறார்.

அவர் மேற்கோள் காட்டும் இன்னொரு வாசகத்தைக் காண்போம். இன்றைய ஆராய்ச்சியாளர்கள் இதனை பிதாகரஸ் அல்லது டெமஸ்தனெஸ் சொல்லியிருக்கவேண்டும் என்கிறார்கள்:

Werner Herzog to be Hong Kong festival guest in 2018, with more than 20 of  his films showing in retrospective | South China Morning Post

ஒரு மனிதனிடம் 'நமக்கும் கடவுள்களுக்கும் பொதுவான அம்சம் என்ன?' என்று யாரோ கேட்டார்கள். அதற்கு அவன் சொன்ன பதில் வாசகம் உண்மையிலேயே அழகானது: நல்லவற்றையும் உண்மையானவற்றையும் செய்கிற திறன்.

அவர் சொல்லும் 'நல்ல செயல்' என்பதை நாம் "தொண்டு" என்று எளிமையாக மொழிபெயர்த்துவிடக்கூடாது. அது கிறிஸ்துவக் கலாசாரத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருள். கிரேக்க மொழியில் உண்மை என்பதற்கான "alêtheia" என்ற சொல்லை நாம் அத்தனை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது.

சொற்பிறப்பியலின்படி பார்த்தால், இந்தச் சொல் "lanthanein" (மறைக்க) என்ற வினைச்சொல்லிலிருந்தும், அதனுடன் தொடர்புடைய சொல்லான "lêthos" (மறைக்கப்பட்டது அல்லது ஒளிக்கப்பட்டது) என்பதிலிருந்தும் வருகிறது. ஆகவே, "alêtheia" என்பது, ஒருவிதமான மறுத்தல், ஓர் எதிர்மறை வரையறை, அது "ஒளிக்கப்படாதது", வெளிப்படுத்தப்படுவது, உண்மை.

ஆக, மொழியின்மூலம் சிந்தித்தால், கிரேக்கர்கள் உண்மையை ஒரு வெளிப்படுத்தும் செயலாகப் பார்த்தார்கள்.

இந்த வெளிப்படுத்தும் செயலைச் சினிமாவுடன் தொடர்புபடுத்தினால், அங்கே ஒரு பொருளின்மீது வெளிச்சம் போடப்படுகிறது, பிறகு, ஒரு மறைந்திருக்கிற, இன்னும் வெளிப்படாத படம் ஒன்று செல்லுலாய்டில் பதிவு செய்யப்படுகிறது, பின்னர் அது மேம்படுத்தி, வெளியிடப்படுகிறது.

கேட்பவர் அல்லது பார்வையாளரின் ஆன்மா இந்தச் செயலைப் பூர்த்தி செய்கிறது; ஆன்மாவானது சிறப்பை அனுபவிப்பதன்மூலம் உண்மையை மெய்யாக்குகிறது: அதாவது, அது ஒரு சுதந்தரமான உருவாக்கச் செயலை முழுமையாக்குகிறது.

லாங்கினஸ் சொல்கிறார்: நமது ஆன்மா, இயற்கையிலிருந்து உண்மையான சிறப்பின்வழியாக மேலெழுகிறது, உயர்ந்த மனநிலையுடன் வெளிப்படுகிறது, தான் கேட்பதைத் தானே உருவாக்கியதுபோன்ற பெருமிதமான மகிழ்ச்சியால் அது நிரம்பியிருக்கிறது.

லாங்கினஸை நான் எப்போதும் என்னுடைய நல்ல நண்பராகவே கருதுகிறேன். அவரைப்பற்றி இன்னும் பேசினால், நான் என்னையே மறந்துவிடுவேன். ஆகவே, இப்போதைக்கு இது போதும்.

நான் திரைத்துறையில் பணியாற்றுகிற ஒருவனாக, உங்கள்முன் நிற்கிறேன். அதற்குச் சாட்சியாக, என்னுடைய இன்னொரு திரைப்படமான “The Great Ecstasy of Woodcarver Steiner”ரிலிருந்து சில காட்சிகளை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தின் தலைப்பிலேயே அற்புதம் இருப்பதால், இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கும்.

வால்டர் ஸ்டெய்னெர் என்பவர் ஸ்விட்ஸர்லாந்தைச்சேர்ந்த ஒரு சிற்பி. ஸ்கை-ஃப்ளையிங் எனப்படும் விளையாட்டில் பலமுறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர்.

இந்த விளையாட்டின்போது, அவர் தன்னைத்தானே வானில் உயர்த்திக்கொண்டு மேலேறுகிறார், மதரீதியிலான ஓர் அற்புதச்செயலைப்போல!

அவர் மேலும் மேலும் உயரே பறக்கிறார், பார்ப்பவர்களுக்கெல்லாம் நடுக்கம் ஏற்படும் அளவுக்குத் தொலைவில் பறக்கிறார், ஒருகட்டத்தில் அவர் மரணப் பிரதேசத்தையே எட்டிவிடுகிறார்: இன்னும் சிறிது தூரம் சென்றால், அவர் செங்குத்தான சரிவில் இறங்கமாட்டார், அதைத் தாண்டி எங்கேயாவது விழுந்துவிடுவார் என்கிற நிலைமை.

கடைசியில் ஸ்டெய்னர் ஓர் இளம் ராவென் பறவையைப்பற்றிப் பேசுகிறார். சின்னவயதில் அவர் வளர்த்த பறவை அது. தனிமையில் வளர்ந்த ஸ்டெய்னருக்கு அதுதான் ஒரே சிநேகிதனாக இருந்தது.

அந்த ராவெனுக்கு ஸ்டெய்னர் தந்த சாப்பாடு சரியில்லையோ, என்னவோ, அதன் சிறகுகள் உதிர்ந்துகொண்டே இருந்தன. அதனால் பறக்க இயலவில்லை.

இதனால், மற்ற ராவென்கள் இந்த ராவெனைத் தாக்கின. அதனை மிகவும் துன்புறுத்தின. இதைப்பார்த்துத் தாங்க இயலாத இளம் ஸ்டெய்னர் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்.

‘எனக்கு வேறு வழியே தெரியவில்லை, நான் அந்த ராவெனைச் சுட்டுக்கொல்லவேண்டியிருந்தது’ என்கிறார் ஸ்டெய்னர், ‘காரணம், அந்த ராவெனால் பறக்க இயலவில்லை என்பதால், அதன் சொந்தச் சகோதரர்களே அதை மிகவும் துன்புறுத்தினார்கள், அதைப் பார்ப்பது எனக்குப் பெரிய சித்திரவதையாக இருந்தது!’

மறுகணம், ஒரு Fast Cut உத்தியில் நாம் ஸ்டெய்னர் பறப்பதைப் பார்க்கிறோம், அவர் தன்னுடைய ராவெனின் இடத்தில் பறந்துகொண்டிருக்கிறார், அது மிகவும் மெதுவான “ஸ்லோ மோஷன்” முறையில் காட்டப்படுகிறது, அச்சம்தரக்கூடிய அழகைக்கொண்ட ஒரு காட்சியாக அது இருக்கிறது, எக்காலத்துக்கும் நீடிக்கும்வகையில் அவர் மெதுவாகப் பறந்துகொண்டிருப்பதைப்போலத் தோன்றுகிறது.