இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை

10. ‘குத்துவிளக்கு’ - மண் மணம் வீசிய திரைப்படம்

யாழ்ப்பாண நகரின் நவீன நாகரீகத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கட்டடங்கள் அங்கு உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைவுத்தூபி என்பன அவற்றில் சிலவாகும். இத்தனை கட்டடங்களையும் நிர்மாணித்தவர் கட்டக் கலைஞரும் கலை அபிமானியுமான வீ.எஸ். துரைராஜா அவர்களாவர். இவர் நிர்மாணித்த அழகுக் கட்டடங்கள் யாழ்நகரில் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நிமிர்ந்து நிற்கின்றன.
கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என்பார்கள். சித்திரம் சிற்பம் போன்ற பழங்கலைகளுடன் சினிமா என்ற நவீனகலையும் அதனுள் அடங்கும். எனவே, திரைப்படக்கலையிலும் திரு. வீ.எஸ். துரைராஜா ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.

திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். “இலங்கைத் தமிழருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்க வழக்கங்கள் வாழ்க்கை முறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக்கூடாதா என்று எண்ணினேன். இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது. அந்த எண்ணத்தின் உருவம்தான் இந்தக் “குத்து விளக்கு” என்று கூறினார் திரு. வி.எஸ். துரைராஜா.

யாழ்ப்பாண மண்ணுக்குரிய ஒரு கதைக் கருவைக் கொண்ட மூலக்கதையை எழுதிவிட்டார். திரைக்கதை வசனம் எழுதும் ஒருவரையும் இயக்குநர் ஒருவரையும் அவர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அப்போது இலங்கையரான பாலுமகேந்திரா இந்தியாவில் திரைப்படம் சம்பந்தமாகப் படித்துவிட்டு இலங்கை வந்தார். அவருடன் தொடர்பு கொண்டு குத்துவிளக்கை இயக்கும் படி கேட்ட பொழுது மலையாளப் படமொன்றை இயக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தியா சென்றுவிட்டார்.
திரைக்கதை வசனங்களை எழுதுவதற்காக சினிமாவில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஈழத்து ரெத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை யுபீட்டர்ஸ் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற்றியவர். பாடல்கள் இயற்றுவதில் திறமை காட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக் கொண்டு பல பாடல்களை இயற்றினார். ‘எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்’ என்ற படத்தில் ‘எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள்’ என்று இவர் இயற்றிய பாடல் புகழ் பெற்று விளங்கியது. குத்து விளக்கு திரைப்படத்துக்கான பாடல்களையும் இவரே எழுதினார்.

அன்று திரைப்படத்துறையில் பிரபலம் பெற்று விளங்கிய டபிள்யு.எஸ்.மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அச்சுவேலியைச் சேர்ந்த நமசிவாயம் என்னும் இளைஞன் சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்தான். ‘பாராவழலு’ என்ற சிங்களப் படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்த்’ என்று மாற்றிக் கொண்டான். ‘குத்து விளக்கு’க் கதையில் விவசாயக் குடும்பத்தின் மூத்த மகன் ‘சோமு’ முக்கியப் பாத்திரமாகும். அந்தச் சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரதநாட்டியத்தில் புகழ்பெற்று விளங்கியவர் செல்வி லீலா நாராயணன். அவர் முகபாவங்களை அழகாகக் காட்டுவார் என்பதால் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இளைஞர் ஆனந்தன் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் கதகளி நடனத்திலும் தேர்ச்சிபெற்றவர். இவர் கதாநாயகியின் காதலனாகத் தோன்றினார்.

திருமலையில் பிறந்த பி. இந்திராதேவி நாடகத்திலும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் நடித்து அனுபவப்பட்டவர். இவருக்குக் கதாநாயகனின் தாயாரான நாகம்மா பாத்திரம் வழங்கப்பட்டது.

எம்.எஸ். இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், ஸ்ரீசங்கர் போன்றோர் மேடைநாடக அனுபவ முள்ளவர்கள். இவர்கள் இப்படத்தின் மற்ற நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
யோகா தில்லைநாதன், சாந்திலேகா, தேவிகா, பேபி பத்மா போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னாளில் ‘மரீக்கார்’ என்று புகழ்பெற்ற எஸ். ராம்தாஸ் முதன் முதலில் நடித்தபடம் ‘குத்துவிளக்குத்தான்’.
1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘குத்துவிளக்கு’ ஆரம்பவிழா நடைபெற்றது. கொழும்பு வீ.எஸ்.ரீ. கட்டடத்தின் மேல் மாடியில் வீ.எஸ்.ரீ. பிலிம்ஸ் ஸ்தாபனத்தாரின் ஸ்ரூடியோவில் விழா ஆரம்பமாகியது. பிரபல தென்னிந்திய நட்சத்திரம் சௌகார் ஜானகி கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணப் பகுதிக் கோயில் குளங்களிலும், வயல்வெளிகளிலும், கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புகள் இடம்பெற்றன. நல்லூர் முருகன் கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவற்றின் திருவிழாக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களையோ, எழுத்தாளர், பாடலாசிரியர்களையோ, தொழில்நுட்பக்கலைஞர்களையோ இறக்குமதி செய்யமுடியாது. அவர்களது சேவைகளை எமது திரைப்படங்கள் பெறமுடியாது. அந்த அளவுக்கு இவைகளை இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது. இதன் விளைவால் ‘குத்துவிளக்கு’ நூற்றுக்கு நூறு வீதம் இலங்கைத் தயாரிப்பாக விளங்கியது.

குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு. துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அமுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

பாடல் வரிகளிடையே பெரியார்கள், கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப்போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றின. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதால், வானொலியில் ஒலிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது.
இசை அமைப்பை ஆர். முத்துசாமி ஏற்றுக்கொண்டார். சங்கீதபூசணம் குலசீலநாதன், மீனா மகாதேவன் ஆகியோர் பாடினர். “ஆதிசிவன் பெற்ற” என்ற பாடலை இசை அமைப்பாளரே பாடினார்.
‘கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டியத்தில் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இப்படத்தில் ஒரு நாட்டியந்தானும் இடம்பெறவில்லையே..ஏன்?’ என்று திரு. துரைராஜாவிடம் கேட்டேன்.
‘இப்படத்தைக் கலைஅம்சங்களுடன் சத்யஜித்ரேயின் பாணியில், தரமான படைப்பாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனால், அநாவசியமான நடனங்களையும், தெருச்சண்டைகளையும் புகுத்திப் படத்தின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர்.
நல்ல விளம்பரத்தின் பின் ‘குத்துவிளக்கு’ 24.02.1972இல் திரைக்கு வந்தது. மத்திய கொழும்பு (செல்லமஹால்), தென்கொழும்பு (ஈரோஸ்), யாழ்ப்பாணம் (புதிய வின்ஸர்), திருகோணமலை (நெல்சன்), மட்டக்களப்பு (இம்பீரியஸ்), பதுளை(கிங்ஸ்) ஆகிய ஆறு இடங்களில் திரையிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் ‘குத்துவிளக்கு’ படத்தின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த ‘ஏகாம்பரம்’ என்ற விவசாயியே குத்துவிளக்கேற்றி முதற்படக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட்டைத் தயாரிப்பாளர் செய்திருந்தார். ‘இந்த விழாவை ஆரம்பிப்பதற்கு நகர மேயர் அல்லது அமைச்சர்கள் போன்றோரை ஏன் அழைக்கவில்லை?’ என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது.
‘இத்திரைப்படத்தின் கதை ஒரு விவசாயியின் கதையாகும். எனவே, இத் திரைப்பட விழாவின் ஆரம்பத்தை ஒரு விவசாயியின் மூலம் ஆரம்பித்து வைக்க விரும்பினேன்’ என்று கூறினார்.

வேலுப்பிள்ளை ஓர் ஏழை விவசாயி. அவர் மனைவி லட்சுமி. மூத்த மகள் மல்லிகா, இளைய மகள் ஜானகி, இவ்விரு சகோதரிகளுக்காகவும் வாழும் அண்ணன் சோமு. இவர்கள் எல்லோரும் யாழ்ப்பாண விவசாயியின் ஒரு குடும்பம்.

சிங்கப்பூர் பணக்காரர் குமாரசாமி. பணமே உலகம் என்று வாழும் மனைவி நாகம்மா. அவர்களின் செல்வமகன் செல்வராஜா. கொழும்பில் வாழும் நாகரீக மகள் ஜெயா. இந்த இரண்டு குடும்பங்களுடனும் இணைந்து வாழும் இந்தியத் தொழிலாளி இராமசாமி. மற்றவர்களின் பிரச்சினைகளே தன் தொழில் என்று வாழும் தரகர் மணியத்தார். இவர்களைச் சுற்றியே கதை ஓடுகிறது.

மல்லிகாவுக்கும் செல்வராஜனுக்கும் காதல் மலருகிறது. கஷ்டப்பட்டுப் படித்துக் கடன் வாங்கிப் பல்கலைக்கழகம் போகிறான் சோமு. ஏழை என்ற காரணத்தினால், மல்லிகாவைச் செல்வராஜனுக்குக் கட்டிக் கொடுக்க மறுக்கிறார் நாகம்மா. பணக்காரப் பெண்ணொருத்திக்கு செல்வராஜனைத் திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால், நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறாள் மல்லிகா. குத்துவிளக்கு ஒளி இழக்கிறது.

இதுதான் ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தின் கதைச்சுருக்கமாகும். வானம் பார்த்த பூமியை நம்பி வாழும் ஏழை விவசாயிகளின் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, படித்த இளைஞர்களின் தொழிலில்லாப் பிரச்சினை, யாழ்ப்பாணத்தில் வேரூன்றியிருந்த சாதிப் பிரச்சினை, ஏழைப் பெண்களின் உள்ளத்தில் உருவாகும் உண்மைக் காதல், பணக்கார இளைஞர்களின் பொழுதுபோக்குக் காதல் என்று பல்வேறு பிரச்சினைகளை இப்படம் எம்முன் எடுத்துக்காட்டியது.

யாழ்ப்பாணக் கிராமமொன்றின் கதையை முதன்முதலாக இப்படத்தின்மூலம் திரையில் காணமுடிந்தது. உரையாடல்கள் முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலேயே அமைந்திருந்தன.

‘இந்தியச் சினிமாவின் கவர்ச்சியில் ஊறியிருக்கும் இலங்கை ரசிகர்களின் மத்தியில் யாழ்ப்பாணத் தமிழ் எடுபடுமா? என்று கேட்டதற்கு ‘இது இலங்கையில் வாழும் யாழ்ப்பாண விவசாயியின் கதை. இதற்கு இந்தியப் பேச்சுவழக்கைப் புகுத்தி யதார்த்தத்தைக் கெடுக்க விரும்பவில்லை’ என்றார் தயாரிப்பாளர்.

‘குத்துவிளக்கை’ப் பற்றிப் பத்திரிகைகள் பல்வேறு விமர்சனங்கள் எழுதின. ‘தினகரனில்’ ஸ்ரீரங்கம் பின்வருமாறு எழுதினார். ‘இந்தியப் படங்களைப்போல் கும்கும் சண்டைகள் குத்துவிளக்கில் இல்லை. காதலர்கள் தொட்டு உறவாடாத அளவுக்குக் காதல் காட்சிகள் இயற்கையாக அமைந்துள்ளன. சோமுவின் மனக்கொதிப்பைக் குமுறும் கடல் அலைகளாலும் உயிர் பிரிவதைப் புகைவிடும் குத்துவிளக்காகவும் காட்டுவது இயக்குநரின் திறமையாகும். ‘ஈழத்திருநாடே’ என்ற பாடலும் அதற்காகப் படம்பிடித்திருக்கும் விதமும் நெஞ்சத்தைத் தொடுவனவாக அமைந்துள்ளன.’ என்று எழுதினார்.

எஸ்.என். தனரெத்தினம் ஆரம்ப முதலே இலங்கைத் தமிழ்ச் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர் அப்பொழுது ‘வீரகேசரி’யில் உதவியாசிரியராகக் கடமையாற்றினார். இவர் எழுதிய விமர்சனம் ‘மித்திரன்’ வாரமலரில் வெளிவந்தது.

‘சீதனப்பேய் தலைவிரித்தாடும் யாழ்ப்பாணத்திலுள்ள இரு குடும்ப அங்கத்தவர்களையும், குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளையும் ‘குத்துவிளக்கு’ அழகாகச் சித்திரிக்கிறது.

பணம் இல்லாவிட்டாலும் குணம் நிறைந்த வேலுப்பிள்ளை. பெயருக்கேற்ற உருவமும் குணமும் கொண்ட மனைவி லெட்சுமி. அடுத்த வீட்டு இளைஞனுடன் கண்களினால் காதல் செய்யும் மல்லிகா. தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணன் சோமு. சிங்கப்பூர் பணக்காரரானாலும் நல்ல மனிதர் குமாரசாமி. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற கூற்றை நம்பவைக்கும் நாகம்மா. மல்லிகாவின் மனத்தைக் கவர்ந்த பொறுப்பற்ற பணக்காரப்பிள்ளை செல்வராஜா. கொழும்பு நகரில் கற்கச் சென்று நாகரீக மோகத்தில் நிலைதடுமாறும் ஜெயா. எந்நேரமும் இந்தியா செல்லத் துடித்துக்கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளி ராமசாமி. தரகர் மணியத்தார்.

இப்படத்தில் இத்தனை பாத்திரங்களும் உயிர்பெற்று வந்துவிட்டன. மனிதனுக்கு அடிமையாக இருக்கவேண்டிய பணம் மனிதனை அடிமை கொள்கிறது என்ற செய்தியை எமக்குத் தெரிவிக்கிறது. ‘ஈழத்திருநாடே’ என்ற பாடல் இலங்கையர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒரே பார்வையில் இலங்கையின் இயற்கைக் காட்சிகளைக் காணும் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. தனியொரு மனிதர் முதலீடு செய்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அது திரு. வீ. எஸ். துரைராஜா அவர்களாகத்தான் இருக்கும். தேசிய விழிப்புணர்ச்சியைத் தூண்டியுள்ள முதல் ஈழத்துத் தமிழ்;ப்படைப்பு ‘குத்துவிளக்கு’ என்பதில் ஐயமில்லை. இப்படம் இலங்கையில் வெற்றித் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கமுடியும் என்பதை நிரூபித்துவிட்டது’ என்று எழுதினார்.

‘குத்துவிளக்கு’ திரையிட்டபொழுது கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் பல பாடசாலைகளுக்கும் சென்று இப்படத்தைப்பற்றிப் பிரச்சாரம் செய்தார். வடபகுதி மாணவர்கள். ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரின் வேண்டுகோளின்படி, இப்படம் பகல் வேளைகளில் மாணவர்களுக்காகக் காட்டப்பட்டது. பல மாணவர்கள் பாடசாலைக் குழுக்களாகச் சென்று பார்த்து ஆதரவு வழங்கினார்கள்.

கொழும்பில் ‘குத்துவிளக்கு’ திரைப்படத்தைத் தியேட்டர் உரிமையாளர்கள் 14 நாட்கள் மட்டுமே ஓட விட்டார்கள். ஆனால், யாழ்நகரில் தொடர்ந்து 40 நாட்கள் ஓடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்படம் 50வது தினத்தை சங்கானையிலும், 100ஆவது தினத்தைச் சுன்னாகத்திலும் கொண்டாடியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 100ஆவது தினத்தைக் கொண்டாடிய முதல் இலங்கைத் தமிழ்ப்படம் ‘குத்துவிளக்கு’த்தான். இப்படத்தின் வெற்றிவிழா, அப்பொழுது தபால்துறை அமைச்சராகவிருந்த திரு. செல்லையா குமாரசூரியர் தலைமையில் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கலைஞர்கள் அனைவருக்கும் தயாரிப்பாளர் திரு. துரைராஜா பரிசு வழங்கிக் கௌரவித்தார்.

1975ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வர்த்தகப் பிரிவில் ‘குத்துவிளக்கும்’ திரையிடப்பட்டது. இப்படம் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபவாஹினி தொலைக்காட்சியில் ‘காதம்பரி’ நிகழ்ச்சிக்காக திரு.வீ.எஸ். துரைராஜாவைப் பேட்டி காண ஆயத்தம் செய்வதற்காக அவரை நான் முதன் முதலில் சந்தித்தேன். குத்துவிளக்கின் றீல்கள் சில தவறிவிட்டதாகச் சொன்னார். அதன் நெகடிவ்களைக் கொண்டு ஹெந்தளை, விஜயா ஸ்ரூடியோவில் புதிய றீல்களைச் செய்து கொடுத்தேன். குத்துவிளக்கின் சில காட்சிகள் திரு.துரைராஜாவின் பேட்டியின்போது, போட்டுக் காட்டப்பட்டன. 1988ஆம் ஆண்டு இவரது பேட்டி ரூபவாஹினியில் ஒளிபரப்பானது. 1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ‘குத்துவிளக்கு’ ரூபவாஹினியில் முற்றுமுழுதாக ஒளிபரப்பப்படுவற்கு பி. விக்னேஸ்வரன் ஒழுங்குகள் செய்தார்.

வீரகேசரியில் (3.8.93) ஆ. சிவப்பிரியன் பின்வருமாறு எழுதினார். ‘எமது மக்களின் இரசனையை மேம்படுத்தவும் தமிழ்ச் சினிமாவை உலகளாவிய தரத்துக்கு உயர்த்தவும் தென்னிந்திய சினிமாவை நம்பியிருப்பதில் பயனில்லை. இதற்கு ஒரே வழி எமது இலங்கைத் தமிழ்ச் சினிமாவை வளர்த்தெடுப்பதே. இன்று இங்கு எடுக்கப்படும் தொலைக்காட்சி நாடகமோ திரைப்படமோ அப்பட்டமாகத் தென்னிந்தியத் தமிழ்ச் சினிமாவைப் பிரதிபண்ணுகின்றன. ஏராளமான தொழில் நுட்பக் குறைபாடுகள் வேறு.

இலங்கைத் தமிழ் மக்களுக்கெனத் தனியான கலாசாரப் பண்பாடு உண்டென்பதை எமது கலைஞர்களே உணர்வதில்லை. தரமான கதைகள் சரியான முறையில் திரைக்கதை அமைக்கப்பட்டு, நாடகமாகவோ, படமாகவோ எடுக்கப்படுவதில்லை. எமது கலாசாரம், பண்பாடு, பேச்சுமொழி என்பவற்றுக்கு இசைவாகப் படைப்புகள் வெளிவரும்போது மக்கள் ஆதரவளிப்பார்கள். இதற்குச் சிறந்த உதாரணம் எம் நாட்டில் வீ.எஸ். துரைராஜா தயாரித்து மகேந்திரன் இயக்கிய ‘குத்துவிளக்கு’ படமாகும். யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் மண்வாசனையுடன் நல்ல தயாரிப்பு வசதிகளுடன் உருவாக்கிய இப்படம் 100 நாட்கள்வரை ஓடியது என்று எழுதினார்.

ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நீச்சல்போட்டு தனித்து நின்று ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற ரீதியில் திரு.வீ.எஸ். துரைராஜா அவர்களின் பெயரும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடவேண்டிய பெயராகும்.

----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.